என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "veeramani"

    • பா.ஜ.க.வின் தில்லுமுல்லுகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்!
    • “வாக்குகளைக் கவர்தல்” என்பதைப் பாரதிய ஜனதா கட்சி இரண்டாம் வகையில் புரிந்துகொண்டுள்ளதோ?

    நடந்து முடிந்த கர்நாடகா, மாகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், அரியானா சட்டமன்றத் தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல்களில் தேர்தல் ஆணையம் பஜகவுடன் இணைந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

    இந்நிலையில், ராகுல் காந்தியின் ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுக்கு என்ன பதில்? என்ன என்று திராவிடர் கழக தலைவர் வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், " சந்தேகத்துக்குரிய வகையில் இந்தியத் தேர்தல்கள் நடைபெறுவதாகக் கடந்த சில ஆண்டுகளாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் பல திசைகளில் இருந்தும் எழுந்து வருகின்றன. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் முறைகள், தேர்தல் தேதி அறிவிப்புகள், தேர்தல் ஆணையர்களின் நியமனம், அரசியல் கட்சிகளின் அங்கீகாரம், கட்சி உடைப்புகளின் போது தேர்தல் ஆணையம் நடந்துகொள்ளும் முறை என்று பலவற்றின் மீதும் சந்தேகங்களும், அதற்கான நியாயமான காரணங்களும் இருப்பது இந்தியாவின் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தாகும்.

    சந்தேகத்திற்கு அப்பால் செயல்படுகிறதா தேர்தல் ஆணையம்?

    அரசியலுக்கும், அதிகாரத்துக்கும் அப்பாற்பட்டு இருக்க வேண்டிய சுதந்திரமான அமைப்பாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டது இந்தியத் தேர்தல் ஆணையம். ஆனால், அதன் செயல்பாடுகள் சந்தேகத்துக்குரிய வகையில் இருப்பது ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல.

    இந்தச் சந்தேகங்களை உறுதி செய்யும் வகையில், வெளிப்படையான குற்றச்சாட்டை இந்தியாவைப் பல்லாண்டுகள் ஆட்சி செய்த கட்சியும், தற்போதைய எதிர்க் கட்சியுமான காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அவர்கள் ஆதாரங்களுடன் முன்வைத்திருக்கிறார்.

    7.8.2025 அன்று காங்கிரஸ் கட்சியின் தலைமை யகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, பெங்களூரு மத்திய நாடாளுமன்றத் தொகுதியின் ஒரு பகுதியான மகாதேவ்புரா சட்டப்பேரவைத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் செய்யப்பட்டுள்ள மோசடியைக் காட்சிப் பட விளக்கத்துடன் தெளிவுபடுத்தினார் ராகுல்காந்தி. அந்த ஒரு தொகுதியில் மட்டுமே 1,00,250 வாக்குகள் திருடப்பட்டிருப்பதாக (Vote chori) அவர் வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

    யாரும் வசிக்காத வீட்டில் அதிக வாக்குகள் வந்தது எப்படி?

    ''புதிய வாக்காளர்கள் என்ற பெயரில் போலி வாக்காளர்களைச் சேர்த்தல், ஒரே அறை கொண்ட முகவரியில், யாரும் வசிக்காத வீட்டில் எண்ணற்ற வாக்குகள் பதிவு, ஒளிப்படங்கள் இல்லாமல் வாக்காளர் பதிவு, ஒரே நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் வாக்கு, ஒரே வாக்குச்சாவடியில் ஒருவருக்கு இரண்டு வாக்கு, ஒரே நபருக்கு வெவ்வேறு மாநிலங்களில் வாக்கு - இப்படி பல்வேறு வகைகளில் முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளன'' என்று அவர் இந்திய ஜனநாயகத்துக்குப் பேராபத்து விளைவிக்கும் அணுகுண்டை அம்பலப்படுத்தியுள்ளார்.

    ஆட்சிக்கே காரணமான வாக்கு மோசடி!

    இந்தியாவில் ஆட்சியைப் பிடிக்க எல்லா தொகுதிகளிலும் இத்தகைய மோசடிகளைச் செய்ய வேண்டியதில்லை.

    தங்களுக்கு முழு ஆதரவு உள்ள தொகுதிகளை விட்டுவிடலாம். கடுமையான எதிர்ப்பு கொண்ட தொகுதிகளிலும் இத்தகைய மோசடிகளைச் செய்தால் அம்பலப்பட்டுவிடுவோம் என்று கருத இடம் உண்டு.

