என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டண விளம்பரம்"

    • காவல்துறை தரவுகளின்படி, 2026 ஜனவரி மாதத்தில் 1,777 பேர் காணாமல் போனதாகப் பதிவாகியுள்ளது.
    • இதுபோன்ற பல வழக்குகள் விரைவாகக் கண்டுபிடிக்கப்படுகின்றன.

    தேசிய தலைநகர் டெல்லியில் கடந்த ஜனவரி மட்டும் 807 பேர் மாயமானதாக தகவல்கள் வெளியாகின. இது பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த தகவல்கள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவை என்றும், பணத்திற்காக விளம்பரப்படுத்தப்பட்டவை என்றும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

    பண ஆதாயத்திற்காக இது போன்ற தகவல்களை பரப்பி, பீதியை ஏற்படுத்துவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    "சில தடயங்களைப் பின்தொடர்ந்து விசாரணை நடத்தியதில், டெல்லியில் சிறுமிகள் மாயமாவது அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள், பணம் செலுத்திய விளம்பரங்கள் (Paid promotions) மூலம் திட்டமிட்டு பரப்பப்படுவதைக் கண்டறிந்துள்ளோம். பண ஆதாயத்திற்காக இது போன்ற பீதியை உருவாக்குவது சகித்துக்கொள்ளப்படாது; அத்தகைய நபர்கள் மீது நாங்கள் கடும் நடவடிக்கை எடுப்போம்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காவல்துறை தரவுகளின்படி, 2026 ஜனவரி மாதத்தில் 1,777 பேர் காணாமல் போனதாகப் பதிவாகியுள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளின் மாதாந்திர சராசரியை விடக் குறைவான எண்ணிக்கையாகும். ஒப்பிட்டு அளவில், டெல்லியில் 2024-ல் 24,893 பேரும், 2025-ல் 24,508 பேரும் காணாமல் போயுள்ளனர் என்று காவல்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. இது நகரின் சராசரி மாதாந்திர எண்ணிக்கையான 2,000-ஐ விடக் குறைவு என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

    ஜனவரியில் மாயமானவர்களில் 509 பேர் பெண்கள் மற்றும் சிறுமிகள் என தகவல்கள் வெளியான நிலையில் இந்த செய்தி காட்டூத்தீயாக பரவியது. இதனைத்தொடர்ந்து காவல்துறையின் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது. மேலும் தலைநகரில் காணாமல் போனவர்கள் குறித்த புகார்களைப் பதிவு செய்ய ஆன்லைன் ஆப் அடிப்படையிலான நடைமுறையை பின்பற்றப்படுவதாகவும், அதில் தற்காலிகமாக காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகளும் அடங்கும் என்றும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

    அதாவது பள்ளி முடிந்து குழந்தைகள் வீடு திரும்பத் தாமதமாகும் போதோ அல்லது நபர்களைத் தொலைபேசி வாயிலாகத் தற்காலிகமாகத் தொடர்பு கொள்ள முடியாத சூழலிலோ, ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே குடிமக்கள் பெரும்பாலும் இது போன்ற புகார்களைப் பதிவு செய்கிறார்கள் என்று காவல்துறை கூறியுள்ளது. 

    மேலும் "இதுபோன்ற பல வழக்குகள் விரைவாகக் கண்டுபிடிக்கப்படுகின்றன. இருப்பினும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் அல்லது நபர்கள் கண்டுபிடிக்கப்பட்ட தகவலைத் தெரிவிப்பதில்லை என்பதால், அவை இன்னும் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களிலேயே நீடிக்கின்றன, என்றும் தெரிவித்துள்ளனர். 

    மேலும் உலக நாடுகளோடு, அதாவது அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம் போன்றவற்றோடு ஒப்பிடுகையில் காணாமல் போகிறவர்களின் எண்ணிக்கை டெல்லியில் குறைவே என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.  

    ×