search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UN"

    • உரையாற்ற உள்ள உறுப்பு நாட்டு தலைவர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக ஐ.நா. வெளியிடப்பட்டுள்ளது.
    • மோடி கடைசியாக செப்டம்பர் 2021-ல் நடைபெற்ற ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றினார்.

    நியூயார்க்:

    ஐ.நா. பொதுச்சபையில் 79-வது கூட்டம் வருகிற செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இதில் பங்கேற்று உரையாற்ற உள்ள உறுப்பு நாட்டு தலைவர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக ஐ.நா. வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 26-ம் தேதி ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மோடி கடைசியாக செப்டம்பர் 2021-ல் நடைபெற்ற ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுமார் 1.9 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று தெரிவித்தார்.
    • போர் காரணமாக காசா இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது.

    இஸ்ரேல் மற்றும் காசா இடையே போர் துவங்கியதில் இருந்து காசாவை சேர்ந்த பத்தில் ஒன்பது பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

    பாலஸ்தீன எல்லை பகுதியில் உள்ள ஐநா-வின் OCHA அமைப்பு தலைவர் ஆண்ட்ரியா டி டொமினிகோ காசாவில் சுமார் 1.9 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று தெரிவித்தார்.

    இது குறித்து பேசிய அவர், "கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து இதுவரை காசா எல்லையில் ஒவ்வொரு பத்தில் ஒன்பது பேர் குறைந்தபட்சம் ஒருமுறையேனும் இடம்பெயர்ந்து இருக்கலாம் என்று கணிக்கிறோம். நாங்கள் 1.7 மில்லியன் பேர் இடம்பெயர வாய்ப்புள்ளதாக கணித்திருந்தோம்," என்று தெரிவித்தார்.

    இஸ்ரேல் போர் காரணமாக காசா இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக வடக்கில் சுமார் 3 முதல் 3.5 லட்சம் பேர் வரை சிக்கிக் கொண்டு தெற்கிற்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

    • பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் நேற்று அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.
    • கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் காசா நகரம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பேர் பலி

    பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் நாளுக்குக் நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 9 மாதங்களாக நடந்து வரும் போரில் சுமார் 37,834 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 86,858 படுகாயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் நேற்று அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த போரினால் அதிகம் பாதிப்புக்குள்ளானது பெண்களும் குழந்தைகளிலுமே ஆவர்.

     

    அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு, போர் நிறுத்த முன்மொழிவு என உலக நாடுகளும் ஐ.நா சபையும் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர பல வகையில் முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும் அது அனைத்திலும் தோல்வி அடைந்துள்ளது.

     

    அதை உறுதி செய்யும் வகையில் பாலஸ்தீன நகரங்களான காசா மற்றும் ரஃபாவில் உள்ள பொதுமக்களின் பலி எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ரஃபாவில் மக்கள் வசிக்கும் கூடாரங்கள் மீது இஸ்ரேல் பொழிந்த குண்டுமழையில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

     

    இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மற்றும் காசா நகரத்தின் பல்வேறு பகுதிகளின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்த முன்மொழிவை ஏற்படுத்தும் பணிகளில் எந்த முன்னேற்றமும்  ஏற்படவில்லை என ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் தயாராக உள்ள நிலையில் இஸ்ரேல் அதை மறுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

    • குழந்தைகளுக்கு எதிராக பாகிஸ்தானில் தொடர்ந்து கடுமையான மீறல்கள் உள்ளன.
    • அதன் கவனத்தை திசை திருப்புவதற்கான வழக்கமான மற்றொரு முயற்சி.

    ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் குழந்தைகள் மற்றும் ஆயுதங்கள் விதிமீறல் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது பாகிஸ்தான் தூதர் காஷ்மீர் குறித்து பேசினார். அதற்கு இந்தியாவுக்கான ஐ.நா.வின் துணை நிரந்தர பிரதிநிதி ஆர். ரவீந்திரா கடும் கண்டனம் தெரவித்ததுடன், தக்க பதிலடி கொடுத்தார்.

