search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dowry torture"

    • திருமணத்தின் போது 80 பவுன் தங்க நகைகளும், ரூ.5 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களையும் எனது வீட்டார் வரதட்சணையாக கொடுத்தனர்.
    • மேலும் 20 பவுன் நகைகளை எனது தாயாரிடம் வாங்கி வந்து அவற்றையும் அடகு வைத்துள்ளார்.

    மதுரை:

    மதுரை கோ.புதூர் பாரதியார் மெயின்ரோடு திரவுபதி அம்மன் கோவில் 2-வது தெருவை சேர்ந்தவர் பால் பாண்டியன் மகள் அனுசுயா (வயது 28). இவர் அண்ணாநகர் போலீஸ் துணை கமிஷனரிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் மதுரையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறேன். அப்போது என்னுடன் வேலை பார்த்த பேராசிரியரான விஜய் என்பவரை காதலித்து 2021-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டேன். திருமணத்தின் போது எங்கள் வீட்டின் சார்பில் 80 பவுன் தங்க நகைகளும், ரூ.5 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களையும் எனது வீட்டார் வரதட்சணையாக கொடுத்தனர்.

    இந்தநிலையில் எங்களுக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது. எனது கணவர் விஜய் தன்னுடன் வேலை பார்க்கும் மற்றொரு பெண்ணுடன் கள்ளக்காதல் கொண்டுள்ளார். அவருடன் சேர்ந்து கொண்டு எனது பெற்றோர் அளித்த நகைகளை ரூ.12 லட்சத்திற்கு அடமானம் வைத்துள்ளார்.

    மேலும் 20 பவுன் நகைகளை எனது தாயாரிடம் வாங்கி வந்து அவற்றையும் அடகு வைத்துள்ளார். அந்த பணத்தில் அவரது கள்ளக்காதலியின் பெயரில் வீடு வாங்கியுள்ளார். இதை கண்டித்த என்னை மேலும் கூடுதல் வரதட்சணை கேட்டு அவரும், அவரது குடும்பத்தினரும் என்னை சித்ரவதை செய்து வருகின்றனர் என அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.

    மனுவை பரிசீலித்த போலீஸ் உதவி கமிஷனர் உத்தரவின் பேரில், அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார் வரதட்சணை சித்ரவதை செய்ததாக அனுசுயாவின் கணவர் விஜய், மாமியார் ஜெயலட்சுமி, கணவரின் சகோதரி சுகப்பிரியா, சுகப்பிரியாவின் கணவர் சிவயோகம் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கவுண்டம்பாளையம் போலீசார் விரைந்து வந்து 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர்.
    • தியா காயத்ரியின் கணவரிடமும், அவரது உறவினர்களிடமும் போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை கவுண்டம்பாளையம் ஜவகர்நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது65). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

    இவருக்கு விமலா(55) என்ற மனைவியும், தியா காயத்ரி(25) என்ற மகளும் உள்ளனர். தியா காயத்ரி ஐ.டி. நிறுவன ஊழியராக பணியாற்றி வந்தார்.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ந்தேதி தனது மகள் தியா காயத்ரிக்கு, வடவள்ளியை சேர்ந்த தீட்சித் என்பவருடன் திருமணம் நடந்தது. இவரும் ஐ.டி.யில் பணிபுரிந்து வருகிறார்.

    திருமணத்திற்கு பிறகு தியா காயத்ரி தனது கணவர் தீட்சித்துடன் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கி பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் திருமணம் ஆன சில மாதங்களிலேயே தியா காயத்ரிக்கும், அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே அவர் கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று கணேசனுக்கு, அவரது தம்பி பலமுறை போன் செய்துள்ளார். ஆனால் அவர் எடுக்கவில்லை. இதனால் அவர் வீட்டிற்கு வந்தார்.

    அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. தட்டிப்பார்த்தும் திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சியான அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

    அங்கு வீட்டில் உள்ள அறையில் கணேசன், அவரது மனைவி விமலா, மகள் தியா காயத்ரி ஆகியோர் இறந்த நிலையில் பிணமாக கிடந்தனர்.

    தகவல் அறிந்ததும் கவுண்டம்பாளையம் போலீசார் விரைந்து வந்து 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர்.

