search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "திருமாவளவன்"

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • பிரதமர் மோடி தன்னை நம்பவில்லை. தன் செல்வாக்கை நம்பவில்லை.
  • அ.தி.மு.க. தொண்டர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

  தூத்துக்குடி:

  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் இன்று காலை தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

  பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்தார். குறிப்பாக பல்லடத்தில் பேசிய பேச்சில் கடந்த 10 ஆண்டுகளில் அவர் மக்களுக்கு செய்தது என்ன என்பது பற்றி பெரிதாக குறிப்பிடவில்லை.

  10 ஆண்டுகளில் இந்த நாடு என்ன முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்பதையும், என்ன வளர்ச்சி கண்டிருக்கிறது என்பது குறித்தும் அவர் குறிப்பிடவில்லை.

  குறிப்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை விமர்சிப்பது, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்களை புகழ்ந்து பேசுவது என தனது உரையை அமைத்துக் கொண்டார்.

  தமிழ்நாட்டில் கொள்கைகளை பேசி தன்னுடைய கட்சிகளை வளர்க்க வேண்டும் என்று பா.ஜனதா, பிரதமர் மோடி, அமித்ஷா போன்றவர்கள் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இங்கு ஆட்சியில் இருக்கக்கூடிய தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை விமர்சிப்பது, அத்துடன் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்களின் புகழை பேசுவது போன்ற யுக்தியை அவர் கையில் எடுத்திருக்கிறார்.

  பிரதமர் மோடி தன்னை நம்பவில்லை. தன் செல்வாக்கை நம்பவில்லை. தன் மீது மக்கள் கொண்டிருக்கின்ற நன்மதிப்பை நம்பவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை நம்பித்தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலைக்கு மோடி வந்து விட்டார் என்பதுதான் அவரது பல்லடம் உரை நமக்கு உணர்த்துகிறது.

  எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் புகழ்ந்தால் அ.தி.மு.க.வின் வாக்கை பெற முடியும் என நினைக்கிறார்கள். இதன் மூலம் அ.தி.மு.க.வை பலவீனப்படுத்த வேண்டும், அதன் வாக்கு சதவீதத்தை சரிய செய்ய வேண்டும் என பா.ஜனதா கணக்கு போடுகிறது என்று உணர முடிகிறது. அ.தி.மு.க. தொண்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

  தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளையும் எதிர்க்கிறோம் என்ற பெயரில் பா.ஜனதாவிற்கு வாக்களிக்க கூடிய நிலை வந்தால் தமிழ்நாட்டிற்கு பெரிய தீங்கு விளையும். இதை தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக அ.தி.மு.க. தொண்டர்கள் உணர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சுட்டி காட்டுகிறது. அ.தி.மு.க. தொண்டர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

  எத்தனை முறை பிரதமர் தமிழ்நாட்டிற்கு வந்தாலும், சுற்றி சுழன்று வந்து பிரசாரம் மேற்கொண்டா லும் தமிழ்நாட்டு மக்கள் மோடி வித்தையை நம்ப மாட்டார்கள்.

  பா.ஜனதாவுக்கு பெரிய செல்வாக்கு உருவாகாது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தி.மு.க. கூட்டணி 40-க்கு 40 வெற்றி பெறும். தொகுதி பங்கீடு குறித்து ஓரிரு நாட்களில் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கும்.

  இவ்வாறு அவர் கூறினார். 

  • போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியலை கட்சித் தலைவர் திருமாவளவன் குழுவிடம் வழங்கினார்.
  • 2-வது கட்ட பேச்சுவார்த்தை கம்யூனிஸ்டு, ம.தி.மு.க.விடம் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது.

  சென்னை:

  பாராளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டை உறுதி செய்வதில் தீவிரமாக உள்ளன. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த முறை 2 தனி தொகுதிகளையும் ஒரு பொதுத் தொகுதியையும் ஒதுக்குமாறு வலியுறுத்தி வருகிறது.

  முதல் கட்ட பேச்சுவார்த்தையின் போது போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியலை கட்சித் தலைவர் திருமாவளவன் குழுவிடம் வழங்கினார்.