    குழந்தைகளுக்கு எதிராக பாகிஸ்தானில் தொடர்ந்து கடுமையான மீறல்கள் உள்ள நிலையில், அதன் கவனத்தை திசை திருப்புவதற்கான வழக்கமான மற்றொரு முயற்சி. எந்த தடையுமின்றி பாகிஸ்தானில் தொடர்ந்து மீறல்கள் நடைபெற்று வருகிறது.

    எங்கள் நாட்டிற்கு எதிராக ஒரு பிரதிநிதி கூறிய குற்றச்சாட்டுக்கு காலத்தின் நலன் கருதி இது முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது. ஆதாரமற்றது என குறுகிய பதில் அளிக்கிறேன். இந்த அடிப்படையற்ற கருத்துகளை நான் திட்டவட்டமாக நிராகரித்து அவர்களை கண்டிக்கிறேன் என்றார்.

    மேலும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களைப் பொறுத்தவரை இந்த குறிப்பிட்ட பிரதிநிதி அல்லது அவரது நாடு எதை நம்பினாலும் அல்லது விரும்பினாலும், அவை இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருந்தன, எப்போதும் இருக்கும் என்றார்.

    • கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 101 பாலஸ்தீனிய பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
    • குழந்தைகளின் கால்களை அகற்றும்போது சில சமயங்களில் மயக்க மருந்து கூட செலுத்துவதற்கு இல்லாத சூழ்நிலைதான் உள்ளது

    பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் 2023 அக்டோபர் மாதம் துவங்கி கடந்த ௯ மதங்களாக நீடித்து வரும் நிலையில் இதுவரை பெண்கள், குழந்தைகள் உட்பட 37, 658 பேர் உயிரிழந்துள்ளனர். காஸா நகரம் போரினால் முற்றிலும் உருகுலைந்துள்ள நிலையில் தற்போது ராஃபா நகரின் மீது தனது கண்களை இஸ்ரேல் திருப்பியுள்ளது.

    அகதி முகாம்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ள இடங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால் சர்வதேச சமுதாயத்தின் கடும் எதிர்ப்புக்கு இஸ்ரேல் ஆளாகியுள்ளது. போரை நிறுத்துவதற்கான முயற்சியில் ஐ.நா மெனக்கிட்டு வந்தாலும் இஸ்ரேல் பிடி கொடுப்பதாக தெரியவில்லை.

    எல்லைகளை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளதால் காசா மற்றும் ராஃபா நகரத்தில் தாக்குதல்களால் படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையும் நிவாரணப் பொருட்களும் கிடைக்காத சூழல் நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 101 பாலஸ்தீனிய பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

     

     

    இந்நிலையில் ஐநாவின் பாலஸ்தீன நிவாரண பிரிவான UNRWA தலைவர் பிலிப் லசாரினி அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம் ஒன்றை வெளியிட்டுள்ளார. அதாவது, காசாவில் சராசரியாக தினமும் 10 குழந்தைகள் தங்களது ஒன்று அல்லது இரண்டு கால்களையும் இழக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். ஒரு நாளைக்கு 10 குழந்தைகள் எனில் 260 நாட்களாக நடந்து வரும் இந்த போரில் காசாவில் சுமார் 2,000 குழந்தைகள் தங்களின் கால்களை இழந்துள்ளனர் .

     

     

    மேலும் தாக்குதலால் படுகாயமடைந்த குழந்தைகளின் கால்களை அகற்றும்போது சில சமயங்களில் மயக்க மருந்து கூட செலுத்துவதற்கு இல்லாத சூழ்நிலை இருப்பதாக பிலிப் லசாரினி தெரிவிக்கிறார். இந்த மொத்த போரிலும் இதுவரை சுமார் 21,000 குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து காணாமல் போயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • சோமாலியா 179 வாக்குகள் பெற்றது. டென்மார்க் 184 வாக்குகளும், கிரீஸ் 182 வாக்குகளும் பெற்றன.
    • பாகிஸ்தான் 182 வாக்குகள் பெற்றது. பாகிஸ்தான் 8-வது முறையாக உறுப்பினராக உள்ளது.

    பாகிஸ்தான், சோமாலியா, டென்மார்க், கிரீஸ் மற்றும் பனமா ஆகிய நாடுகள் ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நாடுகளின் இரண்டு வருட உறுப்பினர் பதவி காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதியில் இருந்து தொடங்கும்.

