என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sanitation workers"

    • பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • கைது செய்யப்பட்ட அனைவரையும் வீட்டிற்கு செல்லுமாறு கூறியும் அவர்கள் சமுதாய கூடத்தை விட்டு வெளியேறாமல் தொடர் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    கடந்த சில மாதங்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் சென்னை ரிப்பன் மாளிகையை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்து பெரியமேடு, வேப்பேரி, உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் இருந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 33 பெண்கள் 12 ஆண்கள் உட்பட 45 தூய்மை பணியாளர்களை கைது செய்து கண்ணப்பர் திடல் சமுதாய கூடத்தில் அடைத்து வைத்தனர்.

    கைது செய்யப்பட்ட அனைவரையும் வீட்டிற்கு செல்லுமாறு கூறியும் அவர்கள் சமுதாய கூடத்தை விட்டு வெளியேறாமல் தொடர் போரட்டத்தில் ஈடுபட்டனர். உடனே போலீசார் அனைவரையும் நேற்று இரவு கண்ணப்பர் திடல் சமுதாய கூடத்தில் இருந்து கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    அப்போது சரஸ்வதி, நிர்மலா, மகேஸ்வரி, தனலட்சுமி ஆகிய 4 தூய்மை பணியாளர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே சக தூய்மை பணியாளர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை கே.எம்.சி. மருத்துவமனைக்கு அழைத்து செல்லவேண்டும் என போலீசாரிடம் கேட்டுக்கொண்டனர். ஆனால் போலீஸார் கீழ்பாக்கம் ஆஸ்பத்திரியில் நிறுத்தாமல் நேராக கோயம்பேடு நோக்கி சென்றதால் ஆத்திரமடைந்த தூய்மை பணியாளர்கள் பஸ்சிலேயே கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே போலீசார் பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர்களை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மற்ற தூய்மை பணியாளர்களும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்று அவர்களுக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர்.

    • நேற்று சென்னையின் பல்வேறு இடங்களில் போராட்டத்தை கையிலெடுத்தனர்.
    • இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபடுபவர்களை கைதுசெய்து, அன்று மாலையே விடுவிப்பது வழக்கம்.

    சென்னையில் தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மண்டலம் 5 மற்றும் 6 ஆகியவற்றில் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கக் கூடாது, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடக்கிறது.

    இந்த இரண்டு மண்டலத்தையும் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் நேற்று சென்னையின் பல்வேறு இடங்களில் போராட்டத்தை கையிலெடுத்தனர். அதில் அண்ணா சாலையில் அறிவாலயம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஆலந்தூர், நந்தம்பாக்கம், புளியந்தோப்பு, சைதாப் பேட்டை, கீழ்பாக்கம் உள்ளிட்ட 13 இடங்களில் உள்ள சமுதாய கூடங்கள், மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    பொதுவாக இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபடுபவர்களை கைதுசெய்து, அன்று மாலையே விடுவிப்பது வழக்கம். ஆனால் தூய்மை பணியாளர்களை பொறுத்த வரையில் இன்று காலை வரையில் விடுவிக்கப்படவில்லை. மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    விடுவிக்கப்படாத நிலையில், தாங்கள் தங்கி இருக்கின்ற சமுதாயக்கூடம் மற்றும் கல்யாண மண்டபங்களிலேயே போராட்டத்தை தொடர்கின்றனர். தொடர் மற்றும் போலீசார் இல்லாத இடங்களை பார்த்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை தொடர்வதால் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மாநகராட்சியின் அனைத்து நுழைவு வாசல்களும் அடைக்கப்பட்டுள்ளன. போராட்டக்காரர்கள் உள்ளே நுழைந்து விடாமல் இருப்பதற்காக அங்கும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • இன்றுகாலை அண்ணா அறிவாலயம் முன் போராட்டம் நடத்தினர்.
    • போலீசார் இல்லாத இடங்களை பார்த்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மாநகராட்சி பணிகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சியில் உள்ள 5 மற்றும் 6-வது மண்டலங்களில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்றுகாலை அண்ணா அறிவாலயம் முன் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனிடையே மற்றொரு தரப்பினர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனைத்தொடர்ந்து அங்கும் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை அருகில் கருணாநிதி சிலை முன் மறியலில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர். ஆனால் போலீசார் இல்லாத இடங்களை பார்த்து போராட்டத்தை தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து வருகின்றனர். இதனால் காவல்துறையினர் ஆங்காங்கே குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் போராட்டத்தை எங்கு கையிலெடுக்கிறார்கள் என்பது தெரியாமல் போலீசார் திணறி வருகின்றனர். 

