search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "K Veeramani"

  • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நடத்த விடாமல் முடக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது.
  • தங்களை பாதுகாத்துக் கொள்ளவே தமிழக சட்டசபையில் இருந்து அ.தி.மு.கவினர் வெளிநடப்பு செய்தனர்.

  புதுச்சேரி:

  புதுவை பகுத்தறிவாளர் கழகம் சார்பில் மாநில, மாவட்ட பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் கூட்டம் புதுவை தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

  இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திராவிட கழக தலைவர் கீ.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

  மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சேர்ந்தவர்களை கவர்னர்களாக நியமித்து எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு அனுப்பி போட்டி அரசாங்கம் நடத்தி வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நடத்த விடாமல் முடக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றினால் ஆளுகின்ற அரசுக்கு நற்பெயர் ஏற்படும் என்ற காரணத்தினால் கவர்னர்களை வைத்து போட்டி அரசாங்கம் நடத்துகின்றனர். இது சட்டவிரோதம்.

  அ.தி.மு.கவின் குடுமி கவர்னர் கையில் உள்ளது. ஊழல் பட்டியல் அவரிடம் உள்ளது. தங்களை பாதுகாத்துக் கொள்ளவே தமிழக சட்டசபையில் இருந்து அ.தி.மு.கவினர் வெளிநடப்பு செய்தனர்.

  புதுவையில் பழங்குடியின மக்களை தரையில் அமர வைக்கப்பட்டதற்கு அதிகாரிகள் தான் பொறுப்பு என்பது பூசணிக்காயை அல்ல பெரிய மலையை சோத்துக்குள் மறைப்பதாகும்.

  புதுவை மக்கள் பா.ஜனதாவை சரியாக புரிந்து கொள்ளவில்லை. தற்போது தான் புரிந்து கொள்ள தொடங்கி இருக்கிறார்கள். ஒரு வேலை பழங்குடியின மக்களை புதுவையில் தரையில் அமர வைத்த சம்பவம் புதுவை மாடலாக இருக்குமோ.?

  இவ்வாறு அவர் கூறினார்.

  • ‘இந்தியா’ கூட்டணி மீது தாங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு எனது நன்றியினை தெரிவிக்க விரும்புகிறேன்.
  • தங்களது வருங்கால செயல்பாடுகள் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

  சென்னை:

  அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி சென்னை வேப்பேரி பெரியார் திடலுக்கு வர வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கடிதம் எழுதி இருந்தார்.

  அதற்கு பதில் அளித்து கி.வீரமணிக்கு சோனியா கடிதம் எழுதியுள்ளார் அதன் விவரம் வருமாறு:-

  சென்னை பெரியார் திடலுக்கு என்னை அழைத்ததற்காக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். 'இந்தியா' கூட்டணி மீது தாங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு எனது நன்றியினை தெரிவிக்க விரும்புகிறேன். இந்த கூட்டணி அரசியல் கூட்டணி என்பதை விட மேம்பட்டது.

  சமூக நீதி தேவையின் அடிப்படையில் கட்டமைக்கப்படும். அனைவரையும் உள்ளடக்கிய முற்போக்கான செயல்திட்டத்தின் மூலம்தான், மக்களை பிரித்தாளும் பா.ஜனதா கட்சியின் கருத்தியலை தோற்கடிக்க முடியும்.

  ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் கண்ணியமாக, சுய மரியாதையுடன், வாழ்க்கை நடத்திட தந்தை பெரியாரின் தொலைநோக்கு தான் பாதை அமைத்து தந்தது. நாடு தழுவிய சமூகநீதி இயக்கங்களின் கருத்தியல் சார்ந்த பிணைப்பற்று, பிற்போக்கு சக்திகளை எதிர்த்து தந்தை பெரியார் தனது வாழ்நாள் முழுவது போராடியது தான் அடித்தளமாக அமைந்துள்ளது.