  2-வது கட்ட பேச்சுவார்த்தை கம்யூனிஸ்டு, ம.தி.மு.க.விடம் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் கடந்த தேர்தலைவிட கூடுதலாக தொகுதிகளை கேட்பதால் தி.மு.க.விற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. திருமாவளவனும் கடந்த முறையைவிட கூடுதலாக தொகுதிகளை கேட்டு பெறுவதில் உறுதியாக உள்ளார்.

  இந்த நிலையில் 2-வது கட்ட பேச்சுவார்த்தைக்கு தி.மு.க.விடம் இருந்து நாளை அழைப்பு வரும் என்று முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். நாளை நடக்கும் பேச்சு வார்த்தையின் போது எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது தி.மு. க. தரப்பில் வலியுறுத்தப்படும்.

  கடந்த முறை திருமாவளவன் போட்டியிட்ட சிதம்பரம், விழுப்புரம் தொகுதியை தவிர மேலும் ஒரு பொதுத் தொகுதி ஒதுக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்த உள்ளார்.

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • 4 தொகுதிகளுக்காக போராடி வரும் நிலையில் எங்கள் பக்கம் வந்தால் 5 தொகுதிகள் தர தயார் என்று அ.தி.மு.க. தரப்பில் இருந்து தூது அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
  • பா.ம.க. இருக்கும் அணியில் நாங்கள் இடம்பெற முடியாது என்ற தங்கள் நிலைப்பாட்டை சிறுத்தைகள் தெரிவித்துள்ளனர்.

  சென்னை:

  தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி 4 தொகுதிகள் கேட்கிறது. ஆனால் அதற்கு தி.முக. தரப்பில் இன்னும் இறுதியாக எதுவும் தெரிவிக்காததால் விடுதலை சிறுத்தைகளும் தயக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

  அதே நேரம் பா.ம.க.வும் தனது முடிவை அறிவிக்கவில்லை. தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்துள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தலைமையில் பலமான கூட்டணி அமையும். திமு.க. கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேறும் என்று கூறி வருகிறார்.

  விடுதலை சிறுத்தைகளை குறி வைத்தே அவர் இவ்வாறு கூறியதாக கூறப்படுகிறது.

  விடுதலை சிறுத்தைகளை தங்கள் பக்கம் இழுப்பதற்காக அ.தி.மு.க. முயற்சித்து வருகிறது.

  4 தொகுதிகளுக்காக போராடி வரும் நிலையில் எங்கள் பக்கம் வந்தால் 5 தொகுதிகள் தர தயார் என்று அ.தி.மு.க. தரப்பில் இருந்து தூது அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.


  அப்போது பா.ம.க. இருக்கும் அணியில் நாங்கள் இடம்பெற முடியாது என்ற தங்கள் நிலைப்பாட்டை சிறுத்தைகள் தெரிவித்துள்ளனர். ஆனால் பா.ம.க. வரும் என்பது உறுதியாகவில்லை என்று அ.தி.மு.க. தரப்பில் கூறி இருக்கிறார்கள்.

  ஆனாலும் அ.தி.மு.க.வின் 'ஆஃபரை' ஏற்க விடுதலை சிறுத்தைகள் தயக்கம் தெரிவித்துள்ளனர். தற்போதைய நிலையில் அ.தி.மு.க. 5 இடங்கள் வழங்கினாலும் அது வேட்பாளராகத்தான் இருக்க முடியும். ஆனால் தி.மு.க. கூட்டணியில் ஒதுக்கப்படும் இடங்கள் நிச்சயம் எம்.பி.க்கள் ஆகி விடுவார்கள் என்று கட்சி நிர்வாகிகளும் திருமாவளவனிடம் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

  எனவே இந்த தேர்தலில் விட்டுவிடுங்கள். பின்னர் பார்க்கலாம் என்று மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

  • திருமாவளவன் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
  • கடந்த தேர்தலில் விடுதலை சிறுத்தைக்கு தனி சின்னமாக பானை ஒதுக்கப்பட்டது குறிப்பித்தக்கது.

  சென்னை:

  பாராளுமன்றத் தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிட விரும்பும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதற்காக சின்னத்தை பெற தீவிர முயற்சி மேற் கொள்ளப்படுகிறது.

  அதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம் இன்று கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

  கடந்த தேர்தலில் விடுதலை சிறுத்தைக்கு தனி சின்னமாக பானை ஒதுக்கப்பட்டது குறிப்பித்தக்கது.

  • தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் காரணமாக வறுமை ஒழிக்கப்படும் மாநிலமாகத் தமிழ்நாடு மாறி வருகிறது.
  • கோவையில் "கலைஞர் நூற்றாண்டு நூலகம்" அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.

  இன்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை வறுமையை ஒழிப்பதற்கும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் வழி வகுக்கின்ற தொலைநோக்குத் திட்டமாக உள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாராட்டியுள்ளது.

  இது தொடர்பாக விசிக வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் காரணமாக வறுமை ஒழிக்கப்படும் மாநிலமாகத் தமிழ்நாடு மாறி வருகிறது. தற்போது வறுமையில் இருக்கும் ஐந்து லட்சம் குடும்பங்களை வறுமையிலிருந்து மீட்பதற்கு ஒருங்கிணைந்த திட்டம் வகுக்கப்படுவதாக இந்த நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டிருப்பது ஏழை மக்களைப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறையுள்ள அரசாக இது திகழ்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

  முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் இருக்கும் குடிசை வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு அனைத்து குடிசை வீடுகளையும் கான்கிரீட் வீடுகளாக மாற்றுவதற்கான மாபெரும் திட்டம் உருவாக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட அந்தத் திட்டத்தில் 2 ஆண்டுகளில் 5 லட்சம் வீடுகள் கட்டப்பட்டன.

  2011 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக அந்தத் திட்டத்தை அதிமுக அரசு நிறுத்திவிட்டது. தற்போது கலைஞர் அவர்களின் வழியில் ஆட்சி நடத்தும் முதல்வர் அவர்கள், 'குடிசை இல்லா தமிழ்நாடு' திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த ஆறு ஆண்டுகளில் 8 இலட்சம் வீடுகள் கட்டப்படுமென்றும், நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறதென்றும் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

  இதனைப் பாராட்டி வரவேற்கின்றோம். வீடு ஒன்றுக்கு 3.5 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படுவதாக இதில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தொகையை ரூ.5 இலட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

  பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிப்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அறிமுகப்படுத்திய "புதுமைப்பெண் திட்டம்" பெருமளவில் பயனளித்துள்ளது. அதனை ஆண்களுக்கும் விரிவு படுத்துவதற்காக 'தமிழ்ப் புதல்வன் திட்டம்' என்கிற புதிய திட்டம் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனையும் மனமுவந்து வரவேற்கிறோம்.

  புதுமைப்பெண் திட்டம், முதலமைச்சரின் காலை சிற்றுண்டித்திட்டம் இரண்டையும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்துவதாக அறிவித்திருப்பது எளிய மக்களின் கோரிக்கையை இந்த அரசு எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதற்குச் சான்றாகும்.

  கோவையில் "கலைஞர் நூற்றாண்டு நூலகம்" அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.

  அறிவு சார் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் தூத்துக்குடியில் "விண்வெளி தொழில் மற்றும் உந்து சக்தி பூங்கா" அமைக்கப்படும் என்றும்; தமிழ்நாட்டில் முதன்முறையாக "உலகப் புத்தொழில் மாநாடு" நடத்தப்படும் என்றும்; மாண்புமிகு முதலமைச்சர் தலைமையில் "தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம்" உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருப்பது தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்துவதில் இந்தியாவுக்கே தமிழ்நாடு வழிகாட்டியாக விளங்குகிறது என்பதற்குச் சான்றுகளாக உள்ளன.

  அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசுப் பணி, ஜூன் மாதத்திற்குள் பத்தாயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு வேலைவாய்ப்பைத் தேடும் இளைஞர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளிப்பதாகும்.

  சென்னையின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கென்று பல திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 'வடசென்னை வளர்ச்சித் திட்டம்' அறிவிக்கப்பட்டிருப்பதை மகிழ்வோடு வரவேற்கிறோம்.