    முதற்கட்ட விசாரணையில், திருமணமான சில மாதங்களிலேயே தங்களது மகள் திரும்பி வந்ததால் பெற்றோர் மன வருத்தத்தில் இருந்ததும், அதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததும் தெரியவந்தது.

    இதற்காக அவர்கள் பேக்கரியில் சென்று கேக் வாங்கி வந்து, அதில் விஷத்தை தடவி 3 பேரும் சாப்பிட்டு தற்கொலை செய்ததும் தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் வீடு முழுவதும் ஏதாவது இருக்கிறதா என சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டிற்குள் உள்ள அறையில் தியா காயத்ரி கைப்பட எழுதிய கடிதம் சிக்கியது.

    அந்த கடிதத்தில் எங்களது சாவுக்கு காரணமான யாரையும் சும்மா விடாதீர்கள். அவர்களுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுங்கள் என எழுதப்பட்டிருந்தது.

    கடிதத்தை கைப்பற்றி போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடிதத்தில் எழுதப்பட்டு உள்ள விவரங்கள் தொடர்பாக தியா காயத்ரியின் கணவரிடமும், அவரது உறவினர்களிடமும் போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    திருமணம் ஆகி சில மாதங்களிலேயே தியா காயத்ரி தற்கொலை செய்துள்ளதால் அவரது மரணத்துக்கு வரதட்சணை கொடுமை காரணமாக இருக்கலாமா? என்ற கோணத்தில் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

    • கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெரியவர்கள் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது.
    • தகவல் அறிந்த சாப்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சாப்டூரை அடுத்துள்ள வேப்பம்பட்டியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி செல்வ பிரியா. இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் சின்னசாமி அடிக்கடி வரதட்சணை கேட்டு மனைவியை தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக செல்வபிரியா கேரளாவில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெரியவர்கள் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கணவனும், மனைவியும் சேர்ந்து வாழ ஒப்புக்கொண்டனர். இதையடுத்து சின்னசாமி தனது மனைவியை வீட்டுக்கு அழைத்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று செல்வ பிரியா கழுத்தறுக்கப்பட்டு வீட்டில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சாப்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக இருந்த சின்னசாமியை பிடித்து விசாரித்தபோது, மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையில் ஆத்திரத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சின்னசாமியை கைது செய்தனர்.

    • மன உளைச்சலுக்கு ஆளான காவ்யா வீட்டிலிருந்த விஷ மருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்தார்.
    • திருமணமாகி 7 மாதங்கள் ஆனநிலையில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தருமபுரி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பென்னாகரம்:

    பென்னாகரம் போடூர் காலனி பகுதியைச் சேர்ந்த காவ்யா (வயது 19). இவருக்கும் பாலக்கோடு அருகே எலுமிச்சனஅள்ளி பகுதியைச் சேர்ந்த விமல்குமார் என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் விமல்குமார், மாமியார் பட்டு, கணவரின் அக்கா மஞ்சு ஆகியோர்கள் காவ்யாவிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக தெரிகிறது.

    இதனால் கோபித்து கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு காவ்யா தனது தாயார் வீட்டிற்கு வந்தார்.

    இதைத்தொடர்ந்து நேற்று விமல்குமார் காவ்யாவிடம் செல்போனில் பேசியதாக தெரிகிறது. இதில் மன உளைச்சலுக்கு ஆளான அவர் வீட்டிலிருந்த விஷ மருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதனைக் கண்ட உறவினர்கள் காவ்யாவை மீட்டு அவசர சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காவ்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பென்னாகரம் போலீசார் தகவலறிந்து உடனே அங்கு விரைந்து காவ்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமாகி 7 மாதங்கள் ஆனநிலையில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து பெண்ணின் கணவர், மாமியார் மற்றும் உறவினர்களிடம் தருமபுரி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராகேஷின் சகோதரியான சுதா என்பவரும் கணவர் கைவிட்டதால் அண்ணனுடன் வசித்து வருகிறார்.
    • தாய் வீட்டிற்கு சென்ற செண்பகாதேவி சாத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பங்களா தெரு பகுதியைச் சேர்ந்தவர் செண்பகாதேவி (வயது 31). இவருக்கும் மதுரை சொக்கலிங்க நகர் பகுதியைச் சேர்ந்த இந்திரா மகன் ராகேஷ் என்பவருக்கும் கடந்த 10.3.2013-ல் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது.

