என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பண்ணாரி அம்மன் கோவில் அருகே சிறுத்தை நடமாட்டம் அதிகரிப்பு- வாகன ஓட்டிகள் பீதி
- தினமும் ஏராளமான மக்கள் பண்ணாரி அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.
- இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, சிறுத்தை, புலி, மான், கரடி காட்டெருமை உட்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அருகே வனப்பகுதி உள்ளது. பண்ணாரி அம்மன் கோவில் வனப்பகுதியில் மத்தியில் அமைந்து உள்ளது. ஈரோடு, சேலம், கோயம்புத்தூர் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, கோயம்புத்தூர் போன்ற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான மக்கள் பண்ணாரி அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.
இந்நிலையில் பண்ணாரி அம்மன் கோவில் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றது. இதனை அந்த வழியாக வந்த வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் படம் எடுத்தார்.
சிறிது தூரம் சாலையோரம் நின்று கொண்டிருந்த சிறுத்தை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது,
தற்போது பண்ணாரி அம்மன் கோவில் அருகே வனப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் சக்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை வரும் சிறுத்தை வந்து செல்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும்.
குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.