  பழங்குடியின மக்களின் வாழ்விடங்களில் சாலை வசதிகள், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 'தொல்குடி' என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளில் இது செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் பாராட்டி வரவேற்கிறோம்.

  ஒட்டுமொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை வறுமையை ஒழிப்பதற்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சியை விரைவுப்படுத்துவதற்குமான தொலைநோக்குப் பார்வையுடன்கூடிய செயல் திட்டமாக விளங்குகிறது.

  இத்தகைய சிறப்பு வாய்ந்த நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையும் மற்றும் நிதித் துறை அமைச்சர் அவர்களையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டுகிறோம்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

  • பவதாரிணி மறைவு திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
  • பவதாரிணியின் திருஉருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

  இசைஞானி இளையராஜாவின் மகள் பாடகி பவதாரிணி புற்றுநோய் பாதிப்பால் கடந்த 25-ம் தேதி உயிரிழந்தார்.

  பவதாரிணி மறைவு திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது உடல் சொந்த ஊரான தேனியில் அடக்கம் செய்யப்பட்டது.

  பவதாரிணி மறைவுக்கு திரையுலகினர், அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். 

  அந்த வகையில், விசிக தலைவர் திருமாவளவன் இசைஞானி இளையராஜா வீட்டிற்கு நேரில் சென்று பவதாரிணியின் திருஉருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

  பிறகு, இளையராஜாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

  • நாடாளுமன்ற பொதுத் தேர்தலை 100 விழுக்காடு ஒப்புகை சீட்டுகளை எண்ணித்தான் நடத்த வேண்டும்
  • மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்து வெற்றி பெறுவதற்கு பாஜக அரசு சதி செய்கிறது

  நாடாளுமன்ற பொதுத் தேர்தலை 100 விழுக்காடு ஒப்புகை சீட்டுகளை எண்ணித்தான் நடத்த வேண்டும் என வலியுறுத்தி பிப்ரவரி 23 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.

  இது தொடர்பாக விசிக வெளியிட்டுள்ள அறிக்கையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்து வெற்றி பெறுவதற்கு பாஜக அரசு சதி செய்கிறது என்ற ஐயம் நாடு முழுவதும் மக்களிடையே எழுந்துள்ளது. அதற்கு இந்திய தேர்தல் ஆணையமும் துணை போகிறதா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. எனவே, 'நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும், 100 விழுக்காடு ஒப்புகை சீட்டுகளை எண்ணித்தான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும்' என வலியுறுத்தி பிப்ரவரி 23 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

  தற்போது நடைமுறையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அதில் எளிதாக முறைகேடு செய்ய முடியும்; ஆளும் கட்சி தான் விரும்பிய வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய முடியும் என்று வல்லுநர்கள் மெய்ப்பித்துக் காட்டியுள்ளனர். மக்களுடைய சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையில் பாஜக அரசும் செயல்பட்டு வருகிறது. அதற்குத் தேர்தல் ஆணையமும் துணை போகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

  இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையாக உள்ள தேர்தல் முறையைச் சிதைப்பதற்கு நாம் அனுமதிக்க முடியாது. எனவே, வாக்குப்பதிவு எந்திரங்களை மட்டும் வைத்து தேர்தலை நடத்தக்கூடாது. மாறாக, எல்லா வாக்குப்பதிவு எந்திரங்களோடும் ஒப்புகைச் சீட்டினைப் பெறும் எந்திரமும் இணைக்கப்பட வேண்டும். அப்போதுதான், வாக்காளர் தான் விரும்பிய சின்னத்தில் வாக்களித்தபின்னர், தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்துகொள்ள முடியும். அந்த ஒப்புகைச் சீட்டினை வாக்குப் பெட்டியில் போடுதல் வேண்டும். அவற்றை எண்ணித்தான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும்.  இந்த கோரிக்கையைத்தான், "இந்தியா கூட்டணி" கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இதே கருத்தை முன்னாள் தேர்தல் ஆணையர் திரு. குரேஷி உட்பட பல அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் இதற்காக தலைநகர் டெல்லியில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் போராட்டத்தை பல சிவில் சமூக அமைப்புகளும் ஆதரித்து பல்லாயிரக்கணக்கில் திரண்டு தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். ஆனால், பாஜக அரசு அதற்கு செவிசாய்க்காமல் தொடர்ந்து அதிகாரத்துவ மமதையோடு நடந்து கொள்கிறது.

  தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் இரத்து செய்து தலைமை நீதிபதிக்குப் பதிலாக ஒரு அமைச்சரை நியமித்துக் கொள்ள வகை செய்யும் வகையில் புதிய சட்டத்தை பாஜக அரசு கொண்டுவந்துள்ளது.

  மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றான 'பெல் நிறுவனத்தின்' இயக்குனர்களாக பாஜகவினரே நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

  மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தொடர்பாகத் தமது கருத்துக்களை எடுத்துக் கூறுவதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்ட போதும் இந்திய தேர்தல் ஆணையம் அவர்களை சந்திக்க மறுத்து வருகிறது.

  மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் தொடர்பாக வெளியிடப்படும் உண்மைகளை மக்களுக்குத் தெரியாமல் மறைக்கும் விதமாக அவற்றை சமூக ஊடகங்களிலிருந்து தேர்தல் ஆணையம் நீக்கி வருகிறது.  கடந்த தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் இருந்த எண்ணிக்கைக்கும் ஒப்புகை சீட்டில் வந்த எண்ணிக்கைக்கும் பல இடங்களில் வேறுபாடுகள் இருந்தன. அதற்கான காரணம் தேர்தல் ஆணையத்தால் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. லட்சக்கணக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் காணாமல் போய் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது அதைப் பற்றியும் தேர்தல் ஆணையமோ, ஒன்றிய அரசோ விளக்கம் எதையும் அளிக்கவில்லை. மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் பயன்படுத்தப்படும் 'சிப்'பில் பதிவு செய்யப்பட்ட விவரங்களை வெளியிலிருந்து மாற்றி அமைக்க முடியும் அதன் மூலம் தேர்தல் முடிவுகளை மாற்ற முடியும் என்பதை வல்லுநர்கள் நிரூபணம் செய்துள்ளனர்.

  இதனால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலமாக நடத்தப்படும் தேர்தல் முறை மீது மக்கள் முற்றாக நம்பிக்கை இழந்துள்ளனர். எனவே, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மட்டும் வைத்து தேர்தலை நடத்தக் கூடாது. வாக்குப்பதிவு எந்திரங்கள் எல்லாவற்றோடும் ஒப்புகைச் சீட்டு கருவியை இணைக்க வேண்டும்; வாக்களித்ததும் ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒப்புகைச்சீட்டினைத் தனியே ஒரு பெட்டியில் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அந்த ஒப்புகைச் சீட்டுகளை எண்ணித்தான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும் என எல்லோரும் வலியுறுத்துகின்றனர். ஆனால், பாஜக அரசாங்கமோ, தேர்தல் ஆணையமோ இதற்கு எந்த பதிலையும் கூறவில்லை.

  'இந்தத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்' என்று பிரதமர் மோடியும், பாஜகவினரும் கூறி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாஜக ஆட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கும் நிலையில், 400 இடங்களில் வெல்வோம் என்று அவர்கள் கூறுவது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் அவர்கள் முறைகேடு செய்யத் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்ற ஐயத்தை வலுப்படுத்துகிறது. பாஜகவின் இந்த சதித் திட்டத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் துணைபோகக்கூடாது. 100 சதவீதம் ஒப்புகை சீட்டை எண்ணித் தேர்தல் முடிவை அறிவிப்போம் என தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்.

  இதனை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் 23- 02- 2024 ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறோம். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தோழமைக் கட்சிகளின் பிரதிநிதிகளும், சனநாயக சக்திகளும் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

  இந்திய தேர்தல் முறையைப் பாதுகாப்பது தான், இந்திய சனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான அடிப்படையாகும். எனவே, நேர்மையாகத் தேர்தல் நடத்த வலியுறுத்துவோம். பாஜகவின் சதித் திட்டத்தை முறியடிப்போம்!- என சனநாயக சக்திகளை அறைகூவி அழைக்கிறோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • தி.மு.க. கூட்டணியில் 10-க்கும் மேற்பட்ட கூட்டணிக் கட்சிகள் இருக்கின்றன.
  • தி.மு.க. வுடன் சமூக நீதி, மாநில உரிமைகள், மொழி உரிமை என கருத்தியல் ரீதியாக உடன்பாடு இருக்கிறது.