    ஐ.நா, பொது சபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் இந்த ஐந்து நாடுகள் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. 2025 ஜனவரி 1-ந்தேதியில் இருந்து 2026 டிசம்பர் 31-ந்தேதி வரை இந்த நாடுகளில் உறுப்பினர் பதவிக்காலமாகும்.

    ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய-பிசிபிக் ஆகிய இரண்டு கண்டங்களுக்கான இடத்தில் சோமாலியா 179 வாக்குகள் பெற்றது. பாகிஸ்தான் 182 வாக்குகள் பெற்றுள்ளது.

    லத்தீன் அமெரிக்கா, கரிபீயன் மாநிலங்களுக்கான இடத்தில் பனமா 183 வாக்குகளை பெற்றது. மேற்கு ஐரோப்பா மற்றும் மற்ற மாநிலங்களுக்கான இடங்களில் டென்மார்க் 184 வாக்குகளும், கிரீஸ் 182 வாக்குகளும் பெற்றன.

    பாகிஸ்தான் 182 வாக்குகள் பெற்று ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினராவது பெருமைக்குரிய தருணம் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். மேலும், சர்வதச சமூகத்தின் இணைந்து பணியாற்ற ஆர்வமுடன் எதிர்நோக்குவதாகவும் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் 8-வது முறையான நிரந்தரமற்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    • காங்கோவில் ஐ.நா. குழுவில் பணியாற்றி வருபவர் இந்திய வீராங்கனை மேஜர் ராதிகா சென்.
    • மேஜர் ராதிகா சென் ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டரெசிடம் இருந்து மதிப்புமிக்க விருதை பெற்றார்.

    நியூயார்க்:

    ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் வீரர்களின் சர்வதேச தினம் மே 30-ம் தேதி அன்று கடைப்பிடிக்கப்பட்டது.

    காங்கோவில் ஐ.நா. பணியில் பணியாற்றி வரும் இந்திய வீராங்கனை மேஜர் ராதிகா சென்னுக்கு மதிப்புமிக்க 2023 ஐக்கிய நாடுகளின் ராணுவ பாலின வழக்கறிஞர் விருது அறிவிக்கப்பட்டது.

    காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியாளராக பணியாற்றினார் மேஜர் சென்.

    அவர் மார்ச் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் பட்டாலியனுக்கான படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றினார். மேஜர் சுமன் கவானிக்கு பிறகு இந்த மதிப்புமிக்க விருதைப் பெறும் 2-வது இந்திய அமைதி காக்கும் வீரர் மேஜர் சென் ஆவார்.

    மேஜர் சென்னின் சேவையைப் பாராட்டிய குட்டரெஸ், அவர் ஒரு உண்மையான தலைவர் மற்றும் முன்மாதிரி. அவரது சேவை ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒரு உண்மையான வரவு. வடக்கு கிவுவில் அதிகரித்து வரும் மோதல் சூழலில், அவரது துருப்புக்கள் பெண்கள் மற்றும் சிறுமிகள் உட்பட மோதலால் பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் தீவிரமாக ஈடுபட்டன. பணிவு, இரக்கம் மற்றும் அர்ப்பணிப்புடன் அவர்களின் நம்பிக்கையைப் பெற்றார் என குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, மேஜர் ராதிகா சென் கூறுகையில், விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நன்றி. சவாலான சூழலில் பணியாற்றும் அனைத்து அமைதி காக்கும் படையினரின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் அளிப்பதால் இந்த விருது எனக்கு சிறப்பு வாய்ந்தது. மேலும் சமூகத்தில் ஒரு நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவர தங்களால் இயன்றதை வழங்குகிறது என தெரிவித்தார்.

    இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நேற்று நடந்த விழாவில் ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெசிடம் இருந்து மதிப்புமிக்க 2023 ஐக்கிய நாடுகளின் ராணுவ பாலின வழக்கறிஞர் விருதை மேஜர் ராதிகா சென் பெற்றார்.

    • காங்கோவில் ஐ.நா. பணியில் பணியாற்றி வருபவர் இந்திய வீராங்கனை மேஜர் ராதிகா சென்.
    • உண்மையான தலைவர் என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் பாராட்டினார்.

