என் மலர்
நீங்கள் தேடியது "வழக்கு பதிவு"
- மாநகராட்சிக்கு ரூ.1.4 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக போலீசார் மதிப்பிட்டுள்ளனர்.
- 5 நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருச்சி:
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தமது அரசியல் பிரவேசத்திற்கு பின் முதல் சுற்று பயணத்தை கடந்த 13ம் தேதி திருச்சியில் இருந்து தொடங்கினார். இதில் கூடிய கூட்டம் திருச்சியை குலுங்க வைப்பதாக அமைந்தது.
திருச்சி விமான நிலையத்திலிருந்து பிரசாரம் நடந்த மரக்கடை வரை 8 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க சுமார் ஐந்து மணி நேரம் ஆனது. இந்த நிலையில் தற்போது விஜய் பிரசாரத்தின் போது, மாநில அரசு மற்றும் தனியார் கடைகளுக்குச் சொந்தமான சொத்துக்களை சேதப்படுத்தியதாக 5 நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருச்சி மாநகராட்சியின் அரியமங்கலம் இளநிலை பொறியாளர் திவாகர் அளித்த புகாரில், டி.வி.எஸ்.டோல்கேட், மேம்பாலத்திற்கு கீழே அழகுபடுத்தப்பட்ட இடத்தை பாதுகாக்க அமைத்திருந்த துருப்பிடிக்காத எக்கு வேலி, விஜய் பேரணியின் போது தொண்டர்களால் சேதப்படுத்தப்பட்டது.
பிரசார வாகனத்தைப் பின்தொடர்ந்தபோது, ஒரு பிரிவினர் பசுமையான இடத்திற்குள் நுழைந்து துருப்பிடிக்காத எக்கு கைப்பிடிகளை சேதப்படுத்தியதாக கூறப்பட்டிருந்தது. இதன் மூலம் மாநகராட்சிக்கு ரூ.1.4 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக போலீசார் மதிப்பிட்டுள்ளனர்.
மேலும் காந்தி மார்க்கெட் அருகிலுள்ள மரக்கடையில் பிரசாரம் நடைபெற்ற பகுதியிலும், தென்னூரைச் சேர்ந்த வியாபாரி எஸ். ரவிச்சந்திரன் என்பவர், மர தளவாடங்கள் மற்றும் ஒரு சரக்கு வாகனம் உட்பட ரூ.1.3 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை அடையாளம் தெரியாத தமிழக வெற்றிக்கழக உறுப்பினர்களால் சேதப்படுத்தியதாக புகார் அளித்தார்.
புகார்தாரர், தனது கடையின் மேல் நின்று கொண்டு, கீழே இறங்கச் சொன்னபோது, கட்சி உறுப்பினர்கள் ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி தன்னைத் திட்டியதாகவும் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதிகாரிகள் இருதரப்பினரையும் விசாரணைக்கு அழைத்தனர்.
- குழந்தையை பறித்துக் கொண்டு அவரை வயிற்றில் எட்டி உதைத்தாக கூறப்படுகிறது.
மதுரை:
மதுரை மாவட்டம் திரு மங்கலத்தை அடுத்த பேரையூர் தாலுகா இ.கோட்டைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் மகள் அர்ச்சனா (வயது 23). இவருக்கும் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ராஜீவ்நகரை சேர்ந்த பரத் (25) என்பவருக்கும் கடந்த 25.10.2023-ல் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது பெண் வீட்டார் சார்பில் நகை, பணம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.
இந்தநிலையில் திருமணமான 6-வது மாதத்தில் இருந்து மாப்பிள்ளை வீட்டாரின் கோர முகம் வெளிப்பட தொடங்கியது. அதாவது கணவர் பரத், அவரது தம்பி ஆதிதர்மலிங்கம், தாயார் ஈஸ்வரி ஆகிய மூன்று பேரும் சேர்ந்து, அர்ச்சனாவிடம் உனது தந்தையிடம் சென்று 100 பவுன் நகை மற்றும் சொத்தில் பங்கு கேட்டு வாங்கி வருமாறு கூறியுள்ளனர். இதற்கு அர்ச்சனா மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த அவர்கள் கர்ப்பிணியாக இருக்கும் மருமகள் என்றும் பாராமல் அவரை அடித்து, உடைத்து பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாக்கி உள்ளனர்.
