என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தோட்டத்தில் பதிவான சிறுத்தையின் கால் தடம்.
சென்னிமலை அருகே வெள்ளாட்டை கடித்து கொன்ற சிறுத்தையால் பரபரப்பு- கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை
- வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அப்பு குட்டியின் தோட்டத்தில் பதிந்து இருந்த கால் தடங்களை ஆய்வு செய்தனர்.
- சிறுத்தையினை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்திருந்தனர்.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம், சென்னிமலை வனப்பகுதி 1,700 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன், தெற்கு வனப்பகுதி ஒட்டி அமைந்துள்ள ஊர் சில்லாங்காட்டுவலசு, இங்குள்ள பாப்பங்காடு பகுதியைச் சேர்ந்தவர் அப்புகுட்டி. விவசாயியான இவர் தனது குடும்பத்துடன் வனப்பகுதியை ஒட்டி உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இவர் எருமை மாடுகள், வெள்ளாடுகள் வளர்த்து வருகிறார்.
நேற்று அதிகாலை பால் கறப்பதற்காக அப்புகுட்டி எருமைகள் கட்டி இருந்த பகுதிக்குச் சென்றார். அங்கு பார்த்த பொழுது பட்டியில் இருந்த ஒரு வெள்ளாடு காணாமல் போயிருந்தது. அதனால், அப்புகுட்டி ஆடு தோட்டத்தில் எங்காவது உள்ளதா? என தேடி பார்த்தார்.
அப்பொழுது தோட்டத்தை ஒட்டி போடப்பட்டுள்ள கம்பி வேலி வரை அவர் சென்றார். அங்கு கம்பி வேலிக்கான கல் தூணில் அவர் வளர்த்து வந்த ஆட்டின் ரோமங்கள் ஒட்டியிருந்தது. மேலும், அதே பகுதியில் மர்ம விலங்கு ஒன்றின் கால் அடித்தடங்கள் காணப்பட்டது.
இது குறித்து அவர் சென்னிமலை வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தார்.
வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அப்பு குட்டியின் தோட்டத்தில் பதிந்து இருந்த கால் தடங்களை ஆய்வு செய்தனர். அப்போது அது சிறுத்தையின் கால் தடம் என்பதை உறுதி செய்தனர். சிறுத்தை புலி வனப்பகுதியை விட்டு வெளியேறி வெள்ளாட்டை கொன்று கம்பி வேலி வழியாக இழுத்துச் சென்று உள்ளது தெரிய வந்தது.
கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சிலாங்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்த விவசாயி குமாரசாமி என்பவர் தோட்டத்தில் தொடர்ந்து ஆடுகள் மற்றும் கன்று குட்டிகள் காணாமல் போன நிலையில் அவற்றை சிறுத்தை வேட்டையாடி தூக்கி சென்றதை வனத்துறை உறுதி செய்தது.
அதை தொடர்ந்து அவரது தோட்டத்தில் சிறுத்தையினை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்திருந்தனர். ஆனால், கூண்டுக்குள் சிக்காமல் தப்பி சென்ற சிறுத்தை தற்போது பாப்பாங்காடு பகுதியில் ஆடுகளை வேட்டையாடி தனது அட்டகாசத்தை தொடங்கி உள்ளது.
இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் நேற்று ஆட்டை கட்டி போட்டு இலை தலைகளை போட்டு வைத்து கூண்டு வைத்து உள்ளனர்.