    நியூயார்க்:

    ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் வீரர்களின் சர்வதேச தினம் மே 30-ம் தேதி அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

    இந்நிலையில், காங்கோவில் ஐ.நா. பணியில் பணியாற்றி வரும் இந்திய வீராங்கனை மேஜர் ராதிகா சென், மதிப்புமிக்க 2023 ஐக்கிய நாடுகளின் ராணுவ பாலின வழக்கறிஞர் விருது பெறுகிறார்.

    காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியாளராக பணியாற்றினார் மேஜர் சென். இங்குள்ள உலக அமைப்பின் தலைமையகத்தில் நாளை நடைபெறும் விழாவில் குட்டரெசிடம் இருந்து மதிப்புமிக்க 2023 ஐக்கிய நாடுகளின் ராணுவ பாலின வழக்கறிஞர் விருதை பெறுகிறார்.

    அவர் மார்ச் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் பட்டாலியனுக்கான படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றினார். மேஜர் சுமன் கவானிக்கு பிறகு இந்த மதிப்புமிக்க விருதைப் பெறும் 2-வது இந்திய அமைதி காக்கும் வீரர் மேஜர் சென் ஆவார்.

    மேஜர் சென்னின் சேவையைப் பாராட்டிய குட்டரெஸ், அவர் ஒரு உண்மையான தலைவர் மற்றும் முன்மாதிரி. அவரது சேவை ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒரு உண்மையான வரவு. வடக்கு கிவுவில் அதிகரித்து வரும் மோதல் சூழலில், அவரது துருப்புக்கள் பெண்கள் மற்றும் சிறுமிகள் உட்பட மோதலால் பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் தீவிரமாக ஈடுபட்டன. பணிவு, இரக்கம் மற்றும் அர்ப்பணிப்புடன் அவர்களின் நம்பிக்கையைப் பெற்றார் என குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, மேஜர் ராதிகா சென் கூறுகையில், விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நன்றி. சவாலான சூழலில் பணியாற்றும் அனைத்து அமைதி காக்கும் படையினரின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் அளிப்பதால் இந்த விருது எனக்கு சிறப்பு வாய்ந்தது. மேலும் சமூகத்தில் ஒரு நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவர தங்களால் இயன்றதை வழங்குகிறது என தெரிவித்தார்.

    • இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் 35 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
    • இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு.

    நியூயார்க்:

    ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் ராணுவம், காசா மீது தாக்குல் நடத்தி வருகிறது. ரஃபா நகரை தவிர்த்து மற்ற பகுதிகளை தடம்தெரியாத அளவிற்கு அழித்து விட்டது.

    ஹமாசுக்கு எதிராக போர் தொடங்கியதற்கான இலக்கை எட்ட வேண்டுமென்றால் ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்த இஸ்ரேல், ரஃபா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தது. இதற்கு பெரும்பாலான நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஐ.நா. நீதிமன்றம் ரஃபா மீது தாக்குதல் நடத்தக்கூடாது என உத்தரவிட்டது.

    இதற்கிடையே, நேற்று திடீரென ரஃபா நகர் மீது வான் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 35 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். ரஃபா மீது தாக்குதல் நடத்தப்பட்டது துரதிருஷ்டவசமான தவறு எனக்கூறிய இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

    இந்நிலையில், இந்த கொடூர தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும் என ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, குட்டரெஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளத்தில், இந்தக் கொடிய மோதலில் இருந்து தஞ்சம் தேடிவந்த ஏராளமான அப்பாவி பொதுமக்களை கொன்ற இஸ்ரேலின் நடவடிக்கைகளை நான் கண்டிக்கிறேன். காசாவில் பாதுகாப்பான இடம் இல்லை. இந்தக் கொடூர தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    • காசாவில் இனப்படுகொலை நடத்தப்பட்டதாக அறிவிக்க தென்ஆப்பிரிக்கா வழக்கு தொடர்ந்தது.
    • ரஃபா மீது தற்போது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதற்கு பெரும்பாலான நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்த தாக்குதலை இனப்படுகொலை என அறிவிக்க வேண்டும் என தென்ஆப்பிரிக்கா ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் ஹமாஸ்க்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறோம். இனப்படுகொலை நடைபெறவில்லை என இஸ்ரேல் மறுப்பு தெரிவித்தது.

