என் மலர்
நீங்கள் தேடியது "கி.வீரமணி"
- திருப்பரங்குன்றத்தில் புதிதாக வேறு இடத்தில் தீபம் ஏற்ற முனைவோரின் நோக்கமென்ன?
- திருப்பரங்குன்ற விவகாரத்தில் உச்சநீதிமன்றத்திற்குச் செல்வது அவசரத் தேவையாகும்!
திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடத்திலேயே தீபம் ஏற்றிய பிறகு, புதிதாக வேறொரு இடத்தில் தீபம் ஏற்ற முயற்சிப்பவர்களின் நோக்கம் என்ன? இதில் ஆர்.எஸ்.எஸ். மூக்கை நுழைப்பது ஏன்? இதற்கு நீதிபதிகள் துணைப் போகலாமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின்மீது தரந்தாழ்ந்து போகலாமா என்பது போன்ற வாசகங்களைப் பயன்படுத்தலாமா? மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்வது அவசரத் தேவையாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில், "திருப்பரங்குன்றத்தில் 'தீபத்தூண்' என்ற பெயரை அண்மையில் உருவாக்கிக் கொண்ட, ஹிந்துத்துவ – காவிக் கட்சியினர் திருப்பரங்குன்றம் மலைமீது வழமையான இடத்தில் முறைப்படி விளக்கு ஏற்றிய நிகழ்வு நடத்தப்பட்டது – அக்கோயில் நடைமுறைப்படி.
இதை ஏற்காமல், தாங்கள் குறிப்பிடும் தர்காவிற்கு அருகில் தீபம் ஏற்றுவது என்று கடந்த பல ஆண்டுகளாக மதக் கலவரத்தை ஏற்படுத்த – ஹிந்து முன்னணியினரும் அவர்களது ''சுற்றுக்கிரகங்களும்'' தமிழ்நாட்டில் மதக் கலவரங்களைத் தொடங்க திட்டமிடுகின்றனர்.
இவர்கள் உண்மையான முருக பக்தர்களோ, கடவுள் பக்தர்களோ அல்ல; தங்களது ஹிந்துத்துவ வெறியைப் பரப்புவதன் மூலம் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வை எப்படியாவது தமிழ்நாட்டில் வளர்த்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடனும், தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சி, கொள்கை உறுதியும், மக்களின் பேராதரவும் பெற்ற ஓர் ஆட்சியாக, அசைக்க முடியாத பாறைபோல் இருப்பதால், வாக்காளர்களிடம் மத உணர்வைத் தூண்டி, 'பக்தி' முகமூடியுடன் அந்தத் திருப்ப ரங்குன்றத்தை வைத்து ''அரசியல்'' செய்ய கிளம்பியுள்ளது.
எதிர்மனுதாரர்களுக்குப் போதிய அவகாசம் தராத நீதிபதிகள்!
சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள ஜஸ்டிஸ் ஜி.ஆர்.சுவாமிநாதன் என்ற, தன்னை ஆர்.எஸ்.எஸ்.காரர் என்று பகிரங்கப்படுத்திய ஒருவர், இந்த தீப நிகழ்ச்சியில், அரசியலமைப்புச் சட்ட விதிகளைப் புறக்கணித்து, அவசர அவசரமாக – மற்றவர்களுக்குப் போதிய அவகாசம்கூடத் தராமல், குறிப்பிட்ட இடத்தில் மனுதாரருடன், சிலர் சென்று தீபம் ஏற்றுவதற்கு, மத்திய காவல்துறை துணை யுடன் அதை நிறைவேற்றவேண்டும் என்று கொடுத்த அரசியலமைப்புச் சட்ட விரோத அவசரத் தீர்ப்பின்மீது தமிழ்நாடு அரசும், அறநிலையத் துறையும் மேல்முறையீடு (அப்பீல்) செய்து, அவ்வழக்கு இரு நீதிபதிகள் கொண்ட அமர்வின்முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
(அந்த இரு நீதிபதிகள் அமர்வு டாக்டர் ஜஸ்டிஸ் ஜி.ஜெயச்சந்திரன், ஜஸ்டிஸ் கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் ஆவர்).
அந்த மேல்முறையீட்டில், தமிழ்நாடு அரசு, அறநிலையத் துறை, தர்கா தரப்பு, வக்ஃப் போர்டு, தொல்பொருள் துறை, மதுரை மாநகர காவல்துறை ஆணையர் தரப்பு, மதுரை மாவட்ட ஆட்சியர் (இவர்களை நீதிமன்றமே இணைத்திருக்கிறது) ஆகியோர் தரப்பில் எடுத்து வைத்த ஆழமான வாதங்களை அப்படியே புறந்தள்ளி, மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்ததோடு அல்ல,
தனி நீதிபதியின் ஆணையில் கண்ட பல அம்சங்கள்பற்றி மேலே குறிப்பிட்ட பல அமைப்புகளின் வாதங்களுக்கு உரிய முறையில் தாங்கள் ஏற்கவில்லை என்பதற்கான விரிவான விளக்கம் ஏதும் தராமல், மேல் முறையீட்டை ஏற்காமல், தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
தேவையற்ற கருத்துகளை அரசுமீதும், துறைகள்மீதும் நீதிபதிகள் சுமத்தலாமா?