  பெரியாரின் தொலை நோக்கும், அவரது கொள்கை சார்ந்த உறுதியான நிலைப்பாடும் இன்றைக்கும் தொடர்ந்து நம்மை ஊக்கப்படுத்தி வழி நடத்தட்டும். தங்களது வருங்கால செயல்பாடுகள் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

  இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

  • அகவை 90-ல் ஆசிரியரின் 80 ஆண்டு பொதுத்தொண்டு' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
  • நான் இவ்வளவு பெரிய ஆளாக வளர்ந்ததற்கு பெரியார் என்ற மாபெரும் தத்துவம்தான் காரணம்.

  சென்னை :

  திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வயதில் 90 ஆண்டையும், பொதுவாழ்க்கையில் 80 ஆண்டையும் கடந்துள்ளார். இதையொட்டி திராவிடர் கழகம் சார்பில் சென்னை தியாகராயநகரில் '90-ல் 80- அவர்தான் வீரமணி' என்ற தலைப்பில் பாராட்டு விழா நேற்று மாலை நடந்தது.

  விழாவிற்கு திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் தலைமை தாங்கினார். இதில் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பிரசார குழு செயலாளர் அருள் மொழி உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

  தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

  விழாவில் கி.வீரமணி பேசியதாவது:-

  இந்த விழா என் வாழ்நாளில் மிகப்பெரிய ஊக்கம் அளிக்கும் நிகழ்ச்சி. இன்னும் அதிகமாக உழை என்பதை நீங்கள் எனக்கு சொல்வதாக எடுத்து கொள்கிறேன். இந்தியாவிலேயே ஒப்பற்ற முதல்-அமைச்சராக திகழும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எனக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். இதனால் என்னை மீறி உணர்ச்சி வசப்பட்டேன்.

  இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய தலைவராக அவர் வளர்ந்திருக்கிறார். திராவிட கொள்கையை தமிழகம் மட்டும்தான் ஏற்றுக்கொண்டது என்பதல்ல. பா.ஜ.க.வின் மக்கள் விரோத காவி கொள்கைக்கு மக்கள் மத்தியில் வெறுப்பு அதிகரித்திருக்கிறது.

  இன்றைக்கு தமிழகம் கண்ட மாற்றம், வட மாநிலங்களிலும் நிகழும் என்பது நிரூபணமாகி இருக்கிறது. கருணாநிதி இறந்தவுடன் வெற்றிடம் ஏற்பட்டதாக சில வெற்றுவேட்டுகள் சொன்னார்கள். ஆனால் வந்தது வெற்றிடம் அல்ல, புதிய இந்தியாவுக்கான கட்டிடம். ஒரு பெரிய திருப்பம் நிகழ்ந்து வருகிறது. நிச்சயம் அது நல்ல திருப்பமாக இருக்கத்தான் போகிறது.

  நான் எந்த பிறந்தநாளிலும் விழாக்களில் பங்கேற்பது இல்லை. ஆனாலும் இந்த விழாவுக்கு நான் ஒப்புக்கொண்டதற்கு காரணம், ஒரு ரகசியத்தை வெளியிட வேண்டும் என்பதுதான். இந்த 90 என்பதே, எனக்கு அந்த 80 மூலமாக கிடைத்ததுதான். அந்த 80 இல்லையென்றால் 90 கிடையாது. இது களத்தில் உள்ள போராளிகள் வரலாறு. எனவேதான் இந்த விழாவுக்கு ஒப்புக்கொண்டேன். இந்த விழாவில் 90 ஆக வந்தாலும், 20 ஆகவே திரும்புவேன்.

  அண்ணா பங்கேற்ற கூட்டத்தில் எனது முதல் பேச்சை மனப்பாடம் செய்து படித்தேன். பின்னர் வெளியூர்களுக்கு பேச சென்றேன். அரை டிக்கெட் ஆசாமியாக வளர்ந்தேன். நான் இவ்வளவு பெரிய ஆளாக வளர்ந்ததற்கு பெரியார் என்ற மாபெரும் தத்துவம்தான் காரணம். அந்த தத்துவமே என்னை ஆளாக்கியது.

  பெரியார் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்காக நாம் இன்னும் உழைக்க வேண்டும். என் வாழ்நாளில் பதவியோ, பொறுப்போ முக்கியமாக நினைத்தது அல்ல. தோழர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பும், பாசமும்தான் முக்கியம். அதுவே எல்லாவற்றிலும் மகத்தானது.