ஆபாச வார்த்தைகளால் திட்டித்தீர்த்த அவர்களிடம் இனிமேலும் வாழமுடியாது என்று கருதிய அர்ச்சனா, நடந்த சம்பவம் குறித்து உசிலம்பட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அவர்கள் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலத்திற்கு சென்று தெரிவிக்குமாறு கூறியுள்ளனர். அதன்படி அர்ச்சனா அங்கு சென்று புகார் கொடுத்தார்.
இதையடுத்து அதிகாரிகள் இருதரப்பினரையும் விசாரணைக்கு அழைத்தனர். கடந்த 14-ந்தேதி தான் பெற்றெடுத்த குழந்தையுடன் அர்ச்சனா சமூக நலத்துறை அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது அங்கு வந்த அர்ச்சனாவின் கணவர், மனைவியின் கையில் இருந்த குழந்தையை பறித்துக் கொண்டு அவரை வயிற்றில் எட்டி உதைத்தாக கூறப்படுகிறது. மேலும் அவரது தம்பி மற்றும் அர்ச்சனாவின் மாமியாரும் சேர்ந்துகொண்டு தாக்கியுள்ளனர்.
இதனை தடுத்த அர்ச்சனாவின் தந்தை முருகேசனும் கடுமையாக தாக்கப்பட்டார். அப்போது அர்ச்சனா கழுத்தில் இருந்து அறுந்து விழுந்த 1 பவுன் சங்கிலியை கணவர் பரத்தின் தம்பி ஆதிதர்மலிங்கம் அபகரித்துக்கொண்டதாக அர்ச்சனா, மதுரை தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் பரத், ஆதிதர்மலிங்கம், ஈஸ்வரி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மற்றொரு பரிசோதனை அறிக்கை நிலுவையில் உள்ளது.
- திருப்புவனத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு சென்றபோது தனது நகைகள் திருட்டு போனதாக பேராசிரியை நிகிதா திருப்புவனம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அக்கோவிலின் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமாரை, மானாமதுரை தனிப்படை போலீசார் அழைத்துச்சென்று தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே நிகிதா அளித்த நகை திருட்டு புகாரையும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் சில நாட்களுக்கு முன்பு நிகிதா அளித்த புகார் மற்றும் வழக்கு ஆவணங்கள் சி.பி.ஐ. வசம் திருப்புவனம் போலீசாரால் ஒப்படைக்கப்பட்டன.
இந்த நிலையில் போலீசில் நிகிதா ஏற்கனவே அளித்த நகை திருட்டு புகார் தொடர்பாக சி.பி.ஐ. நேற்று புதிய வழக்குப்பதிவு செய்தது. அந்த புகாரில் என்னென்ன உள்ளது என சி.பி.ஐ. அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:-
கடந்த ஜூன் 27-ந் தேதி காலையில் பேராசிரியை நிகிதாவும், அவருடைய தாயார் சிவகாமியும் காரில் மடப்புரம் கோவிலுக்குச் சென்றுள்ளனர். கோவில் காவல் பணியில் இருப்பவர்களுக்கான சீருடையைப் போல தோற்றமளிக்கும் வகையில் உடை அணிந்து வந்த அஜித்குமார் அவரை அணுகி உள்ளார்.