மேல்முறையீட்டில், நீதிபதிகள் கருத்துப்படி, தீர்ப்பு வழங்க முழு உரிமை உடையவர்கள் என்பது மறுக்க முடியாதது என்றாலும், இந்த மேல்முறையீட்டுத் தீர்ப்பில்,
1. அப்பீல்தாரர்களின் வாதங்களுக்கு விளக்கம் தராதது மட்டுமல்ல; அதில் தரப்பட்ட தீர்ப்பு தமிழ்நாடு அரசுமீது, காவல்துறை முதலிய பல துறைகளின் – பொறுப்புணர்வு பற்றிய தேவையற்ற கருத்துகளை எடுத்து எழுதியிருக்கிறார்கள். தனி நீதிபதி தீர்ப்பைவிட, மிகவும் மோசமான – அரசியலமைப்புச் சட்ட மதச் சுதந்திர கூறுகள் 25, 26–க்கேகூட முற்றிலும் எதிரானதாகவே உள்ளது என்பதை அவர்களது வாசகங்களில் இருந்து, நடுநிலையாளர் எவரும் புரிந்துகொள்ள முடியும்.
எடுத்துக்காட்டாக,
It is "ridiculous and hard to believe" the fear of the mighty State that by allowing representatives of the Devasthanam to light the lamp at the stone pillar near top of the hill located within its territory of devasthanam land, on a particular day in a year, will cause disturbance to public peace. Of course, it may happen only if such disturbance is sponsored by the State itself. "We pray no State should stoop to that level to achieve their political agenda,"
இதன் தமிழாக்கம்:
தேவஸ்தானத்திற்குச் சொந்தமான நிலப்பரப்பிற்குள் அமைந்துள்ள மலையின் உச்சியில் உள்ள கல் தூணில், ஆண்டின் ஒரு குறிப்பிட்ட நாளில், தேவஸ்தானத்தின் பிரதி நிதிகளை விளக்கேற்ற அனு மதிப்பதால் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படும் என்று சக்திவாய்ந்த அரசு அஞ்சுவது, 'கேலிக்குரியதும் நம்ப முடியாததும்' ஆகும். நிச்சயமாக, அத்தகைய குழப்பம் அரசாலேயே தூண்டிவிடப்பட்டால் மட்டுமே அது நிகழக்கூடும். ''தங்கள் அரசியல் நோக்கங்களை அடைவதற்காக எந்த அரசும் அந்த அளவிற்குத் தாழ்ந்துவிடக் கூடாது என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம்.''
கலவரத்தைத் தூண்டுவது அரசு என்று நீதிபதிகள் கூறலாமா?
பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படும் என்ற நிலைபற்றி பொறுப்புள்ள ஓர் அரசு, அதன் அமைப்புகள் கவலைப்படுவதை கேலி செய்வதோடு, மிகவும் கீழிறக்கமான ஒரு கருத்தாக – அரசாங்கம்தான் அத்தகைய கலவரத்தையே தூண்டிவிடக் கூடும் என்று குற்றம் சுமத்தி எழுதலாமா? அதோடு அரசுக்கு ஏதோ ஓர் அரசியல் திட்டம் (Political Agenda) இருக்கிறது என்று எதை வைத்துக் கூறுகின்றனர்? இதுதான் மேல்முறையீடு தீர்ப்பின் லட்சணமா? இது முறையானதா? பொறுப்பான குற்றச்சாற்றா?
அதுமட்டுமா?
மற்றொரு பாராவில்,
"We find that the apprehension expressed by the District Administration regarding probability of disturbance to the public peace is nothing but an imaginary ghost created by them for their convenience sake and to put one community against other community under suspicion and constant mistrust," the bench said.
இதன் தமிழாக்கம்:
''பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படக்கூடும் என்பது குறித்து மாவட்ட நிர்வாகத்தால் வெளிப்ப டுத்தப்பட்ட அச்சம், அவர்களின் வசதிக்காக அவர்களால் உரு வாக்கப்பட்ட ஒரு கற்பனையான 'பூதமே' தவிர வேறில்லை என்றும், ஒரு சமூகத்தை மற்றொரு சமூகத்திற்கு எதிராகச் சந்தேகத்திலும், தொடர்ச்சியான அவநம்பிக்கையின் கீழும் நிறுத்துவதே இதன் நோக்கம் என்றும்'' நீதிபதிகள் அமர்வு கூறியது.
அரசியலமைப்புச் சட்டத்தின்மீது எடுத்த உறுதிமொழியை அடித்து நொறுக்கலாமா நீதிபதிகள்?
''தனி நீதிபதியின் ஏற்க முடியாத தீர்ப்பினை, அகலப்படுத்துவதுபோல, ''தீபத்தூண் கோயில் நிர்வாகத்துக்குச் சொந்தமானது. கார்த்திகைத் தீபத்தை மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் கோயில் நிர்வாகம் ஏற்றவேண்டும். அதனை மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையிடவேண்டும்.
தீபம் ஏற்றும் நிகழ்வின்போது கோயில் நிர்வாகத்துடன் செல்ல, மக்களுக்கு அனுமதி இல்லை.''
இப்படிக் கூறுவது நீதிபதிகள் எடுத்த பதவிப் பிரமாணப்படி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றும் உறுதிமொழிக்கு நேர் முரண் அல்லவா! பீடிகை (Preamble) அடிக்கட்டுமானம் கூறிய Secular என்பதை இது அடித்து நொறுக்குவதாகாதா?