    ஆனால், வெற்றியை முடிவு செய்ய இயலாத தொகுதிகளை கடும் போட்டி நிலவும் தொகுதிகளை முன்கூட்டியே அறிந்து, அதில் இத்தகைய மோசடிகளைச் செய்தாலே போதும் என்று பா.ஜ.க. கணக்கிட்டிருக்கக் கூடும். தேர்தல் முன் கணிப்புகளின் அடிப்படையில் ஆட்சி அமைக்க இரண்டு கட்சிகளின் வேறுபாடுகளைக் கடக்க எவ்வளவு தொகுதிகள் தேவையோ அவற்றில் மட்டும் 'தனிக் கவனம்' செலுத்தி, வாக்காளர் பட்டியலில் மோசடி செய்தாலே போதுமானது என்பதே பா.ஜ.க.வினரின் கணக்கு! இதைத் தான் ராகுல் காந்தி அவர்களும் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்.

    (2019-இல் தங்கள் ஆட்சியைத் தக்க வைக்க வேண்டிய சூழலில் 22 தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில், தி.மு.க. 13 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை என்பதையும், அ.தி.மு.க. தங்கள் ஆட்சியைக் காப்பாற்றத் தேவையான 9 தொகுதிகளில் மட்டும் கவனம் செலுத்தி அவற்றில் வெற்றி பெற்றதன் மூலம் ஆட்சியில் தொடர்ந்ததையும் நினைவில் கொள்க)

    தேர்தல் ஆணையம் உடந்தையா?

    பாரதிய ஜனதா கட்சி, இத்தகைய கணக்குகளை ஆட்சியின் கண்களையும், காதுகளையும் பயன்படுத்தி அறிந்து, அவற்றில் மட்டும் 'கவனம்' செலுத்துவதைத் தனது தேர்தல் உத்தியாக வைத்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    • சென்னை மாநகராட்சி முன்பு கடந்த 1-ந் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
    • தூய்மை பணியாளர்கள் போராட்டம் இன்று 10-வது நாளை எட்டி உள்ளது.

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் பகுதிகளை உள்ளடக்கிய 5, 6 ஆகிய இரண்டு மண்டலங்களிலும் குப்பைகளை அள்ளும் பணி, மற்றும் பெண் தூய்மை பணியாளர்கள் மூலமாக சாலைகளை சுத்தம் செய்யும் பணி ஆகியவை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக கடந்த மாநகராட்சியுடன் இணைந்து துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 2000 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    இப்படி தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து சென்னை மாநகராட்சி முன்பு கடந்த 1-ந் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தூய்மை பணியாளர்கள் போராட்டம் இன்று 10-வது நாளை எட்டி உள்ளது.

    இந்நிலையில், சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை அரசு சமூகநீதிக் கண்ணோட்டத்தில் பரிசீலிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திராவிடர் கழக தலைவர் வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கடந்த 10 நாள்களாக தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலக வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணிப் பாதுகாப்பு, ஊதியக் குறைப்புக் கூடாது, தூய்மைப் பணியைத் தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு ஆகியவை அவர்களின் கோரிக்கைகளாகும்.

    2007-ஆம் ஆண்டு தூய்மைப் பணியாளர் நல வாரியத்தை உருவாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர் தான்! வெள்ளத்தின் போதும், கரோனாவின் போதும் தூய்மைப் பணியாளர்கள் ஆற்றிய தொண்டு அளப்பரியது. அவர்களின் உழைப்பைப் போற்றி விருந்து வைத்து நன்றி தெரிவித்தவர் நம்முடைய முதலமைச்சர்.

    பெரிதும் ஒடுக்கப்பட்ட சமூகத்தவரான உழைக்கும் மக்களே இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த மக்களுக்குச் சமூகநீதியும், கல்வியும் கிடைக்க வேண்டும் என்பதையே முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு தான் தமிழ்நாடு அரசு செயல்பட்டுவருகிறது.

    ''அனைவருக்கும் அனைத்தும்' என்பதே நமது இலக்கு'' என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து உறுதிபடத் தெரிவித்து, அந்த இலக்கை நோக்கி அரசை நடத்தி வருகிறார். அவருடைய உழைப்பையும், நோக்கத்தையும், செயல்பாட்டையும் இத்தகைய பிரச்சினைகளைக் காட்டி, தி.மு.க. ஆட்சிக்கு எதிராகப் பிறர் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கக் கூடாது.

    நகரைத் தூய்மைப்படுத்தும் பணியாளர்களின் உரிமையும், பணிப் பாதுகாப்பும், அவர்களின் நலனும் நாம் முக்கியமாகக் கவனம் செலுத்த வேண்டிய பிரச்சினைகளாகும். 'நகர சுத்தித் தொழிலாளர்களை அரசு ஊழியர்களாகவே ஆக்க வேண்டும்' என்பதே தந்தை பெரியார் அவர்களின் நிலைப்பாடாகும். நாளையும் வெள்ளம், மழை, புயல் என்று வருமேயானால், அப்போதும் முன் களத்தில் நிற்கப்போகும் பணியாளர்கள் அவர்களே!

    எனவே, தமிழ்நாடு அரசு இதில் தனது சமூகநீதிப் பார்வைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்; மனிதநேயத்தோடு அவர்களை அணுக வேண்டும் என்று நம்முடைய முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து, உடனடியாக அவர்களின் போராட்டத்தை முடித்துவைக்க வேண்டுகிறோம். இது அவசிய அவசரமாகும்" என்று தெரிவித்துள்ளார். 

    • திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
    • அடையாறில் உள்ள வீட்டில் கி.வீரமணி ஓய்வு எடுத்து வருகிறார்.

    சென்னை:

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சமூக நீதி பாதுகாப்பு மற்றும் திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார். இதில் பங்கேற்கும் விதமாக சுற்றுப்பயணம் செய்து கூட்டங்களில் பேசுகிறார். நாகை மாவட்டம் திருமருகல் மற்றும் காரைக்காலில் நேற்று நடைபெறுவதாக இருந்த பொதுக்கூட்டத்தில் பேச இருந்தார்.

    அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது சுற்றுப்பயணத்தை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பினார். அடையாறில் உள்ள வீட்டில் கி.வீரமணி ஓய்வு எடுத்து வருகிறார். அவரது உடல் நிலையை மருத்துவர்கள் கண்காணித்து உரிய ஆலோசனையை வழங்கினர்.

    • புதுவையில் தலித் பெண் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
    • சாதியை ஒழிக்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    மத்திய பா.ஜனதா அரசின் குலத்தொழிலை திணிக்கும் திட்டத்தை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் தொடர் பயண பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.

    புதுச்சேரி முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே நடந்த பொதுக்கூட்டத்துக்கு புதுவை மாநில தலைவர் சிவ.வீரமணி தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் குப்புசாமி வரவேற்றார். பொதுச்செயலாளர் துரைசந்திரசேகரன் தொடக்க உரையாற்றினார்.

    புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா, இந்திய கம்யூனிஸ்டு முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம், தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியதாவது:-

    மத்தியில் மக்கள் விரோத மோடி அரசு ஆட்சி செய்கிறது. அவர்கள் எதை சொல்லி ஆட்சிக்கு வந்தார்களோ, அதை செய்யாமல், சொல்லாததையெல்லாம் செய்து வருகின்றனர்.

    சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை திரிசூலம் போல வைத்து ஆட்சி நடத்துகின்றனர்.

    புதுவையில் தலித் பெண் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. நடிகை பல குற்றச்சாட்டுகள் கூறி பா.ஜனதாவில் இருந்து விலகியுள்ளார்.

    பா.ஜனதாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சாதியை ஒழிக்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி உறுதி. தென்னிந்தியாவில் பா.ஜனதாவுக்கு கதவு சாத்தப்பட்டு விட்டது. புதுவையில் ஒப்புக்குத்தான் ஆட்சி நடக்கிறது. கயிறு வேறு இடத்தில் உள்ளது. பொம்மலாட்ட பொம்மை போல புதுவை முதலமைச்சரை ஆட வைக்கிறார்கள்.

    இவ்வாறு கி.வீரமணி பேசினார்.

    • வெள்ளிக்கிழமை தேர்தல் வைக்காமல், புதன்கிழமை வைத்திருக்க’’வேண்டுமாம். அது யாருடைய பொறுப்பு?
    • நிறையப் பேருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டுள்ளனவாம். பா.ஜ.க. என்ன செய்து கொண்டிருந்தது?

    திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    "நாட்டின் 18 ஆவது பொதுத் தேர்தல் நேற்று (19-4-2024) தமிழ்நாடு முழுவதிலும் நடந்தது - பல மாநிலங்களிலும் முதல் கட்டமாக இந்த நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுள்ளது.

    நேற்றைய வாக்குப் பதிவின்போது எந்த இடத்திலும் கலவரமோ அல்லது வாக்குச் சாவடிகளில் சண்டைகளோ நடைபெறாமல், பல கட்சித் தேர்தல் முகவர்கள் முன்னிலையில் தேர்தல் சுமூகமாகத்தான் நடந்து முடிந்துள்ளது.

    மாலை 6 மணிக்குள் வாக்குப் போட வந்தவர்களுக்கு- பல வாக்குச்சாவடிகளில் 'டோக்கன்' கொடுத்து வரிசையில் அவர்களை நிற்க வைத்து அனைவரும் வாக்குப் போட்ட பிறகே, வாக்குப் பெட்டிக்குச் 'சீல்' வைக்கப்பட்ட செய்திகளும் வந்துள்ளன!

    தங்களுக்குத் தோல்வி உறுதி என்றவுடன், வாய்ப்பறை கொட்டிய கோவை பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை, தென்சென்னை பா.ஜ.க. வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராசன், மத்திய சென்னை பா.ஜ.க. வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் போன்றவர்கள் இன்று (20-4-2024) காலை புதுப்புது வாதங்களைக் கூறி, 'ஒப்பாரி' வைத்துப் பேட்டி தந்ததைப் பார்த்தபோது, எப்படி சிரிப்பது என்றே தெரியவில்லை!