    • சென்னை பாரிமுனையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
    • கோட்டை நோக்கி நீதி கேட்கும் பேரணி நடத்த முயன்ற தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

    சென்னை அம்பத்தூர் பகுதியில் 5 மற்றும் 6-வது மண்டலத்தில் உள்ள தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி கடந்த 2 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுடன் அரசு தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் இதுவரை சுமூகமான தீர்வு எட்டப்படாததால் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

    நாளை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக தூய்மை பணியாளர்கள் அறிவித்து இருந்தனர். நிரந்தர பணி நியமன அறிவிப்பு வரும் வரை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    தூய்மை பணியாளர்கள் இன்று பேரணி நடத்த உள்ளதாக வந்த தகவலையடுத்து, சென்னை பாரிமுனையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    இந்நிலையில் சென்னை பாரிமுனை குறளகத்தில் இருந்து ஜார்ஜ் கோட்டையை நோக்கி தூய்மை பணியாளர்கள் பேரணியாக செல்ல முயன்றனர்.

    குறளகத்திற்கு முன்னதாகவே பிராட்வே பேருந்து நிலையத்தில் வைத்து தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

    கோட்டை நோக்கி நீதி கேட்கும் பேரணி நடத்த முயன்ற தூய்மைப் பணியாளர்களை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார் அவர்களை வாகனங்களில் ஏற்றினர்.

    • நாளை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக தூய்மை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.
    • குறளகம் நோக்கி வரும் தூய்மைப் பணியாளர்களை கைது செய்ய காவல்துறையினர் ஆயத்தமாக உள்ளனர்.

    பணி நிரந்தரம் கோரி சென்னை அம்பத்தூர் பகுதியில் 5 மற்றும் 6-வது மண்டலத்தில் உள்ள தூய்மை பணியாளர்கள் கடந்த 2 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுடன் அரசு தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் இதுவரை சுமூகமான தீர்வு எட்டப்படாததால் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

    நாளை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக தூய்மை பணியாளர்கள் அறிவித்துள்ளனர். நிரந்தர பணி நியமன அறிவிப்பு வரும் வரை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் தூய்மை பணியாளர்கள் இன்று பேரணி நடத்த உள்ளதாக வந்த தகவலையடுத்து, சென்னை பாரிமுனையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    குறளகம் நோக்கி வரும் தூய்மைப் பணியாளர்களை கைது செய்ய காவல்துறையினர் ஆயத்தமாக உள்ளனர்.

    • தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டத்திற்கு ரூ.186 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
    • காலை உணவில் இட்லி, போன்றவை, மதியம் ரசம், சாம்பார், கூட்டு, இரவு சப்பாத்தி அல்லது ரொட்டி உள்ளிட்டவை அடங்கும்.

    தூய்மை பணியாளர்களுக்கு 3 ஆண்டு காலத்திற்கு 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டத்திற்கு ரூ.186 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

    சென்னை மாநகராட்சியில் 10,000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், இந்தத் திட்டம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என அரசு எதிர்பார்க்கிறது. அரசாணைப்படி, தூய்மை பணியாளர்களுக்கு தினசரி 3 வேளை உணவு, மாநகராட்சியின் உணவகங்கள் மூலம் வழங்கப்படும்.

    தூய்மை பணியாளர்கள் அதிகாலையிலேயே வேலைக்கு வர வேண்டி இருப்பதால் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் காலை உணவு இலவசமாக வழங்கப்படும் என்றும், இது சென்னை மாநகராட்சி பகுதியில் உடனடியாக செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    காலை உணவில் இட்லி, போன்றவை, மதியம் ரசம், சாம்பார், கூட்டு, இரவு சப்பாத்தி அல்லது ரொட்டி உள்ளிட்டவை அடங்கும். இந்த உணவுகள், ஊட்டச்சத்து நிறைந்தவையாக இருக்கும்.

    இந்நிலையில் சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டத்தை வரும் 15-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

    • தூய்மை பணியாளர்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மீண்டும் பழைய நிலையில் மாநகராட்சியிலேயே பணி வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

    சென்னை மாநகராட்சி முன்பாக போராட்டம் நடத்துவதற்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்ததோடு, அவர்களை அந்த இடத்தில் இருந்து அகற்றவும் உத்தரவிட்டது.

    சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு 13 நாட்களாக போராட்டம் நடத்திவந்த தூய்மைப் பணியாளர்களும் அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்களும் ஆகஸ்ட் 13-ந் தேதி நள்ளிரவில் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

    தூய்மைப் பணியாளர்கள் எதிர்த்தபோதும், அனைவரும் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களிலும், சமூக நலக்கூடங்களிலும் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

    இதையடுத்து தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக ஆறு சிறப்புத் திட்டங்களை நிறைவேற்ற முடிவு செய்திருப்பதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

    தூய்மைப் பணியாளர்களைப் பொறுத்தவரை, அடுத்தகட்டமாக அனுமதி பெற்ற இடத்தில் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தப்போவதாக உழைப்பாளர்கள் உரிமை இயக்கத்தின் பாரதி தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் சென்னை எழும்பூரில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூய்மை பணியாளர்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மீண்டும் பழைய நிலையில் மாநகராட்சியிலேயே பணி வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    மண்டலம் 5 மற்றும் 6-ஐ சேர்ந்த தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    • தூய்மை பணியாளர்களுக்கு தினசரி 3 வேளை உணவு, மாநகராட்சியின் உணவகங்கள் மூலம் வழங்கப்படும்.
    • தூய்மை பணியாளர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் முதல் படியாக அமைந்துள்ளது.

    தூய்மை பணியாளர்களுக்கு 3 ஆண்டு காலத்திற்கு 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டத்திற்கு ரூ.186 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்றது. அப்போது, முதலமைச்சர் மு.க.ஸடாலின் தூய்மைப் பணியாளர்களுக்காக 6 சிறப்புத் திட்டங்களை அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதலுக்கு தந்தார்.

    இதில், தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை கையாளும்போது தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனித் திட்டம் செயல்படுத்தப்படும்.

    தூய்மைப் பணியாளர்கள் பணியில் இருக்கும்போது இறக்க நேரிட்டால் நல வாரியம் மூலம் அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதி உதவியுடன் கூடுதலாக ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படும். இதன் மூலம் ரூ.10 லட்சம் அவர்களது குடும்பத்திற்கு கிடைக்கும்.

    தூய்மைப் பணியாளர்கள் சுயத்தொழில் தொடங்கினால் 35 சதவீதம் மானியமாக அதாவது, ரூ.3½ லட்சம் வரை வழங்கப்படும்.

    6 சதவீத வட்டி மானியத்துடன் வழங்குவதற்கு ஆண்டுக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள் உயர்கல்வியில் சேரும் போதும் உதவித் தொகைத் திட்டம் செயல்படுத்தப்படும்.

    அவர்கள் எந்தப் பள்ளியில் பயின்றாலும் கல்விக் கட்டணம், விடுதிக் கட்ட ணம் உள்ளிட்ட அனைத்தும் வழங்கும் வகையில் புதிய கல்வி உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்படும்.

    தூய்மைப் பணியாளர்களுக்கு 3 ஆண்டுகளில் வீட்டுவசதி வாரியம் மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் 30 ஆயிரம் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்படும். தூய்மைப் பணியாளர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் வீடுகள் ஒதுக்கப்படும்.

    தூய்மை பணியாளர்கள் அதிகாலையிலேயே வேலைக்கு வர வேண்டி இருப்பதால் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் காலை உணவு இலவசமாக வழங்கப்படும். இது சென்னை மாநகராட்சி பகுதியில் உடனடியாக செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், இன்று வெளியான அரசாணைப்படி, தூய்மை பணியாளர்களுக்கு காலை, மதியம் மற்றும் இரவு 3 வேளைகளும் இலவச உணவு வழங்கப்படும். இது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் முதற்கட்டமாக செயல்படுத்தப்படுகிறது.

    சென்னை மாநகராட்சியில் 10,000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், இந்தத் திட்டம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என அரசு எதிர்பார்க்கிறது. அரசாணைப்படி, தூய்மை பணியாளர்களுக்கு தினசரி 3 வேளை உணவு, மாநகராட்சியின் உணவகங்கள் மூலம் வழங்கப்படும்.

    காலை உணவில் இட்லி, போன்றவை, மதியம் ரசம், சாம்பார், கூட்டு, இரவு சப்பாத்தி அல்லது ரொட்டி உள்ளிட்டவை அடங்கும். இந்த உணவுகள், ஊட்டச்சத்து நிறைந்தவையாக இருக்கும். சென்னை மாநகராட்சி, இதற்கான உணவகங்களை அமைத்து, பணியாளர்களின் பணி நேரத்துடன் ஒத்திசைவாக வழங்கும் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இந்தத் திட்டம், தூய்மை பணியாளர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் முதல் படியாக அமைந்துள்ளது" குறிப்பிடப்பட்டுள்ளது.

