search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sethusamudram project"

    • சேது சமுத்திர திட்டத்தை பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் இணைந்து அன்றைக்கு தடுத்தது.
    • கருணாநிதி டெல்லிக்கு அனுப்பிய ஆயுதம் டி.ஆர்.பாலு.

    சென்னை:

    தி.மு.க. பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு, தன்னுடைய வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளை தொகுத்து 'பாதை மாறாப் பயணம்' என்ற தலைப்பில் சுயசரிதை எழுதி உள்ளார். இந்த புத்தகம் 2 பாகங்களை கொண்டது. முதல் பாகத்தில் கருணாநிதியுடன் இருப்பது போன்றும், 2-ம் பாகத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் உடன் இருப்பது போன்றும் நூலின் முகப்பு படம் உள்ளது. 'பாதை மாறாப் பயணம்' நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று மாலை நடந்தது.

    விழாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. வரவேற்று பேசினார். இதையடுத்து, 'பாதை மாறாப் பயணம்' நூலை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன் முதல் பாகத்தை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியும், 2-ம் பாகத்தை கவிஞர் வைரமுத்துவும் பெற்றுக்கொண்டனர்.

    விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- திராவிட இயக்க தலைவர்களின் வரலாறு முழுமையாக கிடைத்திருந்தால், பல அரிய தகவல்கள் மக்களுக்கு கிடைத்திருக்கும். இந்த கட்சியில் உழைக்காமல் யாரும் எந்த பொறுப்புக்கும் வந்துவிட முடியாது. டி.ஆர்.பாலு போல, கட்சியின் முன்னோடிகள், நிர்வாகிகள் உங்களது போராட்டத்தை, உங்கள் தியாகத்தை தொகுத்து நூலாக பதிவு செய்திட வேண்டும்.

    இந்த 60 ஆண்டு காலத்தில் கட்சி அடைந்த உயரமும் அதிகம், சந்தித்த சரிவுகளும் அதிகம். டி.ஆர்.பாலுவுக்கும், எனக்கும் 10 வயது வித்தியாசம். இப்போது வாங்க... போங்க... என்று பேசுகிறோம். ஆனால், 'யோவ்... வாயா... வாடா... போடா...' என்று பேசிய காலமெல்லாம் உண்டு. வீட்டில் இருந்த நேரத்தை விட டி.ஆர்.பாலு அலுவலகத்தில்தான் அதிக நேரம் நான் செலவிட்டு இருக்கிறேன். மிசாவில் நான் கைதாகும்போது டி.ஆர்.பாலு போன்றவர்கள் அந்த போலீஸ் வேனை வழிமறித்து தடுத்தனர். மிசா சட்டத்தில் கைதாகும்போது கருணாநிதிக்கு கார் ஓட்டியவர்கள் கைதானார்கள். அப்போது கருணாநிதிக்கு கார் ஓட்டியவர் டி.ஆர்.பாலு. அவரும் கைது செய்யப்பட்டார்.

    சிறையில் அடிபட்டு, மிதிபட்டு, ரத்தம் சிந்திய நேரத்தில் டி.ஆர்.பாலுவும் கைதாகி சிறைக்கு வந்தார். அப்போது இலைகளை பறித்து மாலையாக கோர்த்து டி.ஆர்.பாலுவை வரவேற்ற காட்சி நினைவுக்கு வருகிறது. அப்போது அலுமினிய தட்டில்தான் சாப்பாடு கிடைக்கும். ஆனால் டி.ஆர்.பாலு அதை விரும்பவில்லை. ஆனால் பசி தாங்காமல் சாப்பிட்டார். சிறையிலேயே அண்ணா, கருணாநிதி பிறந்தநாளை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி கொண்டாடினோம். நான் கூட்டங்களில் கலந்துகொள்ள செல்லும்போது, வழிச்செலவுக்கு கிடைக்கும் பணத்தில் பாதியை டி.ஆர்.பாலுவுக்கு கொடுப்பேன். எங்கள் நட்புறவு என்றைக்கும் மாறாது.

    சேது சமுத்திர திட்டத்தை டி.ஆர்.பாலு முன்னெடுத்தார். ஆனால் அதனை பா.ஜ.க.தான் தடுத்து நிறுத்தியது. சேதுசமுத்திர பகுதியில் பாலம் இருந்ததற்கான ஆதாரமே இல்லை என்று ஒன்றிய அரசில் இருக்கும் மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் இப்போது சொல்லி இருக்கிறார்.