    வெள்ளிக்கிழமை தேர்தல் வைக்காமல், புதன்கிழமை வைத்திருக்க''வேண்டுமாம். விடுமுறையில் மக்கள் ஊருக்குப் போய்விட்டார்களாம். அது யாருடைய பொறுப்பு?. நிறையப் பேருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டுள்ளனவாம். பா.ஜ.க. என்ன செய்து கொண்டிருந்தது

    தி.மு.க.வினர் வாக்குச் சாவடிக்குள் புகுந்து பா.ஜ.க. முகவரை வெளியேற்றினார்கள்' என்கிறார் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன். அப்படி ஒரு புரளியை திடீரென்று இன்று (20-4-2024) காலை வந்து சொல்கிறார்களே, நேற்று (19-4-2024) ஏன் இதுகுறித்துப் பேசவில்லை? ஊடகங்கள் எங்கே போயினவாம்?

    சொல்லப்போனால், வாக்குச்சாவடியில் பிரச்சினை செய்ததாக கன்னியாகுமரி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் உதவியாளர் உள்பட ஆதரவாளர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. நூறு சதவிகித வாக்குப் பதிவுக்குப் பல கோடி ரூபாய் விளம்பரம் செய்தும் பயனில்லை'' - பலன் இல்லையாம் (தமிழிசை).

    குற்றம் சுமத்தி, தோல்விக்கு இப்போதே அச்சார சமாதானங்கள் சொல்லக் கிளம்பியுள்ள காவிகளே, உங்களுக்கு ஒரே கேள்வி. தேர்தல் ஆணையம் யாருடைய அதிகாரத்தின்கீழ்? ஒன்றிய அரசின்கீழா? அல்லது மாநில அரசின் கீழ் இயங்குகிறதா? இந்தியாவில் மூன்று தேர்தல் ஆணையர்களையும் நியமித்தது யார்? முன்பே நீங்கள், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்றவர்களிடம் இதுபற்றி பகிரங்கமாகப் பேசினீர்களா?

    அறிஞர் அண்ணாவின் எழுத்தோவியத் தலைப்புதான் நினைவிற்கு வருகிறது. ''ஆரம்பத்தில் 'அடானா' (மகிழ்ச்சி ராகம்), முடிவில் 'முகாரி' (துன்பப் பாட்டு).'' தோல்விக்கு முன்னுரை பாடுவதாகவே விவரம் அறிந்தவர்கள் புரிந்துகொள்கிறார்கள். அந்தோ பரிதாபம்! இதற்கேது மக்கள் அனுதாபம்?" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • தேர்தல் பிரச்சாரத்தில் ஜாதி, மதம், கடவுள்களை முன்னிறுத்திடக் கூடாது.
    • அப்படி மத, வகுப்பு உணர்வுகளை மய்யப்படுத்தி செய்யப்படும் தேர்தல் பிரச்சாரம் சட்டப்படி குற்றமாகும்

    மதம், கடவுள்களை முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்வது குற்றம் என்பதுதான் சட்டத்தின் நிலைப்பாடு - இப்படிப் பிரச்சாரம் செய்தவர்களின் தேர்தல் வெற்றி செல்லாது என்று தீர்ப்புகள் வெளிவந்ததுண்டு; ஆனால், பிரதமர் மோடி, முஸ்லிம்கள் மீது வெறுப்பைத் தூண்டும் வகையில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அவர்மீது நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தவேண்டும். எதிர்க்கட்சிகளும் நீதிமன்றத்திற்கும், மக்கள் மன்றத்திற்கும் செல்ல முன்வரவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

    அவ்வறிக்கையில், "இந்திய தேர்தல் சட்டப்படி, தேர்தல் பிரச்சாரத்தில் ஜாதி, மதம், கடவுள்களை முன்னிறுத்திடக் கூடாது. அப்படி மத, வகுப்பு உணர்வுகளை மய்யப்படுத்தி செய்யப்படும் தேர்தல் பிரச்சாரம் சட்டப்படி குற்றமாகும் (மக்கள் பிரதிநிதித்துவ தேர்தல் சட்ட விதி 123(3) செக்ஷன்படி). அப்படி அவற்றைப் பயன்படுத்தி, தேர்தலில் வென்றாலும், அத்தேர்தல் சட்டப்படி செல்லாது என்பதை உச்சநீதிமன்றம் - பல தீர்ப்புகளில் உறுதி செய்துள்ளது.

    நாடாளுமன்றத்தின் 18 ஆவது பொதுத் தேர்தல் தொடங்கிய நிலை முதல் பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரத்தில் இராமன் கோவில் திறப்பு விழாவில் கலந்துகொள்ளாதவர்கள் ஹிந்துவிரோதிகள் என்று, கடவுளையும், மதத்தையும் தேர்தலில் இழுத்துப் பேசுவது எவ்வகையில் நியாயம்?

    அதுமட்டுமா?

