search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேட்பாளர்களை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தார்.
    X
    வேட்பாளர்களை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தார்.

    ரூ.40 ஆயிரம் கோடியை தி.மு.க. வீணடித்து விட்டது- ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

    சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதாக கூறி ரூ.40 ஆயிரம் கோடியை தி.மு.க. வீணடித்து விட்டதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டியுள்ளார். #LokSabhaElections2019 #OPanneerSelvam
    சிவகங்கை:

    சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிடும் எச்.ராஜா, மானாமதுரை சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் நாகராஜன் ஆகியோரை ஆதரித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தேர்தல் பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:-

    அண்ணா தி.மு.க. மெகா கூட்டணி. வெற்றி கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. தி.மு.க. கூட்டணி சுயநல சந்தர்ப்பவாத கூட்டணி. இந்த தேர்தலில் நீங்கள் தான் எஜமானர்கள். யார் நல்லது செய்தார்கள் என்று எண்ணிப்பார்த்து தீர்ப்பு வழங்க வேண்டும். மத்தியில் காங்கிரஸ் கூட்டணி மந்திரி சபையில் தி.மு.க. இடம் பெற்றிருந்தது. 10 ஆண்டு காலம் பதவி சுகத்தை அனுபவித்தார்கள். தமிழகத்துக்கு ஏதாவது செய்தது உண்டா? மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த தி.மு.க. என்ன செய்தது. நல்ல திட்டங்களை கொண்டு வந்தது உண்டா? மத்தியில் 9 தி.மு.க.வினர் அமைச்சர்களாக இருந்தார்கள். அப்படி இருந்தும் தமிழகத்துக்கு என்ன பிரயோஜனம்? தமிழகத்தில் இருந்து ரூ.1 லட்சம் கோடி மத்திய அரசுக்கு வரியாக சென்றது. அதில் நல்ல திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டு வந்தது உண்டா?

    சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றப்போவதாக சொல்லி பல ஆயிரம் கோடி வீணானது தான் மிச்சம். அத்திட்டம் சரி வராது.

    ஆனால் தி.மு.க. அடம் பிடித்து அத்திட்டத்தை நிறைவேற்றுவதாக கூறி 40 ஆயிரம் கோடியை பாழடித்தது தான் மிச்சம். கடலில் போட்டார்களோ? அல்லது அவர்கள் எடுத்துக் கொண்டார்களோ என்று தெரியவில்லை. இப்படி உருப்படியில்லாத காரியங்களைத் தான் தி.மு.க. செய்ததே தவிர வேறு எதையும் செய்யவில்லை. தமிழக ஜீவாதார உரிமைகளை விட்டு கொடுத்தது தி.மு.க.

    காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வந்தது. இதனை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த அம்மா கூறினார். மத்தியில் கூட்டணி ஆட்சியில் தி.மு.க. இருந்தது. ஆனால் அவர்கள் நினைத்தால் 24 மணி நேரத்தில் அதனை வெளியிட்டிருக்க முடியும். ஆனால் அதனை செய்யவில்லை.



    அம்மா தான் சட்ட போராட்டம் நடத்தி மத்திய அரசிதழில் வெளியிட செய்தார். தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை அம்மா நிறைவேற்றி தந்தார். மக்களுக்காக பார்த்து பார்த்து திட்டங்களை கொண்டு வந்தார்.

    இந்த தேர்தலுடன் அண்ணா தி.மு.க. காணாமல் போய்விடும் என்று ஸ்டாலின் கூறிவருகிறார். இந்த இயக்கத்தை 1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். உருவாக்கினார். இது தொண்டர்கள் இயக்கம். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் 27 ஆண்டு காலம் பொது செயலாளராக இருந்து அம்மா கொடுத்த இயக்கத்தை வழி நடத்தி 1½ கோடி தொண்டர்கள் உள்ள இயக்கமாக உயர்த்தினார். இது யாரும் அசைக்க முடியாத எக்கு கோட்டை. எப்படி காணாமல் போகும். இந்த இயக்கம் ஒரு ஆலமரம். 1½ கோடி தொண்டர்கள் விழுதுகளாக இருந்து தாங்கி பிடித்திருக்கிறார்கள். புயல், பூகம்பம், சுனாமி என எது வந்தாலும் அசைக்க முடியாது. தி.மு.க. என்றாலே வன்முறை தான். கடைக்கு போய் பிரியாணி சாப்பிட்டால் காசு கொடுக்கணுமா, இல்லையா? தி.மு.க.வினர் பிரியாணி கடையில் போய் சாப்பிட்டு விட்டு பணமும் கொடுக்காமல், ஊழியர்களையும் உரிமையாளரையும் தாக்கி அடித்து உதைக்கிறார்கள். அழகு நிலையத்துக்குச் சென்று பெண்களை தாக்கி இருக்கிறார்கள். செல்போன் கடைக்கு சென்று தாக்கி இருக்கிறார்கள். இது தான் தி.மு.க. ஆட்சியில் இல்லாத போதே இப்படி ஆடுகிறார்கள். இவர்கள் எல்லாம் ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும்?

    எனவே மக்களுக்கு நல்லது செய்ய தமிழகம் தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழவும், மத்தியில் நாட்டை பாதுகாப்பாக வைக்க பிரதமர் மோடி மீண்டும் பிரதமராகவும், அண்ணா தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளியுங்கள்.

    இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

    அமைச்சர் பாஸ்கரன் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #LokSabhaElections2019 #OPanneerSelvam
    Next Story
    ×