என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pregnant woman"

    • தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் இன்று நடக்கிறது.
    • கர்ப்பிணிகள், மாணவர்கள், முதியவர்கள் மாநாட்டில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என்று விஜய் கேட்டுக் கொண்டார்.

    புதுக்கோட்டை:

    தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப் பத்தி பகுதியில் இன்று நடை பெறுகிறது.

    பாதுகாப்பு காரணங்களை அடிப்படையாக கொண்டு கர்ப்பிணிகள், மாணவர்கள், முதியவர்கள் மாநாட்டில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என்று த.வெ.க. தலைவர் விஜய் கேட்டுக் கொண்டார்.

    இந்நிலையில் புதுக்கோட்டையில் இருந்து கர்ப்பிணி பெண் தனது மகனுடன் மாநாட்டுக்கு புறப்பட்டுள்ளார். மாநாட்டிற்கு வர வேண்டாம் என நிர்வாகிகள் வலியுறுத்தியும் எப்படியாவது விஜயை பார்த்தாக வேண்டும், தனக்கு ஒன்றும் நிகழாது என அந்த பெண் கண்ணீருடன் கூறினார்.

    • பாரதியின் உயிருக்கு ஆபத்து என்பதால் பெண் போலீஸ் கோகிலா தைரியமாக ஆட்டோவில் வைத்தே அவருக்கு பிரசவம் பார்த்தார்.
    • கோகிலாவை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள், போலீசார், பொதுமக்கள் பாராட்டினர்.

    திருப்பூர்:

    சுதந்திர தினத்தையொட்டி நேற்றிரவு திருப்பூர் 15 வேலம்பாளையம் காவல் நிலையத்திற்குட்பட்ட திருமுருகன்பூண்டி ரிங் ரோடு ஏ.வி.பி., பள்ளி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது நள்ளிரவு 12 மணி அளவில் அந்த வழியாக ஆட்டோ ஒன்று வந்தது. அதில் வந்த பெண் கதறி அழுவதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் போலீஸ் கோகிலா மற்றும் போலீசார் உடனே ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பாரதி என்பவரை பிரசவத்திற்காக இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அவரது கணவர் அழைத்து செல்வது தெரியவந்தது.

    மேலும் பாரதிக்கு பாதி குழந்தை வெளியே வந்த நிலையில் அவர் கதறி துடித்தார். ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதற்கு முன் குழந்தை பிறந்து விடும் என்பதாலும், பாரதியின் உயிருக்கு ஆபத்து என்பதாலும் நர்சிங் படித்திருந்த பெண் போலீஸ் கோகிலா தைரியமாக ஆட்டோவில் வைத்தே பாரதிக்கு பிரசவம் பார்த்தார். இதில் அழகான பெண் குழந்தை பிறந்தது.

    இதனைத்தொடர்ந்து உடனடியாக பாரதி மற்றும் குழந்தையை திருப்பூர் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்த நிலையில் தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

    பாரதிக்கு பிரசவம் பார்த்து அவரது உயிரை காப்பாற்றிய கோகிலாவை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள், போலீசார், பொதுமக்கள் பாராட்டினர்.

    இதுதொடர்பாக கோகிலா கூறுகையில், நர்சிங் படித்துள்ள நான் மருத்துவமனைகளில் பணியாற்றி உள்ளேன். பிரசவங்களும் பார்த்துள்ளேன். சில மாதங்களுக்கு முன்புதான் தமிழக காவல்துறை பணியில் சேர்ந்தேன். பிரசவம் பார்த்த அனுபவம் இருந்ததால் எந்தவித பதற்றமின்றி நேற்றிரவு பாரதிக்கு பிரசவம் பார்த்தேன். தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர் என்றார்.

    • ரெயிலில் கர்ப்பிணிக்கு பெண்ணுக்கு பாலியல் தொல்லை.
    • கர்ப்பிணி தடுக்கவே, ரெயில் இருந்து தள்ளிவிட்ட கொடூரம்.