நிகிதா தாயாரின் முதுமையை சாதகமாகப் பயன்படுத்தி, காரை நிறுத்த அஜித்குமாரே முன்வந்து சாவியை தன்னிடம் கொடுக்க வற்புறுத்தி வாங்கினார். பின்னர் கோவிலில் இருந்து வாகனத்திற்கு திரும்பிய பிறகு, தன் கைப்பை சிதைக்கப்பட்டு இருப்பதை நிகிதா பார்த்துள்ளார். சோதனை செய்தபோது, 6 பவுன் எடையுள்ள ஒரு சங்கிலி, 2½ பவுன் எடையுள்ள 2 தங்க வளையல்கள் மற்றும் ஒரு பவுன் எடையுள்ள கல் பதித்த 2 மோதிரங்கள் என மொத்தம் 9½ பவுன் தங்க நகைகள் காணாமல் போய் உள்ளன. அவற்றை கண்டுபிடித்து தர வேண்டும் என நிகிதா புகார் அளித்து உள்ளார்.
இந்த புகார் தொடர்பான விசாரணைக்காக போலீசார் அதே நாளில் அஜித்குமாரை அழைத்துச் சென்றனர். மறுநாள் இரவில் அவர் அரசு மருத்துவமனையில் இறந்துவிட்டதாக போலீசாரால் அறிவிக்கப்பட்டது. ஜூன் 29 அன்று மாலை 5.45 மணி முதல் கிட்டத்தட்ட 3 மணி நேரம் நீடித்த பிரேத பரிசோதனையில், அஜித்குமாரின் கால்கள், கைகள், மார்பு, வயிறு உள்ளிட்ட இடங்களில் 44 வெளிப்புற காயங்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றில் 19 காயங்கள் ஆழமானவை. தசை வரை நீண்டு இருந்தன. பிரேத பரிசோதனைக்கு சுமார் 12 முதல் 24 மணி நேரத்திற்கு முன்பு மரணம் நிகழ்ந்து இருக்கலாம் என்று மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் தடயவியல் சிகிச்சை நிபுணர்களின் அறிக்கை கூறி உள்ளது. ஆனால் இறப்புக்கான சரியான காரணத்தை குறிப்பிடவில்லை. மற்றொரு பரிசோதனை அறிக்கை நிலுவையில் உள்ளது. திருப்புவனத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
இவ்வாறு அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
நிகிதாவிடம் இருந்து உண்மையிலேயே நகை திருட்டு போனதா? மேலிடத்தில் இருந்து வந்த அழுத்தம் காரணமாகவே அஜித்குமாரை போலீசார் கடுமையாக தாக்கி கொன்றனரா? என இந்த வழக்கில் சந்தேகம் எழுப்பப்பட்டது. அதன் உண்மைத்தன்மையை கண்டறிய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பேரிலேயே சி.பி.ஐ. இந்த நகை திருட்டு வழக்கையும் விசாரிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
- அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
- சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் அமலாக்கத்துறையினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை:
தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக இருந்து வருபவர் ஐ.பெரியசாமி. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஐ.பெரியசாமி தி.மு.க. துணை பொதுச்செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.
தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவராக திகழும் இவர் ஏற்கனவே கூட்டுறவு துறை, வருவாய் துறை பொறுப்புகளையும் அமைச்சரவையில் வகித்து உள்ளார்.
இந்த நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை அடையாறு பசுமை வழிச்சாலையில் உள்ள ஐ.பெரியசாமியின் வீடு மற்றும் சேப்பாக்கம் எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் உள்ள அவரது அறை ஆகிய இடங்களுக்கு இன்று காலை 6 மணி அளவில் சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் 10 பேர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இதே போன்று திண்டுக்கல்லில் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் சோதனை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
எம்.எல்.ஏ. விடுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் அமலாக்கத்துறையினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- சிலர் தவறாக பயன்படுத்தி சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
- அனுமதி பெறாத கட்டிடத்தில் பட்டாசுகளை உற்பத்தி செய்வதில் சுமார் 20 பேர் வரை பணியாற்றியது தெரியவந்துள்ளது.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, திருத்தங்கல், வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. தீபாவளி பண்டிகைக்கு சில மாதங்களே உள்ள நிலையில் பட்டாசு உற்பத்தி களை கட்டி உள்ளது. அதிக தேவை இருப்பதால் அந்த ஆலைகளில் பட்டாசுகள் தயாரிக்கும் பணி மும்முரம் அடைந்துள்ளது.
