search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "budget session"

  • பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதி கோரி ஹேமந்த் சோரன் மனு செய்தார்.
  • சோரனின் மனுவை தள்ளுபடி செய்து கோர்ட் இன்று உத்தரவிட்டது.

  ராஞ்சி:

  ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி முன்னாள் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் மீது நிலக்கரி சுரங்கம் மற்றும் நில மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் நடந்த பணமோசடி தொடர்பாக அமலாக்கத் துறையின் பிடியில் சிக்கினார்.

  இவரது கோர்ட் காவல் பல முறை நீட்டிக்கப்பட்ட நிலையில் ராஞ்சி பி.எம்.எல். சிறப்பு கோர்ட் பிப்ரவரி 22-ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டது.

  இதற்கிடையே, ஜார்க்கண்ட் மாநில சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனக்கோரி ஹேமந்த் சோரன் கோர்ட்டில் மனு செய்தார்.

  இந்நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த ஐகோர்ட் சோரன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

  • சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்த உரை அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது.
  • கடந்த 15-ம் தேதி சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

  2024 ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதன்படி கடந்த 12-ந் தேதி கவர்னர் உரையுடன் சட்டப்பேரவை முதல் கூட்டம் தொடங்கியது. கவர்னர் ஆர்.என். ரவி தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்ததால், சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்த உரை அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது.

  கடந்த 13 மற்றும் 14-ம் தேதிகளில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. கடந்த 15-ம் தேதி சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

  இதைத் தொடர்ந்து 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் பிப்ரவரி 19-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது . நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஏராளமான புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

  தொடர்ந்து கடந்த 20ம் தேதி 2024-25-ம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. நிறைவு நாளில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்க உள்ளனர்.

  • கர்நாடக மாநில சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
  • முதல் மந்திரி சித்தராமையா நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

  பெங்களூரு:

  கர்நாடக மாநிலத்தின் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. முதல் மந்திரி சித்தராமையா 2024-25ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்.

  அப்போது, தேவையான அனுமதிகளை விரைவில் பெற்று மேகதாதுவில் அணை கட்டப்படும். அங்கு அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. இதற்காக ஒரு தனி மண்டல குழுவும், இரண்டு துணை மண்டல குழுவும் அமைக்கப்பட்டுள்ளன. அனுமதி கொடுத்தால் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும்.

  பெங்களூரு குடிநீர் பிரச்சனையை தீர்ப்போம். மேகதாது அணை கட்டும் போது நீருக்குள் செல்லும் நிலப்பரப்பு மற்றும் வெட்டப்பட வேண்டிய மரங்களை அடையாளப்படுத்தும் பணி நிறைவு அடைந்துள்ளது என தெரிவித்தார்.

  இந்த பட்ஜெட் உரையை சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக வாசித்தார்.

  • 17-வது மக்களவையின் கடைசி கூட்டத்தொடர் நடைபெற்றது.
  • கடினமான காலகட்டங்களில் சபாநாயகர் அவையை வழி நடத்தியுள்ளார்.

  17-வது மக்களவையின் கடைசி கூட்டத்தொடரில் பிரமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.

  அப்போது பேசிய அவர், "கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் போன்றவை ஏற்பட்டுள்ளது. மிகவும் கடினமான காலகட்டங்களில் சபாநாயகர் அவையை வழி நடத்தியுள்ளார். ஒருபோதும் அதன் பணியை தடை படவிட்டதில்லை."

  "கொரோனா காலக்கட்டத்தில் எம்.பி.க்கள் தங்கள் ஊதியத்தில் 30 சதவீதத்தை குறைத்துக் கொண்டனர். ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைத்தது. உலகத்தின் முன்பு, நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களின் அடையாளம், திறன்களை பறைசாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது."

  "ஜனநாயகத்தின் தாயாக இந்தியா உருவெடுத்துள்ளது. ஜி20 மாநாட்டை போல, ஜி20 நாடுகளின் சபாநாயகர்களின் மாநாடும் நடைபெற்றது. ஜி20 மாநாட்டின் வெற்றிக்கு அனைத்து மாநிலங்களும் பங்களிப்பை வழங்கின."