கூறு (Article) 25, 26, Subject to Public Order, Morality, Health என்ற பிரிவுகளைத் தூக்கி தூர எறிந்திருப்பது, தமது கடமை உணர்வு தவறியதாகாதா?
முந்தைய பக்கங்களில் பக்தர்கள் வழிபாட்டு உரிமைபற்றி விளக்கம் கூறுவதை ஏற்ற இந்த அமர்வு, அதற்கு நேர்முரணாக சிலர் மட்டுமே தீபம் ஏற்ற மேலே செல்லவேண்டும் – மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் துணையோடு என்றால், மற்ற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றால், கொதிப்பு, கொந்தளிப்பு, கலவரம் ஏற்படாதா?
இது சட்டம் – ஒழுங்குப் பிரச்சினையை உருவாக்காதா? அந்த அமர்வு நீதிபதிகள்தான் இந்த முரண்பாட்டுக்குப் பதில் அளிக்க வேண்டும்!
அதுமட்டுமல்ல!
திருமூலர் பாட்டு ஆகமம் ஆகுமா?
ஆகமப்படி, உச்சிப்பிள்ளையார் கோயிலில் முறைப்படி 'தீபம்' ஏற்றியாகிவிட்டது. மறு முறை செய்ய ஆகமத்தைச் சுட்டிக் காட்டிய அறநிலையத் துறை வாதத்தினை மறுத்து, திருமூலரைத் தேடி, தீர்ப்புச் சொல்கிறார்கள்.
''திருமூலர் பாட்டு ஆகமமாகுமா?'' அர்ச்சகக் கூட்டத்தினர்கூட ஏற்க மாட்டார்களே!
திருமூலர், சித்தர்பாட்டு – அதுமட்டுமல்ல,
''நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ''
என்று சித்தர் சிவவாக்கியர் எழுதியுள்ளதை ஏற்பார்களா என்று கேள்வி கேட்டால், கனம் நீதிபதிகளின் நிலை என்ன?
கலவரம் செய்ய காத்திருக்கும் ''தெரு மூலர்கள்'' தீபம் ஏற்ற தூபம் போடுவோர் யோசிக்காதது ஏன்?
கிராமத்தில் நம் மக்கள் ஒரு பழமொழி கூறுவார்கள்.
''அசல் அநியாயம்; அப்பீலில் அதுவே காயம்'' (காயம் என்றால், நிரந்தரம் என்று பொருள்).
மதக்கலவரம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அரசின் கடமையாகும்!
அரசியலமைப்புச் சட்டத்தைப் புறக்கணித்து, இப்படி தீர்ப்பு எழுதுவது, அறத்தை மீறியது மட்டுமல்ல; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழ்நாட்டை மதக் கலவர பூமியாக்காமல் காக்கும் மாநில அரசுமீது வெறுப்பை, வன்மத்தை உமிழ்வது எந்த வகையிலும் நீதியாகாது, நியாயமாகாது!
மக்களின் பொதுப் பாதுகாப்புக்குக் குந்தகம் ஏற்படுத்துவது மிக கீழிறக்கமான கண்ட னத்திற்குரிய தீர்ப்பு இது!
உச்சநீதிமன்றத்திற்குச் சென்றால், இது மாறிவிடக் கூடும் என்பது வேறு விஷயம்!
ஆனால், எல்லாவற்றிற்கும் மேலானது மக்கள் மன்றம் என்பதை மறந்துவிடக் கூடாது!
Political Agenda எங்கே, யாரிடம் உள்ளது?
'Political Agenda' என்றெல்லாம் (தி.மு.க.) மாநில அரசு மீது அவசர குற்றப்பத்திரிகை எழுதும் நீதிபதிகளே,
''திருப்பரங்குன்றத்தை அயோத்தி ஆக்குவோம்'' என்று, திருப்பரங்குன்ற தீபத்தை சாக்காக வைத்து, அமைதிப்பூங்காவான தமிழ்நாட்டை அமளிக்காடாக ஆக்கக் குர லெழுப்பும் கலவரக் கும்பலுக்கு, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், தமிழ்நாடு ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளதோடு, திருச்சியில் பேசியபோது,
''திருப்பரங்குன்றம் பிரச்சினையில் ஹிந்து அமைப்புகள், ஆர்.எஸ்.எஸ். உதவியை நாடினால், பரிசீலிப்போம்'' என்று கூறியுள்ளது ஏடுகளில், ஊடகங்களில் வந்தன என்பதை அறியமாட்டீர்களா?
Political Agenda எங்கே, யாரிடம் உள்ளது? என்பது இதன்மூலமாவது உங்களுக்குப் புரியாதா? எனவே, இந்தத் தீர்ப்பு நியாயவாதிகள் ஏற்கத்தகுந்த தீர்ப்பல்ல; சாய்ந்த தராசுத் தீர்ப்பேயாகும்! மக்கள் மன்றத்தின் கண்டனத்திற்குரிய ஒரு சார்புத் தீர்ப்பேயாகும்! உச்சநீதிமன்றத்திற்குச் செல்வது அவசரத் தேவையாகும்!" என்று தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாட்டை நாசப்படுத்த நினைக்கும் கூட்டத்தை வேரோடு வீழ்த்த வேண்டும்.
- இந்தியாவை ஒரு நூற்றாண்டுக்கு பின் இழுக்க பார்க்கிறார்கள்.