இதனை சிலர் தவறாக பயன்படுத்தி சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தேசிய பசுமை தீர்ப்பாயம் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து இனிமேல் நடைபெறுவதை தடுக்கவும், சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறையினர், தீயணைப்பு துறையினர், போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
இருப்பினும் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணி ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் வெம்பக்கோட்டை பகுதியில் உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து பட்டாசுகள் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதில் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தாயில்பட்டி பசும்பொன்நகர் பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து வெம்பக்கோட்டை போலீசார் உதவியுடன் வருவாய் துறையினர் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பசும்பொன்நகர் பகுதியில் ராஜசேகர் என்பவருக்கு சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக அனுமதி இன்றி பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
ஆய்வு மேற்கொண்ட அலுவலர்கள் ரூ.5 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்ததுடன் கட்டிடத்திற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் அருகில் தாயில்பட்டியை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் பட்டாசு சேகரித்து வைத்திருந்த குடோனையும் அதிகாரிகள் சீல் வைத்தனர். இரண்டு இடத்திலும் சிவகாசி மணி நகரை சேர்ந்த மோகன் என்பவர் வாடகைக்கு எடுத்து சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததும், சேகரித்தும் கண்டுபிடிக்கப்பட்டது.
அனுமதி பெறாத கட்டிடத்தில் பட்டாசுகளை உற்பத்தி செய்வதில் சுமார் 20 பேர் வரை பணியாற்றியது தெரியவந்துள்ளது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஒரு கட்டிடத்தில் பட்டாசுகள் மற்றும் மூலப்பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து பொக்லைன் எந்திரம் மூலம் அருகில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு அதில் புதைத்தனர். இந்த சோதனையில் வெம்பக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் குருநாதன் மற்றும் தாயில்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேலும் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டதாக கட்டிட உரிமையாளர்கள் ராஜசேகர், பால முருகன் மற்றும் வாடகைக்கு எடுத்து பட்டாசு தயாரித்த சிவகாசியை சேர்ந்த மோகன் ஆகிய 3 பேர் மீது மூன்று பிரிவுகளில் வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மது பழக்கத்திற்கு அடிமையான சதீஷ், அடிக்கடி மனைவி அதுல்யாவுடன் தகராறு செய்துள்ளார்.
- சதீஷ், சந்தேகத்தின் பேரில் அதுல்யாவுக்கு பல்வேறு தொல்லைகள் கொடுத்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரளாவை சேர்ந்த பலரும் ஐக்கிய அரபு நாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் கொல்லத்தை சேர்ந்த விபஞ்சிகா என்ற பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷார்ஜாவில் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு கேரள இளம்பெண் ஐக்கிய அரபு எமிரேட்சில் அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார்.
குடும்ப வன்முறை காரணமாக அவர் தற்கொலை முடிவை எடுத்திருப்பதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர். இது தொடர்பாக அவரது கணவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
கேரள மாநிலம் கொல்லம் கோழிவிலா பகுதியை சேர்ந்தவர் அதுல்யா (வயது 30). இவருக்கும் சதீஷ் என்பவருக்கும் 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. துபாயில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக சதீஷ் பணியாற்றியதால், மனைவியுடன் ஷார்ஜாவில் வசித்து வந்தார்.
மது பழக்கத்திற்கு அடிமையான சதீஷ், அடிக்கடி மனைவி அதுல்யாவுடன் தகராறு செய்துள்ளார். இந்த நிலையில் தான் அதுல்யா, அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். முன்னதாக அவர், தனது கணவரின் உடல் ரீதியான தாக்குதல்கள் குறித்து தனது சகோதரிக்கு போட்டோ மற்றும் வீடியோ அனுப்பி உள்ளார்.
