என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வரதட்சணை கொடுமை வழக்கு: தலைமைக் காவலர் பூபாலன் கைது
- திருமணத்தின்போது 60 பவுன் நகை கொடுத்த போதிலும், கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை.
- மனைவியை தாக்கியதை சகோதரிடம் சிரித்துக் கொண்டு கூறும் ஆடியோ வெளியானது.
மதுரை அப்பன்திருப்பதி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் பூபாலன் (வயது 38). இவருக்கும் தேனியை சேர்ந்த தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்த பெண்ணுக்கும் கடந்த 2018-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், தனது கணவர் மற்றும் மாமனார் ஆகியோர் தினமும் கூடுதல் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமை செய்வதாக அப்பெண் புகார் தெரிவித்து உள்ளார்.
திருமணத்தின்போது 60 பவுன் நகை, மோட்டார் சைக்கிள் மற்றும் சீர்வரிசை உள்ளிட்டவைகளை வழங்கினோம். ஆனால், மேலும் வரதட்சணை வேண்டும் என்று கூறி 2 தினங்களுக்கு முன்பு போலீஸ்காரர் பூபாலன் தன்னை கடுமையாக தாக்கினார் எனவும் அப்பெண் புகார் தெரிவித்து உள்ளார்.
கணவர் தாக்கியதில் காயம் அடைந்த அந்த ஆசிரியை, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே, ஆசிரியையின் குடும்பத்தினர், அப்பன் திருப்பதி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் கணவர் பூபாலன், மாமனார் செந்தில்குமார் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில் செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டராக சாத்தூரில் பணியாற்றி வந்தார்.
இதற்கிடையே, வரதட்சணை கேட்டு மனைவியை தாக்கியது குறித்து, தனது சகோதரியிடம் போலீஸ்காரர் பூபாலன் சிரித்து சிரித்து பேசுவது போன்ற ஆடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் அவர் மனைவியை கடுமையாக தாக்கியது பற்றி சிறிதும் கவலை இல்லாமல், நகத்தால் கடுமையாக கீறியதாகவும், முகத்தில் காயம் ஏற்படுத்தியதாகவும், தொண்டையை இறுக்கினேன் என்றும், கால்களில் தாக்கி நடக்க முடியாமல் செய்தேன், உதட்டில் காயம் ஏற்படுத்தினேன் எனவும் பேசி இருப்பது போன்று அந்த ஆடியோ உள்ளது.
இந்த ஆடியோ வைரலாக பரவியதை தொடர்ந்து அது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து, பூபாலன் மீது கூறிய குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக கருதி அவரை பணியிடை நீக்கம் செய்து மதுரை சரக டி.ஐ.ஜி. அபினவ் குமார் உத்தரவிட்டார்.
இதேபோல் வரதட்சணை கொடுமை புகாரில் அப்பெண்ணின் மாமனாரான இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இருவரும் தலைமறைவாகினர்.
இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரையும், தலைமை காவலர் பூபாலனையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் தனிப்படை போலீசார் பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.