    திருப்பூர் மாவட்டம், கந்தம்பாளையத்தில் வசித்துவரும் ஆந்திர மாநிலம், சித்தூர், மங்கலசமுத்திரத்தைச் சேர்ந்த ஜெமினி ஜோசப்பின் மனைவி ரேவதி (வயது 36) என்ற 4 மாத கர்ப்பிணிப் பெண் தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காக கடந்த 6-ந்தேதி பிற்பகல் கோயம்புத்தூர் திருப்பதி விரைவு ரெயிலில் பெண்களுக்கான பெட்டியில் பயணித்தார்.

    அப்போது ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் அப்பெட்டியில் ஏறிய கே.வி.குப்பம், பூஞ்சோலை கிராமம், சின்ன நாகல் பகுதியைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவன் அப்பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளிக்க முயன்றுள்ளார்.

    அதை அப்பெண் தடுக்கவே, அப்பெண்ணை தாக்கி வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சீதாராமன் பேட்டை அருகில் ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதில் அந்தப் பெண் பலத்த காயம் அடைந்தார். அதன் தொடர்ச்சியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது கருச்சிதை ஏற்பட்டது.

    இந்த சம்பவத்தில், ஹேமராஜ் மீது கொலை முயற்சி, பாலியல் தொல்லை உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டான். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து விசாரணை முடிவில் ஹேமராஜ் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், இன்று தண்டனை விவரம் வழங்கப்படும் என அறிவித்தது.

    அதன்படி இன்று, மேஹராஜிக்கு சாகும் வரை சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • ஷாலினியின் உடல் கிடந்த இடத்தில் 19-ந்தேதி செல்போன் சிக்னலில் பதிவாகி இருந்த நம்பர்கள் யாருடையது என விசாரணை மேற்கொண்டனர்.
    • என்னை திருமணம் செய்து கொள். நாம் இருவரும் வேறு ஊருக்கு சென்று விடலாம் என ஷாலினி கூறினார்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி அருகே உள்ள கோனேகவுண்டனூர் கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் அழுகிய நிலையில் பெண் சடலம் ஒன்று நேற்று முன்தினம் இரவு கண்டுபிடிக்கப்பட்டது.

    இது குறித்து தகவலறிந்த வேப்பனஹள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், இறந்து கிடந்த பெண் பல்லேரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தமூர்த்தி மகள் ஷாலினி (வயது25) என்பதும், 8 மாதம் கர்ப்பிணி என்பதும் தெரிந்தது. மேலும் அவர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டும், துப்பட்டாவால் கழுத்து இறுக்கியும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து ஷாலினியின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட அவர் கடந்த 19-ந்தேதி முதல் காணவில்லை என்றும், அவரை தேடி வந்ததாக கூறியுள்ளனர்.

    இதையடுத்து ஷாலினியின் உடல் கிடந்த இடத்தில் 19-ந்தேதி செல்போன் சிக்னலில் பதிவாகி இருந்த நம்பர்கள் யாருடையது என விசாரணை மேற்கொண்டனர். அதில், பந்திகுறி கிராமத்தை சேர்ந்த மேகநாதன் (21) மற்றும் கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரிய அக்ரஹாரத்தை சேர்ந்த புகழேந்தி (19) என்பவர்களின் செல்போன் எண்கள் என தெரியவந்தது.

    இதையடுத்து அவர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், மேகநாதனுக்கும், ஷாலினிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததும், இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் மேகநாதன் தனது நண்பர் புகழேந்தி உதவியுடன் ஷாலினியை கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

    போலீசாரிடம் கள்ளக்காதலன் மேகநாதன் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    பல்லேரிப்பள்ளியை சேர்ந்த ஷாலினிக்கும், வேப்பனஹள்ளி அருகே உள்ள என் தாசிரிப்பள்ளியை சேர்ந்த மதியழகன் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    அதன் பின்னர் ஷாலினி கணவரை பிரிந்து வேப்பனஹள்ளி அருகே உள்ள பந்திகுறியை சேர்ந்த தனது முன்னாள் காதலன் ஆஞ்சி (30) என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் அதே ஊரில் வசித்து வந்தனர். அவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில்தான் ஷாலினிக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஷாலினி அவரது இரண்டாவது கணவருக்கு தெரியாமல் என்னுடன் தொடர்பில் இருந்து வந்தார். நாங்கள் பலமுறை உல்லாசமாக இருந்ததில் ஷாலினி கர்ப்பமானார். அவர் தற்போது 8 மாத கர்ப்பமாக உள்ளார்.