இதனை வைத்து அதுல்யாவின் குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அதில் திருமணமான 6 மாதத்தில் இருந்தே அதுல்யா பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்து வந்ததாக தெரிவித்துள்ளனர். சதீஷ், சந்தேகத்தின் பேரில் அதுல்யாவுக்கு பல்வேறு தொல்லைகள் கொடுத்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் கொடுத்துள்ள வீடியோ ஆதாரத்தில் சதீஷ், நாற்காலியை தூக்கி அடிப்பது போன்ற காட்சி உள்ளிட்ட பல்வேறு நிலைகள் உள்ளன. அதன் அடிப்படையில் கொல்லம் சவர தேக்கும்பாகம் போலீசார், சதீஷ் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சதீஷ்-அதுல்யா தம்பதியரின் மகள் ஆராதிகா (10) தற்போது கொல்லத்தில் உள்ள தனது தாத்தா-பாட்டியுடன் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கூடுதல் வரதட்சணை வாங்கி வராவிட்டால், உன்னை கொன்றுவிட்டு வேறு திருமணம் செய்து கொள்வேன் என்று கணவர் பூபாலன் மிரட்டி உள்ளார்.
- பலத்த காயமடைந்த தங்கபிரியா மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மதுரை:
மதுரை காதக்கிணறு பகுதியை சேர்ந்தவர் தங்கபிரியா, தனியார் பள்ளி ஆசிரியை. இவருக்கும், மதுரையை அடுத்த அப்பன்திருப்பதி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் பூபாலன் என்பவருக்கும் கடந்த 3.7.2017 அன்று திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். பூபாலனின் தந்தை செந்தில்குமரன் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
தங்கபிரியா திருமணத்தின்போது பெண் வீட்டார் சார்பில் 60 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் உள்ளிட்டவை சீர்வரிசையாக கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறு மாமனார் செந்தில் குமரன், கணவர் பூபாலன், மாமியார் விஜயா, நாத்தனார் அனிதா ஆகியோர் சேர்ந்து தங்கபிரியாவை பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளாக்கியுள்ளனர்.
இதற்கிடையே நேற்று முன்தினம் புதிதாக வீடு வாங்குவதற்காக உன் தந்தையிடம் இருந்து பணம் வாங்கி வருமாறு கூறி தங்கபிரியாவை அடித்து உதைத்துள்ளனர். மேலும் கூடுதல் வரதட்சணை வாங்கி வராவிட்டால், உன்னை கொன்றுவிட்டு வேறு திருமணம் செய்து கொள்வேன் என்று கணவர் பூபாலன் மிரட்டி உள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த தங்கபிரியா மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தங்கபிரியா தனது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தார். அவர்கள் அளித்த புகாரின்பேரில் தங்கபிரியாவின் கணவர் பூபாலன், மாமனார் செந்தில்குமரன், மாமியார் விஜயா, நாத்தனார் அனிதா ஆகியோர் மீது அப்பன் திருப்பதி போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சமீபத்தில் திருப்பூர் ரிதன்யா, குமரி மாவட்டம் ஜெபிலா போன்ற பல பெண்கள் வரதட்சணை கொடுமையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் உலுக்கிய நிலையில், காவல்துறை குடும்பத்தில் இருந்து இவ்வாறான செயல் வந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- நிலப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
- ஆரணி தாலுகா போலீசில் தனித்தனியாக புகார் அளிக்கப்பட்டது.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த அறியா பாடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 36). அதே பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (64) இருவரும் உறவினர்கள்.
இவர்களுக்கு ஏற்கனவே நிலப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மணிகண்டன் வீட்டின் அருகே வழி ஒன்று உள்ளது.