    திருமணத்தின்போது, பெண் வீட்டார் சார்பில் 50 பவுன் நகை, மணமகனுக்கு 7 பவுனில் தங்க செயின், ரூ.1 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக வழங்கப்பட்டது. மகிழ்ச்சியுடன் தொடங்கிய புதுமண தம்பதியினரின் மணவாழ்க்கை காலப்போக்கில் கசக்க தொடங்கியது.

    இதற்கிடையே ராகேஷின் சகோதரியான சுதா என்பவரும் கணவர் கைவிட்டதால் அண்ணனுடன் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துவந்த ராகேஷ் சொந்தமாக தொழில் செய்ய நினைத்தார். இதற்காக மனைவியிடம் அவர்களது வீட்டில் நகை, பணம் வாங்கி வருமாறு கூறினார்.

    உடனடியாக செண்பகாதேவி, தான் அணிந்திருந்த 30 பவுன் நகையை கணவர் தொழில் செய்வதற்காக கழற்றி கொடுத்தார். ஆனால் அதனை பெற்றுக்கொண்ட ராகேஷ் எந்தவிதமான தொழிலும் தொடங்க முன் வரவில்லை. இதுபற்றி மனைவி கேட்டபோது, அந்த நகை அனைத்தையும் தனது தங்கை சுதாவிடம் கொடுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

    இதனால் கணவன், மனைவிக்கிடையே தகராறு உருவானது. கூடுதல் வரதட்சணையாக 50 பவுன் நகை மற்றும் பணம் வாங்கி வருமாறு கூறி ராகேஷ் மனைவி செண்பகாதேவியை தனி அறையில் அடைத்துவைத்து சாப்பாடு கூட தராமல் அடித்து, உதைத்து சித்ரவதை செய்துள்ளார். இதற்கு அவரது தாய் இந்திரா மற்றும் சகோதரி சுதா ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

    பின்னர் செண்பகாதேவியை வீட்டை விட்டே துரத்திவிட்டுள்ளனர். தனது தாய் வீட்டிற்கு சென்ற செண்பகாதேவி இதுகுறித்து சாத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்த கணவர் ராகேஷ், மாமியார் இந்திரா, நாத்தனார் சுதா ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • கணவர் கூடுதலாக 50 பவுன் நகை, ரூ. 10 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை வரதட்சணையாக கேட்டு துன்புறுத்தினார்.
    • குழந்தையை பார்க்க வந்த பிரபாகரன் மீண்டும் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினார்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆவாரம்பட்டி சிந்தாமணி தெருவை சேர்ந்தவர் விசாலாட்சி (வயது 23). இவர் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    எனக்கும் தேனி மாவட்டம் ஜக்கம்பட்டியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் பிரபாகரன் (26) என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது பெண் வீட்டார் சார்பில் 40 பவுன் நகை, ரூ. 1 லட்சம் ரொக்கம், ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் கணவர் கூடுதலாக 50 பவுன் நகை, ரூ. 10 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை வரதட்சணையாக கேட்டு துன்புறுத்தினார். இதற்கு அவரது பெற்றோர் மாரிமுத்து-மாரியம்மாள், உறவினர்கள் கிருபாராணி, சுரேஷ் ஆகியோர் உடந்தையாக உள்ளனர்.

    இதுகுறித்து தேனி அனைத்து மகளிர் போலீசில் 2020-ம் ஆண்டு புகார் செய்தேன். போலீசார் சமூக நலத்துறை மூலம் எங்களை சமரசம் செய்து சேர்ந்து வாழுமாறு அறிவுறுத்தினர். அதனைத் தொடர்ந்து அந்த புகாரை நான் வாபஸ் பெற்றேன்.

    இதற்கிடையில் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்க்க வந்த பிரபாகரன் மீண்டும் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினார். மேலும் விவாகரத்து கேட்டு தேனி கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்து உள்ளார். ஆனால் அவர் இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

    இதுகுறித்து மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி.யிடம் புகார் அளித்தேன். அவர்கள் விருதுநகர் மாவட்ட சமூக நலத்துறையிடம் கவுன்சிலிங் செல்ல நடவடிக்கை எடுத்தனர். ஆனால் பிரபாகரன் தொடர்ந்து இந்த விவகாரத்தில் என்னை ஏமாற்றி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமுதா விசாரணை நடத்தி கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை துன்புறுத்தியதாக பிரபாகரன் அவரது பெற்றோர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.

