என் மலர்
நீங்கள் தேடியது "tamil"
- பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை தலைவரும் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
- வாரணாசி மாவட்ட கல்வி ஆய்வாளரும் தமிழ் வகுப்புகள் நடத்த உத்தரவிட்டுள்ளார்.
வாரணாசி என அழைக்கப்படும் காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நீண்ட காலமாக கலாசார, நாகரிக, கல்வி உறவு இருந்து வருகிறது. இதை பிரதிபலிக்கும் வகையில், பிரதமர் மோடி உத்தரவின்பேரில், காசி தமிழ் சங்கமம் ஆண்டுதோறும் நடந்து வருகிறது.
அதன் காரணமாக வாரணாசியில் தமிழ் கற்கும் ஆர்வம், இந்தி மாணவர்களிடம் எழுந்திருப்பதாக கடந்த மாதம் 28-ந் தேதி நடந்த 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதமாக கூறினார். வாரணாசியில் உள்ள அரசு குயின் கல்லூரி மாணவர் பாயல் படேல், குறுகிய காலத்தில் தமிழ் கற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து, பிரதமரின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப அரசு குயின் கல்லூரி, தினந்தோறும் மாலைநேர தமிழ் வகுப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த கல்லூரியின் முதல்வர் சுமித் குமார் கூறியதாவது:-
தமிழ்நாட்டை சேர்ந்த சந்தியா குமார் சாய் இதற்கு முன்பு மாணவர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுத்தார். அவரிடம் பேசினோம். அவரும் ஆன்லைன் வகுப்பு எடுக்க சம்மதித்துள்ளார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை தலைவரும் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
வாரணாசி மாவட்ட கல்வி ஆய்வாளரும் தமிழ் வகுப்புகள் நடத்த உத்தரவிட்டுள்ளார். எனவே, மாலை நேர தமிழ் வகுப்புகள் தொடங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவர்களின் தமிழ் ஆர்வத்தை அறிந்து, அடுத்த கல்வி ஆண்டில் இருந்து பள்ளியில் முறையான தமிழ் பாட வகுப்பு அறிமுகப்படுத்த பரிசீலித்து வருவதாக பள்ளி முதல்வர் பிரியங்கா திவாரி தெரிவித்தார்.
இதுதவிர, கலாசாரத்தை பரிமாறிக் கொள்ளும்வகையில், இந்தி கற்றுக்கொடுப்பதற்காக வாரணாசியில் இருந்து 50 ஆசிரியர்களை தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.
- ஏகலைவா பள்ளிப் பணிகளுக்கான தேர்வுகளில் தமிழ் இணைக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட வேண்டும்.
- ஆர்.எஸ்.எஸ். போடும் இந்த இரட்டை வேடத்தை தமிழர்கள் தெளிவாகப் புரிந்துகொள்வார்கள்.
அகில இந்திய அளவில் நடைபெறும் ஏகலைவா பள்ளிகளில், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணிகளுக்கான தேர்வு எழுதுவதில், தமிழ்ப் புறக்கணிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "ஏகலைவா பள்ளிகள் என்ற பெயரில் இந்தியா முழுவதும் உள்ள மலைவாழ் மாணவர்களுக்கென ஒன்றிய அரசு நடத்தும் ஏகலைவா மாடல் ரெசிடென்சியல் ஸ்கூல் (EMRS) – பள்ளிகள் தமிழ்நாட்டில் விழுப்புரம், சேலம், ஊட்டி, திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல், காஞ்சிபுரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தில் செயல்படுகின்றன.
தமிழ்நாட்டில் ஏகலைவா பள்ளி...
தமிழுக்கு இடமில்லை!
கடந்த 19.09.2025 இல் மேல்நிலைப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணிகளுக்கான அறிவிப்பு வெளியான நிலையில், அதற்கான தேர்வுகள் 13.12.2025,14.12.2025 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. தேர்வில் பகுதி-6 இல் மொழிகளுக்கான பகுதியில் ஆங்கிலம், அசாமி, வங்காளம், போடோ, டோகிரி, கரோ, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், காஷ்மீரி, காசி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, மிசோ, நேபாளி, ஒடிசா, சந்தலி, தெலுங்கு, உருது உள்ளிட்ட மொழிகள் இடம்பெற்றன.
