என் மலர்
நீங்கள் தேடியது "கடிதம்"
- சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தடயங்களைச் சேகரித்து விசாரணை நடத்தினர்.
- வீட்டில் பெரிய அளவில் பணம் இல்லாத விரக்தியில் திருடன் கடிதம் எழுதி வைத்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை:
நெல்லையை அடுத்த பழையபேட்டை காந்தி நகரில் கிறிஸ்தவ ஊழியம் செய்து வரும் ஜேம்ஸ் பால் (வயது 57) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பீட்டா. இவர்களது மகள் மதுரையில் உள்ள ஒரு வங்கியில் பணிபுரிந்து வரும் நிலையில் அங்கு தங்கியுள்ளார். இதனால் ஜேம்ஸ் பால் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் மதுரை புறப்பட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது செல்போன் மூலம் வீட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை பார்த்தபோது அது இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால், நேற்று காலை பார்த்தபோது கேமரா இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ஜேம்ஸ் பால், தனது பக்கத்து வீட்டாருக்கு தகவல் அளித்துள்ளார். அவர்கள் சென்று பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
உடனடியாக மதுரையில் இருந்து நெல்லைக்கு விரைந்து வந்த ஜேம்ஸ் பால், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த உண்டியல் மற்றும் மணி பர்ஸ் ஆகியவற்றில் வைக்கப்பட்டிருந்த ரூ. 25 ஆயிரம் திருட்டு போயிருந்தது.
இதுகுறித்து அவர் பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தடயங்களைச் சேகரித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவரது வீட்டின் அறையில் திருடன் எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் சிக்கியது. அதில், "உன் வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை. இதற்கு இத்தனை கேமராவா? அடுத்த முறை என்னை மாதிரி யாராவது திருடன் வந்தால் ஏமாறாமல் இருக்க காசாவது வை. மன்னித்துக்கொள்ளவும். இப்படிக்கு திருடன்" என்று எழுதப்பட்டிருந்தது.
அந்த கடிதத்தை கைப்பற்றிய காவல்துறையினர், அந்தப் பகுதியில் உள்ள மற்ற சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து, இந்த நூதன திருட்டில் ஈடுபட்ட நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். வீட்டில் பெரிய அளவில் பணம் இல்லாத விரக்தியில் திருடன் கடிதம் எழுதி வைத்துச்சென்ற இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தமிழ்நாட்டைச் சேர்ந்த 128 மீனவர்களும் 248 மீன்பிடிப் படகுகளும் இலங்கை காவலில் உள்ளன.
- மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை முதலமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்களையும், அவர்களது எந்திரப் படகினையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
இந்திய மீனவர்களும் அவர்களது மீன்பிடி படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது ஆழ்ந்த கவலைக்குரியதாக உள்ளதென குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், 2024-ம் ஆண்டில் கைது செய்யப்பட்ட பல மீனவர்கள் இன்னும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 128 மீனவர்களும் 248 மீன்பிடிப் படகுகளும் இலங்கை காவலில் உள்ளதாகவும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் மீன்பிடித் தொழிலை முதன்மை வாழ்வாதாரமாக நம்பி உள்ள கடலோர சமூகங்களை ஆழமாகப் பாதித்து உள்ளதாகவும், அவர்களின் குடும்பங்களுக்குக் கடுமையான துன்பங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காண கூட்டுப் பணிக்குழுவை மீண்டும் உயிர்ப்பித்திடவும், இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நீடித்தத் தீர்வை அடைந்திட ஒருங்கிணைந்த முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களை விடுவிப்பதற்கும் அவர்களின் மீன்பிடிப் படகுகளை மீட்பதற்கும் தேவையான அனைத்துத் தூதரக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு அவர்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்கு வழிவகை செய்யுமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
- மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு நேரு அருங்காட்சியகம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
- அனைத்து பிரதமர்களின் அருங்காட்சியகம் மற்றும் நூலகமாக மாற்றப்பட்டது.