    இந்த திட்டத்தை எப்படியும் செயல்படுத்த கருணாநிதி முனைந்தபோது, அப்போதைய மத்திய அரசும் இணைந்தது. இதற்கு காரணம் டி.ஆர்.பாலுதான். ஆனால் இந்த திட்டம் தடுக்கப்பட்டது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தால் எத்தனையோ பயன்களை தமிழகம் அடைந்திருக்கும். இந்தியாவுக்கு பெருமை கிடைத்திருக்கும். தமிழ்நாட்டின் தொழில்வளம் பெருகியிருக்கும். கடல்சார் வணிகம் மேம்பட்டு, மீனவர்களின் வாழ்வாதாரம் மெருகேறியிருக்கும்.

    ஆனால் சேது சமுத்திர திட்டத்தை பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் இணைந்து அன்றைக்கு தடுத்தது. இதனை மீண்டும் டி.ஆர்.பாலு கையில் எடுக்கவேண்டும். இது அண்ணாவின், கருணாநிதியின் கனவு திட்டம். எனவே இந்த திட்டத்தை மீண்டும் நிறைவேற்றிடும் கடமை டி.ஆர்.பாலுவுக்கு இருக்கிறது. கருணாநிதி டெல்லிக்கு அனுப்பிய ஆயுதம் டி.ஆர்.பாலு. கருணாநிதியிடமே கணையாழி பெற்றவர், டி.ஆர்.பாலு. ஒரு மாவட்ட செயலாளராக எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு அடையாளம் டி.ஆர்.பாலு.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக அமைச்சர் துரைமுருகன், இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸடாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து, டி.ஆர்.பாலு ஏற்புரை நிகழ்த்தினார். பதிப்பாளர் ஆழி செந்தில்நாதன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. தொகுத்து வழங்கினார். விழாவில், தி.மு.க. முதன்மைச்செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    • திண்டுக்கல் மெயின்ரோட்டில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாவட்ட தலைவர் வீரபாண்டி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • சேதுசமுத்திர திட்டம் செயல்பாட்டுக்கு வந்திருந்தால் தென்மாவட்டத்தில் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும்.

    திண்டுக்கல்:

    தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இன்று திண்டுக்கல் வந்தார். பின்னர் திண்டுக்கல் மெயின்ரோட்டில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாவட்ட தலைவர் வீரபாண்டி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதன்பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது,

    தந்தைபெரியார் ஒரு பேராயுதம். மதவெறி, சாதிவெறி, பதவிவெறி போன்றவற்றையெல்லாம் தீர்க்ககூடிய பேராயுதமாக இளைஞர்களின் கையில் இருந்து வருகிறார். அதன் விளைவாக உடலால் வாழ்ந்த காலத்தைவிட உணர்வால் நிறைந்த காலமாக இந்த காலம் உள்ளது. எதிரிகள் கூட பெரியாரை கண்டு இன்னும் பயப்படுகிறார்கள். பெரியாரின் சிலையை கண்டு அஞ்சக்கூடிய நிலையில் உள்ளனர். தென்மாவட்ட மக்கள் பயன்பெறக்கூடிய மாபெரும் திட்டம் சேதுசமுத்திர கால்வாய்திட்டம்.

    இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்திருந்தால் தென்மாவட்டத்தில் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும். தென்தமிழகம் மிகப்பெரிய அளவிற்கு பயன்பெற்றிருக்கும். மதுரையில் இத்திட்டத்திற்கான தொடக்க விழா பிரமாண்டமாக நடைபெற்றது. ரூ.2000 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டது.

    வேண்டுமென்றே ஒருசிலர் ராமர்பாலம் இருப்பதாக கூறி இத்திட்டத்தை நிறுத்தினர். இதனால் வேறுவழியில் சேதுசமுத்திர திட்டம் செயல்படுத்தப்படும் என பா.ஜ.க மத்தியமந்திரிநிதின் கட்கரி தெரிவித்தார். ஆனால் இதுவரை இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இத்துறைக்கான அமைச்சர் பேசுகையில், ராமர்பாலம் இருந்ததற்கான ஆதாரம் எதுவும் கிடையாது என கூறியுள்ளார். இதன் மூலம் பொய்யான காரணத்தை கூறி இத்திட்டத்தை பா.ஜ.க அரசு முடக்கியுள்ளது.

    தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக, இங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக செய்யப்பட்ட சூழ்ச்சி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு பிறகாவது சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர மத்தியஅரசு முன்வரவேண்டும். இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுசேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதாக கூறி ரூ.40 ஆயிரம் கோடியை தி.மு.க. வீணடித்து விட்டதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டியுள்ளார். #LokSabhaElections2019 #OPanneerSelvam
    சிவகங்கை:

    சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிடும் எச்.ராஜா, மானாமதுரை சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் நாகராஜன் ஆகியோரை ஆதரித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தேர்தல் பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:-