அந்த வழியினை முள்வேலி போட்டு அடைத்தார். இதனால் அந்த வழியாக செல்பவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருவதாக தெரிகிறது. இதனால் விஸ்வநாதன் உள்பட சிலர் மணிகண்டனிடன் சென்று தகராறில் ஈடுபட்டனர். இருதரப்பு மோதலாக மாறியது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் தனித்தனியாக புகார் அளிக்கப்பட்டது. போலீசார் இருதரப்பையும் சேர்ந்த 19 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விபத்து நடந்த பகுதியை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- உயிரிழந்த நாகராஜ்-ஆனந்தி குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குள்ளாய்பாளையம் பகுதியில் பாலப்பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் பாய்ந்து நாகராஜ், அவரது மனைவி ஆனந்தி ஆகியோர் உயிரிழந்தனர். மகள் தீக்ஷிதா பலத்த காயமடைந்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பாலம் நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாததே இந்த விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இந்தநிலையில் விபத்து நடந்த இடத்தை கலெக்டர் கிறிஸ்துராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விபத்துக்கு காரணமான பாலப்பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கணேஷ், சைட் என்ஜினீயர் குணசேகரன், சைட் மேற்பார்வையாளர் கவுதம், ஒப்பந்ததாரர் சிவக்குமார் ஆகியோர் மீது அஜாக்கிரதையாக செயல்படுதல், விபத்தை ஏற்படுத்தி மரணம் ஏற்படுத்துதல், உரிய பாதுகாப்பு தடுப்புகள் ஏற்படுத்தாமல், விபத்து ஏற்பட காரணமாக இருத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே விபத்து நடந்த பகுதியை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் உயிரிழந்த நாகராஜ்-ஆனந்தி குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
- மதுரை ஆதீனம் பயணித்த வாகனத்தின் ஓட்டுநரின் கவனக்குறைவே முழுக்க முழுக்க விபத்துக்கு காரணம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
- விபத்திற்குள்ளான மற்றொரு காரை ஓட்டி வந்தவர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்ற அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, கவர்னர் ஆர்.என்.ரவி, மதுரை ஆதீனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய மதுரை ஆதீனத்தின் 293-வது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞான சம்பந்ததேசிக பரமாச்சார்ய சுவாமிகள், தன்னை கொலை செய்ய கார் விபத்து மூலம் சதி நடந்ததாக குற்றம் சாட்டினார்.
மேலும், மாநாட்டில் கலந்து கொள்ள வந்த தன் கார் மீது உளுந்தூர்பேட்டை அருகே மற்றொரு கார் உரசிச் சென்ற நிலையில், இது திட்டமிட்ட சதி, தன்னை கொல்ல விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. பேரிகார்டை உடைத்துக்கொண்டு வந்தனர். விபத்துக்குப் பிறகு நிறுத்தாமல் சென்றுவிட்டனர். இதில் நான் மயக்கமடைந்துவிட்டேன். ஆனால் என் கார் டிரைவர், தொப்பி அணிந்து தாடி வைத்த ஒருநபர் காரில் நம்பர் பிளேட் இல்லாமல் ஓட்டி வந்து மோதியதாக தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் தரவில்லை. ஆண்டவன் சிவபெருமானிடம் புகார் தந்துவிட்டேன். இந்த நாட்டில் சிறுபான்மையினருக்கே சலுகைகள் அதிகம். என் புகாரை எடுக்கமாட்டார்கள் என மதுரை ஆதீனம் பகிரங்கமாக குற்றம்சாட்டி பேசி இருந்தார்.