உள்ளூர் மொழிகள் காலிப் பணியிடங்களின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு, தமிழ்நாட்டு மாணவர்கள் அனைவரும் மொழிப் பட்டியலில், தமிழ் இல்லாத காரணத்தால் பகுதி-6 இல் ஆங்கிலத்தையே தேர்ந்தெடுத்து எழுத வேண்டிய இக்கட்டான சூழல் அமைந்தது. பகுதி 6-இன் 30 மதிப்பெண்களுக்கு 12 தகுதி மதிப்பெண்கள் எடுக்க வேண்டிய சூழலில், 10 கேள்விகளுக்குக் கட்டாயம் ஹிந்தியிலும், 10 கேள்விகளுக்குக் கட்டாயம் ஆங்கிலத்திலும் பதில் அளிக்க வேண்டும். அடுத்து உள்ள உள்ளூர் மொழி என்னும் பிரிவுக்கான 10 மதிப்பெண்களுக்கு என குறிக்கப்பட்டுள்ள மொழிகளில் தமிழ் இல்லாத காரணத்தால், அப் பிரிவிற்கும் ஆங்கிலத்தையே தேர்வு செய்து எழுத வேண்டிய கடுமையான நிலை தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டும் நேர்ந்துள்ளது.
40% மதிப்பெண்கள் கட்டாயமாம்!
அனைத்திந்தியத் தேர்வுகள் எதிலும், இந்தியக் குடிமக்களாகப் பங்கேற்றுப் பணியில் தேர்வடைய எல்லோருக்கும் உரிமை உண்டு - தமிழர்களுக்கும் உண்டு. ஆனால், கட்டாயம் 40% மதிப்பெண்கள் எடுத்தால் தான், பிற கேள்விகளே திருத்தப்படும் என்று சொல்லப்படக் கூடிய கட்டாயமான மொழிப் பிரிவில் தமிழ் ஏன் இடம்பெறவில்லை?
தமிழ்நாட்டில் ஏகலைவா பள்ளிகள் இருக்கின்றன. அதில் பணியாற்ற மாட்டார்களா? அது குறித்த விவரம் என்ன? கடந்த சில ஆண்டுகளாகத் தமிழுக்கான ஆசிரியர்களே ஒன்றிய அரசின் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் நிரப்பப்படவில்லை என்பது ஒன்றிய அரசின் வாயிலாகவே வெளிப்பட்டதே! அதே போல, ஏகலைவா பள்ளிகளில் உள்ள நிலைமை என்ன? எத்தனை இடங்கள் உள்ளன? அவற்றில் இட ஒதுக்கீட்டின் நிலை எவ்வாறு இருக்கிறது? தமிழ்நாட்டுப் பள்ளிகளில் நிரப்பப்படாத பணியிடங்கள் எவ்வளவு? போன்ற கேள்விகள் எழுகின்றன.
இவற்றுக்கு உரிய பதில்களை ஒன்றிய அரசு தரவேண்டாமா?
தேர்வில் உள்ளூர் மொழிகளில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதன் மூலம் தமிழ்நாட்டு மாணவர்களுக்கான வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளதே! இது அநீதி அல்லவா?
ஒரே ஆண்டில் இரு காசி தமிழ்ச் சங்கமத்தின் பின்னணி!
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி தங்கள் பிரச்சாரத்திற்காக, காசித் தமிழ்ச் சங்கமம் என்ற பெயரில் "சங்கிமத்"தைத் ஒரே ஆண்டில் இரண்டு முறை நடத்திய ஒன்றிய அரசு, தமிழைப் போற்றுவதாக வேடம் போடும் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. அரசு, தமிழுக்குத் தர வேண்டிய உரிமையை மறுப்பதேன்?
''தமிழுக்காகப் பேசுகிறோம், தமிழுக்காக உருகுகிறோம்'' என்றெல்லாம் நாடகமாடும் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. அரசின் இரட்டை வேடத்திற்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும்?
