என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கைதுக்கு பின் விடுவிக்கப்படாத தூய்மை பணியாளர்கள்... விடிய விடிய மண்டபங்களிலும் தொடர்ந்த போராட்டம்
- நேற்று சென்னையின் பல்வேறு இடங்களில் போராட்டத்தை கையிலெடுத்தனர்.
- இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபடுபவர்களை கைதுசெய்து, அன்று மாலையே விடுவிப்பது வழக்கம்.
சென்னையில் தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மண்டலம் 5 மற்றும் 6 ஆகியவற்றில் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கக் கூடாது, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடக்கிறது.
இந்த இரண்டு மண்டலத்தையும் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் நேற்று சென்னையின் பல்வேறு இடங்களில் போராட்டத்தை கையிலெடுத்தனர். அதில் அண்ணா சாலையில் அறிவாலயம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஆலந்தூர், நந்தம்பாக்கம், புளியந்தோப்பு, சைதாப் பேட்டை, கீழ்பாக்கம் உள்ளிட்ட 13 இடங்களில் உள்ள சமுதாய கூடங்கள், மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
பொதுவாக இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபடுபவர்களை கைதுசெய்து, அன்று மாலையே விடுவிப்பது வழக்கம். ஆனால் தூய்மை பணியாளர்களை பொறுத்த வரையில் இன்று காலை வரையில் விடுவிக்கப்படவில்லை. மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விடுவிக்கப்படாத நிலையில், தாங்கள் தங்கி இருக்கின்ற சமுதாயக்கூடம் மற்றும் கல்யாண மண்டபங்களிலேயே போராட்டத்தை தொடர்கின்றனர். தொடர் மற்றும் போலீசார் இல்லாத இடங்களை பார்த்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை தொடர்வதால் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மாநகராட்சியின் அனைத்து நுழைவு வாசல்களும் அடைக்கப்பட்டுள்ளன. போராட்டக்காரர்கள் உள்ளே நுழைந்து விடாமல் இருப்பதற்காக அங்கும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.