    • நெல்லூர் போலீசார் மாணவி உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டம் வஜ்ர கொத்தூரை சேர்ந்தவர் ஜோதி குமாரி. இவரது மகள் சைதன்யா (வயது 24). நெல்லூரில் உள்ள மருத்துவ கல்லூரியில் டாக்டருக்கு படித்து வந்தார்.

    கடந்த மார்ச் மாதம் சைதன்யாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த சரத் சந்திரா என்பவருக்கும் திருமணம் நடந்தது. சரத் சந்திரா டாக்டராக உள்ளார்.

    திருமணத்தின் போது கொடுத்ததை விட அதிக அளவில் நகை பணம் கேட்டு சைதன்யாவை துன்புறுத்தி வந்தார். சைதன்யாவின் தாய் ஜோதிகுமாரி சரத் சந்திரா கேட்ட நகை பணத்தை கொடுத்தார்.

    இருப்பினும் கார் வாங்கி தரும்படி அடித்து துன்புறுத்தி வந்தார். ஆடி மாதம் முடிந்தவுடன் கார் வாங்கி தருவதாக ஜோதி குமாரி தனது மாப்பிள்ளையிடம் தெரிவித்தார்.

    நேற்று முன்தினம் சைதன்யாவுக்கு போன் செய்த அவரது கணவர் போனில் ஆபாசமாக திட்டினார்.

    இதனால் மனம் உடைந்த சைதன்யா தனது தாய்க்கு போன் செய்து கணவரின் தொல்லை அதிகரித்து விட்டதால் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறிவிட்டு போனை சுவிட்ச்-ஆப் செய்து விட்டார்.

    உடனே விடுதி அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நெல்லூர் போலீசார் மாணவி உடலை கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    • கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட தொடங்கியதால் திருமண வாழ்க்கை கசந்தது.
    • பாதிக்கப்பட்ட முத்துலட்சுமி மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மருங்காபுரி கலிங்கப்பட்டி கீரணிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 35). இவருக்கும் மருங்காபுரி சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமி (29) என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    திருமணத்தின்போது பெண் வீட்டார் சார்பில் ஜீவானந்தத்துக்கு நகை, பணம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இதையடுத்து தம்பதியினர் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தி வந்தனர். திடீரென்று கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட தொடங்கியதால் திருமண வாழ்க்கை கசந்தது.

    இந்த நிலையில் கணவர் ஜீவானந்தம், மாமியார் சரஸ்வதி மற்றும் உறவினர்கள் சின்னையன், குமார், மகாலட்சுமி, கவிதா, கோமதி, பாலசுப்பிரமணியன் வடிவேல், கலையரசி ஆகிய 10 பேரும் சேர்ந்து முத்துலட்சுமியிடம் கூடுதலாக 100 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்க பணம் கேட்டு வரதட்சணை கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

    அப்போது அவர், இந்த அளவுக்கு மீண்டும் நகை, பணம் எனது பெற்றோரால் தர இயலாது. அந்த அளவுக்கு தங்களிடம் வசதி இல்லை என எடுத்து கூறியுள்ளார். இருந்தபோதிலும் அவரைத் தொடர்ந்து கணவர் மற்றும் உறவினர்கள் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

    அதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட முத்துலட்சுமி மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய ஜீவானந்தம் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரு கட்டத்தில் தந்தையாக நினைத்த மாமனார் அவரது கொடூர முகத்தை காட்ட தொடங்கினார்.
    • கணவர் வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் மருமகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள மதுராபுரி 11-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் மகன் இன்பராஜ் (வயது 32).

    இவருக்கும் முசிறி சிந்தாமணி தெருவைச் சேர்ந்த 25 வயதான இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு பெரியோர்களால் திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணத்தின்போது பெண் வீட்டார் சார்பில் நகை, பணம் உள்ளிட்ட வரதட்சணை வழங்கப்பட்டது.

    இதையடுத்து புதுமண தம்பதியினர் கூட்டு குடித்தனம் நடத்தி வந்தனர். மாமனார், மாமியார், கொழுந்தனார், நாத்தனார் என அனைவரிடமும் அன்பாக பழகிய புதுப்பெண் அனைவரையும் அனுசரித்து நடந்துகொண்ட போதிலும், ஒரு சில மாதங்களில் அவரது வாழ்க்கை கசக்க தொடங்கியது.