பெரியாரின் சிந்தனைகள் உலகமயமாக வேண்டும், உலகம் பெரியார் மயமாக வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மறைமலைநகர் பெரியார் திடலில் நடக்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நான் மானமிகு சுயமரியாதைக்காரன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். கருஞ்சட்டைக்காரர்கள் தமிழ்நாட்டின் காவலுக்கு கெட்டிக்காரர்கள்.
தமிழ் சமுதாயத்திற்காக 92 வயதிலும் இளைஞர் போல் ஓய்வின்றி ஊழைத்து வருகிறார். கி.வீரமணி. கலைஞர், பேராசிரியருக்கு பிறகு தன்னை வழிநடத்துபவர் கி.வீரமணி. இந்த வயதிலும் தினமும் எழுதுகிறார், பிரசாரம் செல்கிறார்.
பெரியாரின் சிந்தனைகள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் போற்றப்படுகிறது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் போற்றுவது பெரியாரின் கொள்கை, திராவிட சிந்தனைகளுக்கு கிடைத்த வெற்றி.
திருச்சி சிறுகனூரில் பெரியார் உலகம் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டு வருகிறது.
எனது ஒரு மாத ஊதியம், 126 எம், எம்எல்ஏக்கள் ஊதியத்தை சேர்த்து ரூ.1.5 கோடியை பெரியார் உலகத்திற்கு வழங்குவதில் மகிகழ்ச்சி.
பெரியாரின் சிந்தனைகள் உலகமயமாக வேண்டும், உலகம் பெரியார் மயமாக வேண்டும். சாதி பெயரில் உள்ள 'ன்' விகுதியை 'ர்' விகுதியாக மாற்ற பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை நாசப்படுத்த நினைக்கும் கூட்டத்தை வேரோடு வீழ்த்த வேண்டும். நன் இனத்தில் இருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உருவாவது சிலருக்கு பிடிக்கவில்லை.
இந்தியாவை ஒரு நூற்றாண்டுக்கு பின் இழுக்க பார்க்கிறார்கள். அதனை தடுத்து நிறுத்துவது திராவிட மாடல் அரசு.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாட்டின் அத்தனை சுயமரியாதைக் குடும்பங்கள் சங்கமமாகும் மாநாடாகட்டும் – மறைமலைநகர் மாநாடு.
- ஒளிரட்டும் – ''பெரியார் உலகமயம் – உலகம் பெரியார் மயம்'' என்பதை நம் எதிரிகளுக்கு– அவர்களுடன் உதிரிகளுக்கும் உணர்த்திட வாருங்கள்! வாருங்கள்!!
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாளை மறுநாள் (4.10.2025) மறைமலைநகரில் (செங்கற்பட்டு) மிகப் பெரும் திரள் மாநாடாக நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு – நமக்கு சுயமரியாதை, பகுத்தறிவு, மனுதர்மம் ஒழித்த சமதர்ம சிந்தனை பரவிடவும், சீர்மிகு பிற மாநிலங்களும், உலகமும் வியந்து பாராட்டும் – சமூகநீதித்துறையில் சரித்திரம் காணா சாதனை புரியும் 'திராவிட மாடல்' ஆட்சி மீண்டும் அரியாசனத்தில் அமர்ந்தால்தான் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வதிந்த ஒடுக்கப்பட்ட மக்களான நமது மக்கள் சரியாசனம் பெற முடியும் என்பதற்குமான விழிப்புணர்வை வற்புறுத்த மாநாடு!
நம் விழி திறந்த வித்தகர், புதிய வழிகாட்டி, மானத்தையும், அறிவையும் நம்முள் விதைத்து, மனுதர்மத் தாழ்ந்த தமிழ்நாட்டை மட்டும் அல்ல; வீழ்ந்த மக்கள் உலகின் எம்மூலையில் இருப்பினும் அவர்களுக்கான எழுச்சியைப் பெற வைக்கும் ஒரு சமூகப் புரட்சியாளர் அறிவாசான் தந்தை பெரியார் – ஒரு நூற்றாண்டுக்கு முன் தொடங்கி, ஒப்பிட முடியாத சாதனை புரிந்து – தொடர்ந்த எதிர் நீச்சல்களிலும் அடித்தளம் எழுப்பிய மகத்தான மாளிகைக் கட்டுமானமே சுயமரியாதை இயக்கம்!
1929இல் முதல் சுயமரியாதை மாகாண மாநாடு நடந்த அதே மண்ணில்.... சுயமரியாதை, பகுத்தறிவு, சமத்துவம், பெண்ணுரிமை மலர்ந்து, ஜாதி ஒழிந்த ஒரு சமுதாயத்தைப் படைத்திட, அதே மண்ணில் (செங்கற்பட்டு) – சென்னை மாகாண சுயமரியாதை இயக்க முதல் மாநாட்டினை 1929இல் நடத்திய தந்தை பெரியார் புதியதோர் புரட்சியுகத்தின் பிரகடனங்களை வெளியிட்டார்.
நீதிக்கட்சித் தொடங்கிய 1920இல் இருந்து – 2025இல் அது 'திராவிட மாடலாக', அய்யா பெரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆட்சியாக, மானமிகு சுயமரி யாதைக்காரரான கலைஞர் தம் ஆட்சியில் நடத்திக் காட்டி வென்ற சமத்துவக் கொள்கைப் பயணத்தோடு தொடர்கின்றது.
