என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மதுரை ஆதீனம் கார் ஓட்டுநர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
- மதுரை ஆதீனம் பயணித்த வாகனத்தின் ஓட்டுநரின் கவனக்குறைவே முழுக்க முழுக்க விபத்துக்கு காரணம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
- விபத்திற்குள்ளான மற்றொரு காரை ஓட்டி வந்தவர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்ற அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, கவர்னர் ஆர்.என்.ரவி, மதுரை ஆதீனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய மதுரை ஆதீனத்தின் 293-வது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞான சம்பந்ததேசிக பரமாச்சார்ய சுவாமிகள், தன்னை கொலை செய்ய கார் விபத்து மூலம் சதி நடந்ததாக குற்றம் சாட்டினார்.
மேலும், மாநாட்டில் கலந்து கொள்ள வந்த தன் கார் மீது உளுந்தூர்பேட்டை அருகே மற்றொரு கார் உரசிச் சென்ற நிலையில், இது திட்டமிட்ட சதி, தன்னை கொல்ல விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. பேரிகார்டை உடைத்துக்கொண்டு வந்தனர். விபத்துக்குப் பிறகு நிறுத்தாமல் சென்றுவிட்டனர். இதில் நான் மயக்கமடைந்துவிட்டேன். ஆனால் என் கார் டிரைவர், தொப்பி அணிந்து தாடி வைத்த ஒருநபர் காரில் நம்பர் பிளேட் இல்லாமல் ஓட்டி வந்து மோதியதாக தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் தரவில்லை. ஆண்டவன் சிவபெருமானிடம் புகார் தந்துவிட்டேன். இந்த நாட்டில் சிறுபான்மையினருக்கே சலுகைகள் அதிகம். என் புகாரை எடுக்கமாட்டார்கள் என மதுரை ஆதீனம் பகிரங்கமாக குற்றம்சாட்டி பேசி இருந்தார்.
இதையடுத்து, இச்சம்பம் குறித்து விசாரணை நடத்திய கள்ளக்குறிச்சி போலீசார் விளக்கம் அளித்தனர். அதில், மதுரை ஆதீனத்தை கொல்ல சதி எதுவும் நடந்ததாக தெரியவில்லை என்றும் ஆதீனம் பயணித்த கார் அதிவேகமாக சென்று சாலையைக் கடந்த போது விபத்து நடந்ததாகவும் தெரிவித்தனர். மேலும் மதுரை ஆதீனம் பயணித்த வாகனத்தின் ஓட்டுநரின் கவனக்குறைவே முழுக்க முழுக்க விபத்துக்கு காரணம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே, மதுரை ஆதீனத்தின் கார் மற்றொரு வாகனத்தின் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுந்சாலையில், மதுரை ஆதீனத்தின் கார் அதிவேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. அப்போது சாலையின் எதிர் பகுதியில் வெள்ளை நிறக் கார் மெதுவாக வந்துள்ளது. ஆதீனத்தின் கார் அதிவேகமாக சென்று சாலையைக் கடந்தபோது விபத்து நடந்துள்ளது.
இந்த நிலையில், மதுரை ஆதீனத்தின் கார் ஓட்டுநர் மீது உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை ஆதீனம் வந்த காரை அதிவேகமாகவும், அலட்சியமாகவும் ஓட்டியதாக அவரது கார் ஓட்டுநர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்திற்குள்ளான மற்றொரு காரை ஓட்டி வந்தவர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.