தமிழுக்கு உரிய நிதியையும் ஒதுக்காமல், தமிழர்களுக்கு உரிய வேலை வாய்ப்பையும் பறிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுக் கொண்டு, ஆர்.எஸ்.எஸ். போடும் இந்த இரட்டை வேடத்தை தமிழர்கள் தெளிவாகப் புரிந்துகொள்வார்கள்.
ஏகலைவா பள்ளிப் பணிகளுக்கான தேர்வுகளில் தமிழ் இணைக்கப்பட்டு, மீண்டும் தேர்வு நடத்தப்பட வேண்டும். இந்த அநீதிக்குரிய பரிகாரம் வழங்கப்படவேண்டும். இல்லையேல், தமிழ்நாடெங்கும் கிளர்ச்சியைத் தொடங்க வேண்டி இருக்கும். நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து குரல் எழுப்பிட வேண்டும்.
தமிழ் புறக்கணிப்பை, ஹிந்தித் திணிப்பை எந்த நிலையிலும் தமிழ்நாடு பொறுத்துக் கொள்ளாது. நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் களத்திலும் இப்பிரச்சினை நிச்சயம் எதிரொலிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
- இலங்கையின் மூத்த இசையமைப்பாளர் எம்.பி.பரமேஷின் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது
- இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திமுக எம்.பி. திருச்சி சிவா கலந்துகொண்டார்.
சென்னை சாலிகிராமத்தில் இலங்கையின் மூத்த இசையமைப்பாளர் எம்.பி.பரமேஷின் புத்தக வெளியீட்டு விழா மற்றும் அவரது 60 ஆண்டு இசை சேவையை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திமுக எம்.பி. திருச்சி சிவா கலந்துகொண்டார். அப்போது அவரிடம் இந்தி பாடல் பாடுமாறு அங்கிருந்தவர்கள் கேட்டுள்ளனர்.
ஆனால் அதற்கு இந்தி பாடல் பாடாமல் "மௌனமே பார்வையால்..." என்ற தமிழ் பாடலை பாடி அங்கிருந்தவர்களை மகிழ்வித்தார்
- இந்தியாவின் 2 மிகப் பழமையான நகரங்களின் சங்கமம் எப்போதும் சிறப்பு வாய்ந்தது.
- காசி தமிழ் சங்கமம் தமிழ் மொழியை நேசிக்கும் அனைவருக்கும் ஒரு முக்கியமான தளமாக மாறியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்றி வருகிறார்.
தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றியதாவது:-
இந்தியாவின் 2 மிகப் பழமையான நகரங்களின் சங்கமம் எப்போதும் சிறப்பு வாய்ந்தது. நான் காசி தமிழ் சங்கமம் பற்றிப் பேசுகிறேன். 4-வது காசி தமிழ் சங்கமம் வருகிற 2-ந் தேதி வாரணாசியில் தொடங்குகிறது. இந்த ஆண்டு கருப்பொருள் மிகவும் சுவாரசியமானது. அது தமிழ் கற்க என்பதாகும்.
காசி தமிழ் சங்கமம் தமிழ் மொழியை நேசிக்கும் அனைவருக்கும் ஒரு முக்கியமான தளமாக மாறியுள்ளது. தமிழ் கலாச்சாரம் சிறந்தது. தமிழ் மொழி சிறந்தது. தமிழ் பாரதத்தின் பெருமை.
விவசாயத் துறையில் இந்தியா மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. 357 மில்லியன் டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்து இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 100 மில்லியன் டன் அதிகரித்து உள்ளது.
இளைஞர்களின் அர்ப்பணிப்பையும், விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு உணர்வையும் பார்க்கும் ஒவ்வொரு முறையும் எனது இதயம் உற்சாகத்தால் நிரம்பி வழிகிறது. இளைஞர்களின் இந்த அர்ப்பணிப்பு வளர்ச்சி இந்தியாவின் மிகப்பெரிய பலங்களில் ஒன்றாகும்
வந்தே மாதரம் 150-வது ஆண்டு விழா, மத்திய மண்டபத்தில் அரசியலமைப்பு தின கொண்டாட் டம் மற்றும் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் உள்ள கோபுரத்தில் காவிக்கொடி ஏற்றப்பட்டது ஆகியவை இந்த மாதத்தில் நடந்த உத்வேககரமான முன்னேற்றங்களில் அடங்கும்.