  "17-வது மக்களவையில் செயல்திறன் 97 சதவீதமாக உள்ளது. 18-வது மக்களவையில், அவையின் செயல்திறன் 100 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்க வேண்டும் என உறுதி ஏற்போம். 17-வது மக்களவையில் பல்வேறு முத்திரைகளை பதித்துள்ளோம். அனைத்து கட்சிகளின் மக்களவை குழு தலைவர்களுக்கும் நன்றி."

  "ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு நியாயம் வழங்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. 370 சட்டப்பிரிவு நீக்கத்திற்கு நீண்ட காலமாக காத்திருக்கப்பட்டது. புதிய அவையில் தான் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. முத்தலாக் மூலம் இஸ்லாமிய பெண்கள் துயரங்களை அனுபவித்தனர். முத்தலாக் தடை சட்டமும் இந்த அவையில் நிறைவேற்றப்பட்டது. மகளிருக்கு மரியாதை அளிப்பதற்கான வரலாற்று சிறப்புமிக்க முடிவும் 17-வது மக்களவையில் தான் எடுக்கப்பட்டது."

  "வரும் 25 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்த தேசத்தை உருவாக்குவோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் இளைஞர்களுக்கான பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட்டது. வினாத்தாள் கசிவு குறித்து இளைஞர்கள் பெரும் கவலை கொண்டனர். அதற்கான சட்டத்தை கொண்டு வந்து கவலைகளை நாம் அகற்றியுள்ளோம்."

  "தேசிய ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான சட்டம் இந்த அவையில் தான் இயற்றப்பட்டது. தேசத்தின் இளைஞர் சக்தியின் மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. இந்தியா விரைவில் ஆராய்ச்சிக்கான மையமாக உருவெடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது," என்று தெரிவித்தார்.

  • நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு உள்ளது.
  • தி.மு.க எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள்.

  சென்னை:

  மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டு மக்கள் நலனை முழுமையாக புறக்கணித்து, தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு கிஞ்சித்தும் அக்கறை இல்லாமல் ஒரு நிதிநிலை அறிக்கையை தயாரித்து அளித்துள்ளார் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன். இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தி.மு.க எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள்.

  பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு முன்னால் கருப்புச் சின்னம் அணிந்து போராட்டமும் நடத்துவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

  இந்நிலையில் பிப்.8-ந்தேதி தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற வளாகத்தில் காந்தியடிகள் சிலைக்கு முன்னால் தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம் நடத்த உள்ளனர்.

  பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்தும், வெள்ள நிவாரணம் வழங்காததை கண்டித்தும் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • சாதாரண, சாமானிய, ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கான எந்த அறிவிப்பும் இல்லை.
  • வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இருக்கும் என மக்கள் எதிர்பார்த்தார்கள். அதையும் வழங்கவில்லை.

  சென்னை:

  மத்திய பட்ஜெட் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

  இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து பத்தாண்டு காலம் ஆட்சி செய்து, சொல்லிக்கொள்ள எந்த சாதனையும் செய்யாத பா.ஜ.க. அரசு, ஆட்சிக் காலத்தையும் முடித்து விடைபெறும் நேரத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. எடை போட்டுப் பார்க்க ஏதுமில்லாத வெற்று அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

  கடந்தகால சாதனைகளையும் இந்த பட்ஜெட் சொல்லவில்லை; நிகழ்கால பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதாகவும் இது அமையவில்லை. எதிர்காலப் பயன்களுக்கு உத்தரவாதம் தருவதாகவும் இல்லை.

  மொத்தத்தில், ஏதுமற்ற அறிக்கையை வாசித்து அளித்திருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். ஆட்சிக்காலம் முடியப் போகிறது என்ற அலட்சியம்தான் இந்த அறிக்கையில் தெரிகிறது.

  பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் பல்வேறு சலுகைகளைப் பொதுமக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். பெட்ரோல், டீசல், சிலிண்டர் ஆகியவற்றின் விலை குறைப்பு இருக்கும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், பொதுமக்களுக்கு ஏமாற்றத்தையே பரிசளித்துள்ளது இந்த பட்ஜெட்.

  வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இருக்கும் என நடுத்தர மக்கள் எதிர்பார்த்தார்கள். அதனையும் வழங்கவில்லை.

  எந்தப் பொருளுக்கும் வரி குறைப்பு வழங்கப்படவில்லை. சலுகைகளும் ஏதுமில்லை. சாதாரண, சாமானிய, ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கான எந்த அறிவிப்பும் இல்லை.

  உழவர்களின் மிக முக்கியமான கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலை குறித்த அறிவிப்பு உண்டா? அதுவும் இல்லை.

  இப்படி 'இல்லை... இல்லை...' என்று சொல்வதற்காக எதற்கு பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவேண்டும்?

  நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளது 'இல்லாநிலை' பட்ஜெட்டாக மட்டுமே அமைந்துள்ளது.


  இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி காணவில்லை. பணவீக்கம் குறையவில்லை. வறுமை ஒழிக்கப்படவில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் ஒழியவில்லை. ஆனால் இதையெல்லாம் செய்து காட்டிவிட்டதாக பொய் அறிக்கையை தாக்கல் செய்துள்ளார் நிதி அமைச்சர். மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. வழங்கிவிட்டதாகத் தங்களுக்கு தாங்களே தோளைத் தட்டிக் கொள்கிறார்கள்.

  மக்கள்தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் பிரச்சனையைச் சமாளிக்கக் குழு அமைக்கப்படும் என அறிவித்திருக்கிறார்கள். மக்கள்தொகை குறைந்துவிட்டதைக் காரணம் காட்டி சில மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க நினைக்கும் திட்டத்தின் சூழ்ச்சியாக இக்குழு அமைக்கப்படுகிறதா என சந்தேகம் ஏற்படுகிறது. மக்கள்தொகை குறைந்துவிட்டது என்று சொல்லி, பாராளுமன்ற தொகுதியின் எண்ணிக்கையைக் குறைக்கும் அதேவேளையில், மக்கள்தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் பிரச்சனையைச் சமாளிக்க குழு அமைக்கப்படும் என ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.

  நாட்டில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வந்த பிறகு வரி வசூல் அதிகரித்திருப்பதாக நிதி அமைச்சர் பெருமைப்பட்டுக் கொள்கிறார்.

  ஆனால் மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையை இந்த ஆண்டு வழங்குவது குறித்து எந்தவொரு அறிவிப்பு இல்லாமல் இருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இதனால் இந்த ஆண்டு மட்டும் தமிழ்நாட்டுக்கு ஏறத்தாழ 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

  ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய வரிகள் மீது கூடுதல் வரிகள் மற்றும் மேல் கட்டணமாக சுமார் 7.5 லட்சம் கோடி ரூபாயினை மத்திய அரசு தொடர்ந்து வசூலித்து வருகிறது. இதனால் மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிய பங்கை மத்திய அரசு தொடர்ந்து பறித்து வருகிறது. கூடுதல் வரி மற்றும் மேல் கட்டணங்களை மாநிலங்களுடன் பகிரவேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தியும் ஒன்றிய அரசு கூட்டாட்சித் தத்துவத்திற்கு முரணாகச் செயல்பட்டு வருவது கண்டனத்திற்குரியது.

  இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பத்தாண்டு காலத்தில் பதினைந்து எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் சொல்லி இருக்கிறார். 2015-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்டு, 2019-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2024 வரைக்கும் கட்டுமானப் பணிகள் கூட நடக்காமல் கிடக்கிறதே... என்ன காரணம்? இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எல்லாம் எய்ம்ஸ் அமைத்தவர்கள், தமிழ்நாட்டில் மட்டும் அமைக்காமல் போனதற்கு என்ன காரணம்? தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை? தமிழ்நாட்டு மக்கள் இளித்தவாயர்களா? பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டில் ஓட்டு இல்லை என்பதுதான் காரணமா?

  காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள புதிய திட்டங்களை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தும் என்று நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்கள். ஆனால் தமிழ்நாடு அண்மையில் சந்தித்த இரண்டு தொடர் பேரிடர் இழப்புகளைச் சீரமைக்க இதுவரை எந்தவொரு நிதியும் வழங்கப்படவில்லை என்பது தமிழ்நாட்டு மக்களையே ஒட்டுமொத்தமாக ஏமாற்றுவதாகும்.

  மிக்ஜாம் புயல் கனமழையால் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கடந்த 47 ஆண்டுகளாக இல்லாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பையும், தென் மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் 100 ஆண்டுகள் இல்லாத கனமழை பெய்ததால் ஏற்பட்ட பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு, 'தீவிர இயற்கைப் பேரிடர்' ஆக அறிவிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் கேட்டுக் கொண்டேன். அது குறித்தும் எந்த அறிவிப்பும் இல்லை. 31 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணத் தொகை கேட்டோம். அது குறித்தும் ஏதுமில்லை.


  மெட்ரோ ரெயில் மற்றும் வந்தே பாரத் திட்டங்கள் நாட்டின் மிக முக்கியமான நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று நிதியமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார், ஆனால் கடந்த மூன்றாண்டு காலமாக சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அமைச்சரவை இன்னும் ஒப்புதல் வழங்கப்படாமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம்.

  பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையில் நகர்ப்புறப் பகுதிகளில் கட்டப்படும் வீடுகள் ஒவ்வொன்றும் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இருந்தாலும் ஒன்றிய அரசின் பங்கு வெறும் 1.50 லட்சம் ரூபாய் மட்டுமே. இதில் மாநில அரசின் பங்கு 7.50 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

  தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் சதுரங்க விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தா பற்றி குறிப்பிட்டது மட்டுமின்றி, நாட்டில் தற்போது 80 கிராண்ட் மாஸ்டர் நிலை விளையாட்டு வீரர்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் உலகமே வியக்கும் வண்ணம் செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டியைத் தமிழ்நாடு நடத்தியதை ஒன்றிய நிதியமைச்சர் வசதியாக மறந்தது ஏன்?

  இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் 'ஏழைகள், மகளிர், இளைஞர்கள் மற்றும் உழவர்கள்' ஆகிய 4 பிரிவினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றுகூறி, இந்த 4 பிரிவினர்களையும் 4 சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கையில் மிகவும் கண்டிக்கத்தக்க பிற்போக்குத்தனமான வருணாசிரம கருத்தைப் புகுத்துவது சமூக நீதிக்குப் புறம்பானது.

  "சமூக நீதியை அரசின் கொள்கையாக கொண்டு செயல்படுத்தி வருகிறோம். சமூகநீதி என்பது அரசியல் வாக்கியமாக இருந்ததை திட்டங்களுக்கான மந்திரமாக பயன்படுத்துகிறோம்" என சொல்லியிருக்கிறார் நிர்மலா சீதாராமன். அனைத்துச் சமூக மக்களுக்குமான உரிமையை சரிசம விகிதத்தில் 'பறிப்பதுதான்' பா.ஜ.க பின்பற்றும் சமூகநீதி ஆகும். சமூகநீதி என்ற சொல்லைப் பயன்படுத்தும் மாற்றத்தை பா.ஜ.க அடைந்திருப்பதைப் பார்த்து சிரிப்பு வருகிறது.

  வருகிற பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் பா.ஜ.க.வுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்றும், சூலை மாதம் நாங்கள்தான் பட்ஜெட் தாக்கல் செய்வோம் என்றும் அமைச்சர் சொல்லி இருப்பது உச்சக்கட்ட நகைச்சுவை. நிதிநிலை அறிக்கையை அரசியல் பேராசை அறிக்கையாக ஆக்கி இருக்கிறார். நிதிநிலை அறிக்கையில் மக்களை ஏமாற்றியது போல, மக்களும் ஏமாற்றத்தை பா.ஜ.க.வுக்கு வருகிற தேர்தலில் வழங்குவார்கள்.