  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

  தி.மு.க. கூட்டணியில் 10-க்கும் மேற்பட்ட கூட்டணிக் கட்சிகள் இருக்கின்றன. அவரவர் கோரிக்கைகளுக்கு ஏற்ப தொகுதிப் பங்கீடுகளை முடிக்க வேண்டிய பொறுப்பு தி.மு.க. தலைமைக்கு இருக்கிறது. தனிப்பட்ட முறையில் கட்சியின் பலம் எவ்வளவு முக்கியமானதோ, அதைவிட கூட்டணி பலம் மிகவும் முக்கியம். அப்போதுதான் நமது கொள்கை பகைவர்களை வீழ்த்த முடியும்.

  வி.சி.க.வுக்கு தனியாக சின்னம் இல்லை. புதிதாக ஒரு சின்னத்தை நினைவூட்டி இறுதிவரை வழி காட்டுவது கடினம். அதைத் தவிர்ப்பதற்காகத்தான் தி.மு.க. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்துகிறது. மேலும் உதயசூரியன் சின்னத்தில் நின்றால், அது தி.மு.க.வுக்கு கிடைத்த வாக்கு வங்கியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும்.

  எனவே, வி.சி.க. என்னும் கட்சிக்கு வாக்கு வங்கி இருப்பதை நிரூபிக்க வேண்டியிருந்தது. கடந்த மக்களவைத் தேர்தலில் விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்திலும் வாக்கு வங்கி இருந்ததால் சிதம்பரத்தில் பானை சின்னத்திலும் போட்டியிட்டோம். அதன் பின், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்த சின்னத்தில் போட்டியிட்டு வாக்கு வங்கியை உறுதி செய்தோம். எந்தச் சின்னத்தில் போட்டி என்பது பேச்சுவார்த்தையில் தெரியும். சாதிவன்முறை, பெண்கள் தொடர்பான பிரச்சினை, மொழி, இனம் அடிப்படையிலான பிரச்சினை, வர்க்கப் பிரச்சினைகள் எனப் பல தளங்களிலும் முரண்பாடுகள் இருக்கின்றன. அதற்கு முக்கியத்துவம் கொடுத்தால் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க முடியாது. தி.மு.க.வுடன் சமூக நீதி, மாநில உரிமைகள், மொழி உரிமை என கருத்தியல் ரீதியாக உடன்பாடு இருக்கிறது. அந்த புள்ளியில் தி.மு.க.வு டன் வி.சி.க. நீடிக்கிறது.

  பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வருவதைக் கற்பனை கூட செய்ய முடியாது. மாநிலங்கள் இருக்காது, தேர்தல் இருக்காது, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதங்கள் இருக்காது. ஒன் இந்தியா, ஒன் நேசன், ஒன் கல்ச்சர், ஒன் எலக்சன். ஒன் பார்ட்டி என ஆபத்தான நிலையை இந்தியா எட்டும்.

  இவ்வாறு தொல். திருமாவளவன் கூறி உள்ளார்.

  • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசை மட்டுமின்றி, அவர் இந்தப் பதவியை வகிப்பதற்குக் காரணமான அரசியலமைப்புச் சட்டத்தையும் அவமதிப்பதாகும்.
  • மாநில அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையில் கவர்னர் என்ற பதவி எந்தவிதத்திலும் தேவையாக இல்லை.