இவ்வாறு மோடி பேசியுள்ளார்.
நாடு முழுவதும் தேனீ வளர்ப்பு முயற்சிகள், விளையாட்டுத் துறையில் சாதனைகள், 2030-ல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தை இந்தியா வென்றது. ஜி20 உச்சி மாநாடு குறித்தும் பிரதமர் விரிவாகப் பேசினார்.
- பொதுமக்களிடம் இருந்து தமிழில் வரும் கடிதங்களுக்கு தமிழிலேயே பதில் அளிக்க வேண்டும்.
- அரசுப் பணியாளர்கள் அனைத்து பதிவுகளிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும்.
சென்னை:
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மும்மொழிக்கொள்கை பின்பற்றினால் தான் நிதி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை பின்பற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதனை தொடர்ந்து, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் கடைகளின் பெயர் மற்றும் அறிவிப்புகள் தமிழிலேயே இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், தமிழக அரசு சார்பில் வெளிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
துறைத்தலைமை அலுவலகங்களில் இருந்து அரசு, பிற அலுவலங்களுக்கு அனுப்பப்படும் கருத்துரைகள் தமிழிலேயே இருக்க வேண்டும். பொதுமக்களிடம் இருந்து தமிழில் வரும் கடிதங்களுக்கு தமிழிலேயே பதில் அளிக்க வேண்டும். அரசுப் பணியாளர்கள் அனைத்து பதிவுகளிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ARR இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு தமிழ் மொழிக்கான நினைவுச் சின்னத்தை உருவாக்கும்
- தமிழ் மொழிக்கான நினைவு சின்னம் தற்போது டிஜிட்டல் வடிவில் உள்ளது.
தமிழ் மொழிக்கான ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் இசைப்புயல் இருப்பதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
ARR இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு இந்த நினைவுச் சின்னத்தை உருவாக்கும் எனவும், டிஜிட்டல் வடிவில் உள்ள இது, விரைவில் கட்டடமாக வரக்கூடும் எனவும் அவர் நம்பிக்க தெரிவித்துள்ளார்.
- மத்திய அரசு இந்தி திணிப்பதாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
- தமிழ்நாடு வானிலை மையத்தின் இணையதளத்தில் புதிதாக இந்தி சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வானிலை மையத்தின் இணைய பக்கத்தில் தமிழ் ஆங்கிலத்தோடு இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு வானிலை மையத்தின் இணைய பக்கத்தில் இதுவரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வானிலை அறிக்கைகள் வெளியிடப்பட்டு வந்தன. தற்போது தமிழ், ஆங்கிலத்தோடு சேர்த்து மூன்றாவது மொழியாக இந்தி மொழியில் வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளாவின் வானிலை மைய இணைய பக்கத்தில் தாய்மொழியோடு ஆங்கிலம் மட்டுமே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் இந்தி மொழி சேர்க்கப்பட்டுள்ளது.