    இந்நிலையில் எனது கர்ப்பத்திற்கு நீ தான் காரணம். எனவே நீ என்னை திருமணம் செய்து கொள். நாம் இருவரும் வேறு ஊருக்கு சென்று விடலாம் என ஷாலினி கூறினார். அவரை திருமணம் செய்ய விரும்பாத நான், அவரை ஏமாற்றி வந்தேன்.

    ஆனாலும் ஷாலினி என்னை விடவில்லை. என்னுடன் அடிக்கடி செல்போனில் பேசி வாக்குவாதம் செய்து வந்தார். கடந்த 19-ந்தேதி என்னை தொடர்பு கொண்டு தனியாக பேச வேண்டும் என்று கூறினார்.

    ஷாலினி மீது வெறுப்பின் உச்சத்தில் இருந்த நான் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். இதற்காக எனது நண்பரான கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரிய அக்ரஹாரத்தை சேர்ந்த புகழேந்தி (19) என்பவரை அழைத்துக்கொண்டு, கத்தியை மறைத்து எடுத்து சென்றேன்.

    நான், ஷாலினி, புகழேந்தி 3 பேரும் ஒரே டூவிலரில் அன்றிரவு 11 மணிக்கு கோனேகவுண்டனூர் வனப்பகுதிக்கு சென்றோம். அங்கு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.

    அப்போது மீண்டும் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஷாலினி கூறினார். அப்போது, ஆத்திரமடைந்த நான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஷாலினியின் கழுத்தில் குத்தினேன். அவர் துடிதுடித்து கீழே விழுந்தார். ஆனாலும் ஆத்திரம் அடங்காத நான் கர்ப்பிணி என்றும் பாராமல் புகழேந்தி உதவியுடன் ஷாலினியின் கழுத்தில் இருந்த துப்பட்டாவால் கழுத்தில் இறுக்கி மரத்தில் கட்டி தூக்கிட்டு துடிக்க துடிக்க கொன்று விட்டு அங்கிருந்து சென்று விட்டோம்.

    ஷாலினியை காணவில்லை என்று அவரது கணவர் ஆஞ்சி மற்றும் குடும்பத்தினர் தேடுவதை அறிந்தேன். போலீசார் எங்களை கண்டுபிடிக்க மாட்டார்கள் என நினைத்தேன். ஆனாலும் செல்போன் டவர் லோகேஷன் மூலமாக எங்களின் எண்ணை போலீசார் கண்டுபிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கைதான மேகநாதன், புகழேந்தி ஆகிய 2 பேரையும் போலீசார் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர். முதல் கணவரை பிரிந்து இரண்டாவது கணவருடன் வாழ்ந்து, பின்னர் வாலிபருடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பால் நிறைமாத கர்ப்பிணி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் வேப்பனப்பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • டாக்டரின் பரிந்துரைப்படி, ரத்த வங்கியில் இருந்து ‘ஏ பாசிட்டிவ்’ வகை ரத்தம் பெறப்பட்டு, சைனாவுக்கு ஏற்றப்பட்டது.
    • சைனாவின் ரத்தவகை ‘பி பாசிட்டிவ்’ என்பதும், ரத்தவகை மாற்றி ஏற்றப்பட்டதால் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் டோங் மாவட்டத்தை சேர்ந்தவர் சைனா (வயது 23). கர்ப்பிணியாக இருந்த இவர், குறைந்த அளவு ரத்தப்புரதம் (ஹீமோகுளோபின்) காரணமாகவும், காசநோய் காரணமாகவும் உடல் நலம் குன்றி இருந்தார். இதற்காக ஜெய்ப்பூரில் உள்ள மாவட்ட அரசு ஆஸ்பத்திரியான சவாய் மான் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

    அங்கு கர்ப்பிணி சைனாவுக்கு ரத்தப்பரிசோதனை உள்பட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. ரத்தப்பரிசோதனை முடிவில் அவரது ரத்த வகை 'ஏ பாசிட்டிவ்' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    டாக்டரின் பரிந்துரைப்படி, ரத்த வங்கியில் இருந்து 'ஏ பாசிட்டிவ்' வகை ரத்தம் பெறப்பட்டு, சைனாவுக்கு ஏற்றப்பட்டது. பின்னர் திடீரென்று சைனாவுக்கு கடுமையான காய்ச்சல், குளிர், ரத்தக்கசிவு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டு அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றப்பட்ட அவருக்கு, மீண்டும் ரத்தப்பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அவரது ரத்தவகை 'பி பாசிட்டிவ்' என்று வந்தது.

