என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருப்பூரில் தடையை மீறி போராட்டம் - அண்ணாமலை உள்பட 600 பேர் மீது வழக்கு
- போராட்டத்தின்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
- போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சியில் தினசரி சேகரமாகும் குப்பைகளை இடுவாய் அடுத்த சின்னகாளிபாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் குப்பை கிடங்கு அமைத்து கொட்டுவதை எதிர்த்து அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற போராட்டத்தின்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பொதுமக்கள் 3 பேர் மற்றும் போலீசார் 4 பேர் காயமடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதனை கண்டித்து நேற்று பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் திருப்பூர் குமரன் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து போலீசார் அண்ணாமலை உள்பட 600க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்களை இரவு விடுதலை செய்தனர்.
இந்தநிலையில் அனுமதியின்றி தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 600 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது தடையை மீறி ஆர்ப்பா ட்டம் செய்தது, அனுமதியின்றி ஒன்று கூடுதல், போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.






