என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பாலத்தில் ஒய்யாரமாக நடந்து சென்ற சிறுத்தை- பொதுமக்கள், வாகனஓட்டிகள் அச்சம்
- எடக்காடு பகுதிக்கு வந்த சிறுத்தை பொதுமக்களை நேரடியாக அச்சுறுத்தவில்லை.
- காடுகளுக்கு அருகிலுள்ள சாலை வழியாக விலங்குகள் பயணிக்க வாய்ப்பு உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை அதிகாலை நேரத்தில் ஊட்டி அருகே உள்ள எடக்காடு பகுதிக்கு வந்தது.
பின்னர் அங்குள்ள சாலையில் சிறிது நேரம் நடமாடியது. தொடர்ந்து அந்த சிறுத்தை சாலையோர பாலத்தில் ஏறி நடந்தபடி இரைதேடி நோட்டமிட்டது.
இதனை அந்த வழியாக சென்ற வாகனஓட்டிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்களில் ஒரு சிலர் ரோட்டை கடந்து பாலத்தில் அமர்ந்திருந்த சிறுத்தையை வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பகிர்ந்தனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
நீலகிரி எடக்காடு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வெளியான தகவலால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
எடக்காடு பகுதிக்கு வந்த சிறுத்தை பொதுமக்களை நேரடியாக அச்சுறுத்தவில்லை. இருப்பினும் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம்.
மேலும் காடுகளுக்கு அருகிலுள்ள சாலை வழியாக விலங்குகள் பயணிக்க வாய்ப்பு உள்ளது. எனவே எவரும் அருகே சென்று புகைப்படம் எடுக்க வேண்டாம்.
உடனடியாக வனத்துறையின் அவசர எண்களுக்கு தகவல் அளிக்க வேண்டும். இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் எடக்காடு பகுதி வழியாக செல்வோர் அதிக கவனத்துடன் பயணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.






