என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு- தமிழக அரசு அனுமதி
- தூய்மை பணியாளர்களுக்கு தினசரி 3 வேளை உணவு, மாநகராட்சியின் உணவகங்கள் மூலம் வழங்கப்படும்.
- தூய்மை பணியாளர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் முதல் படியாக அமைந்துள்ளது.
தூய்மை பணியாளர்களுக்கு 3 ஆண்டு காலத்திற்கு 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டத்திற்கு ரூ.186 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்றது. அப்போது, முதலமைச்சர் மு.க.ஸடாலின் தூய்மைப் பணியாளர்களுக்காக 6 சிறப்புத் திட்டங்களை அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதலுக்கு தந்தார்.
இதில், தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை கையாளும்போது தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனித் திட்டம் செயல்படுத்தப்படும்.
தூய்மைப் பணியாளர்கள் பணியில் இருக்கும்போது இறக்க நேரிட்டால் நல வாரியம் மூலம் அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதி உதவியுடன் கூடுதலாக ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படும். இதன் மூலம் ரூ.10 லட்சம் அவர்களது குடும்பத்திற்கு கிடைக்கும்.
தூய்மைப் பணியாளர்கள் சுயத்தொழில் தொடங்கினால் 35 சதவீதம் மானியமாக அதாவது, ரூ.3½ லட்சம் வரை வழங்கப்படும்.
6 சதவீத வட்டி மானியத்துடன் வழங்குவதற்கு ஆண்டுக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள் உயர்கல்வியில் சேரும் போதும் உதவித் தொகைத் திட்டம் செயல்படுத்தப்படும்.
அவர்கள் எந்தப் பள்ளியில் பயின்றாலும் கல்விக் கட்டணம், விடுதிக் கட்ட ணம் உள்ளிட்ட அனைத்தும் வழங்கும் வகையில் புதிய கல்வி உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்படும்.
தூய்மைப் பணியாளர்களுக்கு 3 ஆண்டுகளில் வீட்டுவசதி வாரியம் மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் 30 ஆயிரம் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்படும். தூய்மைப் பணியாளர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் வீடுகள் ஒதுக்கப்படும்.
தூய்மை பணியாளர்கள் அதிகாலையிலேயே வேலைக்கு வர வேண்டி இருப்பதால் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் காலை உணவு இலவசமாக வழங்கப்படும். இது சென்னை மாநகராட்சி பகுதியில் உடனடியாக செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று வெளியான அரசாணைப்படி, தூய்மை பணியாளர்களுக்கு காலை, மதியம் மற்றும் இரவு 3 வேளைகளும் இலவச உணவு வழங்கப்படும். இது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் முதற்கட்டமாக செயல்படுத்தப்படுகிறது.
சென்னை மாநகராட்சியில் 10,000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், இந்தத் திட்டம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என அரசு எதிர்பார்க்கிறது. அரசாணைப்படி, தூய்மை பணியாளர்களுக்கு தினசரி 3 வேளை உணவு, மாநகராட்சியின் உணவகங்கள் மூலம் வழங்கப்படும்.
காலை உணவில் இட்லி, போன்றவை, மதியம் ரசம், சாம்பார், கூட்டு, இரவு சப்பாத்தி அல்லது ரொட்டி உள்ளிட்டவை அடங்கும். இந்த உணவுகள், ஊட்டச்சத்து நிறைந்தவையாக இருக்கும். சென்னை மாநகராட்சி, இதற்கான உணவகங்களை அமைத்து, பணியாளர்களின் பணி நேரத்துடன் ஒத்திசைவாக வழங்கும் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இந்தத் திட்டம், தூய்மை பணியாளர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் முதல் படியாக அமைந்துள்ளது" குறிப்பிடப்பட்டுள்ளது.