இதையடுத்து, இச்சம்பம் குறித்து விசாரணை நடத்திய கள்ளக்குறிச்சி போலீசார் விளக்கம் அளித்தனர். அதில், மதுரை ஆதீனத்தை கொல்ல சதி எதுவும் நடந்ததாக தெரியவில்லை என்றும் ஆதீனம் பயணித்த கார் அதிவேகமாக சென்று சாலையைக் கடந்த போது விபத்து நடந்ததாகவும் தெரிவித்தனர். மேலும் மதுரை ஆதீனம் பயணித்த வாகனத்தின் ஓட்டுநரின் கவனக்குறைவே முழுக்க முழுக்க விபத்துக்கு காரணம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே, மதுரை ஆதீனத்தின் கார் மற்றொரு வாகனத்தின் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுந்சாலையில், மதுரை ஆதீனத்தின் கார் அதிவேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. அப்போது சாலையின் எதிர் பகுதியில் வெள்ளை நிறக் கார் மெதுவாக வந்துள்ளது. ஆதீனத்தின் கார் அதிவேகமாக சென்று சாலையைக் கடந்தபோது விபத்து நடந்துள்ளது.
இந்த நிலையில், மதுரை ஆதீனத்தின் கார் ஓட்டுநர் மீது உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை ஆதீனம் வந்த காரை அதிவேகமாகவும், அலட்சியமாகவும் ஓட்டியதாக அவரது கார் ஓட்டுநர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்திற்குள்ளான மற்றொரு காரை ஓட்டி வந்தவர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- டாஸ்மாக் ஊழலை கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக தமிழக பா.ஜ.க. அறிவித்திருந்தது.
- போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அந்த பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.
நாகர்கோவில்:
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் குடோன் மற்றும் பல்வேறு மதுபான தொழிற்சாலைகளில் அமலாக்கத்துறை கடந்த 6-ந்தேதி சோதனை நடத்தியது. சோதனையில் ரூ.1000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இதையடுத்து டாஸ்மாக் ஊழலை கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக தமிழக பா.ஜ.க. அறிவித்திருந்தது.
அதன்படி போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழிசை சவுந்தர்ராஜன், எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்பட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்திலும் 2 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைவர் கோபகுமார் தலைமையில் பாரதிய ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பொருளாளர் முத்துராமன், முன்னாள் தலைவர் கணேசன், மாநில மகளிர் அணி செயலாளர் மீனாதேவ், மேற்கு மாநகர தலைவர் சதீஷ் உள்பட பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அந்த பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் இரவு விடுவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட கோபகுமார், முத்துராமன், கணேசன், சதீஷ், மீனாதேவ் உள்பட 160 பேர் மீது நேசமணிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதேபோல் மார்த்தாண்டம் பஸ் நிலையம் முன்பு மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை மாலையில் விடுவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் உள்பட 140 பேர் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- அடையாளம் தெரியாத நபர் பஸ்சை வழிமறித்து அவருடைய இரு சக்கர வாகனத்தை பஸ் முன்னாடி நிறுத்தினார்.
- இதனால் டிரைவர் சுரேஷ் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
கள்ளக்குறிச்சி:
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் செந்தாரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 44). இவர் தனியார் பஸ்சில் 10 வருடமாக டிரைவர் வேலை பார்த்து வருகிறார். நேற்று பகல் 2 மணி அளவில் கள்ளக்குறிச்சியில் இருந்து ஆத்தூர் நோக்கி சென்று கொண்டிருக்கும் போது இந்திலி ஆர் .கே. எஸ். கல்லூரி அருகே அடையாளம் தெரியாத நபர் பஸ்சை வழிமறித்து அவருடைய இரு சக்கர வாகனத்தை பஸ் முன்னாடி நிறுத்தினார்.
பின்னர் டிரைவரை பார்த்து நீ பஸ் சாலையில் ஓட்டுறியா? இல்லை வானத்தில் ஓட்டுகிறாயா? என ஆபாசமாக திட்டி கல்லால் பஸ்சின் முன் பகுதி கண்ணாடியை உடைத்துசேதப்படுத்தினார். இதனால் டிரைவர் சுரேஷ் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் வழக்கை பதிவு செய்து பஸ் கண்ணாடியை உடைத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.