    அண்ணா தி.மு.க. மெகா கூட்டணி. வெற்றி கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. தி.மு.க. கூட்டணி சுயநல சந்தர்ப்பவாத கூட்டணி. இந்த தேர்தலில் நீங்கள் தான் எஜமானர்கள். யார் நல்லது செய்தார்கள் என்று எண்ணிப்பார்த்து தீர்ப்பு வழங்க வேண்டும். மத்தியில் காங்கிரஸ் கூட்டணி மந்திரி சபையில் தி.மு.க. இடம் பெற்றிருந்தது. 10 ஆண்டு காலம் பதவி சுகத்தை அனுபவித்தார்கள். தமிழகத்துக்கு ஏதாவது செய்தது உண்டா? மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த தி.மு.க. என்ன செய்தது. நல்ல திட்டங்களை கொண்டு வந்தது உண்டா? மத்தியில் 9 தி.மு.க.வினர் அமைச்சர்களாக இருந்தார்கள். அப்படி இருந்தும் தமிழகத்துக்கு என்ன பிரயோஜனம்? தமிழகத்தில் இருந்து ரூ.1 லட்சம் கோடி மத்திய அரசுக்கு வரியாக சென்றது. அதில் நல்ல திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டு வந்தது உண்டா?

    சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றப்போவதாக சொல்லி பல ஆயிரம் கோடி வீணானது தான் மிச்சம். அத்திட்டம் சரி வராது.

    ஆனால் தி.மு.க. அடம் பிடித்து அத்திட்டத்தை நிறைவேற்றுவதாக கூறி 40 ஆயிரம் கோடியை பாழடித்தது தான் மிச்சம். கடலில் போட்டார்களோ? அல்லது அவர்கள் எடுத்துக் கொண்டார்களோ என்று தெரியவில்லை. இப்படி உருப்படியில்லாத காரியங்களைத் தான் தி.மு.க. செய்ததே தவிர வேறு எதையும் செய்யவில்லை. தமிழக ஜீவாதார உரிமைகளை விட்டு கொடுத்தது தி.மு.க.

    காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வந்தது. இதனை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த அம்மா கூறினார். மத்தியில் கூட்டணி ஆட்சியில் தி.மு.க. இருந்தது. ஆனால் அவர்கள் நினைத்தால் 24 மணி நேரத்தில் அதனை வெளியிட்டிருக்க முடியும். ஆனால் அதனை செய்யவில்லை.



    அம்மா தான் சட்ட போராட்டம் நடத்தி மத்திய அரசிதழில் வெளியிட செய்தார். தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை அம்மா நிறைவேற்றி தந்தார். மக்களுக்காக பார்த்து பார்த்து திட்டங்களை கொண்டு வந்தார்.

    இந்த தேர்தலுடன் அண்ணா தி.மு.க. காணாமல் போய்விடும் என்று ஸ்டாலின் கூறிவருகிறார். இந்த இயக்கத்தை 1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். உருவாக்கினார். இது தொண்டர்கள் இயக்கம். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் 27 ஆண்டு காலம் பொது செயலாளராக இருந்து அம்மா கொடுத்த இயக்கத்தை வழி நடத்தி 1½ கோடி தொண்டர்கள் உள்ள இயக்கமாக உயர்த்தினார். இது யாரும் அசைக்க முடியாத எக்கு கோட்டை. எப்படி காணாமல் போகும். இந்த இயக்கம் ஒரு ஆலமரம். 1½ கோடி தொண்டர்கள் விழுதுகளாக இருந்து தாங்கி பிடித்திருக்கிறார்கள். புயல், பூகம்பம், சுனாமி என எது வந்தாலும் அசைக்க முடியாது. தி.மு.க. என்றாலே வன்முறை தான். கடைக்கு போய் பிரியாணி சாப்பிட்டால் காசு கொடுக்கணுமா, இல்லையா? தி.மு.க.வினர் பிரியாணி கடையில் போய் சாப்பிட்டு விட்டு பணமும் கொடுக்காமல், ஊழியர்களையும் உரிமையாளரையும் தாக்கி அடித்து உதைக்கிறார்கள். அழகு நிலையத்துக்குச் சென்று பெண்களை தாக்கி இருக்கிறார்கள். செல்போன் கடைக்கு சென்று தாக்கி இருக்கிறார்கள். இது தான் தி.மு.க. ஆட்சியில் இல்லாத போதே இப்படி ஆடுகிறார்கள். இவர்கள் எல்லாம் ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும்?

    எனவே மக்களுக்கு நல்லது செய்ய தமிழகம் தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழவும், மத்தியில் நாட்டை பாதுகாப்பாக வைக்க பிரதமர் மோடி மீண்டும் பிரதமராகவும், அண்ணா தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளியுங்கள்.

    இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

    அமைச்சர் பாஸ்கரன் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #LokSabhaElections2019 #OPanneerSelvam
    ×