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பற்றிக் குறிப்பிட்டு, அது முஸ்லிம் லீக் கருத்து கொண்டதாக உள்ளது என்று பேசுகிறார்!

    அண்மையில் ராஜஸ்தானில், ஹிந்து வாக்கு வங்கியை குறி வைத்து, ''காங்கிரஸ் கட்சி ஹிந்து சொத்துகளை முஸ்லிம்களுக்குப் பிரித்துக் கொடுக்கவே திட்டமிட்டுள்ளது'' என்றும், ''பொன் பொருளை அவர்களுக்கே பிரித்துக் கொடுப்பார்கள்'' என்று மனம் போன போக்கில் பேசி வருவது - நாளும் அவருக்கு வரும் செய்திகளின்படி, ''மக்கள் ஆதரவு குறைந்துவருகிறது; 400 தொகுதி என்கிற கனவு பகற்கனவாகி விடுவதோடு, மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியாத அளவுக்கு மக்கள் வெகுவாகப் புரிந்துகொண்டு விட்டார்கள்'' என்பதாலும், அவர் வகிக்கும் பிரதமர் பதவியின் மாண்பையும் கீழிறக்கத்திற்கு ஆளாக்கிவருவது, நாட்டிற்கே ஊறுவிளைவிக்கும் தேசிய அவமானம் ஆகும்!

    மோடி, அமித்ஷாவின் (ரெய்ப்பூர்) பேச்சு முழு சட்ட மீறல், தண்டனைக்குரிய குற்றமாகும்.

    பிரதமர் மோடியின் மற்றொரு விசித்திர விஷமப் பேச்சு (உ.பி. காசியாபாத்தில்) - ''எனக்கு முஸ்லிம் பெண்களின் ஆசிகள் ஏராளம் உண்டு'' என்று ஒரு குடும்பத்திற்குள்ளேயே, கணவன் - மனைவி இருவருக்கிடையே பிரிவினைவாதத்தைப் புகுத்தும் மிகக் கேவலமான கீழிறக்கப் பேச்சாகும். ஒரு பிரதமர் பதவியை - அதுவும் பத்தாண்டு காலம் அப்பதவியை வகித்தவர் இப்படிப் பேசுவது, அப்பதவியின் மாண்பையே குழிதோண்டிப் புதைப்பதல்லாமல் வேறு என்ன?

    தேர்தல் ஆணையம் இவற்றைக் கண்டும் காணாததாக, கேளாக் காதுகளுடனும் நடந்துகொள்வது ஜனநாயகத்திற்கும், அரசமைப்புச் சட்ட அவமதிப்புக்கும் சரியான ஆதாரங்களாகும்!

    அத்தனை எதிர்க்கட்சிகளும் குறிப்பாக காங்கிரசை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி கட்சிகள் இதனை நாளும் தேர்தல் ஆணையத்திற்குச் சுட்டிக்காட்டியும், எந்த நடவடிக்கையையும் பிரதமர் பேச்சின்மீது இதுவரை எடுக்கவே இல்லை!

    ''சட்டத்தின்முன் அனைவரும் சமம்'' என்ற தத்துவம் ஏன் பிரதமர் பேச்சு விஷயத்தில் மட்டும் காணாமற்போக வேண்டும் - சட்டம் அனைவருக்கும் பொதுச் சட்டம்தானே!

    நாட்டில் மத வகுப்புக் கலவரங்களை வெடிக்கச் செய்யும் நிலையை ஆளும் பிரதமரே தூண்டுவதுபோல் பேசலாமா?

    எனவே, நிலைமை மேலும் மோசமாகமலிருக்க (காரணம் ஜூன் முதல் தேதிவரை ஏழு கட்டத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில்) ஜனநாயகத்தையும், அரசமைப்புச் சட்ட மாண்பு - அரசியல் விழுமியங்களைக் காக்கும் பெரும் பொறுப்பு - மக்களின் கடைசி நம்பிக்கையான உச்சநீதிமன்றத்திடம்தான் என்பதால், உடனடியாக முன்வந்து, பிரதமருக்குத் தாக்கீது அனுப்பி வழக்குப் பதிவு செய்யவேண்டும்.

    ''எதையும் பார்க்காமல் சட்டம், நீதி தனது கடமையைச் செய்தாகவேண்டும்'' என்பதை வலியுறுத்தத்தானே!

    எனவே, உச்சநீதிமன்றம் தானாகவே முன்வந்து ('Suo Moto') தன்னிச்சையாக வழக்கை எடுத்துக் கொள்வதே - நாட்டின் ஜனநாயகம் காக்க, விருப்பு வெறுப்பு அரசியல் என்ற அறத்தை விழுங்கும் அநியாய அலங்கோலம் தலைவிரித்தாடாமல் தடுக்கப்பட அதுவே ஒரே வழி!

    சட்டம் ஓரப்பார்வையோடு நடந்துகொண்டு வருகிறதே என்ற பழி நாளைய வரலாற்றுப் பழியாக மட்டுமல்லாமல், வரலாற்றுப் பிழையாகவும் ஆகிவிடக் கூடும்!