  இவ்வாறு அவர் பேசினார்.

  முன்னதாக விழாவில், 'அகவை 90-ல் ஆசிரியரின் 80 ஆண்டு பொதுத்தொண்டு' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்தி பேசினார்கள்.

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • என்.எல்.சி விவகாரம் குறித்து தமிழக அரசு ஒரு தெளிவான முடிவை எடுக்கவேண்டும்.
  • ஒரு அரசியல் கிளர்ச்சியாக மாற்றாமல் அவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும்.

  தஞ்சாவூர்:

  தஞ்சையில் இன்று திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு அளித்த போட்டியில் கூறி இருப்பதாவது:

  தமிழக கவர்னர் தன்னை எதிர்க்கட்சித் தலைவராகவே கருதுகிறார். மீண்டும் தற்போது கூட்டப்படும் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான தடையை அமல்படுத்தி ஆளுநருக்கு அனுப்பினால் சட்டம் 200-வது பிரிவின் கீழ் அதற்கு அவர் ஒப்புதல் அளித்தே தீர வேண்டும் .

  என்.எல்.சி விவகாரம் குறித்து தமிழக அரசு ஒரு தெளிவான முடிவை எடுக்கவேண்டும். ஏற்கனவே நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு இடம் அளித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவில்லை. அதை ஒரு அரசியல் கிளர்ச்சியாக மாற்றாமல் அவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும். நிச்சயம் தமிழக அரசு செய்யும் என்று நம்புகிறேன்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • பயணம் ஈரோட்டில் 3-ந்தேதி தொடங்கி 10-ந்தேதி கடலூரில் நிறைவடைகிறது.
  • அண்ணாவின் நினைவு நாளில் கி.வீரமணி திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணத்தை தொடங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  சென்னை:

  திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

  இந்த பயணம் ஈரோட்டில் நாளை (3-ந்தேதி) தொடங்கி 10-ந்தேதி கடலூரில் நிறைவடைகிறது.

  இந்த பரப்புரை பயணத்தில் தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் பொறுப்பாளர்கள் பங்கேற்கிறார்கள்.

  குமாரபாளையத்தில் நாளை மாலை 5 மணிக்கு தொடங்கப்படுகின்ற பரப்புரை பயணத்தின் தொடக்க விழா பொதுக் கூட்டம் ஈரோட்டில் மாலை 7 மணிக்கு நடக்கிறது. அனைத்து ஊர்களிலும் மாலை 5 மணி மற்றும் 7 மணிக்கு கூட்டங்கள் நடக்கின்றன. குன்னூரில் மட்டும் பிற்பகல் 3 மணிக்கு பரப்புரை கூட்டம் நடக்கிறது.

  கட்சி, ஜாதி, மத வேறுபாடுகளை கடந்து நடைபெறும் இந்த பரப்புரை பயணத்திற்கு முழு ஒத்துழைப்பு தரும்படி திராவிடர் கழகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

  அண்ணாவின் நினைவு நாளில் கி.வீரமணி திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணத்தை தொடங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • திண்டுக்கல் மெயின்ரோட்டில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாவட்ட தலைவர் வீரபாண்டி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
  • சேதுசமுத்திர திட்டம் செயல்பாட்டுக்கு வந்திருந்தால் தென்மாவட்டத்தில் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும்.

  திண்டுக்கல்:

  தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இன்று திண்டுக்கல் வந்தார். பின்னர் திண்டுக்கல் மெயின்ரோட்டில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாவட்ட தலைவர் வீரபாண்டி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

  அதன்பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது,

  தந்தைபெரியார் ஒரு பேராயுதம். மதவெறி, சாதிவெறி, பதவிவெறி போன்றவற்றையெல்லாம் தீர்க்ககூடிய பேராயுதமாக இளைஞர்களின் கையில் இருந்து வருகிறார். அதன் விளைவாக உடலால் வாழ்ந்த காலத்தைவிட உணர்வால் நிறைந்த காலமாக இந்த காலம் உள்ளது. எதிரிகள் கூட பெரியாரை கண்டு இன்னும் பயப்படுகிறார்கள். பெரியாரின் சிலையை கண்டு அஞ்சக்கூடிய நிலையில் உள்ளனர். தென்மாவட்ட மக்கள் பயன்பெறக்கூடிய மாபெரும் திட்டம் சேதுசமுத்திர கால்வாய்திட்டம்.

  இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்திருந்தால் தென்மாவட்டத்தில் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும். தென்தமிழகம் மிகப்பெரிய அளவிற்கு பயன்பெற்றிருக்கும். மதுரையில் இத்திட்டத்திற்கான தொடக்க விழா பிரமாண்டமாக நடைபெற்றது. ரூ.2000 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டது.

  வேண்டுமென்றே ஒருசிலர் ராமர்பாலம் இருப்பதாக கூறி இத்திட்டத்தை நிறுத்தினர். இதனால் வேறுவழியில் சேதுசமுத்திர திட்டம் செயல்படுத்தப்படும் என பா.ஜ.க மத்தியமந்திரிநிதின் கட்கரி தெரிவித்தார். ஆனால் இதுவரை இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இத்துறைக்கான அமைச்சர் பேசுகையில், ராமர்பாலம் இருந்ததற்கான ஆதாரம் எதுவும் கிடையாது என கூறியுள்ளார். இதன் மூலம் பொய்யான காரணத்தை கூறி இத்திட்டத்தை பா.ஜ.க அரசு முடக்கியுள்ளது.

  தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக, இங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக செய்யப்பட்ட சூழ்ச்சி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு பிறகாவது சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர மத்தியஅரசு முன்வரவேண்டும். இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுசேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • 36 மத்திய மந்திரிகள் தமிழகத்திற்கு தொடர்ந்து வந்து தாமரையை மலர வைக்கப் போகிறார்களாம்.
  • இந்த மண்ணை காவி மண்ணாக ஆக்கவோ, பா.ஜ.க. ஆட்சியை அமைக்கவோ முடியாது.

  சென்னை :

  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  தமிழகத்திற்கு 36 மத்திய மந்திரிகள் படை எடுக்கிறார்களாம். மத்திய மந்திரி ஒருவர், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டன என்பதுபோல பட்ஜெட்டில் சொன்னார். உடனே மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், மற்ற எதிர்க்கட்சியினரும் ஆதாரம் கேட்டதற்கு பதிலே இல்லை.

  இதுவரை 16 மத்திய மந்திரிகள் வந்து ஆய்வு செய்து, தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சியை ஏற்படுத்த முனைப்புடன் பிரசாரம் செய்துவிட்டார்களாம். அடுத்து மேலும் 36 மத்திய மந்திரிகள் தமிழகத்திற்கு தொடர்ந்து வந்து தாமரையை மலர வைக்கப் போகிறார்களாம். இது திராவிடக் கடல், சமூகநீதிக் கடல் இங்கு, ஒட்டுமொத்த மத்திய மந்திரிகளும் தமிழகத்திற்கு வந்து குடியேறினால்கூட, இந்த மண்ணை காவி மண்ணாக ஆக்கவோ, பா.ஜ.க. ஆட்சியை அமைக்கவோ முடியாது.

  முதலில் தனித்து நின்று தமிழகத்தில் 5 இடங்களில் வென்று காட்டுங்கள் என்று சுப்பிரமணிய சாமி கேட்ட கேள்விக்கு பதில் கூறுங்கள். சில மாநிலங்களில் ஆளும் கட்சியில் 'குதிரை பேரம்' நடத்துவது போன்று, தமிழகத்தில் பா.ஜ.க.வால் குதிரை பேரம் நடத்த முடியாது. அதில் வெற்றி பெறவும் முடியாது என்பதைப் புரிந்து, ஜனநாயக முறையில் கட்சிப் பணியை நடத்துங்கள்.

  இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

  • ஜனநாயக நாட்டில் அமைதி வழியில் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யும் உரிமை கூடக் கிடையாது என்பது எவ்வகையில் நியாயம்.
  • ப.சிதம்பரத்திற்கு கால் முறிவு ஏற்படுத்தும் அளவுக்கு, காவல்துறை நடந்துகொண்டது வன்மம் நிறைந்த அடாத செயல்.