    இதையடுத்து டாக்டர்கள் நடத்திய மறு பரிசோதனையில், சைனாவின் ரத்தவகை 'பி பாசிட்டிவ்' என்பதும், ரத்தவகை மாற்றி ஏற்றப்பட்டதால் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது. இதனிடையே உடல்நிலை மிகவும் மோசம் அடைந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் சுவாதி ஸ்ரீவத்சவா கூறுகையில், 'நான் அவரை பரிசோதித்து விட்டு, அவருக்கு சில சிகிச்சைகளுக்கு பரிந்துரை செய்தேன். பின்னர் விடுப்பில் இருந்ததால் என்ன நடந்தது என்பது தெரியாது. இருப்பினும் மற்றவர்களிடம் விசாரித்தபோது, அவருக்கு ரத்தவகை மாற்றி ஏற்றப்பட்டது தெரியவந்தது. ஏற்கனவே கடுமையான காசநோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாலும், அவரது வயிற்றில் இருந்த சிசுவும் இறந்துவிட்டதாலும் அவரது உடல் மிகவும் சிக்கலான நிலைக்கு சென்றுவிட்டது. தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி உயிரிழந்துவிட்டார், என்று கூறினார்.

    அதேநேரம் இதுபற்றி சைனாவின் உறவினர் பிரேம் பிரகாஷ் கூறுகையில், ரத்தம் மாற்றி ஏற்றப்பட்டது குறித்து டாக்டர்கள் எங்களிடம் எதுவும் கூறவில்லை. ஆஸ்பத்திரியின் அலட்சியத்தால் நடந்ததுள்ளது என்று குற்றம் சாட்டினார்.

    இருப்பினும் இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை.

    • உறவினர்கள் தொட்டில் கட்டி அதில் சுமதியை உட்கார வைத்து தூக்கி கொண்டு நடைபயணமாக புறப்பட்டனர்.
    • வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த வனத்திற்கு நடுவே 3 கி.மீ தூரம் சுமதியை உறவினர்கள் தூக்கி வந்தனர்.

    மேட்டுப்பாளையம்:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அடுத்துள்ளது புதூர் ஊராட்சி.

    இங்குள்ள மண்ணா மலைக்கிராமத்தில் பழங்குடியின மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராம மக்கள் தங்கள் அடிப்படை தேவைகளுக்கு கூட பவானி ஆற்றை கடந்து தொங்கு பாலம் வழியாக தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இந்த கிராமத்தை சேர்ந்தவர் சுமதி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இவருக்கு ஜனவரி மாதம் குழந்தை பிறக்கும் என டாக்டர்கள் தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு சுமதிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவர் வலியால் துடித்தார். நள்ளிரவு நேரம் என்பதால் என்னசெய்வது என்று தெரியாமல் உறவினர்கள் தவித்தனர்.

    பின்னர் தொட்டில் கட்டி அவரை ஆஸ்பத்திரிக்கு தூக்கி செல்ல முடிவு செய்தனர். இதையடுத்து உறவினர்கள் தொட்டில் கட்டி அதில் சுமதியை உட்கார வைத்து தூக்கி கொண்டு நடைபயணமாக புறப்பட்டனர்.

    தங்கள் ஊருக்கு நடுவே உள்ள பவானி ஆற்றை அங்குள்ள தொங்கு பாலத்தின் வழியே கடந்தனர். பின்னர் வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த வனத்திற்கு நடுவே 3 கி.மீ தூரம் சுமதியை தூக்கி வந்தனர். பிரதான சாலை வந்ததும், 108 ஆம்புலன்ஸ் மூலம் அங்குள்ள அட்டப்பாடி கோட்டத்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே கர்ப்பிணி பெண்ணை அவரது உறவினர்கள் தொட்டில் கட்டி தூக்கி வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    • கடையநல்லூர் அருகே உள்ள அச்சன்புதூர் பண்ணை வீட்டு தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் மனைவி முகிலா.
    • முகிலாவுக்கு திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

    நெல்லை:

    கடையநல்லூர் அருகே உள்ள அச்சன்புதூர் பண்ணை வீட்டு தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி முகிலா(வயது 19).இவர் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்துவந்தபோது பாஸ்கரனை காதலித்து வந்துள்ளார்.