    திடீரென்று கணவர் இன்பராஜ், தனது மனைவியிடம் கூடுதல் வரதட்சணையாக ரூ.10 லட்சம் மற்றும் 10 பவுன் நகை வாங்கி வருமாறு வற்புறுத்த தொடங்கினார். தனது திருமணத்திற்கே தந்தை கடன்பட்ட நிலையில் அவ்வளவு நகை, பணத்துக்கு எங்கே போவேன் என்று தனது பெற்றோர் நிலையை கணவரிடம் பக்குவமாக எடுத்துக்கூறினார்.

    ஆனால் அதனை காதில் வாங்கிக்கொள்ளாத கணவர் மனைவி என்றும் பாராமல் அவரை துன்புறுத்த தொடங்கினார். தினமும் அடித்து சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு வீட்டில் இருந்த அனைவரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

    நடந்த விபரங்களை பெற்றோரிடம் கூறினால் அவர்கள் தாங்கமாட்டார்கள் என்று நினைத்து கொடுமைகளையும், சித்ரவதைகளையும் பொறுத்துக் கொண்டு கணவருடன் குடும்பம் நடத்திய பெண்ணுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.

    ஒரு கட்டத்தில் தந்தையாக நினைத்த மாமனார் அவரது கொடூர முகத்தை காட்ட தொடங்கினார். கணவர் வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் மருமகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதனை சற்றும் எதிர்பாராத புதுப்பெண் அதிர்ச்சியில் உறைந்தார். கணவரிடம் கூற பயந்து விலகிச்சென்ற அவரை மாமனார் தொடர்ந்து துரத்தினார். இதனால் வீட்டில் இருக்கும்போதெல்லாம் உயிரை கையில் பிடித்துக்கொண்டு நாட்களை நகர்த்தினார். கணவர், மாமனாரின் தாக்குதல்களை தாங்கிக்கொள்ள முடியாத அவர் தாய் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் முசிறி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் பெண்ணுக்கு நிகழ்ந்த கொடுமைகளை அறிந்தனர். பின்னர் வரதட்சணை கொடுமைப்படுத்திய கணவர் இன்பராஜ், பாலியல் தொல்லை அளித்த மாமனார் மோகன்ராஜ், மாமியார் ராஜேஸ்வரி, கொழுந்தனார் மகேஷ், நாத்தனார் பிரேமலதா ஆகிய 5 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கூட்டு குடும்பத்தில் குதூகலமான வாழ்க்கை வாழவேண்டும் என்ற நம்பிக்கையுடன் திருமணம் செய்துகொண்டு குடித்தனம் வந்த புதுப்பெண்ணின் வாழ்க்கையை சீரழித்த கொடுமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 3-ம் தேதி டோக்கியோவில் உள்ள பாலத்தில் இருந்து மனைவி குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சூசைராஜ், மனைவியின் பெற்றோருக்கு தெரிவித்தார்.
    • இதையடுத்து அவரது உடல் சென்னைக்கு விமானத்தில் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையே மரியாவின் தாய் அனுசியா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

    சேலம்:

    சேலம் இரும்பாலை அருகே உள்ள ஓம் சக்தி நகரை சேர்ந்தவர் லூசியா. இவரது மகள் மரியா. சாப்ட்வேர் என்ஜினீயர். இவருக்கும், புதுச்சேரியை சேர்ந்த சூசைராஜ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இருவரும் ஜப்பானில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 3-ம் தேதி டோக்கியோவில் உள்ள பாலத்தில் இருந்து மனைவி குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சூசைராஜ், மனைவியின் பெற்றோருக்கு தெரிவித்தார்.

    இதையடுத்து அவரது உடல் சென்னைக்கு விமானத்தில் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையே மரியாவின் தாய் அனுசியா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், எனது மகளை வரதட்சனை கேட்டு சூசைராஜ் கொடுமைப்படுத்தினார். கடந்த மார்ச் மாதம் ஜப்பானில் சூசைராஜிக்கு வேலை கிடைத்தது.