    இன்றைய எதேச்சதிகார மோடி ஆட்சியின் சட்ட இடிப்பாரை - உச்சநீதிமன்றம் போன்றவைதானே!

    மதச்சார்பற்ற நாடு என்று முத்திரை - ஆனால், தேர்தலில் ஜாதி, மத, வெறுப்புப் பிரச்சார அடைமழையாக, ''வேலியே பயிரை மேய்வது போன்று'' நாட்டின் பிரதமரே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் செய்து வரலாமா?

    அனைத்து எதிர்க்கட்சிகளும் இதனை உச்சநீதிமன்றத்திற்கும், மக்கள் மன்றத்திற்கும் எடுத்துச் சென்று, நீதி கேட்டு நெடிய பரப்புரைகளை அடைமழைபோல செய்ய முன்வரவேண்டும். இன்னும் 35 நாள்களும் நாட்டில் பிரச்சாரம் எவ்வளவு மோசமாகுமோ! அதற்குத் தடுப்பே இல்லையா? மவுனம் கலையட்டும் - சட்டம் கடமையைச் செய்யட்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசி வருவதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம்.
    • நாம் எப்பொழுதும் பகுத்தறிவு உள்ளவர்களுக்கு தான் பதில் சொல்வோம்.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பெரியாருக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசி வருவதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் சீமானின் கருத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இதனிடையே பெரியார் பற்றிய எனது கருத்துக்கு திராவிடர் கழகத் தலைவரான வீரமணி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காதது ஏன்? என்று சீமான் கேள்வி எழுப்பியிருந்தார்.

    இந்நிலையில், கடலூரில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சீமானை மறைமுகமாக விமர்சித்து பேசியுள்ளார்.

    திருமண விழாவில் பேசிய அவர், "பெரியாரை பற்றி யார் யாரோ பேசுவதை குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார். நாம் எப்பொழுதும் பகுத்தறிவு உள்ளவர்களுக்கு தான் பதில் சொல்பவர்கள், பைத்தியம் பிடித்தவர்களுக்கு அல்ல. பைத்தியம் பிடித்தவர்களுக்கு தேவை சிகிச்சையே தவிர பதில் அல்ல.

    ஒருவரின் பெயரை சொல்லி இப்படி பேசுகிறாரே என்று என்னிடம் கேட்டார்கள். அடுத்ததாக இன்னொருவர் பெயரை சொல்லி அவரை இவர் ஆதரிக்கிறாரே என்று கேட்டார். நான் கேட்டேன் ஓர் ஒரு பைத்தியம் தான் இருக்க வேண்டும் என்று என்ன அவசியம்" என்று தெரிவித்தார்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் பங்கேற்று பெரியார் உலகம் பிரமாண்ட கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
    • சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடை பெற்ற இந்த விழாவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார்.

    தந்தை பெரியாரின் 144-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்சி சிறுகனூரில் பெரியார் உலகம் என்ற பெயரில் பிரமாண்ட கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

    சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடைபெற்ற இந்த விழாவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் பங்கேற்று பெரியார் உலகம் பிரமாண்ட கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

    இதுகுறித்து விழாவில் கி. வீரமணி பேசியதாவது:-

    இந்த பெரியார் உலக கட்டிடம் ரூ.60 கோடியில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 6 ஆண்டில் பணிகளை முடிக்கவும் முடிவு செய்துள்ளோம். மொத்தம் 27 ஏக்கர் பரப்பளவில் பெரியார் உலகம் உருவாக்கப்படுகிறது. அதில் தமிழ் சமூகத்தை தலை நிமிரச் செய்த பெரியாரை அனைவரும் தலை நிமிர்ந்து பார்க்கும் வகையில் 95 அடி உயரத்தில் சிலையும், 60 அடியில் பீடமும் என 155 அடியில் சிலை நிறுவப்பட உள்ளது. இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துள்ள முதல்- அமைச்சர் கட்டிட தொடக்க விழாவிலும் பங்கேற்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எதிர்க்கட்சியினர் மீது வருமானவரி சோதனை, சிபிஐயை பயன்படுத்துவதால் மோடிக்கு சாதகமான நிலை ஏற்படாது என்று கடலூரில் தி.க. தலைவர் வீரமணி கூறியுள்ளார். #veeramani #pmmodi #incometaxraid
    கடலூர்:

    கடலூரில் திராவிட கழக தலைவர் வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய மற்றும் மாநில அரசுகள் மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதன் காரணமாக வருகிற மே 23-ந் தேதி இந்த ஆட்சிகள் கண்டிப்பாக மாறக் கூடிய நிலையில் உள்ளது. பா.ஜ.க. அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கல்வி என்பது அறவே மறுக்கப்படும் என்று கல்வியாளர்கள், ஓய்வு பெற்ற துணை வேந்தர்கள் கூறி வருகின்றனர்.