திக்கெட்டும் பாராட்டும் திராவிட நாயகன் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 'திராவிட மாடல்' ஆட்சி – அது ஒரு முழு உருபெருக் கொள்வதை மக்கள் மகிழ்ந்து – உலகம் பாராட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாத திராவிடக் கொள்கை எதிரிகள் இவ்வாட்சியை எதிர்க்க, அழிக்க வரும் 2026ஆம் ஆண்டுத் தேர்தலையொட்டி கூலிப்படைகளை, 'குத்தகைப் படைகளையும்', சினிமா கவர்ச்சியாளர்களையும் மட்டுமே நம்பி, பல ஏமாற்று உத்திகளோடு வருகின்றனர். அவர்களை அடையாளம் கண்டு எச்சரித்து, நம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவிருக்கும் மாநாடே – மறைமலைநகர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு!
ஒப்பற்ற நம் முதலமைச்சர், பழிக் குற்றச்சாட்டுகளை தூசிகள் எனத் தட்டி விட்டு கம்பீர நடையுடன் நம்முடன் வரவிருக்கின்றார்! நன்றியுள்ள அனைவரும் அவரை வரவேற்க வர வேண்டாமா?
நமது முதலமைச்சர் கோடானு கோடி மக்களது, இதயச் சிம்மாசனத்தில் அவர் அன்பு, அறம், ஆளுமைகளில் நிலைத்திருப்பவர். வெற்று விளம்பரச் சரக்கல்ல; மாறாக நாளும் சரித்திரம் படைக்கும் தன்மானப் பெருந் தலைவர்.
''தலைகுனிய விட மாட்டோம் தமிழ்நாட்டை'' என்று சூளுரைத்து – சூடு போட்டு வரும் செயல் வடிவ திராவிடச் சிற்பி அல்லவா?
பழிதூற்றல், தகுதியற்றவர்கள் தலை கொழுத்துக் கூறுகின்ற அவதூறு தூசுகளைத் தட்டி – இடையறாத் தொண்டாற்றும் தொண்டறத்தை வரவேற்க வர வேண்டாமா?
வாருங்கள் தோழர்காள் அனைவரும்! கைகோர்த்து நின்று – போராதரவு தந்து – பெரிய திருப்பத்தை ஏற்படுத்துவோம்!
''அடாது மழை என்றாலும் விடாது நடக்கும் எம் நிகழ்ச்சி'' என்பதற்கேற்ப சரியான ஏற்பாடுகள் தயார்!
பருவம் பார்த்து உழைப்பதற்கு என்றும் தயங்காதவர்களல்லவா நாம்! உலகம் பெரியார் மயம், பெரியார் உலகமயம்!
தமிழ்நாட்டின் அத்தனை சுயமரியாதைக் குடும்பங்கள் சங்கமமாகும் மாநாடாகட்டும் – மறைமலைநகர் மாநாடு.
ஒளிரட்டும் – ''பெரியார் உலகமயம் – உலகம் பெரியார் மயம்'' என்பதை நம் எதிரிகளுக்கு– அவர்களுடன் உதிரிகளுக்கும் உணர்த்திட வாருங்கள்! வாருங்கள்!!" என்று அழைப்பு விடுத்துள்ளார்.
- ஜாதி கடந்து பழகியதற்காகக் கொலை நிகழ்வது வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒன்றல்லவா?
- ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகக் கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும்
பாளையங்கோட்டையில் ஐ.டி. ஊழியர் கவின் ஆணவ கொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கவினின் காதலியின் சகோதரனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், கைதான சுர்ஜித்தின் பெற்றோரும், சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியான சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதால் அவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனிடையே சுர்ஜித்தின் பெற்றோரை கைது செய்ய வலியுறுத்தி கவினின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கவினும், அந்த பெண்ணும் இருக்கும் புகைப்படத்தை அவரது உறவினர்கள் வெளியிட்டு, இதை ஆதாரமாக வைத்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளனர்.
இந்நிலையில், ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட விச்வகர்ம குறித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "சனாதனத்தின் கோர முகமான ஜாதியின் கொடிய விளைவுகளில் ஒரு துளி தான் ஆணவப் படுகொலைகள். ஜாதியின் பெயரால் நாட்டில் நடக்கும் அநீதிகளைப் பார்த்த பின்னும், சட்ட ரீதியாக இன்னும் ஜாதி ஏற்கப்படுகிறதே, அது மதம் என்னும் பாதுகாப்புக்குள் இன்னமும் பதுங்கிக் கொண்டிருக்கிறதே, இது அறிவார்ந்த ஜனநாயக சமூகத்தால் ஏற்கத்தக்கதா?
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 13 (2), 25 (1), 26, 29 (1), (2), 368 ஆகிய பிரிவுகள் ஜாதியைப் பாதுகாக்கின்ற வகையில் இருக்கின்றன என்று எடுத்துக்காட்டி, அதனைக் கொளுத்தும் போராட்டத்தைத் தந்தை பெரியார் அறிவித்ததன் அடிப்படையில், 10000 பேர் கொளுத்திச் சிறை சென்றார்களே, அது ஜாதி ஒழிப்புக்காகத் தானே!
"ஜாதி இருக்கும் நாடு சுதந்திர நாடாகுமா? சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? என்று 68 ஆண்டுகளுக்கு முன் 1957-இல் கேட்ட தந்தை பெரியாரின் கேள்விக்கு இன்னமும் பதில் இல்லையே!