    • சமூகப் பங்களிப்பு நிதியின் கீழ் வழங்கப்பட்ட 21 மின்கல வாகனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
    • பணியில் சேர விரும்பினால் உடனே அவர்களுக்கான ஆணைகளை வழங்க மாநகராட்சி தயாராக இருக்கிறது.

    சென்னை மாநகராட்சி சாலை பராமரிப்புப் பணிகளுக்காக 21 மின்கல வாகனங்கள் மற்றும் நாய்களைப் பிடிக்கும் 5 வாகனங்கள் என 26 புதிய வாகனங்களின் பயன்பாட்டினை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.

    பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் பராமரிப்புப் பணிகளை சாலைப்ப ணியாளர்கள் மேற்கொள்வதற்கு ஏதுவாக, ஐ .டி.பி.ஐ. வங்கி மற்றும் எக்விட்டாஸ் வங்கியின் சார்பில் பெருநிறுவன சமூகப் பங்களிப்பு நிதியின் கீழ் வழங்கப்பட்ட 21 மின்கல வாகனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் ஆணையாளர் குமரகுருபரன் மற்றும் நிலைக்குழு தலைவர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் நிருபர்களிடம் மேயர் பிரியா கூறியதாவது:-

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாய் பிடிப்பதற்காக கூடுதலாக 5 வாகனங்களும் குப்பை அள்ளுவதற்கும் 21 வாகனங்கள் என மொத்தம் 26 வாகனங்கள் இன்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    ஏற்கனவே 23 நாய் பிடிக்கும் வாகனங்கள் சென்னை மாநகராட்சியில் பயன்பாட்டில் இருக்கும் நிலையில் தற்போது கூடுதலாக 5 வாகனங்கள் நாய்கள் பிடிப்பதற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சியில் 1.80 லட்சம் தெரு நாய்கள் உள்ளது என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. மண்டல வாரியாக தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்ற வருகிறது. தற்போது 60 சதவீத பணிகள் முடிந்துள்ளது.

    அதேபோல நாய்களுக்கு சிப் பொருத்தக்கூடிய பணிகளும் கடந்த மாதம் தொடங்கி இருக்கிறது.

    மண்டலத்துக்கு ஒரு கருத்தடை மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதம் அனைத்து பணிகளும் முடிய உள்ளது. பொதுமக்கள் தெருநாய்களுக்கு உணவு வழங்குகிறார்கள். அதனால் அதிக அளவு நாய்கள் அந்த பகுதியில் சுற்றுகிறது. பொதுமக்களும் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    ஓரிரு நாட்களில் எந்த பணிகளும் முடியாது. ஒரு 6 மாதம் காலம் எடுத்துக் கொள்ளப்படும். தெரு நாய்கள் கருத்தரிப்பதை கட்டுப்படுத்தும் போது நாய்கள் தொல்லை குறையும். 2022-ம் ஆண்டு முதல் மழைநீர் வடிகால்வாய் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு சில பகுதியில் மழை நீர்வாடிக்கால் வாய் பணிகள் முடிந்துள்ளது. தற்போது மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ள இடங்களில் மழைநீர் வடிகால் வாய் பணிகள் நடைபெற்றது.

    தற்போது நடைபெற்று வரக்கூடிய பணிகளை அப்படியே நிறுத்தி ஜனவரிக்கு பிறகு மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளோம். சாலை வெட்டும் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மண்டலம் 5- 6 தூய்மை பணியாளர்கள் இப்போதும் பணியில் வந்து சேரலாம்.

    பணியாளர்கள் நிறைய நபர்கள் பணியில் சேர்ந்து இருக்கிறார்கள். பணியில் சேர விரும்பினால் உடனே அவர்களுக்கான ஆணைகளை வழங்க மாநகராட்சி தயாராக இருக்கிறது. போதுமான அளவிற்கு பணியாளர்கள் இருக்கிறார்கள். பணிகள் சீராக நடைபெற்று வருகிறது.

    கூடுதலாக கட்டுப்பாட்டு மையத்தில் ஆட்கள் நியமிக்கப்பட்டு பெறப்படும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக வட்டார அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு உடனே தீர்வு காணும் வகையில் செயல்பட்டு வருகிறோம் .

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரிப்பன் மாளிகை அருகே போராட முயன்ற தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்தனர்.
    • சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்க, அதற்கு பதில் கூட முடியாது என்று அவர் தெரிவித்தார்.

    சென்னை ராயபுரத்தில் அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது தூய்மைப் பணியாளர்கள் தொடர்பான கேள்விக்கு காது கேட்கவில்லை என அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    கடந்த மாதம் சென்னையில் தூய்மை பணியாளர்கள் ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் அந்த இடத்தில இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

    இன்று ரிப்பன் மாளிகை அருகே போராட முயன்ற தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்தனர்.