மும்மொழி கொள்கை என்ற பெயரில் மத்திய அரசு இந்தி திணிப்பதாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், தமிழ்நாடு வானிலை மையத்தின் இணைய பக்கத்தில் இந்தி சேர்க்கப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
- எங்கப்பா குடிச்ச பீடியின் பெயர் ‘கவர்னர் பீடி’ என்று கலாய்த்தேன்
- வாய்ப்பை ஒதுக்கி ‘சங்கீ’தம் பாடுவதை விட, கிடைத்த வாய்ப்பை செதுக்குவதே மேல்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் உலக காசநோய் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் கலந்துகொண்டார். விழாவில் காசநோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
விழாவில் பேசிய இயக்குனருர் பார்த்திபன், "இந்த நிகழ்ச்சிக்காக உள்ளே நுழைந்தது முதல் தமிழ் மணந்து கொண்டே இருக்கிறது. தமிழ் பாடல்கள் கேட்பது, கலாச்சாரமிக்க விளக்கு ஏற்றுவது என தமிழ் நாட்டில் தமிழ் பண்பாட்டை பாதுகாப்பதற்காக தமிழக ஆளுநருக்கு என் மரியாதையை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
நான் தமிழில் பேசுவது ஆளுநருக்கு புரியுமா என்று கேட்டேன். ஆளுநர் தமிழ் கற்றுக்கொண்டு இருக்கிறார். அவருக்கு புரியும். அதனால் தைரியமாக தமிழில் பேசலாம் என்று திருஞானசம்பந்தம் சார் சொன்னார். அதனால் அவருக்கு தமிழ் புத்தகங்கள் எல்லாம் கொடுத்து இருக்கிறேன்.
ஆளுநரிடம் பேசிய வகையில் அவரை மீண்டும் சந்திக்க வேண்டும் என்கிற அளவுக்கு அவர் மீது காதல் வந்துவிட்டது" என்று தெரிவித்தார்.
ஆளுநரை பார்த்திபன் புகழ்ந்து பேசியது இணையத்தில் விமர்சனத்துக்கு உள்ளானது. விசிக துணை பொது செயலாளர் வன்னி அரசு பார்த்திபனை விமர்சித்து பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், ஆளுநர் சந்திப்பு குறித்து விமர்சனங்களுக்கு நடிகர் பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
அவரது பதிவில், "நேற்றைய ஆளுனர் சந்திப்பை (நான் எதைச் சொல்ல விரும்பினேனோ அதற்கு) சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன். முதலில் தமிழில் சட்டை உடுத்திக் கொண்டேன்.
உ வே சாமிநாதையரின் 'என் சரித்திரம்' புத்தகத்தை நீட்டினேன். பேச்சின் முதல் வரியாக "தமிழின் ஆளுமை சுப்ரமணிய பாரதிக்கு என் முதல் வணக்கம்" என்று துவங்கி "தமிழக ஆளுனருக்கு மரியாதை" எனத் தொடர்ந்தேன். தமிழின் பெருமையும் தமிழக பண்பாடும் காக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவே எல்லா சொற்களையும் பயன்படுத்தினேன். "பையன் ரொம்ப நல்லா படிக்கிறான் போல" என்று சொல்லும் போது ஒருவேளை அப்பையன் சரியாக படிக்காதவனாயிருந்தால் உள்ளுக்குள்ள உறுத்தும்!அப்படித்தான் தமிழ் பண்பாட்டை கவர்னர் நன்றாக பாதுகாக்கிறார் என்ற வாக்கியத்தில் உள்ள உள்குத்தையும் கவனிக்க வேண்டும்! இப்படிபட்ட தொனியில் நான் பேசுவதை கேட்ட நீதியரசர் சந்துரு ஒருமுறை "இது ஒரு வகையான positive politics " என்றார்.