இந்த நவீன யுகத்திலும், ஜாதி கடந்து பழகியதற்காகக் கொலை நிகழ்வது வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒன்றல்லவா? பொறியாளர் இளைஞர் கொல்லப்பட்டிருக்கிறார். படித்து, காவல்துறை பணியில் இருக்கும் குடும்பம் இத்தகைய கொலைக்குப் பின்னால் இருக்கிறது; இளைஞர் ஒருவர் ஆணவக் கொலையைச் செய்திருக்கிறார் என்றால் ஜாதிய நஞ்சு எப்படி மூளையில் ஏறியிருக்கிறது, சிந்தனையை எப்படி மழுங்கடித்திருக்கிறது என்பது ஆழ்ந்த கவலையோடும், கவனத்தோடும், தீவிரத்தோடும் அணுக வேண்டிய ஒன்றாகும்.
ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகக் கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று நாம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தியா முழுக்க இந்தச் சட்டம் அவசியமாகிறது. சட்டம் வந்தாலும், அதனை முழுமையாக, சரியாகப் பயன்படுத்த வேண்டும். கொடுமைகள் நடந்தபின் அவற்றின் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க மட்டுமல்ல; வரும் முன் காப்பதற்கான ஏற்பாடுகளுக்கும் சட்டத்தில் இடம் வேண்டும். ஜாதி உணர்வுகளைத் தூண்டும் செயல்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் ஜாதி ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
நெல்லையில் ஜாதி ஆணவத்தால் கொல்லப்பட்ட பொறியாளர் கவின் செல்வகணேஷை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். இத்தகைய கொடூரங்கள் நிகழாமல் தடுக்கும் பணியில் இன்னும் முனைப்புடன் ஈடுபடுவதே நாம் ஏற்க வேண்டிய உறுதியாகும்" என்று தெரிவித்துள்ளார்.
- ஈரோடு எல்லாவற்றிற்கும் வழிகாட்டக்கூடிய ஒரு தனித்த அரசியல் களம்.
- தமிழ்நாட்டில் உண்மையான செயல்படக்கூடிய அரசியல் கட்சிகள் எவை என்பதை மக்களுக்கு அடையாளம் காட்டக்கூடிய அளவில் இந்த தேர்தல் இருக்கும்.
ஈரோடு:
ஈரோட்டில் இன்று திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
பேரறிஞர் அண்ணா நினைவு நாளான இன்று ஈரோட்டில் திராவிடர் கழகத்தின் சார்பில் சமூக நீதி, மாநில உரிமை, சேது சமுத்திர கால்வாய் திட்டம் இதையெல்லாம் மையப்படுத்தி பிரச்சாரத்தை ஈரோட்டில் தொடங்க இருக்கின்றோம்.
அதற்கு முன்பாக வெற்றி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இல்லத்தில் திருமகன் ஈவெரா படத்திற்கு மாலை அணிவித்தேன். ஈரோடு எல்லாவற்றிற்கும் வழிகாட்டக்கூடிய ஒரு தனித்த அரசியல் களம். ஆகவே இடைத்தேர்தலில் நிச்சயமாக வெற்றி இருக்கும்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தும். திராவிட மாடல் ஆட்சியின் தமிழ்நாட்டில் உண்மையான செயல்படக்கூடிய அரசியல் கட்சிகள் எவை என்பதை மக்களுக்கு அடையாளம் காட்டக்கூடிய அளவில் இந்த தேர்தல் இருக்கும்.
மிகப்பெரிய அரசியல் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய ஒரு கட்சி இன்று அடமான பொருளாக மாறி இருக்கிறது. அதை பந்தாடிக் கொண்டிருக்கும் நிலை இருக்கிறது. அதற்கு விடை இந்த தேர்தலில் கிடைக்கும்.
அண்ணாமலை, எடப்பாடி சந்திப்பு குறித்த கேள்விக்கு, எதுவாக இருந்தாலும் நட்ட கணக்கில் இருந்தவர்கள் மீள முடியாது. அடமான பொருள் எப்போது திரும்பி மீட்கிறார்களோ அப்போது தான் அவர்கள் எதிர்க்கட்சி என்ற தகுதியை கூட பெற முடியும். இல்லையென்றால் அதையும் இழக்க கூடிய சூழ்நிலையை இந்த தேர்தல் ஏற்படுத்தும். நாளை நடப்பதை யார் அறிவார் என்ற பாட்டு பாடக்கூடிய பரிதாப நிலையில் அ.தி.மு.க. இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தொண்டர்கள் சித்தாந்தங்களை பின்பற்றி மாற்று சித்தாந்தம் கொண்டவர்களோடும் கலந்துரையாட வேண்டும்.
- யார் யாருடனெல்லாம் பழகி பேச வேண்டும் என்று மிகப் பெரிய பட்டியலே வைத்திருக்கிறேன்.
சென்னை:
அரசியல் தலைவர்களுக்கான பயிற்சி திட்டமான தலைவா திட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
தொண்டர்கள் சித்தாந்தங்களை பின்பற்றி மாற்று சித்தாந்தம் கொண்டவர்களோடும் கலந்துரையாட வேண்டும். நான் எதிர்மறை சித்தாந்தம் கொண்ட தலைவர்களுடன் பழக ஆசைப்படுகிறேன். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியுடன் மதிய உணவு அருந்த ஆசைப்படுகிறேன்.
