என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருடன் எழுதி வைத்திருந்த கடிதம்.
ஒரு ரூபாய் கூட இல்லை... இதற்கு இத்தனை கேமராவா? திருட வந்த இடத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்ற திருடன்
- சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தடயங்களைச் சேகரித்து விசாரணை நடத்தினர்.
- வீட்டில் பெரிய அளவில் பணம் இல்லாத விரக்தியில் திருடன் கடிதம் எழுதி வைத்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை:
நெல்லையை அடுத்த பழையபேட்டை காந்தி நகரில் கிறிஸ்தவ ஊழியம் செய்து வரும் ஜேம்ஸ் பால் (வயது 57) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பீட்டா. இவர்களது மகள் மதுரையில் உள்ள ஒரு வங்கியில் பணிபுரிந்து வரும் நிலையில் அங்கு தங்கியுள்ளார். இதனால் ஜேம்ஸ் பால் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் மதுரை புறப்பட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது செல்போன் மூலம் வீட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை பார்த்தபோது அது இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால், நேற்று காலை பார்த்தபோது கேமரா இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ஜேம்ஸ் பால், தனது பக்கத்து வீட்டாருக்கு தகவல் அளித்துள்ளார். அவர்கள் சென்று பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
உடனடியாக மதுரையில் இருந்து நெல்லைக்கு விரைந்து வந்த ஜேம்ஸ் பால், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த உண்டியல் மற்றும் மணி பர்ஸ் ஆகியவற்றில் வைக்கப்பட்டிருந்த ரூ. 25 ஆயிரம் திருட்டு போயிருந்தது.
இதுகுறித்து அவர் பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தடயங்களைச் சேகரித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவரது வீட்டின் அறையில் திருடன் எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் சிக்கியது. அதில், "உன் வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை. இதற்கு இத்தனை கேமராவா? அடுத்த முறை என்னை மாதிரி யாராவது திருடன் வந்தால் ஏமாறாமல் இருக்க காசாவது வை. மன்னித்துக்கொள்ளவும். இப்படிக்கு திருடன்" என்று எழுதப்பட்டிருந்தது.
அந்த கடிதத்தை கைப்பற்றிய காவல்துறையினர், அந்தப் பகுதியில் உள்ள மற்ற சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து, இந்த நூதன திருட்டில் ஈடுபட்ட நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். வீட்டில் பெரிய அளவில் பணம் இல்லாத விரக்தியில் திருடன் கடிதம் எழுதி வைத்துச்சென்ற இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






