என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு கிடைத்த தீர்வு - அமைச்சர் சேகர்பாபு வாக்குறுதி
- தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
- தூய்மைப் பணியாளர்களை அமைச்சர் சேகர் பாபு மற்றும் மேயர் பிரியா நேரில் சந்தித்து பேசினர்
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மாநகராட்சி பணிகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சியில் உள்ள 5 மற்றும் 6-வது மண்டலங்களில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அம்பத்தூரில் உண்ணாவிரதம் இருந்து வந்த சென்னை மாநகராட்சியின் 5வது மற்றும் 6வது மண்டல தூய்மைப் பணியாளர்களை அமைச்சர் சேகர் பாபு மற்றும் மேயர் பிரியா நேரில் சந்தித்து பேசினர்.
இதனையடுத்து பழச்சாறு கொடுத்து பெண் தூய்மைப் பணியாளரின் உண்ணாவிரதத்தை அமைச்சர் சேகர் பாபு முடித்து வைத்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "இம்மாத இறுதிக்குள் தூய்மை பணியாளர்கள் சென்னை மாநகராட்சியின் கீழ் பணி அமர்த்தப்படுவார்கள். இந்த பொங்கல் தூய்மை பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான பொங்கலாக இருக்கும்" என்று வாக்குறுதிஅளித்தார்.
இதனை கேட்டதும் தூய்மைப் பணியாளர்கள்குத்தாட்டம் போட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதன்மூலம் தனியார்மயமாக்கலை எதிர்த்து 150 நாட்களுக்கு மேலாக போராடி வந்த தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தீர்வை எட்டியுள்ளது.






