என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Leopard"

    • திரும்பும் வழியில் சாலையோரம் ஒரு பனிச் சிறுத்தையைக் கண்டுள்ளார்.
    • மின்னல் வேகத்தில் அந்தச் சுற்றுலாப் பயணியைத் தாக்கியது.

    சீனாவில் படம் எடுக்கச் சிறுத்தையின் அருகே வந்த சுற்றுலாப் பயணியின் முகத்தை பனிச் சிறுத்தை கடித்துக் குதறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தில் உள்ள கோக்டோகாய் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.

    நண்பர்களுடன் பனிச்சறுக்கு விளையாடச் சென்ற ஒரு சுற்றுலாப் பயணி, திரும்பும் வழியில் சாலையோரம் ஒரு பனிச் சிறுத்தையைக் கண்டுள்ளார்.

    காரில் இருந்து கீழே இறங்கி மிக அருகே சென்று புகைப்படம் எடுக்க முயன்றுள்ளார்.

    ஆத்திரமடைந்த பனிச் சிறுத்தை, மின்னல் வேகத்தில் அந்தச் சுற்றுலாப் பயணியைத் தாக்கியது. இதில் அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

    படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவரது உடல்நிலை தேறி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அரிய விலகுகளாக கருதப்படும் பனிச்சிறுத்தைகள் உலகம் முழுவதும் மொத்தமே சுமார் 4,000 முதல் 7,000 வரை தான் எஞ்சியுள்ளன.

    • நிலத்தில் கால் பதிந்ததை நயினார் பார்த்தபோது சிறுத்தை கால் தடம் போல் இருந்ததாக கூறப்படுகின்றது.
    • வனத்துறையினருக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த அரிசிபெரியாங்குப்பம் பகுதி மலைப்பகுதியாக இருந்து வருகிறது. இங்கு பெரும்பாலும் வாழை , முந்திரி மரங்கள், வேர்க்கடலை உள்ளிட்ட ஊடுபயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளது.

    இங்கு அதே பகுதியை சேர்ந்த நயினார் வேர்க்கடலை பயிரிட்டு இருந்தார். தற்போது வேர்க்கடலை முளைத்து வருவதால் அதிகளவில் பறவைகள் பயிர்களை நாசம் செய்து செல்வதால் காலை நேரங்களில் நயினார் தனது நிலத்திற்கு சென்று பட்டாசு வெடித்து விரட்டி விடுவது வழக்கம்.

    அதே போன்று இன்று காலை வழக்கம் போல் நயினார் பறவைகளை விரட்ட பட்டாசு வெடிக்க சென்றபோது பெரிய அளவிலான உருவம் ஒன்று திடீரென்று வேகமாக சென்றது. நிலத்தில் கால் பதிந்ததை நயினார் பார்த்தபோது சிறுத்தை கால் தடம் போல் இருந்ததாக கூறப்படுகின்றது. இதனால் நயினார் கடும் அதிர்ச்சி அடைந்து அலறியடித்து ஊர் பகுதிக்கு சென்றார். பின்னர் அங்கு உள்ள பொதுமக்களிடம் இந்த தகவலை கூறினார்.

    இது குறித்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர். அதன் பேரில் வன சரக அலுவலர் கேசவன் தலைமையில் வனவர் திலகராஜ், வன ஆர்வலர் செல்லா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று நிலப்பகுதியில் பதிந்துள்ள கால் தடம் சிறுத்தையா? அல்லது வேறு ஏதேனும் மிருகமா? என சோதனை மேற்கொண்டனர்.

    இந்த தகவல் அப்பகுதி முழுவதும் காட்டு தீ போல் பரவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் பீதி அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது. 

    • சட்டமன்றத்தில் இதுதொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்தார்.
    • றுத்தைகள் மனித வாழ்விடங்களுக்குள் நுழைவதைத் தடுக்க ரூ.1 கோடி மதிப்புள்ள ஆடுகளை காட்டில் விட வேண்டும்.