  சென்னை:

  திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் பா.ஜ.க. ஆட்சியின் 'திரிசூலங்களில்' ஒன்றான அமலாக்கத்துறை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை விசாரணைக்கு அழைத்து நேற்று 11 மணிநேரம் விசாரணை நடத்தியது. இன்றும் நடத்துவதை எதிர்த்து, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி ஜனநாயக வழியில் அவர்களது எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனர்.

  டெல்லித் தலைநகரில் நடந்த அறப்போராட்டத்தில், தேவையற்ற தள்ளுமுள்ளு நெருக்கடியில் முன்னணி தலைவர்களில் ஒருவரான முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் நண்பர் ப.சிதம்பரத்திற்கு கால் முறிவு ஏற்படுத்தும் அளவுக்கு, காவல்துறை நடந்துகொண்டது வன்மம் நிறைந்த அடாத செயல் ஆகும்.

  இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஜனநாயக நாட்டில் அமைதி வழியில் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யும் உரிமை கூடக் கிடையாது என்பது எவ்வகையில் நியாயம் என்பதை ஒன்றிய உள்துறையின் அங்கமாக உள்ள டெல்லி காவல்துறையினரிடம் கேட்டு, நமது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் விரைவில் குணமடைய விழைகிறோம்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசால் மாநில உரிமைகள் அனைத்தும் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகிறது.
  • தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தாங்கள்தான் எதிர்க்கட்சி என பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.

  பெரியகுளம்:

  தேனிமாவட்டம் பெரியகுளத்தில் திராவிட கழக தலைவர் கீ.வீரமணி தலைமையில் மாநில உரிமைகள் மீட்பு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

  கூட்டத்தில் கி. வீரமணி பேசியதாவது, மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசால் மாநில உரிமைகள் அனைத்தும் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகிறது. எனவே இதனை மீட்டு எடுப்பதே திராவிட மாடல் ஆட்சி ஆகும்.

  மாநிலம் என்றால் மக்கள், மக்கள் உரிமை, மனித உரிமை என்பதே, தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தாங்கள்தான் எதிர்க்கட்சி என பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். அவர்கள் எப்போதும் தமிழகத்தில் ஒரு கட்சியாக தான் இருக்க முடியும்.

  எதிர்க்கட்சியாகவோ, ஆளுங்கட்சியாகவோ வர முடியாது. சொந்தக்காலில் நிற்கும் கட்சிகள் தான் தமிழகத்தில் எதிர்க்கட்சியாகவும், ஆளும் கட்சியாகவும் இருக்க முடியும். மிஸ்டு காலில் கட்சி நடத்துபவர்கள் எப்பொழுதும் எதிர்க்கட்சியாக வர முடியாது . சமத்துவ சிந்தனை, மூடநம்பிக்கைகள் ஒழிப்பு, அனைவருக்கும் கல்வி உள்ளிட்ட பெரியாரின் சிந்தனையால் தமிழகம் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக உள்ளது.

  100 ஆண்டுகள் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி. இவ்வாறு அவர் பேசினார்.

  கூட்டத்தில் தி.மு,க வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன், நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர் அன்புக்கரசன் மற்றும் திராவிட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

  திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, அவரது மனைவி ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சென்னை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  சென்னை :

  திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி (வயது 88), கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதில் இருந்து வெளியூர் பயணங்களை தவிர்த்து வந்தார். முக்கிய நிகழ்ச்சிகளுக்கு மட்டும் காரில் சென்று வந்தார்.

  கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் ரெயில் மூலம் கோவை சென்றார். பின்னர், குன்னூரில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதன்பின்பு, ரெயில் மூலம் மீண்டும் சென்னை திரும்பினார்.

  இந்தநிலையில் அவருக்கும், அவரது மனைவி மோகனாவுக்கும் திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர்கள் கொரோனா பரிசோதனை செய்தனர். அப்போது, அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

  இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

  இருவரும் சிகிச்சைக்கு பின்பு நலமுடன் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். சில நாட்களில் அவர்கள் வீடு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.