    தற்போது பாலஸ்தீன மக்கள் அதிகமாக வசித்து வரும் ரஃபா நகர் மீது இஸ்ரேல் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனால் அதிக அளவில் மக்கள் உயிரிழக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. ஏற்கனவே 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் காசாவில் உயிரிழந்துள்ளனர்.

    இந்த நிலையில் ரஃபா மீதான ராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளது. இருந்தபோதிலும் இஸ்ரேல் இந்த உத்தரவை பின்பற்ற வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை என்றால், உலக நாடுகளால் தனித்து விடப்படும் அபாயம் ஏற்படும்.

    ஆனால் காசா மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும். அதாவது போர் நிறுத்தத்தை நீதிமன்றம் வலியுறுத்தவில்லை.

    சமீபத்தில் மூன்று ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக தெரிவித்தது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் பிணைக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதனால் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக காசா மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. இந்த தாக்குதலில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    • ஆப்கானிஸ்தான் நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • கடந்த வாரம், கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கிராமங்களில் 315 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1,600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    ஆப்கானிஸ்தான் நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மத்திய ஆப்கானிஸ்தானில் உள்ள கோர் மாகாணப் பகுதிகளில் இதுவரை கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வெள்ளப்பெருக்கால் சாலைப் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் காயமடைந்தவர்களளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. கோர் மாகாணத்தின் நகர்ப்பகுதிகளில் சுமார் 2,000 வீடுகள் முற்றிலுமாக அழிந்துவிட்டதாகவும் 2000க்கும் மேற்பட்ட கடைகள் தண்ணீருக்கு அடியில் மூழ்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    முன்னதாக விமானப்படை ஹெலிகாப்டர் மூலம், கோர் மாகாண ஆற்றில் விழுந்தவர்களின் உடல்களை மீட்கும் முயற்சியின் போது தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக விபத்துக்குள்ளானது, ஒருவர் கொல்லப்பட்டார். கடந்த வாரம், கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கிராமங்களில் 315 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1,600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    ஆப்கானிஸ்தானில் வழக்கத்துக்கு மாறாக பெய்து வரும் கனமழைக்கு காலநிலை மாற்றமே காரணம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக ஆப்கனிஸ்தானை ஐநா வரையறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 




     


    • காசாவின் வடக்குப்பதியில் உள்ள இடங்களை இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி சீர்குலைத்துள்ளது.
    • இஸ்ரேல் தாக்குதல் காரணமாக 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சொந்த இடத்தில் இருந்து இடம் பெயர்ந்துள்ளனர்.

    ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், காசா மீது தாக்குதல் நடத்தியது. காசா முனையின் வடக்குப் பகுதியை முற்றிலுமாக சீர்குலைத்துள்ளது. தெற்கு காசாவிலும் வான் தாக்குதல் நடத்தி வருகிறது. தரை தாக்குதலுக்கும் தயாராகி வருகிறது.

    காசாவில் மொத்தம் 23 லட்சம் மக்கள் உள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் சொந்த இடத்தை விட்டு வெளியேறி முகாம்களில் வசித்து வருகின்றனர்.

    தற்போது முகாம்களில் வசித்து வரும் பாலஸ்தீன மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க ஐ.நா. முயற்சி மேற்கொண்டு வருகிறது. மனிதாபிமான உதவிகள் கிடைக்க இஸ்ரேல் உதவ வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. அமெரிக்கா, ஐ.நா. உள்ளிட்டவைகளின் வலியுறுத்தலின்படி நேற்று, இஸ்ரேல் வடக்கு காசாவிற்கான ஒரு எல்லையை திறந்துள்ளது.

    இந்த நிலையில் இஸ்ரேல் தாக்குதலில் சீர்குலைந்துள்ள வீடுகளை சீரமைப்பதற்கு 2040 வரை ஆகும் என ஐ.நா. தெரிவித்துள்ளது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பினர் திடீரென இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

    அதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் தாக்குதல் தொடங்கியது. ஏழு மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ரஃபா நகரைத் தவிர மற்ற நகரங்கள் ஏறக்குறைய சீர்குலைக்கப்பட்டுள்ளனர். இதில் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன பொதுமக்கள கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×