என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் - வீரமணி வேண்டுகோள்
    X

    தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் - வீரமணி வேண்டுகோள்

    • சென்னை மாநகராட்சி முன்பு கடந்த 1-ந் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
    • தூய்மை பணியாளர்கள் போராட்டம் இன்று 10-வது நாளை எட்டி உள்ளது.

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் பகுதிகளை உள்ளடக்கிய 5, 6 ஆகிய இரண்டு மண்டலங்களிலும் குப்பைகளை அள்ளும் பணி, மற்றும் பெண் தூய்மை பணியாளர்கள் மூலமாக சாலைகளை சுத்தம் செய்யும் பணி ஆகியவை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக கடந்த மாநகராட்சியுடன் இணைந்து துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 2000 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    இப்படி தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து சென்னை மாநகராட்சி முன்பு கடந்த 1-ந் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தூய்மை பணியாளர்கள் போராட்டம் இன்று 10-வது நாளை எட்டி உள்ளது.

    இந்நிலையில், சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை அரசு சமூகநீதிக் கண்ணோட்டத்தில் பரிசீலிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திராவிடர் கழக தலைவர் வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கடந்த 10 நாள்களாக தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலக வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணிப் பாதுகாப்பு, ஊதியக் குறைப்புக் கூடாது, தூய்மைப் பணியைத் தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு ஆகியவை அவர்களின் கோரிக்கைகளாகும்.

    2007-ஆம் ஆண்டு தூய்மைப் பணியாளர் நல வாரியத்தை உருவாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர் தான்! வெள்ளத்தின் போதும், கரோனாவின் போதும் தூய்மைப் பணியாளர்கள் ஆற்றிய தொண்டு அளப்பரியது. அவர்களின் உழைப்பைப் போற்றி விருந்து வைத்து நன்றி தெரிவித்தவர் நம்முடைய முதலமைச்சர்.

    பெரிதும் ஒடுக்கப்பட்ட சமூகத்தவரான உழைக்கும் மக்களே இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த மக்களுக்குச் சமூகநீதியும், கல்வியும் கிடைக்க வேண்டும் என்பதையே முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு தான் தமிழ்நாடு அரசு செயல்பட்டுவருகிறது.

    ''அனைவருக்கும் அனைத்தும்' என்பதே நமது இலக்கு'' என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து உறுதிபடத் தெரிவித்து, அந்த இலக்கை நோக்கி அரசை நடத்தி வருகிறார். அவருடைய உழைப்பையும், நோக்கத்தையும், செயல்பாட்டையும் இத்தகைய பிரச்சினைகளைக் காட்டி, தி.மு.க. ஆட்சிக்கு எதிராகப் பிறர் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கக் கூடாது.

    நகரைத் தூய்மைப்படுத்தும் பணியாளர்களின் உரிமையும், பணிப் பாதுகாப்பும், அவர்களின் நலனும் நாம் முக்கியமாகக் கவனம் செலுத்த வேண்டிய பிரச்சினைகளாகும். 'நகர சுத்தித் தொழிலாளர்களை அரசு ஊழியர்களாகவே ஆக்க வேண்டும்' என்பதே தந்தை பெரியார் அவர்களின் நிலைப்பாடாகும். நாளையும் வெள்ளம், மழை, புயல் என்று வருமேயானால், அப்போதும் முன் களத்தில் நிற்கப்போகும் பணியாளர்கள் அவர்களே!

    எனவே, தமிழ்நாடு அரசு இதில் தனது சமூகநீதிப் பார்வைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்; மனிதநேயத்தோடு அவர்களை அணுக வேண்டும் என்று நம்முடைய முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து, உடனடியாக அவர்களின் போராட்டத்தை முடித்துவைக்க வேண்டுகிறோம். இது அவசிய அவசரமாகும்" என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×