புதுடெல்லி:
மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு நேரு அருங்காட்சியகம் விரிவாக்கம் செய்யப்பட்டு, அனைத்து பிரதமர்களின் அருங்காட்சியகம் மற்றும் நூலகமாக மாற்றப்பட்டது.
அதற்கு முன்னதாக கடந்த 2008-ம் ஆண்டு நேருவின் முக்கியமான கடிதங்களை சோனியா காந்தி குடும்பத்தினர் திரும்பப் பெற்றனர். அருங்காட்சியக இயக்குநரின் ஒப்புதலுக்குப் பிறகு 51 அட்டைப் பெட்டிகளில் நேருவின் ஆவணங்கள் சோனியா காந்தியிடம் வழங்கப்பட்டது.
அதில், இந்தியாவின் கடைசி பிரிட்டிஷ் வைஸ்ராய் மனைவி எட்வினா மவுண்ட்பேட்டன், சோசலிஸ்ட் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயண் மற்றும் தலித் தலைவர் ஜெகஜீவன் ராம் போன்றவர்களுக்கு நேரு எழுதிய கடிதங்கள் உள்ளன. அந்தக் கடிதங்களை சோனியா காந்தி அருங்காட்சியகத்திற்கு திருப்பி தர வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சோனியா காந்தியிடம் இருந்து பிரதமர் நேருவின் கடிதங்களை திரும்பப் பெறுவதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- மகேஷ்பாபு ஐதராபாத்தில் இயங்கி வரும் சூரானா குழுமம் மற்றும் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் நிறுவன விளம்பரங்களில் நடித்தார்.
- நடிகர் மகேஷ்பாபு சாய் சூர்யா டெவலப்பர்ஸ் நிறுவனத்தில் இருந்து ரூ.5.90 கோடி பெற்றார்.
தெலுங்கு திரைப்பட நடிகர் மகேஷ்பாபு ஐதராபாத்தில் இயங்கி வரும் சூரானா குழுமம் மற்றும் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் நிறுவன விளம்பரங்களில் நடித்தார்.இவர் நடித்து கொடுத்த பில்டர்ஸ் நிறுவனம் மக்களை ஏமாற்றியுள்ளதாக சில வாரங்களுக்கு முன் குற்றச்சாட்டு எழுந்தது. இவர்களின் நிறுவனத்தின் விளம்பர படத்தில் நடித்ததால் மகேஷ் பாபுவிறுகு அமலாக்கத்துறை சம்மனை அனுப்பியது.
விளம்பர படத்தில் நடிப்பதற்காக நடிகர் மகேஷ்பாபு சாய் சூர்யா டெவலப்பர்ஸ் நிறுவனத்தில் இருந்து ரூ.5.90 கோடி பெற்றார். இதில் ரூ.2.50 கோடி ரொக்கமாகவும், மீதம் உள்ள பணம் வங்கிக் கணக்கில் பெறப்பட்டது.
பணம் பெற்றது சம்பந்தமாக நடிகர் மகேஷ்பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கூறியிருந்தனர்.
இந்த நிலையில் விசாரணைக்கு தற்போது ஆஜராக முடியாது என மகேஷ்பாபு அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அதில் முன்னரே தீர்மானிக்கப்பட்ட அட்டைவனையின்படி சினிமா படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இதனால் இன்று விசாரணைக்கு ஆஜராக முடியாது. விசாரணைக்கு ஆஜராக வேறு ஒரு தேதியை அறிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
- டைட்டானிக் உலகின் மிகப்பிரமாண்டமான சொகுசு கப்பலாகும்.
- உலகையே உலுக்கிய இந்த விபத்து ஹாலிவுட் படமாகவும் வெளிவந்துள்ளது.
லண்டன்:
உலகப் புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் 1912-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்துக்குப் புறப்பட்டது.