    சிறுத்தைகள் உணவுக்காக மனித வாழ்விடங்களுக்குள் நுழைவதைத் தடுக்க, அதிக எண்ணிக்கையிலான ஆடுகளை காடுகளில் விட வேண்டும் என்று மகாராஷ்டிர வனத்துறை அமைச்சர் கணேஷ் நாயக் தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிராவில் சிறுத்தைகள் கிராமங்களுக்குள் நுழைந்து தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை அடுத்து, ஆளும் பாஜக கூட்டணியில் உள்ள அஜித் பவரின் தேசியவாத எம்எல்ஏவும் வனத்துறை அமைச்சருமான ஜிதேந்திரா சட்டமன்றத்தில் இதுதொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்தார்.

    சட்டமன்றத்தில் பேசிய அவர், அஹல்யா நகர், புனே மற்றும் நாசிக் மாவட்டங்களில் சிறுத்தை தாக்குதல்கள் சமீபத்தில் கணிசமாக அதிகரித்துள்ளன.

    சிறுத்தைகளின் நடத்தை மற்றும் வாழ்க்கை முறை மாறிவிட்டன. முன்பு, அவை வன விலங்குகள் என்று விவரிக்கப்பட்டன, ஆனால் இப்போது கரும்புத் தோட்டங்களும் அவற்றின் வாழ்விடமாக மாறிவிட்டன.

    சிறுத்தை தாக்குதல்களில் மக்கள் இறந்த பிறகு மிகப்பெரிய தொகையை இழப்பீடு வழங்குவதற்கு பதிலாக சிறுத்தைகள் மனித வாழ்விடங்களுக்குள் நுழைவதைத் தடுக்க ரூ.1 கோடி மதிப்புள்ள ஆடுகளை காட்டில் விட வேண்டும்.

    சிறுத்தைகள் ஆபத்தான பகுதிகளில் இந்த முடிவை விரைவில் செயல்படுத்துவோம்" என்று தெரிவித்தார்.   

    • பாலக்வா பஞ்சாயத்தில் கமர்பூர் என்ற கிராமம் அமைத்துள்ளது.
    • கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு வயலில் சிறுத்தை ஒன்று புகுந்தது.

    இமாச்சலப் பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் பாலக்வா பஞ்சாயத்தில் கமர்பூர் என்ற கிராமம் அமைத்துள்ளது.

    அண்மையில் கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு வயலில் சிறுத்தை ஒன்று புகுந்தது.

    அப்போது கிராம வாசிகள் சிறுத்தையைச் சுற்றி வளைத்து குச்சிகள் மற்றும் பிற ஆயுதங்களால் தாக்கினர்.

    சிறுத்தை திரும்பி தாக்கியதில் 4 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவரின் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதன்பின் சிறுத்தை அங்கிருந்து தப்பிச் சென்றது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. 

    • நாய்களை தூக்கிச் சென்று சாப்பிடலாம் என சிறுத்தை தாக்கியது.
    • ஆனால் தெருநாய் சிறுத்தையை படுகாயமாக்கியது.

    டெல்லி தலைநகர் பகுதியில் தெருநாய்கள் அடிக்கடி பொதுமக்களை தாக்கி வந்த நிலையில், வெறிநாய் கடித்து சிலர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டது. இதனால் நாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகத்தில் அடைத்து பராமரிக்க உச்சநீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டது. பின்னர், கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்த இன்று உத்தரவிட்டுள்ளது.

    டெல்லியில் மட்டுமல்ல இந்தியாவின் பெரும்பாலான இடத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்த வண்ணம் உள்ளது. தனியாக செல்லுபவர்களை கடித்து குதறும் காட்சிகள் அடிக்கடி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில் சிறுத்தைகள், புலிகள் வீட்டில் உள்ள நாய்களை அடித்து தூக்கிச் செல்லும் காட்சிகளையும் பார்த்திருக்கிறோம்.

    இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு சிறுத்தையையே தெருநாய் கடித்து சுமார் 300 மீ. தூரத்திற்கு இழுத்துச் சென்ற பதைபதைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம் நாஷிக் மாவட்டத்தில் உள்ள நிபாத் தாலுக்காவிற்கு உட்பட்ட கங்குர்டே வஸ்தி அருகே, சில நாய்கள் உலாவிக்கொண்டிருந்தன. அப்போது திடீரென அந்த பகுதியில் புகுந்த சிறுத்தை, நாய்களை துரத்தியது. இதில் ஒரு நாய், சிறுத்தையின் வாய் பகுதியை கவ்விக்கொண்டது. இதனால் சிறுத்தையால் ஒன்னும் செய்ய முடியவில்லை. தன்னை மிஞ்சிய எடை கொண்ட சிறுத்தையை 300 மீ தூரத்திற்கு இழுத்துச் சென்றது. பின்னர் படுகாயம் அடைந்த சிறுத்தை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

    அதிக எடை மற்றும் மின்னல் வேகத்தில் பாயும் சிறுத்தையையே கடித்து குதறுகிறது என்றால், அப்பாவி மக்கள் தனியாக கிடைத்தால் என்னவாகும்? என வீடியோவை பார்க்கம்போது பதைபதைக்க வைக்ககிறது.

    • பெங்களூருவில் பன்னேர்கட்டா தேசிய பூங்கா அமைந்துள்ளது.
    • ஜீப்பின் கதவு வழியாக உள்ளே ஏற முயன்றது.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பன்னேர்கட்டா தேசிய பூங்கா அமைந்துள்ளது.

    இங்கு சஃபாரி பயணம் சென்றிருந்தபோது, சிறுத்தை தாக்கியதில் 13 வயது சிறுவன் காயமடைந்தான்.

    நேற்று மதியம் காட்டு வழியாக ஜீப் சஃபாரி சென்று கொண்டிருந்தபோது, சாலையோரம் நின்றிருந்த ஒரு சிறுத்தை திடீரென சஃபாரி ஜீப்பை நோக்கி ஓடியது.

    பின்னர் அது ஜீப்பின் கதவு வழியாக உள்ளே ஏற முயன்று, அப்போது கதவருகே அமர்ந்திருந்த 13 வயது சிறுவன் கையில் சிறுத்தையின் நகங்கள் பட்டு காயம் ஏற்பட்டது.

    இதன்பின் அந்த ஜீப் ஓட்டுநர் வாகனத்தை விரைவாக செலுத்தி அங்கிருந்து பயணிகளை பத்திரமாக அழைத்துச் சென்றார். இதன்பின் சிறுவனுக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டது.

    இந்த சம்பவத்தை அடுத்து, ஜன்னல்களில் வலைகளை பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக கர்நாடக வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஈஸ்வர காண்ட்ரே தெரிவித்தார். 

    • எடக்காடு பகுதிக்கு வந்த சிறுத்தை பொதுமக்களை நேரடியாக அச்சுறுத்தவில்லை.
    • காடுகளுக்கு அருகிலுள்ள சாலை வழியாக விலங்குகள் பயணிக்க வாய்ப்பு உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை அதிகாலை நேரத்தில் ஊட்டி அருகே உள்ள எடக்காடு பகுதிக்கு வந்தது.

    பின்னர் அங்குள்ள சாலையில் சிறிது நேரம் நடமாடியது. தொடர்ந்து அந்த சிறுத்தை சாலையோர பாலத்தில் ஏறி நடந்தபடி இரைதேடி நோட்டமிட்டது.

    இதனை அந்த வழியாக சென்ற வாகனஓட்டிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்களில் ஒரு சிலர் ரோட்டை கடந்து பாலத்தில் அமர்ந்திருந்த சிறுத்தையை வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பகிர்ந்தனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

    நீலகிரி எடக்காடு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வெளியான தகவலால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    எடக்காடு பகுதிக்கு வந்த சிறுத்தை பொதுமக்களை நேரடியாக அச்சுறுத்தவில்லை. இருப்பினும் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம்.

    மேலும் காடுகளுக்கு அருகிலுள்ள சாலை வழியாக விலங்குகள் பயணிக்க வாய்ப்பு உள்ளது. எனவே எவரும் அருகே சென்று புகைப்படம் எடுக்க வேண்டாம்.

    உடனடியாக வனத்துறையின் அவசர எண்களுக்கு தகவல் அளிக்க வேண்டும். இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் எடக்காடு பகுதி வழியாக செல்வோர் அதிக கவனத்துடன் பயணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • ஜுக்னுபூர் பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் ஒரு சிறுத்தை புகுந்தது.
    • சக தொழிலாளர்கள் மற்றும் அருகிலுள்ள கிராம மக்கள் உடனடியாக அதன் மீது செங்கல் மற்றும் கற்களால் தாக்கினர்.