    அங்கு செல்லும் முன் எனது மகள் பெயரில் 2 கோடி ரூபாய்க்கு காப்பீட்டு பாலிசி எடுத்துள்ளார். என் மகள் இறந்து விட்டதாக இம்மாதம் 3-ம் தேதி தெரிவித்தார் இயற்கையான முறையில் அவர் இறக்கவில்லை. ஆகவே எனது மகள் சாவில் மர்மம் உள்ளதால் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை நடத்தி என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என சேலம் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட வேண்டும் என கோரி இருந்தார்.

    இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. மரியாவின் கணவர் சூசைராஜ் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி அவர் நேற்று ஆஜராகி மீண்டும் பிரேத பரிசோதனை நடத்த தனக்கு ஆட்சேபனை இல்லை என தெரிவித்தார்.

    இருதரப்பு வாதங்களுக்கு பின் நீதிபதி அப்துல் குத்தூஸ் சேலம் அரசு மருத்துவமனையில் மரியா உடல் மறு பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும். டாக்டர்கள் குழுவை சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் நியமித்து பிரேத பரிசோதனை மேற்கொண்டு போலீசாருக்கு அறிக்கை அளிக்க வேண்டும். அதன் நகலை மனுதாரருக்கும், சூசைராஜுக்கும் வழங்க வேண்டும், கணவர் முன்னிலையில் இறுதி சடங்கிற்காக உடலை மனுதாரரிடம் ஒப்படைக்க வேண்டும். இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் கணவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    இதையடுத்து சென்னையிலிருந்து மரியா உடல் இன்று காலை சேலத்திற்கு கொண்டுவரப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி, அதன் அறிக்கையின் அடிப்படையில் இன்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்ய போலீசார் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டதை அடுத்து கணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    செஞ்சி:

    செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி காலனியை சேர்ந்த ஆறுமுகம் மகன் தட்சிணாமூர்த்திக்கும், ஆனத்தூர் கிராமத்தை சேர்ந்த தினகரன் மகள் அபிதா (வயது 23) என்பவருக்கும் கடந்த 26.10.2020 அன்று திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தட்சிணாமூர்த்தியும், அவரது பெற்றோரும் வரதட்சணை கேட்டு அபிதாவை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து அபிதாவின் தாயார் சம்பூர்ணம்(55) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தட்சிணாமூர்த்தி, இவரது தந்தை ஆறுமுகம், தாய் மல்லிகா, தம்பி முருகன், அக்காள்கள் முத்துலட்சுமி, பாக்கியலட்சுமி ஆகியோர் மீது சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் அபிதாவின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் செஞ்சி அரசு மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    ஆனால் நேற்று காலை வரையில் அபிதாவின் தற்கொலை காரணமாக யாரையும் போலீசார் கைது செய்யவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் செஞ்சி கூட்டுச்சாலையில் 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுபற்றிய தகவல் அறிந்த செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க குருநாதன் ஆகியோர் அபிதாவின் கணவர் வீட்டுக்கு சென்று தட்சிணாமூர்த்தி(27), இவரது தந்தை ஆறுமுகம்(60), தாய் மல்லிகா(52), தம்பி முருகன்(25) ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    இளம்பெண்ணை சித்ரவதை செய்வதாக அளித்த புகாரின் பேரில் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    விருதுநகர்:

    மதுரை மாவட்டம், மேலூர் காந்திஜி பூங்கா தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் சீமா (வயது 29), என்ஜினீயர். இவருக்கும், விருதுநகர் முத்துச்சாமி தெருவைச் சேர்ந்த அஜய் சுதர்சன் என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    அப்போது 42 பவுன் நகைகள், ரூ.1 ½ லட்சம் ரொக்கம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. மேலும் தீபாவளிக்கு வைர மோதிரம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டன.

    இந்த நிலையில் கணவர் வீட்டார் சித்ரவதை செய்ததாக விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம், சீமா புகார் கொடுத்துள்ளார்.

    அதில், கணவர் அஜய் சுதர்சன், அவரது பெற்றோர் சக்திவேல்-ஞானசக்தி மற்றும் சகோதரி லட்சுமி நாராயணி ஆகியோர் அடிக்கடி சித்ரவதை செய்ததாகவும், நகைகளை வாங்கி வைத்துக் கொண்டு தன்னை வீட்டை விட்டு விரட்டி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் உத்தரவிட்டதின் பேரில் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் அஜய் சுதர்சன் உள்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    ×