அந்தக் காலத்தில் உலகின் மிகப்பிரமாண்டமான சொகுசு கப்பல் இதுவாகும். ஆனால், தனது முதல் பயணத்திலேயே அந்தக் கப்பல் அட்லாண்டிக் பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கியது. இதில் 1,500-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
உலகையே உலுக்கிய இந்த விபத்து ஹாலிவுட் படமாகவும் வெளிவந்துள்ளது. அந்த கப்பலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் அவ்வப்போது ஏலம் விடப்படுவது வழக்கம்.
இந்நிலையில், டைட்டானிக் கப்பலில் இருந்து கர்னல் ஆர்ச் சிபால்ட் கிரேசி என்பவர் எழுதிய ஒரு கடிதம் லண்டனில் ஏலத்துக்கு விடப்பட்டது. அதனை ஹென்றி ஆல்ட்ரிட்ஜ் என்பவர் சுமார் மூன்றரை கோடி ரூபாய்க்கு வாங்கினார்.
அந்தக் கடிதத்தில் பயணம் நிறைவு செய்த பிறகே சிறந்த கப்பல் என தீர்ப்பு வழங்க முடியும் என எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கருவூலம் மூலம் ஊதியம் வழங்க கோரி கிராம ஊராட்சி செயலர்களுக்கு கடிதம் அனுப்பும் இயக்கம் நடந்தது.
- மாத ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் அரசு கருவூலத்தில் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ராமநாதபுரம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்துப் பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் சார்லஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 4 கட்ட போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதற்கட்டமாக அரசுக்கு 1 லட்சம் கடிதங்கள் அனுப்பும் இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் 1 லட்சம் கடிதம் அனுப்பும் இயக்கம் தபால் அலுவலகத்தில் ஊராட்சி செயலர்கள் சங்க ஒன்றிய தலைவர் ஜெயபால் தலைமையில், மாவட்ட துணைத்தலைவர் சேகுஜலாலுதீன் முன்னிலை யில் நடந்தது.
அனைத்துப் பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் குணசேகரன், ஒன்றிய தலைவர் கஜேந்திரன், செயலாளர் மங்களசாமி, ஊராட்சி செயலர்கள் வாணி, நாகராஜ், பாலகிருஷ்ணன், லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மாவட்ட துணைத்தலைவர் சேகு ஜலாலுதீன் கூறியதாவது:-
கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் கிராம ஊராட்சி செயலர்களுக்கு அரசு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும், பணிக்காலத்தை கருத்தில் கொண்டு தேர்வுநிலை. சிறப்புநிலை ஊதியம் வழங்க வேண்டும்.
ஒய்வு பெற்ற ஊராட்சி செயலருக்கு மாதாந்திர ஓய்வூதியத் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்த வேண்டும். கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம், ஓய்வு பெறும் போது ஒட்டு மொத்த பணிக்கொடை ரூ.2 லட்சம் மற்றும் மாத ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் அரசு கருவூலத்தில் வழங்க வேண்டும்.
கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக் காவலர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்குவதுடன், மாத ஊதியத்தை ஊராட்சி மூலம் நேரடியாக வழங்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்கி அவர்களின் ஊதியத்தை அரசு கருவூலத்தில் வழங்கவும், ஊரக வளர்ச்சித் துறையில் அலுவலகம் நேரம் தாண்டி பணிகளை செய்ய நிர்ப்பந்தித்தல், இரவு நேரங்கள், விடுமுறை நாட்கள் அவசரப் பணி என்று சொல்லி காலநேரம் வழங்காமல் சாத்தியமற்ற பணிகளை உடனே செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்தம் அளிப்பதையும், பணியில் நெருக்கடி நிலையை முற்றிலும் தவிர்க்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த கடிதம் அனுப்பும் இயக்கம் நடந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வீட்டின் மீது வாங்கிய கடனை அடைக்க முடியாமல் சிரமப்பட்டதாக தகவல்
- சேலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
களரம்பட்டி:
சேலம் களரம்பட்டி ஸ்ரீராம் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 31). தறி வேலை செய்யும் இவருக்கு, கடந்த 4 ஆண்டுக்கு முன்பு பூஜா (24) என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு வினாயக் (2 1/2) என்ற ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, பூஜா திடீரென வீட்டில் தூக்குப் போட்டுக் கொண்டார். இதைக் கண்ட உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பூஜா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகார் பேரில் செவ்வாய்ப்பேட்டை போலீசார் பூஜாவின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது பூஜா வீட்டில் உள்ள அறையில் கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், தற்கொலை செய்து கொள்ளும் முடிவை தானே எடுத்ததாகவும், தனது வீட்டின் மீது வாங்கிய கடனை அடைக்க முடியாமல் சிரமப்பட்டு வந்ததாகவும் பூஜா குறிப்பிட்டுள்ளார். மேலும் முதுகு தண்டுவட வலியால் அவதிப்பட்டு, அதற்காக நிறைய மருத்துவ செலவுகள் செய்ததால் கடன் சுமை மேலும் அதிகமானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது உடலை ஏதேனும் ஒரு மருத்துவமனைக்கு தானமாக கொடுத்து அதில் வரும் பணத்தை கொண்டு தனது வீட்டு கடனை அடைக்குமாறும் அந்த கடிதத்தில் பூஜா உருக்கமாக எழுதி உள்ளார். பூஜாவிற்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால், சேலம் டவுன் போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன், சேலம் சப்-கலெக்டர் விஷ்ணுவர்த்தினி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மதுரையில் டைடல் பூங்காவுக்கு இடம் கேட்டு மாநகராட்சி கமிஷனருக்கு கடிதம் அனுப்பி வைத்து உள்ளார்.
- அப்போது தான் அங்கு பணிகளை விரைவாக தொடங்க முடியும்” என்று கூறப்பட்டுள்ளது.
மதுரை
தமிழகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்தும் வகையிலும், இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையிலும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்காக சென்னை, கோவை ஆகிய பகுதிகளில் டைட்டல் பூங்கா உருவாக்கப்பட்டு உள்ளது. இதே போல மதுரை மாநகராட்சியுடன் இணைந்து மாட்டுத்தாவணியில் ரூ.600 கோடியில் டைட்டல் பூங்கா, 5 ஏக்கரில் கட்டப்படும். இதன்மூலம் 10ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அடுத்தபடியாக மேலும் 5 ஏக்கரில் டைட்டல் பூங்கா விரிவுபடுத்தப்படும்" என்று தமிழக அரசு அறிவித்தது.
மதுரையில் கடந்த செப்டம்பர் மாதம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சார்பில் நடந்த தெற்கு மண்டல மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித்சிங் கலோன் மற்றும் வருவாய்த்துறை, நில அளவை, நில எடுப்பு உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.
அப்போது மதுரை மாட்டுத்தாவணி மைதா னத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பூர்வாங்க பணிகள் குறித்து கேட்ட றிந்தார். அப்போது டைடல் பார்க் அமைக்க தேவையான நிலம் உள்ளதா? என்பது குறித்தும் ஆராயப்பட்டது.
இந்த நிலையில் டைடல் பார்க் நிர்வாக இயக்குனர் வந்தனா கார்க், மதுரை மாநகராட்சி கமிஷனருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து உள்ளார்.
அந்த கடிதத்தில், மாட்டுத்தாவணியில் ஒதுக்கீடு செய்ய உள்ள 5 ஏக்கர் நிலத்தின் சர்வே எண், பரப்பளவு, நிலத்தின் மதிப்பு ஆகியவை தொடர்பான விவரங்களை விரைவாக அனுப்பி வையுங்கள். அப்போது தான் அங்கு பணிகளை விரைவாக தொடங்க முடியும்" என்று கூறப்பட்டுள்ளது.