    இது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்க, அதற்கு பதில் கூற முடியாது என்று அவர் தெரிவித்தார். இருப்பினும் செய்தியாளர்கள் அந்த கேள்வியை மீண்டும் கேட்க, காது கேட்கவில்லை என்று அவர் பதில் அளித்தார்.

    மேலும், ராயபுரம் பேருந்து நிலையத்தில் மக்களுக்கு தொந்தரவாக சிலர் மது அருந்துவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "நான் சரக்கு அடிப்பதில்லை" என்று சேகர்பாபு பதில் அளித்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

    • பொது வெளியில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுத்ததாக கூறப்படும் நிலையில் வீட்டிலேயே போராட்டம்.
    • போலீசார் கைது செய்ய முயன்றதால் இருதரப்பினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    சென்னை கொருக்குப்பேட்டையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

    பொது வெளியில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுத்ததாக கூறப்படும் நிலையில் வீட்டிலேயே தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், கொருக்குப்பேட்டையில் உள்ள வீட்டில் உண்ணாவிரதம் இருந்த தூய்மைப் பணியாளர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர். இதனால், கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    உண்ணாவிரதம் இருந்து வரும் தூய்மைப் பணியாளர்களை போலீசார் கைது செய்ய முயன்றதால் இருதரப்பினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தூய்மைப்பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

    போலீசார் அராஜகம் ஒழிக என தூய்மைப் பணியாளர்கள் முழக்கம் நடத்தி வருகின்றனர்.

    • மதுரை அவுட் போஸ்ட் அம்பேத்கார் சிலை அருகே தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
    • முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உரிய உடன்பாடு எட்டப்படாவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தை தொடருவோம்.

    மதுரை:

    தமிழகத்தின் மிகப்பெரிய மாநகராட்சியான மதுரை 100 வார்டுகளை கொண்டது. 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வரும் இங்கு தினமும் சேரும் பல டன் குப்பைகளை நாள்தோறும் வார்டு வாரியாக துப்புரவு பணியாளர்கள் சென்று சேகரித்தும், அப்புறப்படுத்தியும் வருகின்றனர்.

    கடந்த வாரம் சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து துப்புரவு தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சியை சேர்ந்த துப்புரவு தொழிலாளர்கள் நேற்று முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுட்டனர்.

    பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் திரண்டு போராட்டம் நடத்தினர். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பணிகளில் தனியார் மயத்தை புகுத்தும் அரசாணை 152 மற்றும் 139-ஐ ரத்து செய்ய வேண்டும், சுகாதாரம் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய அரசாணை 62 (31)-ன் படி மாதச்சம்பளம் வழங்கிட வேண்டும்.

    அனைத்து பிரிவு பணியாளர்களளுக்கும் தீபாவளி பண்டிகை போனசாக ஒரு மாத சம்பளத்தை வழங்கிட வேண்டியும் சென்னை தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் காவல் துறையின் அராஜகத்தை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது.

    பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, தனியார் ஒப்பந்த நிறுவன பணியை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை முதல் இரவு வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நேற்று 6-வது முறையாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுடன் மாநகராட்சி சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விளக்க கடிதம் கொடுக்கப்பட்ட நிலையிலும் போராட்டம் தொடர்ந்தது. இதனையடுத்து இரவு மதுரை மாநகராட்சி வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்து அடைத்து நள்ளிரவில் விடுவித்தனர்.

    இன்று 2-வது நாளாக மதுரை அவுட் போஸ்ட் அம்பேத்கார் சிலை அருகே தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் எதிரொலியாக மாநகராட்சி வளாகம் முழுவதிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தூய்மை பணியாளர்கள் கலைந்து செல்லாவிட்டால் கைது செய்வோம் என்று போலீசார் எச்சரித்தனர்.

    இந்நிலையில் தொழிற்சங்கத்தினர் காவல்துறையினரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தலைமையில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அவர்லேண்ட் நிறுவன தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட முத்தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், காத்திருப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர்.

    இதுகுறித்த மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை தங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை.

    உரிமைகளுக்காக போராடும் தங்களை போராட கூட விடாமல் தடுக்கும் ஜனநாயகத்திற்கு எதிரான செயலை அரசும், காவல்துறையும் செய்கிறது.

    முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உரிய உடன்பாடு எட்டப்படாவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தை தொடருவோம். எப்போதும் போராட்டத்தில் இருந்து நாங்கள் பின்வாங்க போவதில்லை என்று கூறினார்.

    ×