    உத்தரப் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தனது உயிரை பணயம் வைத்து சிறுத்தையிடம் துணிச்சலுடன் போராடிய வீடியோ வைரலாகி வருகிறது.

    லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள தௌர்பூர் வனப்பகுதிக்கு உட்பட்ட ஜுக்னுபூர் பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் ஒரு சிறுத்தை புகுந்தது.

    அப்போது மிஹிலால் என்ற 35 வயது தொழிலாளி தனது உயிரைப் பணயம் வைத்து சிறுத்தையுடன் கடுமையாகப் போராடினார். சிறுத்தையை கீழே தள்ளி அதன் வாயை இறுக்கமாகப் பிடிக்க முயன்றார்.

    மிஹிலால் சிறுத்தையை எதிர்கொள்வதைக் கண்ட சக தொழிலாளர்கள் மற்றும் அருகிலுள்ள கிராம மக்கள் உடனடியாக அதன் மீது செங்கல் மற்றும் கற்களால் தாக்கினர்.

    இறுதியில் சிறுத்தை அருகிலுள்ள விவசாய வயல்களுக்குள் தப்பி ஓடியது. தகவல் கிடைத்ததும், வனத்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுத்தைக்கு மயக்க ஊசி போட்டு பிடித்தனர்.

    சிறுத்தை தாக்குதலில் மிஹிலால் மற்றும் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர். அவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளியின் மகளை சிறுத்தை கவ்விச் சென்றுள்ளது.
    • தாய் புகார் அளித்ததை அடுத்து வனத்துறையினர் சிறுமியை தேடி வருகின்றனர்.

    கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த பச்சைமலை எஸ்டேட்டில் தாயின் கண்முன்னே 4 வயது சிறுமி ரோஷினியை சிறுத்தை கவ்விச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பச்சமலை எஸ்டேட்டில் பணிபுரியும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளியின் மகளை சிறுத்தை கவ்விச் சென்றுள்ளது.

    வீட்டின் அருகே சிறுமி ரோஷினிகுமாரி விளையாடி கொண்டிருந்தபோது சிறுத்தை பாய்ந்து கவ்விச் சென்றுள்ளது.

    இதை நேரில் கண்ட தாய் புகார் அளித்ததை அடுத்து வனத்துறையினர் சிறுமியை தேடி வருகின்றனர்.

    • தினமும் ஏராளமான மக்கள் பண்ணாரி அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.
    • இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, சிறுத்தை, புலி, மான், கரடி காட்டெருமை உட்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அருகே வனப்பகுதி உள்ளது. பண்ணாரி அம்மன் கோவில் வனப்பகுதியில் மத்தியில் அமைந்து உள்ளது. ஈரோடு, சேலம், கோயம்புத்தூர் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, கோயம்புத்தூர் போன்ற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான மக்கள் பண்ணாரி அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.

    இந்நிலையில்  பண்ணாரி அம்மன் கோவில் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றது. இதனை அந்த வழியாக வந்த வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் படம் எடுத்தார்.

    சிறிது தூரம் சாலையோரம் நின்று கொண்டிருந்த சிறுத்தை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது,

    தற்போது பண்ணாரி அம்மன் கோவில் அருகே வனப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் சக்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை வரும் சிறுத்தை வந்து செல்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும்.

    குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அப்பு குட்டியின் தோட்டத்தில் பதிந்து இருந்த கால் தடங்களை ஆய்வு செய்தனர்.
    • சிறுத்தையினை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்திருந்தனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம், சென்னிமலை வனப்பகுதி 1,700 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன், தெற்கு வனப்பகுதி ஒட்டி அமைந்துள்ள ஊர் சில்லாங்காட்டுவலசு, இங்குள்ள பாப்பங்காடு பகுதியைச் சேர்ந்தவர் அப்புகுட்டி. விவசாயியான இவர் தனது குடும்பத்துடன் வனப்பகுதியை ஒட்டி உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இவர் எருமை மாடுகள், வெள்ளாடுகள் வளர்த்து வருகிறார்.