  2047-ம் ஆண்டு புதிய இந்தியாவைப் படைப்போம் என்று சொல்லி இருக்கிறார்கள். 2014-ம் ஆண்டு முதன் முதலாக நரேந்திர மோடி பிரதமர் ஆனபோது புதிய இந்தியா பிறந்ததாகச் சொன்னார்கள். 500, 1000 ரூபாய் நோட்டுகளைத் தடை செய்தபோதும் புதிய இந்தியா பிறந்துவிட்டது என்றார்கள். 2019-ம் ஆண்டு மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் புதிய இந்தியா பிறந்தது என்றார்கள். ஆனால் 2024 வரை புதிய இந்தியா பிறக்கவே இல்லை. 2047-ம் ஆண்டுதான் புதிய இந்தியா பிறக்கப் போவதாக நிதி அமைச்சர் சொல்லி இருக்கிறார். இவர்களால் புதிய இந்தியாவை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உருவாக்க முடியாது என்பதே உண்மை. புதிய இந்தியாவை 'இந்தியா' கூட்டணி நிச்சயம் உருவாக்கும்.

  தமிழ்நாட்டு மக்கள் நலனை முழுமையாகப் புறக்கணித்து, தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு கிஞ்சித்தும் அக்கறை இல்லாமல் ஒரு நிதிநிலை அறிக்கையைத் தயாரித்து அளித்துள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தி.மு.க எம்.பி.,கள் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள். பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு முன்னால் கருப்புச் சின்னம் அணிந்து போராட்டமும் நடத்துவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

  • பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார்.
  • பட்ஜெட் குறித்து பல்வேறு கட்சித் தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

  புதுடெல்லி:

  பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட் குறித்து பல்வேறு கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விபரம் வருமாறு:

  காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே:

  பட்ஜெட்டை கவனமாகக் கேட்டேன். இந்த பட்ஜெட்டில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான எதுவும் குறிப்பிடப்படவில்லை.

  இது அவர்களின் அன்றாடப் பணிகளுக்கான பட்ஜெட். 10 ஆண்டுகளாக கொடுத்த வாக்குறுதிகளின் விவரத்தை கொடுக்கவில்லை.

  எத்தனை வாக்குறுதிகளை அளித்தார்கள், எத்தனை நிறைவேற்றினார்கள் என்பதை ஒப்பிட்டுப் பார்த்திருக்க வேண்டும். ஒப்பிட்டு அறிக்கை கொடுக்கவேண்டும்.

  2014-க்கு பிறகுதான் நாடு சுதந்திரம் பெற்றது என்றும், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் நாடு ஜனநாயகத்தைப் பார்க்கிறது என்றும் நினைக்கிறார்கள். 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்று கூறிய வாக்குறுதி என்ன ஆனது?

  கறுப்புப் பணத்தை மீட்டுக்கொண்டு வருவோம். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் எனக்கூறிய அனைத்து வாக்குறுதிகளும் என்ன ஆனது என கேள்வி எழுப்பினார்.

  ஆம் ஆத்மி கட்சி எம்பி சுஷில் குமார் ரிங்கு:

  இளைஞர்கள், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் தங்களது மேம்பாடு பற்றி இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் இந்த பட்ஜெட்டில் அதுபற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த பட்ஜெட்டினால் வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. பெரும் தோல்வியைச் சந்திக்க நேரிடும்.

  காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா ஷிண்டே:

  மத்திய அரசு இன்னும் மறுப்பு நிலையில் உள்ளது. பிரச்சனைகளை ஏற்க தயாராக இல்லை. இந்த இடைக்கால பட்ஜெட்டில் சாமானிய மக்கள், வேலைவாய்ப்பு, விவசாயம், பெண்கள் குறித்து எதுவும் இல்லை. மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் வருமானம் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார். ஆனால் உண்மையான வருமானம் 25 சதவீதம் குறைந்துள்ளதாக அரசின் தகவல் கூறுகிறது.