எதிர்தரப்பு கொள்கை உடையவர்களுடன் பழகும் போது நமது மனம் திறக்கும். நான் அத்தகையோருடன் பழகினேன். அந்த தருணங்களில் எனக்குள் ஒரு கண் திறந்தது. யார் யாருடனெல்லாம் பழகி பேச வேண்டும் என்று மிகப் பெரிய பட்டியலே வைத்திருக்கிறேன். அதில் ஒருவர் தான் கி.வீரமணி.
நான் பா.ஜனதா தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்பு இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை சந்திக்க விரும்புவதாக கட்சிக்காரர்களிடம் கூறினேன்.
அதை கேட்டதும் கட்சிக்காரர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். பா.ஜனதா தலைவர் கம்யூனிஸ்டு தலைவரை சந்திக்கலாமா என்று தயங்கினார்கள். ஆனால் நான் நல்ல கண்ணுவை நேரில் சந்தித்து அவரது ஆசியையும் பெற்றேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாநில அரசுகளின் உரிமைகளை காப்பாற்ற விடாமல் முட்டுக்கட்டை போட்டால் அது மக்களை அவமதிப்பதற்கு உரிய செயல்.
- தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் மத்திய அரசு கவர்னர்களை வைத்து போட்டி அரசியல் செய்கிறது.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடையில் சமூக நீதி பாதுகாப்பு மற்றும் திராவிட மாடல் விளக்க பரப்புரை பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-
அனைவருக்கும் அனைத்தும் என்பதே சமூக நீதி. எல்லோருக்கும், எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே சமூக நீதி. தமிழகத்தில் நடந்து வரும் திராவிட மாடல் ஆட்சியில் ஒரு வீட்டில் 4 பெண் குழந்தைகள் இருந்தாலும் அனைவருக்கும் ரூ.1000 நிதி உதவி அளித்தது சமூக நீதி. பெண்கள் படித்தால் ஒரு குடும்பம் முன்னேறும் என சொன்னது திராவிட தத்துவம்.
மேலும் ஆன்லைன் சூதாட்டம் குறித்து கடந்த அ.தி.மு.க. ஆட்சியிலேயே திராவிடர் கழகம் தொடர்ந்து அறிவுறுத்தியதன் விளைவாக அ.தி.மு.க.வினர் சில, பல ஓட்டைகளுடன் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினர்.
இதனால் அந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க முடியாமல் போனது. தற்போதைய திராவிட மாடல் ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்வது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து ஓட்டை இல்லாமல் போடப்பட்ட தீர்மானத்தில் கையெழுத்திடாமல் தமிழ்நாடு கவர்னர் காலம் தாழ்த்து வருகிறார்.
இதன் மூலம் மாநில அரசின் உரிமைகளை காப்பாற்ற விடாமல் ஒன்றிய அரசு தடுக்கிறது. மாநில அரசுகளின் உரிமைகளை காப்பாற்ற விடாமல் முட்டுக்கட்டை போட்டால் அது மக்களை அவமதிப்பதற்கு உரிய செயல்.
தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் மத்திய அரசு கவர்னர்களை வைத்து போட்டி அரசியல் செய்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் தி.மு.க., கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- திராவிடர் கழக மாநில பொதுக்குழுக்கூட்டம் ஈரோடு பஸ் நிலையம் எதிரில் உள்ள மல்லிகை அரங்கில் இன்று காலை தொடங்கியது.
- ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு விழாவும் நடைபெறவுள்ளது.
ஈரோடு:
திராவிடர் கழக மாநில பொதுக்குழுக்கூட்டம் ஈரோடு பஸ் நிலையம் எதிரில் உள்ள மல்லிகை அரங்கில் இன்று காலை தொடங்கியது. இக்கூட்டத்திற்கு செயலவை தலைவர் அறிவுக்கரசு தலைமை தாங்கினார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் உட்பட பொதுக்குழு உறுப்பினர்கள் என சுமார் 1000 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. இதனைத்தொடர்ந்து பொதுக்குழு தீர்மானங்கள் விளக்க பொதுக்கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு சூரம்பட்டி நால்ரோட்டில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு விழாவும் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, அமைச்சர் சு.முத்துசாமி, எம்.பி.க்கள் அந்தியூர் செல்வராஜ், கணேசமூர்த்தி, தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், மேயர் நாகரத்தினம் மற்றும் தி.மு.க., காங்கிரஸ், திராவிடர் கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
- எந்த கவர்னரும் செய்யாத ஒரு செயலை அவர் செய்து வருகிறார்.
- முதல்வர் யாரை வேண்டுமானாலும் அமைச்சராக நியமிக்கலாம்.
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் மணி மெட்ரி குலேஷன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தந்தை பெரியார், அறக்கட்டளை நிறுவனர் கணேசன் ஆகியோர் சிலை திறப்பு விழா மற்றும் பள்ளியின் 40 ஆம் ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா பள்ளி தலைமை அறங்காவலர் கலியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. நிர்வாக அறங்காவல சிவானந்தம், நிதி அரங்கம் கர்ணன், அறங்காவலர்கள் சண்முகம், பொம்மி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அனைவரையும் பள்ளி தாளாளர் கலியமூர்த்தி வரவேற்று பேசினார்.
பள்ளி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியாரின் சிலையை கல்யாணசுந்தரம் எம்.பி. திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். அதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் புதிதாக அமைக்க ப்பட்டுள்ள அறக்கட்டளை யின் நிறுவனர் கணேசன் சிலையை திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் முருகானந்தம் ஆண்டு அறிக்கை வாசித்தார்.
