என் மலர்
நீங்கள் தேடியது "Chennai HC"
- எஸ்.பி.வேலுமணி மீது டெண்டர் முறைகேடு தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்எம்டி.டீக்காராமன் ஆகியோர் விசாரித்தனர்.
சென்னை :
சென்னை, கோவை மாநகராட்சிகளின் ஒப்பந்த பணிகளை வழங்கியதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது என்றும் அ.தி.மு.க. முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பெரும் ஊழல் செய்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசில் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் புகார் செய்தனர்.
அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய ஐகோர்ட்டிலும் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையில், எஸ்.பி.வேலுமணி மீது டெண்டர் முறைகேடு தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்எம்டி.டீக்காராமன் ஆகியோர் விசாரித்தனர். அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், போலீஸ் தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா, புகார்தாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, சுரேஷ், எஸ்.பி.வேலுமணி தரப்பில் டெல்லி மூத்த வக்கீல்கள் எஸ்.வி.ராஜூ, சித்தார்த் தவே, வக்கீல் ஜெ.கருப்பையாஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
இந்தநிலையில், அந்தத் தீர்ப்பு, இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2.15 மணிக்கு வழங்கப்படும் என ஐகோர்ட்டு பதிவுத்துறை அறிவித்துள்ளது.
- முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்குகள் மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கிறது.
- அவருக்கு எதிராக அறப்போர் இயக்கம், திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்குகள் ஐகோர்ட்டில் நடந்தன.
சென்னை:
சென்னை, கோவை மாநகராட்சிகளில் டெண்டர் முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம், தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்குகள், ஐகோர்ட்டில் நடந்து வந்தன.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தன் மீதான மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ், நீதிபதி டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.பி.வேலுமணி தரப்பில், "ஒளிவு மறைவின்றி டெண்டர் கோரப்பட்டது. இதில் தனக்கு எந்த பங்கும் இல்லை" எனவும் முதற்கட்ட விசாரணைக்கு மட்டுமே அனுமதி கோரப்பட்டதாகவும், வழக்கு பதிய அனுமதி பெறவில்லை என்றும் வாதிடப்பட்டது.
இதையடுத்து, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம், டெண்டர் முறைகேடு புகார்கள் தொடர்பான விசாரணை நடந்து கொண்டிருந்தபோது மத்திய கணக்கு தணிக்கைக்குழு அறிக்கை வெளியானதாகவும், அதில் ஒப்பந்தங்கள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார். முதல் தகவல் அறிக்கை என்பது வழக்கின் ஆரம்பகட்டம் என்றும், ஆரம்பகட்டத்திலேயே வழக்கை ரத்து செய்யக்கோர முடியாது என்றும் தெளிவுபடுத்தினார்.
இந்த வழக்கில் மற்றொரு புகார்தாரரான அறப்போர் இயக்கம் தரப்பில் வாதங்களை முன்வைக்க ஏதுவாக விசாரணையை நவம்பர் மாதம் ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழக்கு நவம்பர் 8-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்துள்ளதாக வேலுமணி தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம் தவறு என்றும், கோவையில் 47 டெண்டர்கள் அமைச்சரின் உறவினர்களுக்குச் சொந்தமான இரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன என அறப்போர் இயக்கம் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு, சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்குகளின் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்குகள் மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கிறது.
- தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கியது.
- இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் திருமாவளவன் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை:
75-வது சுதந்திர தின விழா, அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு விழா, விஜய தசமி ஆகியவற்றை முன்னிட்டு தமிழகத்தில் 51 இடங்களில் அக்டோபர் 2-ம் தேதியன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி டி.ஜி.பி. உள்ளிட்டோரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் சென்னை சுப்பிரமணியன், கடலூர் சண்முகசுந்தரம், ஈரோடு செந்தில்நாதன் உள்ளிட்ட 9 பேர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு கடந்த 22-ம் தேதி நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், வரும் அக்டோபர் 2-ம் தேதி ஆர்.எஸ்.எஸ். சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி, வரும் 28-ம் தேதிக்குள் போலீசார் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கூறி இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், தமிழகத்தில் அக்டோபர் 2-ம் தேதி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெற கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், நீதிமன்ற நிபந்தனைகளைப் பின்பற்றாமல் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா இன்று மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவுக்கென மிகப்பெரிய அளவிலான பிளக்ஸ் பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கென அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மேலும், பேனர்களை அமைக்க முறையாக அனுமதி வழங்கப்படும் நிலையில், நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக அக்டோபர் 8-ம் தேதி சென்னை மாநகராட்சி காவல்துறை மற்றும் மாநகராட்சி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #ChennaiHC
தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சியில் புதிய தலைமை செயலகம் கட்டியதில் ஊழல் நடைபெற்றதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து இருந்தார். ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் அமைக்கப்பட்டு இருந்த இந்த விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு விசாரணையில் விசாரணை ஆணையத்தின் செயல்பாடு குறித்து நீதிபதி கடுமையாக கருத்து தெரிவித்து இருந்தார். இதனை கண்டித்து விசாரணை ஆணையத்தின் தலைவர் ரகுபதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மேலும், தூத்துக்குடி கலவரம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்துக்கு நியாயமான கால அவகாசம் மட்டுமே வழங்க வேண்டும் எனவும், ஜல்லிக்கட்டு போராட்டம் வன்முறையாக மாறியது குறித்து விசாரிக்கப்பட்ட விசாரணை ஆணையத்துக்கு மூன்று மாதங்களுக்கு மேல் கால அவகாசம் வழங்கக்கூடாது எனவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #ChennaiHC #JallikkattuProtest
சென்னை மைலாப்பூரில் உள்ள கோவிலில் இருந்து சிலை காணாமல் போனது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து காணாமல் போன மயில் சிலைக்கு பதிலாக புதிய சிலை வைத்து குடமுழுக்கு நடத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, கோவிலில் சிலைகளை பாதுகாப்பதில் அர்ச்சகர்களுக்கு பொறுப்பு உண்டு என தெரிவித்துள்ளனர்.
மேலும், அர்ச்சகர்கள் தெய்வீக உணர்வுடன் பணியாற்றவில்லை என குற்றம்சாட்டிய நீதிபதிகள், இயந்திரத்தன்மையுடன் செயல்படுவதாக கருத்து தெரிவித்துள்ளனர். #ChennaiHC
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட மெய்யபுரம் என்ற ஊரில் விநாயகர் சிலை அமைத்திருந்தனர்.
அந்த சிலையை நேற்று முன்தினம் ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலையில் கரைப்பதற்கு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முடிவு செய்தனர்.
விநாயகர் சிலை ஊர்வலத்தைத் தொடங்கி வைப்பதற்கு பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை திருமயம் தாலுகா பா.ஜ.க.வினர் அழைத்திருந்தனர். இதையொட்டி மெய்யபுரம் அருகே ஒரு இடத்தில் மேடை அமைக்க இந்து அமைப்பினர் போலீசாரிடம் கடிதம் கொடுத்து அனுமதி கேட்டனர்.
ஆனால் போலீசார் அனுமதி மறுக்கவே பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா போலீசார் மற்றும் நீதிமன்றத்தை அவதூறாக பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை வழுத்து வருகிறது.
நேற்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க நீதிமன்றம் முடிவு செய்து, 4 வாரங்களுக்குள் எச்.ராஜா பதிலளிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்குமாறு வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், இந்த வழக்கை நீதிமன்றமே முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
மேலும், வேறு ஏதேனும் புகார்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட எல்லைக்கு உட்பட்ட காவல்நிலையத்தை அணுகுமாறும், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காவிட்டால், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகுமாறும் அறிவுறுத்தியுள்ளனர். #BJP #HRaja #ChennaiHC