பேச்சின் இடையே எங்கப்பா குடிச்ச பீடியின் பெயர் 'கவர்னர் பீடி' என்று கலாய்த்தேன் , சபை சலசலப்பை உருவாக்கி குலுங்கியது. அவர் புரியாமல் பார்த்தார் sorry to say this எனக் கூறி அதையே ஆங்கிலத்தில் கூற அவருக்கு புரிந்திருக்கும், புகைந்திருக்கும்! தொடர்ந்து எங்ப்பாவை பீடி குடிக்கிறதை நிறுத்துங்கன்னு சொன்னா"கவர்னரே பீடி குடிக்கும் போது நான் குடிச்சா என்னன்னு" கேப்பாரு என்று கேட்பாரற்று பேச காட்டாறாக சிரிப்பொலி. பீடிக்கு கவர்னர் பீடி என பெயர் வைத்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றேன். காச நோயை கூட குணப்படுத்திவிடலாம் இந்த காசுநோய் உயிர் கொல்லி என்றேன். பணக்காரன் ஏழைக்கு உதவுவதை விட, ஏழைக்கு ஏழைதான் அதிகமாக உதவுகிறான். என்பதாக கூறி "கவர்னருக்கு கொஞ்சம் தமிழ் புரியும் மேலும் தமிழை அவர் கற்று வருகிறார் என்று அவர் P A கூறினார் எனவே அவர் தமிழன் பெருமை உணர தமிழின் செழுமையை வாசிக்க புத்தகம் வழங்கினேன். தமிழ்நாட்டில் தமிழ் பண்பாட்டை காப்பதற்கு நன்றி" எனக் கூறி விடை பெற்றேன். இந்(தி)த கோட்டைக்குள் சென்று ஆனந்தமாய்
1-தமிழ்
2-தமிழ்
3-தமிழ்
என செம்மொழியில் கர்ஜித்து விட்டே வந்தேன். வாய்ப்பை ஒதுக்கி 'சங்கீ'தம் பாடுவதை விட, கிடைத்த வாய்ப்பை செதுக்குவதே மேல். இதற்கு மேல் முறையீடு செய்ய வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
பின்குறிப்பு:
பத்ம விருதோ, கட்டு கட்டாக காந்திகளோ- ஏன் ? ஒரு கட்டு கவர்னர் பீடியோ கூட தட்சனையாகப் பெறவில்லை. மாறாக நான் என் பணத்தையும் நேரத்தையும் செலவிட்டு அம்மாளிகையில் தமிழ் கொடியேற்றி விட்டு வந்தேன்!
ஒவ்வொருவருக்கும் சொல்லும் பாணியென்று ஒன்று உண்டு. அதனால் மட்டுமே அவரை வசைமொழியில் சங்கீ'தமாய் பாடக்கூடாது" என்று பதிவிட்டுள்ளார்.
- இந்த நிகழ்ச்சிக்காக உள்ளே நுழைந்தது முதல் தமிழ் மணந்து கொண்டே இருக்கிறது.
- ஆளுநரை மீண்டும் சந்திக்க வேண்டும் என்கிற அளவுக்கு அவர் மீது காதல் வந்துவிட்டது.
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் உலக காசநோய் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் கலந்துகொண்டார். விழாவில் காசநோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
விழாவில் இயக்குனருர் பார்த்திபன் பேசியதாவது:-
இந்த நிகழ்ச்சிக்காக உள்ளே நுழைந்தது முதல் தமிழ் மணந்து கொண்டே இருக்கிறது. தமிழ் பாடல்கள் கேட்பது, கலாச்சாரமிக்க விளக்கு ஏற்றுவது என தமிழ் நாட்டில் தமிழ் பண்பாட்டை பாதுகாப்பதற்காக தமிழக ஆளுநருக்கு என் மரியாதையை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
நான் தமிழில் பேசுவது ஆளுநருக்கு புரியுமா என்று கேட்டேன்.
ஆளுநர் தமிழ் கற்றுக்கொண்டு இருக்கிறார். அவருக்கு புரியும். அதனால் தைரியமாக தமிழில் பேசலாம் என்று திருஞானசம்பந்தம் சார் சொன்னார்.
அதனால் அவருக்கு தமிழ் புத்தகங்கள் எல்லாம் கொடுத்து இருக்கிறேன்.
ஆளுநரிடம் பேசிய வகையில் அவரை மீண்டும் சந்திக்க வேண்டும் என்கிற அளவுக்கு அவர் மீது காதல் வந்துவிட்டது. காதல் அப்படிதான்.
என் முதல் புத்தகம் கிறுக்கல்கள். என்னுடைய அடுத்த புத்தகம் வழிநெடுக காதல் பூக்கும். அடிக்கடி ஒவ்வொரு மொமெண்ட்லும் ஒரு காதல் மலரும்.
அப்படி எனக்கு அவர் மீது காதல் மலர்ந்தது. இது தொடரணும். இன்னும் அவர் செய்யும் நிறைய நல்ல விஷயங்களுக்கு நானும் உடந்தையாக கூட இருக்க வேண்டும் என்று மகிழ்ச்சியாக இந்த தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மத்திய அரசு இந்தியை திணிப்பதாக தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த விளம்பர வீடியோ வைரலாகியுள்ளது.
- தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளை மட்டுமே அரசுப் பள்ளிக்கூடங்களில் கற்பிக்கும் இரு மொழிக் கொள்கை அமலில் உள்ளது.
தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், மும்மொழி கொள்கையின் மூலம் மத்திய அரசு இந்தியை திணிப்பதாக திமுக அரசு குற்றம் சாட்டி வருகிறது. இந்த விவகாரம் தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில் தெற்கு Vs வடக்கு மொழி பிரச்சனையை மையப்படுத்தி கேட்பரி டைரி மில்க் சாக்லேட் நிறுவனம் இந்தியில் வெளியிட்டுள்ள விளம்பர வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
அந்த விளம்பரத்தில், இந்தி பேசும் பெண்கள் மொட்டைமாடியில் அமர்ந்து அரட்டை அடித்து கொண்டிருக்கிறார்கள். அப்போது அவர்களது பக்கத்து வீட்டில் குடியேறியுள்ள சென்னையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் அவர்களுடன் இணைகிறார். அப்போது அந்த பெண்கள் இந்தியில் பேசுவதை புரிந்துகொள்ள முடியாமல் தமிழ் பெண் திணறுகிறார். இதனை உணர்ந்த ஒரு இந்தி பேசும் பெண் தனது தெரிந்த ஆங்கிலத்தில் பேசி உரையாடுகிறாள்.
மத்திய அரசு இந்தியை திணிப்பதாக தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த விளம்பரம் வெளியாகி வைரலாகியுள்ளது.
தமிழ்நாட்டில் 1960களில் இந்தி திணிப்புக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்கள் நடைபெற்றது. 1967 இல் முதல்வராக பொறுப்பேற்ற அண்ணாதுரை, 1968 ஆம் ஆண்டில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளை மட்டுமே அரசுப் பள்ளிக்கூடங்களில் கற்பிக்கும் இரு மொழிக் கொள்கையை அமல்படுத்தினார்.
- தமிழ் வளர்ச்சி பாதுகாப்பு கருத்தரங்கம் நடந்தது.
- இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது
அரியலூர்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழ் மொழியை பாதுகாக்க வலியுறுத்தியும் தமிழ் வளர்ச்சி பாதுகாப்பு கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் வாலண்டினா, மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட செயற்குழு மணிவேல், மாதர் சங்க மாவட்ட தலைவர் பத்மாவதி, திருவள்ளுவர் ஞான மன்றம் பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். கருத்தரங்கில் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பாராம்பரியம் மற்றும் தொன்மையினை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு “மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சி சேலம், மாசிநாயக்கன்பட்டி, நோட்டரி டேம் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.
- சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்டு சொற்பொழிவுகள் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
சேலம்:
தமிழகத்தின் பாராம்பரியம் மற்றும் தொன்மையினை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு "மாபெரும் தமிழ்க் கனவு" நிகழ்ச்சி சேலம், மாசிநாயக்கன்பட்டி, நோட்டரி டேம் மேல்நிலைப்பள்ளியில் நாளை(வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது.
தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், சமூக சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டிற்கான வாய்ப்புகளையும், இளம்தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் ஒரு முயற்சியாக இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
உலகின் பல்வேறு பகுதிகளில் செழித்தோங்கிய பண்பாடுகளில் தமிழர் பண்பாடு மிகவும் தொன்மையானது. நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு, குறிப்பாகக் கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவதென்பது ஆரோக்கியமான எதிர்காலச் சமூகக் கட்டமைப்பின் ஒருமுக்கியமான பகுதியாகும்.
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்டு சொற்பொழிவுகள் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், சொற்பொழிவுகளில் பங்கேற்கும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி, தமிழர் பெருமிதம் குறித்த குறிப்பேடுகள் அச்சடித்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, சேலம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாபெரும் தமிழ்க் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியில் அனைத்து கல்லூரி மாணவ, மாணவியர்களும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் கார்மேகம் கேடுக்கொண்டுள்ளார்.