  தி.மு.க. எம்.பி. சிவா:

  அடுத்த முழு பட்ஜெட்டுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். நாங்கள் வந்து தாக்கல் செய்வோம். இந்தியா கூட்டணி வெற்றி பெறும். வருகிற தேர்தலுக்குப் பிறகு சிறந்த பட்ஜெட்டை நாங்கள் தாக்கல் செய்வோம் என தெரிவித்தார்.

  • 2025-26-ம் ஆண்டுக்குள் நிதிப் பற்றாக்குறையை 4.5 சதவீதத்துக்கும் கீழ் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • வருமான வரி ரிட்டன்ஸ் 2013-ம் ஆண்டில் 90 நாட்கள் இருந்த நிலையில் அது 10 நாளாக குறைந்து உள்ளது.

  மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-

  10 ஆண்டுகளில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2.4 மடங்கு உயர்ந்துள்ளது. மாலத்தீவு விவகாரத்தை தொடர்ந்து லட்சத்தீவு சுற்றுலாவுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்துள்ளது.

  2025-26-ம் ஆண்டுக்குள் நிதிப் பற்றாக்குறையை 4.5 சதவீதத்துக்கும் கீழ் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு, ஐரோப்பா பொருளாதார காரிடார் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.

  வருமான வரி ரிட்டன்ஸ் 2013-ம் ஆண்டில் 90 நாட்கள் இருந்த நிலையில் அது 10 நாளாக குறைந்து உள்ளது. கூடுதலாக செலுத்திய வருமான வரியை திரும்ப தரும் காலம் 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

  இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

  • இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் எளிய மக்கள், பெண்களுக்கானது.
  • பாராளுமன்றத்தில் சிறப்பான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார் பிரதமர் மோடி.

  புதுடெல்லி:

  பராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.

  இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது அவர், மத்திய அரசின் பல்வேறு சாதனைகள் மற்றும் செயல்பாடுகளை பட்டியலிட்டு, புதிய திட்டங்களையும் அறிவித்தார்.

  இறக்குமதி வரி உள்பட நேரடி மற்றும் மறைமுக வரி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ரூ.7 லட்சம் வரையிலான தனிநபர் வருமானத்திற்கு வரி செலுத்த தேவையில்லை என்பது தொடரும் என தெரிவித்தார்.

  மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், இலக்குகள் குறித்த விவரங்களும் பட்ஜெட் உரையில் இடம் பெற்றிருந்தது.

  இந்நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் எளிய மக்களுக்கானது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

  இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், பாராளுமன்றத்தில் சிறப்பான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் எளிய மக்கள், பெண்களுக்கானது. மத்திய பட்ஜெட் உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது. உள்கட்டமைப்புக்கு ஒதுக்கிய தொகை வேகமான வளர்ச்சி, அதிக வேலைவாய்ப்புகளை கொடுக்கும் என்றார்.

  • லட்சத்தீவில் சுற்றுலா உள் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  • 2024-25-ல் நாட்டின் நிதிப்பற்றாக்குறை 5.1 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்தப்படும்.

  மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-

  நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுக்கு மெட்ரோ ரெயில் சேவை கொண்டு வரப்படும். இந்தியாவில் அன்னிய முதலீடுகள் 596 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. லட்சத்தீவில் சுற்றுலா உள் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

  ஜெய்சவான், ஜெய் கிசான், ஜெய் விஞ்ஞான் உடன் ஜெய் அனுசந்தான் (ஆராய்ச்சி) என்பதே மோடி அரசின் குறிக்கோள். 40 ஆயிரம் சாதாரண ரெயில் பெட்டிகள் வந்தே பாரத் தரத்துக்கு உயர்த்தப்படும். ஆன்மீக சுற்றுலாவிற்கான திட்டங்கள் கொண்டு வருவதால் உள்ளூர் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். 2023-24-ல் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி அரசின் செலவு ரூ.44.90 லட்சம் கோடியாகும். ஜூலையில் நாட்டின் வளர்ச்சிக்காக விரிவான திட்டங்கள் அறிவிக்கப்படும்.

  2024-25-ல் நாட்டின் நிதிப்பற்றாக்குறை 5.1 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்தப்படும். மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.