    சிறு, குறு வியாபாரிகள், மாணவர்கள் விவசாயிகள் என அனைவரும் அதிருப்தியில் உள்ளனர். இந்த தேர்தலில் தப்பித்தவறி மீண்டும் மோடி வந்தால் தேர்தலே இருக்காது என வெளிப்படையாக அனைவரும் கூறி வருகிறார்கள்.

    இந்திய அளவில் மோடிக்கு ஆதரவாக கருத்துக்கணிப்பு கூறினாலும் மக்கள் ஏமாற மாட்டார்கள். ஆகையால் மக்கள் மனநிலை என்பது மோடிக்கு எதிர்ப்பு அலை என்பது நன்கு தெரிகிறது. தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்படவில்லை என அனைத்து தரப்பு மக்களுக்கும் தெரிந்து வருகிறது. தேர்தல் ஆணையம் அரசாங்கத்தின் அங்கமாக இருந்து வருவது வருத்தத்துக்குரியது.

    எதிர்க்கட்சிகளையே குறிவைத்து வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. மோடி தன்னுடைய ஆயுதமாக வருமான வரித்துறை, சி.பி.ஐ.யை பயன்படுத்தி வருகிறார். இதன்மூலம் மோடிக்கு சாதகமான நிலை ஏற்படாது. அதற்கு மாறாக எதிர் நிலை தான் ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #veeramani #pmmodi #incometaxraid
    மத்திய அரசிடம் தமிழக அரசை குறைந்த விலையில் அ.தி.மு.க. அடகு வைத்து விட்டது. அதனை மீட்க வேண்டும் என்று கி. வீரமணி பேசியுள்ளார். #veeramani #tngovt #federalgovernment

    நாகப்பட்டினம்:

    மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நாகை அவரி திடலில் நேற்று பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    டெல்லியில் இருக்கக் கூடிய ஆட்சியை  காலி செய்ய நேரம் வந்துவிட்டது. மத்திய அரசிடம் தமிழக அரசை குறைந்த விலையில் அ.தி.மு.க. அடகு வைத்து விட்டது. தமிழ் நாட்டை மீட்கவும், இந்தியாவை காக்கவும் அனைத்து மக்களும் மதசார்பற்ற கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

    மோடி வித்தைக்கு முடிவு கட்டுவதற்குதான் இந்த தேர்தல் வந்துள்ளது. பா.ஜனதா ஆட்சியில் கடந்த 2017-2018 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் ரூ,4 கோடியே 70 லட்சம் பேர் வேலை இல்லாமல் திண்டாடி வருகிறார்கள். அ.தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நடக்காது.

    வறட்சி உள்ளிட்ட பிரச்சினையால் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டு 2015-ம் ஆண்டில் 12,602 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். 2016 - ம் ஆண்டு கணக்கெடுப்பில் 16,400 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இனி தேர்தல்கள் நடக்காது. இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி தான் நடக்கும் .

    இவ்வாறு அவர் கூறினார். #veeramani #tngovt #federalgovernment

    நீட் தேர்வு ஒழிக்கப்படும் வரை அதற்கு எதிரான போராட்டங்கள் தொடரும் என்று திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார். #veeramani #neet

    செந்துறை:

    நீட் தேர்வால் மருத்துவர் கனவு நிறைவேறாததால் அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி சண்முகத்தின் மகளான மாணவி அனிதா கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அவரது நினைவாக குழுமூரில் கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் உருவச்சிலை திறப்பு விழா, அனிதா நினைவு அறக்கட்டளை தொடக்க விழா நடைபெற்றது.

    விழாவில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மக்கள் நீதி மய் யத்தின் செயற்குழு உறுப்பினர் நடிகை ஸ்ரீபிரியா, திரைப்பட இயக்குனர் கவுதமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, சாதி ஒழிப்பு போராளி கவுசல்யா, பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி,

    தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவசங்கர், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொருளாளர் ரங்கசாமி உள்பட ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நூலகத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீட் தேர்வுக்கு எதிராக போராடி தன்னுயிரை மாய்த்து கொண்ட அனிதாவை இழந்துள்ளோமே தவிர அவரது உணர்ச்சிகளை நாம் இன்னும் இழந்து விட வில்லை. நீட் தேர்வினால் அனிதா மட்டுமல்ல. மாணவர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    உயர் நீதிமன்றம் பல கேள்விகளை எழுப்பியும் உச்ச நீதிமன்றம் அவற்றை புறக்கணிக்கிறது . நீட் தேர்வு ஒழிக்கப்படும் வரை அதற்கு எதிரான போராட்டங்கள் தொடரும். நீட்தேர்வுக்கு எதிராக அறப்போரை மாணவர்களுடன் சேர்ந்து முன்னெடுத்து செல்வோம் என்றார்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில், ஆட்சியாளர்கள் நீட் தேர்வில் விலக்கு பெறுவோமென நம்பிக்கை ஊட்டும் வகையில் பேசினர். ஆனால் அனிதாவை இழந்து விட்டோம் என்றார்.