    பின்னர் அவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பழகி வந்துள்ளனர். இதில் முகிலா கர்ப்பமானார். இதையறிந்த அவரது தந்தை மூக்காண்டி(40), முகிலாவை பாஸ்கரனின் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்துவிட்டார். இதனால் அவரது பெற்றோர் கடந்த டிசம்பர் 17-ந்தேதி பாஸ்கரன்-முகிலாவுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

    திடீர் சாவு

    பாஸ்கரன் லோடுமேன் வேலைக்கு சென்று வந்தார். நேற்று மாலை அவர் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது 6 மாத கர்ப்பிணியாக இருந்த முகிலா படுத்திருந்தார். திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பாஸ்கரன் மற்றும் அவரது பெற்றோர் முகிலாவை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக அச்சன்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே முகிலா எவ்வாறு இறந்தார்? என்பது தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • டாக்டர்கள் நிஷாந்தினிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காமல் காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.
    • மாவட்ட சுகாதாரதுறை அதிகாரிகளும், கர்ப்பிணி பெண் இறந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி சந்தப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கிர்த்திவர்மன். பூ வியாபாரி. இவரது மனைவி நிஷாந்தினி (வயது 22). இவர்களுக்கு ஏற்கனவே 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் 2-வது பிரசவத்திற்காக மனைவி நிஷாந்தினியை நேற்று காலை வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது அங்கிருந்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள், அரை மணி நேரத்தில் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்தனர்.

    இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் நிஷாந்தினிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காமல் கால தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. பிரசவ வழியில் துடித்த நிசாந்தினி, சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    முறையான சிகிச்சை அளிக்காததாலும், கால தாமதம் செய்ததாலும் தான் நிஷாந்தினி உயிரிழந்துள்ளார் எனக் கூறி உறவினர்கள் மருத்துவமனையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம் மாவட்ட சுகாதாரதுறை அதிகாரிகளும், கர்ப்பிணி பெண் இறந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், நிஷாந்தினி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தில் பணியில் இருந்த டாக்டர்களிடம் இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் கேட்டுள்ளது. 

    • திண்டுக்கல்லில் வளைகாப்பு விழாவில் பங்கேற்ற ஒரு தரப்பினர் கர்ப்பிணியை சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அபிராமிகு ப்பத்தை சேர்ந்தவர் சக்திவேல்(32). இவருக்கும் தேனி மாவட்டம் தேவதா னப்பட்டியை சேர்ந்த நாகவேணிஎன்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    7 மாத கர்ப்பிணியாக இருந்த நாகவேணிக்கு நேற்று சிலுவத்தூர் சாலை யில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில் பங்கேற்ற ஒரு தரப்பினர் திடீரென நாகவேணியை கர்ப்பிணி என்றும் பார்க்காமல் சரமாரியாக தாக்கினர். இதை தடுக்க வந்த அவரது கணவரையும் தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர்.

    இதனால் மண்டபத்தில் பரபரப்பான சூழல் உருவானது. படுகாய மடைந்த 2 பேரும் திண்டு க்கல் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்ப ட்டுள்ளனர். இதுகுறித்து நகர் வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு, கூல்டிரிங்ஸ் பாட்டிலில் விஷம் எடுத்து வந்து குடிக்க முயன்றார்.
    • உடனடியாக அமலாவிடம் இருந்து மருந்து பாட்டிலை பறித்து அவரை மீட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் அடுத்த நரவலூரைச் சேர்ந்தவர் அமலா (வயது 25). இவர், நேற்று கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு, கூல்டிரிங்ஸ் பாட்டிலில் விஷம் எடுத்து வந்து குடிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்து, உடனடியாக அமலாவிடம் இருந்து மருந்து பாட்டிலை பறித்து அவரை மீட்டனர்.

    பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கூறியதாவது:-

    எனது முதல் கணவர் நோயால் பாதிக்கப்பட்ட தால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டோம். அதையடுத்து ராஜேஷ் என்பவரை 2-வது திரும ணம் செய்து கொண்டேன்.

    தற்போது நான் 3 மாத கர்ப்பமாக இருக்கிறேன். இந்நிலையில், என் மாமியாரும், அவரது ஆண் நண்பரும் சேர்ந்து, என்னை அடித்து துன்புறுத்துகின்ற னர். மேலும் எனது கணவரின் ஆண் நண்பர் என்னை தவறான தொடர்புக்கு அழைக்கிறார்.

    மேலும், வயிற்றில் உள்ள குழந்தை என்னுடையது இல்லை. அதனால், அதனை கலைத்துவிடும்படி கூறி கணவரும் அடிக்கடி அடித்து துன்புறுத்துகிறார். வேறு சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்ததால், என் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என்னை குடும்பத்தை விட்டு ஒதுக்கி வைத்துவிட்டனர். அதனால் சாப்பாட்டுக்கு மிகவும் கஷ்டப்படுகிறேன்.

    இது குறித்து, நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் இதுவரை எவ்வித நடவ டிக்கையும் எடுக்கவில்லை. அதனால், நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன் என்று கூறினார். தொடர்ந்து, அந்த இளம்பெண்ணை, போலீசார், சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். கலெக்டர் அலுவலகம் முன், பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதி யில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தகவல் அறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
    • கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை அதிகாரிப்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்தியா (வயது 23) என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    தற்போது சந்தியா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு அவருக்கு வாந்தியுடன், தலை சுற்றல் ஏற்பட்டது. கதவை திறந்து வெளியே வந்த சந்தியா, வாந்தி எடுத்த நிலையில் அருகில் இருந்த சாக்கடை கால்வாய் தவறி விழுந்தார்.

    இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சந்தியா பரிதாபமாக இருந்தார். தகவல் அறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

    சாக்கடை கால்வாயில் கர்ப்பிணி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சந்தியாவின் உடலை பார்த்து அவரது கணவர், உறவினர்கள் கதறி அழுதது காண்போர் கண்களை குளமாக்கியது.

    • வழக்கு பதிவு செய்த போலீசார், ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரை செய்தனர்.
    • 4 மாத கர்ப்பிணி பெண் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே மணக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகள் சந்தியா (வயது 25). இவருக்கும் விழுப்புரத்தை அடுத்த சத்தியகண்டநல்லூரை சேர்ந்த திருமலை என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் ஆனது. இதில் கருவுற்ற சந்தியா 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதையடுத்து தனது தாய் வீட்டில் சில நாள் தங்கி ஓய்வு எடுக்க சந்தியா மணக்குப்பம் கிராமத்திற்கு வந்தார்.

    இந்நிலையில் சந்தியாவிற்கு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து சந்தியாவை அவரது பெற்றோர், பாவந்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    பணியில் இருந்த நர்ஸ் சந்தியாவை பரிசோதித்து, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பரிந்துரைத்தார். இதையடுத்து 108 ஆம்புலன்சிற்கு போன் செய்யப்பட்டது.

    இதில் 108 ஆம்புலன்ஸ் தற்போது முண்டியம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், 1 மணி நேரம் கழித்தே வரும் என்று பதில் வந்துள்ளது. வேறு வழி இல்லாததால் அங்கேயே இருந்துள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து நள்ளிரவு 1.30 மணிக்கு ஆம்புலன்ஸ் வந்தது. இதில் சந்தியாவை ஏற்றும் போது அவர் மயக்க நிலைக்கு சென்றுவிட்டார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றவுடன், சந்தியாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த சந்தியாவின் பெற்றோர் ஏழுமலை, சுமதி மற்றும் உறவினர்கள் அங்கு கதறி அழுத காட்சி காண்போரை கலங்க வைத்தது. இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசில் சந்தியாவின் பெற்றோர் புகார் அளித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரை செய்தனர்.

    ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததாலும், 108 ஆம்புலன்ஸ் காலதாமதமாக வந்ததாலும், 4 மாத கர்ப்பிணி பெண் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    ×