  சென்னை:

  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

  அரசியலமைப்புச் சட்ட மரபுகளுக்கு மாறாகவும், தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் வகையிலும் இன்று சட்டப்பேரவையில் நடந்து கொண்டுள்ள கவர்னர் ஆர்.என்.ரவி அவர்களின் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

  திட்டமிட்டே மாநில அரசோடு முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தி அரசியல் அரங்கில் அவ்வப்போது தேவையற்ற பரபரப்பை உண்டாக்கும் கவர்னர், தனது பொறுப்பையும் பொறுப்புக்குரிய மாண்பையும் மறந்து ஒரு கட்சியின் பிரதிநிதியைப் போலவே செயல்பட்டு வருகிறார். எனவே, அவர் கவர்னர் பதவியிலிருந்து விலகுவதோடு தமிழ்நாட்டிலிருந்தும் வெளியேற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

  மாநில அரசு தயாரித்துக் கொடுக்கப்படும் உரையைப் படிப்பதென்பது ஆளுநருக்கு அரசியலமைப்புச் சட்டம் விதித்துள்ள கடமையாகும். அதை இன்று ஆர்.என்.ரவி அவர்கள் நிராகரித்துள்ளார். இது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசை மட்டுமின்றி, அவர் இந்தப் பதவியை வகிப்பதற்குக் காரணமான அரசியலமைப்புச் சட்டத்தையும் அவமதிப்பதாகும். அரசியலமைப்புச் சட்டப்படி விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யாமல் தொடர்ந்து இவ்வாறு அதை அவமதித்து வரும் ஆர்.என். ரவி அவர்கள் எந்த அடிப்படையில் கவர்னர் பதவியில் நீடிக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. அவர் கவர்னர் பதவி வகிப்பதற்கு மட்டுமல்ல, இந்த நாட்டின் குடிமகனாக இருப்பதற்கும்கூடத் தகுதியற்றவர் என்பதையே அவரது செயல்கள் காட்டுகின்றன.

  ஆர்.என்.ரவி அவர்கள், தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் பொதுவெளியில் தொடர்ந்து உண்மைக்கு மாறான தகவல்களைப் பரப்பி வருகிறார். சாதியின் அடிப்படையிலும், மதத்தின் அடிப்படையிலும் மக்களைப் பிளவுபடுத்தும் வகையில் பிரிவினையைத் தூண்டும் கருத்துக்களைத் தொடர்ந்து கூறி வருகிறார். அதன் மூலம் இங்கே சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அவர் வகிக்கும் கவர்னர் பதவியை இப்படியான சட்ட விரோதச் செயல்களுக்குக் கவசமாகப் பயன்படுத்துவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இத்தகைய போக்குள்ள அவர் தொடர்ந்து தமிழ்நாட்டில் இருப்பதே தமிழ்நாட்டு மக்களுக்குக் கேடாக முடியும். எனவே, அவரைத் தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு உரிய சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

  "கவர்னர் பதவி என்பது பிரிடிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டு சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்துக்குள் தங்கிவிட்ட ஒன்றாகும். ஒன்றிய அரசால் கவர்னர் நியமிக்கப்படுவதாகச் சொல்லப்பட்டாலும் ஒன்றிய அரசை ஆட்சி செய்யும் கட்சியாலேயே அவர் நியமிக்கப்படுகிறார். நடுநிலைக்கும் அவருக்கும் எந்தவொரு தொடர்பும் இருப்பதில்லை. தன்னை நியமிக்கும் கட்சியின் முகவராகவே அவர் செயல்படுகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்குத் தொல்லை தருவதற்கும், தமக்குப் பிடிக்காத கட்சிகளை உடைப்பதற்கும், மாநிலத்தில் நிலையற்ற தன்மையை உருவாக்குவதற்கும் ஒன்றிய அரசால் கவர்னர் பயன்படுத்தப்படுகிறார். மாநில அரசுகளைக் கலைப்பதற்கு ஆளுநரைத்தான் ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது. மாநில அரசுகள் இயற்றுகிற சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்குகிற வேலையில் கவர்னர்கள் ஈடுபடுவதைப் பார்க்கிறோம்.

  மாநில அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையில் கவர்னர் என்ற பதவி எந்தவிதத்திலும் தேவையாக இல்லை. எனவே கவர்னர் பதவியை ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநில அரசுகளும் தொடர்ந்து முன்வைத்துவருகின்றன.

  'இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்ததும் கவர்னர் பதவி ஒழிக்கப்படும்' என்ற வாக்குறுதியை தேர்தல் வாக்குறுதியாக வழங்கவேண்டும் என 'வெல்லும் சனநாயகம்' மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.