    அனிதா சிலையை திறந்து வைத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-

    அனிதா வெற்றி பெற்றிருந்தால் மிகச்சிறந்த தொண்டுள்ளம் கொண்டவராக இருந்திருப்பார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் என்ன? ஏதேனும் ஒரு படிப்பு என்று அவர் நினைத்திருந்தால் மருத்துவம் கிடைக்காமால் வேறு பாடத்துக்கு மாறியிருப்பார்.

    ஆனால் தொண்டாற்ற வேண்டும் என்றகனவே அவரை மருத்துவ படிப்பை படிக்க தூண்டியிருக்கிறது. அனிதாவை போன்று மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க நீட் தேர்வு முறையை தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டும் என்றார். 

    மத்திய அரசின் மனித வளத்துறை சார்பில் துவங்கப்பட்டுள்ள இணையவழி நூலகத்தில் தமிழ் உள்பட தென்னக மொழிகள் புறக்கணிப்பு ஏன்? என்று கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். #veeramani #centralgovernment

    சென்னை:

    திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய அரசின் மனித வளத்துறை சார்பில் துவங்கப்பட்டுள்ள இணையவழி நூலகத்தில் ஆங்கிலம், இந்தி சமஸ்கிருதம் மட்டுமே இடம்பெற்றுள்ளன! மாநில மொழிகளில் வங்காளம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இதில் தென் இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் போன்ற மொழிகள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

    கரக்பூர் தொழில்நுட்ப நிறுவனம் இந்த நூலகத்தை வடிவமைத்துள்ளது, இந்த நூலகம் மூலம் உலகம் முழுவதிலுமுள்ள பல் கலைக் கழக மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் இந்தியா குறித்தும், இந்திய கலாச்சாரம் குறித்தும் தெரிந்துகொள்ளும் அளவிற்கு அதிக அளவு நூல்கள் இந்த இணையவழி நூலகத்தில் கிடைக்கும். இதுவரை இந்தியாவில் உள்ள 170 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த, நூல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. 3 லட்சம் எழுத்தாளர்களின் 1 கோடி புத்தகங்கள் இதில் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சமூக அறிவியல், விஞ்ஞானம், மொழி, இலக்கியம், புவியியல், வரலாறு, தொழில் நுட்பம், மதம் போன்ற பலதுறைகளைச் சேர்ந்த புத்தகங்கள் பொருள்வாரியாக இடம்பெற்றுள்ளன. வேத நூல்களின் மூல நூல்கள் அதற்கான பொருள் விளக்கங்களுடன் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.

    தமிழ்நாட்டில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் சார்பில் சில புத்தகங்களும், புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் சார்பில் சில நூல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ஆண்டாள் பாசுரங்கள் ஆங்கிலத்தில் தனியாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வரலாற்று நூல்கள், பிரபல எழுத்தாளர்களின் நூல்கள் என எதுவும் இடம் பெறவில்லை. அதே போல் தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களும் இதில் கிடையாது. முக்கியமாக நீங்களும் உங்கள் நூல்களைப் பதிவிடலாம் என்ற இடத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு உள்ளிட்ட தென் இந்திய மொழி நூல்களுக்கு இடமில்லை.

    தென் இந்தியமொழி நூல்களைப் பதிப்பவர்கள் அதன் ஆங்கில அல்லது இந்தி பதிப்பை மட்டுமே பதிவேற்றவேண்டும் என்று குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மத்திய பி.ஜே.பி. அரசு இந்தியா முழுவதற்கும் உள்ள அரசா? அல்லது இந்தி மாநிலங்களுக்கு மட்டும் உள்ள அரசா? சமஸ்கிருதம் என்ற செத்தொழிந்த மொழியைச் சிம்மாசனம் ஏற்றுவதிலேயே குறியாக இருப்பது மத்திய பி.ஜே.பி. அரசின் பார்ப்பனிய சமஸ்கிருத ஆதிக்க உணர்வின் வெளிப்பாடே!

    இதுகுறித்து தமிழக முதலமைச்சரும், தென் மாநில முதலமைச்சர்களும் மத்திய அரசுக்கு எழுதிடவேண்டும். தமிழ்நாட்டில் சட்டப்பேரவை நடந்துகொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் எதிர்க்கட்சியினர் இந்தப் பிரச்சினையை எழுப்பிட வேண்டும். இதில் கட்சி வேறுபாடுகளுக்கு இடமில்லை.

    மத்திய அரசின் ஒவ்வொரு செயல்பாடுமே வெகு மக்கள் விரோத குறிப்பாக, இந்தி பேசாத மக்கள் விரோத போக்குடையதாகவே இருக்கிறது தேவை விழிப்புணர்வே!

    இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார். #veeramani #centralgovernment

    ×