- அதிர்ச்சியடைந்த பெற்றோர் குளச்சல் போலீசில் புகார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து அபிலாஷை தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
குளச்சல் அருகே மேற்கு நெய்யூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் மகன் அபிலாஷ் (வயது 15). குளச்சலில் ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.கடந்த 9-ந் தேதி மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த அபிலாஷிற்கு லேசான காய்ச்சல் இருந்த நிலையில் அறையில் படுக்க சென்றார்.
மறுநாள் காலை பெற்றோர் அறைக்கு சென்று பார்த்த போது அபிலாஷை காணவில்லை. வீட்டிலிருந்த தந்தையின் ஸ்கூட்டர் மற்றும் பீரோவி லிருந்து ரூ.7 ஆயிரம் மற்றும் துணி மணிகளையும் எடுத்துக்கொண்டு மாய மானது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சிய டைந்த பெற்றோர் அறையை சோதித்து பார்த்த னர். அப்போது அபிலாஷ் எழுதிய கடிதம் சிக்கியது.
அதில் அன்புள்ள அப்பா அம்மாவுக்கு என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு படிப்பதற்கு விருப்பமில்லை. வீட்டில் என்னை அடிக்கடி படிக்க வற்புறுத்துவதால் வீட்டை விட்டு நான் கண்காணாத இடத்திற்கு செல்கிறேன்.
என்னை அப்பாவும், அம்மாவும் தேட வேண்டாம். நான் கண்காணாத இடத்தில் ஓர் சிறிய கூலி வேலை செய்தாவது வாழ்கையில் முன்னேறுவேன்.அதனால் என்னை தேட வேண்டாம்.
நான் இனி இந்த கன்னி யாகுமரி மாவட்டத்திற்கு வரவே மாட்டேன். நீங்கள் என்னை போலீசில் புகார் செய்தால், போலீஸ் என்னை பிடித்தால் நான் வரும் வழியிலேயே இறந்து விடுவேன். அதை மீறி அவர்கள் வீட்டிற்கு அழைத்து வந்தார்கள் என்றால் நான் என் வீட்டிலேயே தூக்கில் தொங்குவேன். எனவே நான் கண்காணாத இடத்தில் போய் எனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்வேன். சாரி என எழுதப்பட்டிருந்தது. இது குறித்து தந்தை சதீஷ்குமார் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அபிலாஷை தேடி வருகின்றனர்.
- மாவட்ட செயலாளரின் செயல்பாடுகள் குறித்து பலமுறை தலைமையிடம் சொல்லியும் எந்த பலனும் இல்லை.
- 6 ஆண்டுகளாக நாங்கள் கட்சியில் பணியாற்றி வருகிறோம்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அம்மா பேரவை செயலாளர் ரத்தினசாமி தலைமையில் 80-க்கும் மேற்பட்டவர்கள் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில் 'கடந்த 6 ஆண்டுகளாக நாங்கள் கட்சியில் பணியாற்றி வருகிறோம். மாவட்ட செயலாளரின் செயல்பாடுகள் குறித்து பலமுறை தலைமையிடம் சொல்லியும் எந்த பலனும் இல்லை. எனவே நாங்கள் எங்கள் பதவிகளில் இருந்து விலக்கிக்கொள்கிறோம்' என்று தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ரத்தினசாமியிடம் கேட்டபோது, 'எங்கள் புகாரை தெரிவித்தும் நடவடிக்கை இல்லாததால் 80-க்கும் மேற்பட்டவர்கள் பெயர், பொறுப்பு விவரத்துடன் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக கடிதம் அனுப்பியுள்ளோம்' என்றார்.
- மணிகண்டன் தனது தாய்க்கு சாதகமாக பேசியதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
- போலீசார், உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், கஜுவாக்கா பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் சாப்ட்வேர் என்ஜினியர். இவரது மனைவி சுவேதா (வயது 24). தம்பதிக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
மணிகண்டனின் தாய் அப்பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். சுவேதா தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு மணிகண்டன் அலுவலக வேலையாக ஐதராபாத் சென்றார்.