    நேற்று அதிகாலை பால் கறப்பதற்காக அப்புகுட்டி எருமைகள் கட்டி இருந்த பகுதிக்குச் சென்றார். அங்கு பார்த்த பொழுது பட்டியில் இருந்த ஒரு வெள்ளாடு காணாமல் போயிருந்தது. அதனால், அப்புகுட்டி ஆடு தோட்டத்தில் எங்காவது உள்ளதா? என தேடி பார்த்தார்.

    அப்பொழுது தோட்டத்தை ஒட்டி போடப்பட்டுள்ள கம்பி வேலி வரை அவர் சென்றார். அங்கு கம்பி வேலிக்கான கல் தூணில் அவர் வளர்த்து வந்த ஆட்டின் ரோமங்கள் ஒட்டியிருந்தது. மேலும், அதே பகுதியில் மர்ம விலங்கு ஒன்றின் கால் அடித்தடங்கள் காணப்பட்டது.

    இது குறித்து அவர் சென்னிமலை வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தார்.

    வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அப்பு குட்டியின் தோட்டத்தில் பதிந்து இருந்த கால் தடங்களை ஆய்வு செய்தனர். அப்போது அது சிறுத்தையின் கால் தடம் என்பதை உறுதி செய்தனர். சிறுத்தை புலி வனப்பகுதியை விட்டு வெளியேறி வெள்ளாட்டை கொன்று கம்பி வேலி வழியாக இழுத்துச் சென்று உள்ளது தெரிய வந்தது.

    கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சிலாங்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்த விவசாயி குமாரசாமி என்பவர் தோட்டத்தில் தொடர்ந்து ஆடுகள் மற்றும் கன்று குட்டிகள் காணாமல் போன நிலையில் அவற்றை சிறுத்தை வேட்டையாடி தூக்கி சென்றதை வனத்துறை உறுதி செய்தது.

    அதை தொடர்ந்து அவரது தோட்டத்தில் சிறுத்தையினை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்திருந்தனர். ஆனால், கூண்டுக்குள் சிக்காமல் தப்பி சென்ற சிறுத்தை தற்போது பாப்பாங்காடு பகுதியில் ஆடுகளை வேட்டையாடி தனது அட்டகாசத்தை தொடங்கி உள்ளது.

    இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் நேற்று ஆட்டை கட்டி போட்டு இலை தலைகளை போட்டு வைத்து கூண்டு வைத்து உள்ளனர்.

    • நடுவட்டம் போலீஸ் நிலையத்தில் காவலுக்கு இருந்த போலீஸ்காரர் ஒருவர் சிறுத்தை வெளியே செல்லும் காட்சிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
    • உடனடியாக போலீஸ் நிலையத்தின் வாசல் கதவை சாத்திவிட்டு சென்றார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த நடுவட்டம் பகுதியில் சமீப நாட்களாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் வனத்தில் இருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை சம்பவத்தன்று இரவு நடுவட்டம் பகுதிக்கு வந்தது. பின்னர் அங்குள்ள போலீஸ் நிலையத்திற்குள் புகுந்தது.

    தொடர்ந்து ஒவ்வொரு அறையாக சென்று சாப்பிடுவதற்கு ஏதேனும் உணவு கிடைக்கிறதா என்று தேடிப்பார்த்தது. ஆனாலும் போலீஸ் நிலையத்தில் சிறுத்தைக்கு தீனி எதுவும் சிக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த சிறுத்தை பின்னர் மெதுவாக வெளியே புறப்பட்டு சென்றது.

    இதற்கிடையே நடுவட்டம் போலீஸ் நிலையத்தில் காவலுக்கு இருந்த போலீஸ்காரர் ஒருவர் சிறுத்தை வெளியே செல்லும் காட்சிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அவர் உடனடியாக போலீஸ் நிலையத்தின் வாசல் கதவை சாத்திவிட்டு சென்றார்.

    இந்த காட்சிகள் நடுவட்டம் போலீஸ் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகி உள்ளது. இது தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இதற்கிடையே நடுவட்டம் போலீஸ் நிலையத்துக்குள் சிறுத்தை புகுந்த சம்பவம் அங்கு வேலை பார்க்கும் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் தொடர்ச்சியாக காணப்படுகிறது. எனவே வனத்துறையினர் இந்த பகுதியில் அடிக்கடி ரோந்து சென்று கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதுடன், வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். 

    ×