10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு தேர்வில் முதல் மூன்று நிலை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் அமலா தங்கத்தாய் வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் அணைக்கரை கோகிலாம்பாள் கல்வி நிறுவனங்கள் தலைவர் அன்பழகன், பாபநாசம் பெனிபிட்பண்ட் தலைவர் ஆறுமுகம், பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் மோகன், அறங்கா வலர்கள் ஜெயராமன், குணசேகரன், உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் பள்ளி துணை முதல்வர் காளிதாசன் நன்றி கூறினார்.
முன்னதாக தி.க. தலைவர் வீரமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது ;-
திராவிட மாடல் அரசுக்கு போட்டி அரசாங்கத்தை கவர்னர் செய்து வருவதாக தெரிகிறது. அதன் காரணமாக தான் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். எந்த கவர்னரும் செய்யாத ஒரு செயலை அவர் செய்து வருகிறார். முதல்வரின் அதிகாரத்தில் கவர்னர் தலையிட எந்த உரிமையும் இல்லை. முதல்வர் யாரை வேண்டுமானாலும் அமைச்சராக நியமிக்கலாம். அந்த உரிமையில் தலையிட கவர்னருக்கு எந்த அதிகாரமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொருளாதார கல்வி நிலையை அறியவும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
- யாருக்கு டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் என்பது பல்கலைக்கழக ஆட்சிக்குழுவின் முடிவு.
திருச்சி:
திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் திராவிடர் கழக தலைமை செயற்குழு கூட்டம் அதன் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் சமூக நீதியை நிலைநாட்டவும், மக்களின் சமூக, பொருளாதார கல்வி நிலையை அறியவும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மத்திய பா.ஜ.க. அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை கண்டித்து வருகிற 25-ந் தேதி முதல் நவம்பர் 3-ந் தேதி வரை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மேற்கொள்ளும் பரப்புரையை வெற்றிகரமாக நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனைதொடர்ந்து கி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
பல்கலைக்கழகங்களில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவது வழக்கமான நடைமுறைகளில் ஒன்று. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக பாடுபட்ட தொழிலாளர் தலைவர் சங்கரய்யாவுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவி அதற்கு ஒப்புதல் தராமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. கவர்னருக்கு இல்லாத அதிகாரத்தையெல்லாம் அவர் செய்து கொண்டு இருக்கிறார். யாருக்கு டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் என்பது பல்கலைக்கழக ஆட்சிக்குழுவின் முடிவு. அதில் கவர்னர் தலையிட முடியாது.
தற்போது கவர்னர் அவருக்கான பணியை செய்யாமல் போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறார். மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் நிச்சயமாக கவர்னர் என்ற பதவி இருக்க வேண்டுமா? என்ற கேள்வி மறுபரிசீலனைக்கு உள்ளாகும். உடல் உறுப்பு தானம் கொடுத்தவர்களுக்குகூட அரசு மரியாதை வழங்குகிற மகத்தான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. ஆகவே பங்காரு அடிகளாரின் மனிதநேயத்தை போற்றுவது அரசின் கடமை. ஆகவே அவருக்கு அரசு மரியாதை வழங்குவதில் தவறில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- மோடியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நினைக்கிறவர்கள் தங்களது வாக்கை பயனுள்ளதாக ஆக்க வேண்டும்.
- தி.மு.க கூட்டணி வெற்றி பெறுவதற்கு பிரதமர் ஒவ்வொரு முறையும் உரம் போடுவது போல உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
பா.ஜனதா 3-வது முறையும் ஆட்சி அமைத்தால், இதுதான் கடைசி தேர்தல் என்கிற சூழ்நிலை ஏற்பட்டு விடும். இதை காஷ்மீர் முதல் கன்னியா குமரி வரை மக்கள் புரிந்து கொண்டனர். எனவே, வருகிற தேர்தல் மூலம் இந்தியா கூட்டணியின் ஆட்சிதான் அமையும் என்பதில் சந்தேகமில்லை. இதைத்தான் மக்கள் உணர்வுகள் பிரதிபலிக்கின்றன.
வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜனதாவுக்கு தேர்தலில் நிற்பதற்கு கூட வேட்பாளர்கள் கிடைக்கவில்லை. அதனால் பிரதமர் அசாமுடன் திரும்பி வந்து விட்டார். இச்சூழ்நிலையில் எதிர்க்கட்சிகள் மிகவும் அமைதியாக பெரிய அளவில் வெற்றி பெறக்கூடிய வாய்ப்புகளை பெற்றுள்ளனர்.

எனது பிரசாரம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி தொடங்கி 17-ந்தேதியுடன் நிறைவடைகிறது.
மோடியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நினைக்கிறவர்கள் தங்களது வாக்கை பயனுள்ளதாக ஆக்க வேண்டும். இதன் அடிப்படையில் எங்களது பிரசாரம் அமையும்.
தமிழகத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு பிரதமர் வந்து பேசுகிறாரோ, அவ்வளவுக்கு அவ்வளவு எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கிறது. எனவே, தி.மு.க கூட்டணி வெற்றி பெறுவதற்கு பிரதமர் ஒவ்வொரு முறையும் உரம் போடுவது போல உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