இந்நிலையில் நேற்று மாலை மணிகண்டனின் தாய்க்கும் சுவேதாக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
பின்னர் மணிகண்டனின் தாய் ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு சென்றுவிட்டார். மணிகண்டனுக்கு போன் செய்த சுவேதா உன்னுடைய தாய் அடிக்கடி என்னிடம் சண்டை போட்டு வருகிறார் என கூறினார்.
அப்போது மணிகண்டன் தனது தாய்க்கு சாதகமாக பேசியதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து வீட்டை பூட்டிய சுவேதா பக்கத்து வீட்டுக்காரரிடம் சாவியை கொடுத்துவிட்டு விசாகப்பட்டினம் கடற்கரைக்கு சென்றார். அங்குள்ள காளி கோவில் அருகே சுவேதா கடலில் குதித்தார்.
அவரை பல இடங்களில் தேடினர். அவரது மாமியார் இது குறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்வேதாவை தேடி வந்தனர்.
நள்ளிரவு 12 மணி அளவில் விசாகப்பட்டினம் கடற்கரையில் சுவேதா பிணமாக மிதந்தார்.
ஸ்வேதாவின் பிணத்தை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் சுவேதாவின் அறையில் போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது ஸ்மைலி பொம்மையுடன் வெள்ளை பேப்பரில் 'எல்லாவற்றிற்கும் ஒரு பெரிய நன்றி' என்று சுவேதா மணிகண்டனுக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
அதில் 'நான் இல்லாமல் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று எனக்கு எப்போதும் தெரியும். உங்களுக்கு உண்மையான வலி இருக்காது.
எவ்வாறாயினும் உங்கள் எதிர்காலம். புதிய வாழ்க்கைக்கு ஆல் தி பெஸ்ட். பேசுவதற்கு நிறைய இருந்தாலும்.. நான் எதுவும் பேசவில்லை.
உனக்கு எல்லாம் தெரியும். உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்' என தெரிவித்துள்ளார்.
ரூ.10 லட்சம் வரதட்சணை போதவில்லை எனக்கூறி மாமியார் தொல்லையால் சுவேதா உயிரை மாய்த்துக்கொண்டதாக அவரது தாய் ரமா கதறி அழுதார்.
இதுகுறித்து போலீசார், உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தலையில் இருந்த மூட்டையில் என்ன இருக்கிறது என்று கேட்டபோது தனது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்த கடிதம் என தெரிவித்தார்.
- நகலை தர வேண்டுமானால் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை என்பதால் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் காலையிலிருந்து கோரிக்கை மனு அளிக்க நேரில் வந்தனர்.
இந்நிலையில் முதியவர் ஒருவர் மனுக்களை தலையில் கட்டி வைத்துக்கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்தார். அப்போது அந்த முதியவர் நெற்றியில் பட்டை நாமம் போட்டு கொண்டு வந்தார். அவரது தலையில் இருந்த மூட்டையில் என்ன இருக்கிறது என்று கேட்டபோது தனது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்த கடிதம் என தெரிவித்தார்.
இவர் திட்டக்குடி வட்டம் வடகிராம பூண்டி கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி ஆவார். அவர் கூறும்போது, எனது நிலத்திற்கு பட்டா மாற்ற செய்வதற்காக உரிய மனு அளித்தேன். இதற்கான உத்தரவு நகல் வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் விருத்தாச்சலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் வேலை செய்யும் அலுவலர் ஒருவர் இந்த நகலை தர வேண்டுமானால் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.
வருவாய் துறையினரும் இதற்கு ஆதரவு அளித்து வருவதோடு அரசு புறம்போக்கு இடங்களை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என 33 முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார்.
33 முறை மனு அளித்த அனைத்து கோரிக்கை மனுவையும் மூட்டையாக தலையில் வைத்து கொண்டு வந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பாக காணப்பட்டது.






