search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விடுதலை சிறுத்தை போராட்டத்துக்கு அனுமதி மறுப்பது சரியா?- திருமாவளவன்
    X

    விடுதலை சிறுத்தை போராட்டத்துக்கு அனுமதி மறுப்பது சரியா?- திருமாவளவன்

    • மதம் சார்ந்த அமைப்புகளின் நடவடிக்கைகளோடு ஒப்பிடுவதும், அனுமதி மறுப்பதும் ஏற்புடையதாக இல்லை.
    • மதவெறி பாசிச ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் சனநாயக வழியில் மக்களுக்குப் பணியாற்றும் அரசியல் கட்சிகளை ஒப்பீடு செய்வதே வேதனைக்குரியதாகும்.

    சென்னை:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அக்டோபர் 2-காந்தியடிகளின் பிறந்தநாளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஊர்வலத்துக்கு அரசு தடை விதித்துள்ளது. அவ்வமைப்பு அரசியல் கட்சியல்ல; மாறாக, மதவாத இயக்கம் என அறியப்பட்ட நிலையில், அரசுக்கு எழும் அச்சத்தில் நியாயமுள்ளது.

    ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இடது சாரி கட்சிகளும் இணைந்து சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி அதே நாளில் நடத்தவிருந்த மனித சங்கிலி அறப்போராட்டத்துக்குத் தடை விதித்திருப்பது எவ்வகையில் நியாயம் என்னும் கேள்வி எழுகிறது.

    பல்வேறு காரணங்களை கூறி ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க முடியாது என்று தமிழ்நாடு அரசு கூறியிருக்கும் காரணம் ஏற்கத்தக்கதாக உள்ளது.

    ஏனெனில், அவை இரண்டும் தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அல்ல. ஆனால் சி.பி.ஐ., சி.பி.எம். ஆகிய கட்சிகளும் வி.சி.க.வும் தேசிய மற்றும் மாநில அளவிலான அரசியல் கட்சிகளாகும்.

    இந்த மூன்று அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து அறிவித்திருந்த "சமூக நல்லிணக்க மனித சங்கிலி" அறப்போராட்டத்துக்கு எமது தோழமை கட்சிகளான ம.தி.மு.க., ம.ம.க, த.வா.க., நா.த.க., எஸ்.டி.பி.ஐ., சி.பி.ஐ. (எம்.எல்-வி), த.பு.க. என பத்துக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளும் தி.க., தி.வி.க., த.பெ.தி.க., போன்ற சமூகநீதி இயக்கங்களும் ஆதரவு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. அதாவது இந்தப் போராட்டம் முற்றிலும் அரசியல் கட்சிகள் இணைந்து நடத்துவதாகும்.

    எனவே, இதனை மதம் சார்ந்த அமைப்புகளின் நடவடிக்கைகளோடு ஒப்பிடுவதும், அனுமதி மறுப்பதும் ஏற்புடையதாக இல்லை. மதவெறி பாசிச ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் சனநாயக வழியில் மக்களுக்குப் பணியாற்றும் அரசியல் கட்சிகளை ஒப்பீடு செய்வதே வேதனைக்குரியதாகும்.

    எனவே, காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் நாளன்று நடக்கவுள்ள எமது 'சமூக நல்லிணக்க மனித சங்கிலி' அறப்போராட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×