என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரிசர்வ் வங்கி"

    • எங்கள் முதல் கடமை, விலைவாசியை நிலைப்படுத்துவதுதான்.
    • அக்டோபர் மாதத்தில், இந்திய பொருளாதாரம் வேகம் எடுத்துள்ளது.

    மும்பை:

    வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் ரெப்போ ரேட் என்று அழைக்கப்படுகிறது.

    2 மாதங்களுக்கு ஒருமுறை, ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு கூடி, ரெப்போ வட்டி விகிதத்தை முடிவு செய்கிறது. இக்குழுவின் அடுத்த கூட்டம் டிசம்பர் மாதம் நடக்கிறது.

    இதற்கிடையே, ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா ஒரு டெலிவிஷன் சேனலுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கடந்த மாதம் நடந்த ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு கூட்டத்தில், ரெப்போ வட்டி குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    அப்போதிருந்து நமக்கு கிடைத்த மேக்ரோ பொருளாதார தரவுகள், ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவே தெரிவிக்கின்றன. எனவே, நிச்சயமாக வட்டி குறைக்கப்பட வாய்ப்புள்ளது.

    ஆனால், வரும் டிசம்பர் மாதத்திலேயே குறைக்கப்படுமா, அல்லது பின்னர் நடக்கும் நிதிக்கொள்கை குழு கூட்டத்தில் குறைக்கப்படுமா என்பது பற்றி நிதிக்கொள்கை குழு தான் முடிவு செய்யும்.

    எங்கள் முதல் கடமை, விலைவாசியை நிலைப்படுத்துவதுதான். அதே சமயத்தில், வளர்ச்சியிலும் கவனம் செலுத்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும், ரிசர்வ் வங்கி நேற்று பொருளாதார நிலவர அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    அக்டோபர் மாதத்தில், இந்திய பொருளாதாரம் வேகம் எடுத்துள்ளது. உற்பத்தி, சேவை துறைகள் விரிவடைந்துள்ளன. ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. பணவீக்கம், வரலாற்றில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இலக்குக்கு உள்ளேயே இருக்கிறது.

    இந்த ஆண்டில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தனியார் முதலீட்டை அதிகரிக்கவும், உற்பத்தி, வளர்ச்சியை அதிகரிக்கவும், நீண்ட கால பொருளாதார மீட்சிக்கும் பாதை அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சஞ்சய் மல்ஹோத்ரா, அவர்படித்த ஐஐடி கான்பூருக்கு விஜயம் செய்தபோதும் இதே கேள்வி எழுப்பட்டது.
    • ரிசர்வ் வங்கியின் 26வது ஆளுநராக பொறுப்பேற்பதற்கு முன்பு, மத்திய நிதி அமைச்சகத்தில் வருவாய் செயலாளராக பணியாற்றினார்.

    டெல்லி பொருளாதாரப் பள்ளியில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்வில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோதரா மாணவர்களுடன்  உரையாடினார்.

    அப்போது ரிசர்வ் வங்கி ஆளுநராக ஆக சில டிப்ஸ்களை சொல்லுங்கள் என்று ஒரு மாணவரின் கேள்விக்கு பதிலளித்த சஞ்சய் மல்ஹோத்ரா, ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் வார்த்தைகளை நினைவு கூர்ந்து பேசினார்.

    அதாவது, "எதிர்காலத்தை நாம் கணிக்க முடியாது. உங்கள் கர்மாவைச் செய்யுங்கள். உங்கள் வேலையை ஆர்வத்துடனும் கடின உழைப்புடனும் செய்யுங்கள். நீங்கள் திரும்பிப் பார்க்கும்போதுதான் எப்படி முன்னேறுவது என்பது உங்களுக்குப் புரியும்" என்று சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.

    முன்னதாக சஞ்சய் மல்ஹோத்ரா அவர் படித்த ஐஐடி கான்பூருக்கு விஜயம் செய்தபோதும் அங்கு ஒரு மாணவர் இதே கேள்வியை எழுப்பியபோதும் சஞ்சய் மல்ஹோத்ரா இதே பதிலை அளித்தார்.

    சஞ்சய் மல்ஹோத்ரா 1990 பேட்ச் ராஜஸ்தான் கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். ஐஐடி கான்பூரில் பொறியியல் பட்டமும், அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கையில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

    டிசம்பர் 11, 2024 அன்று ரிசர்வ் வங்கியின் 26வது ஆளுநராக பொறுப்பேற்பதற்கு முன்பு, மத்திய நிதி அமைச்சகத்தில் வருவாய் செயலாளராக சஞ்சய் மல்ஹோத்ரா பணியாற்றினார்.  

    • கடன்கள் குறித்து 6 மாதத்திற்கு ஒருமுறை ரிசர்வ் வங்கிக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
    • தேவைப்பட்டால் வங்கிகளுக்கு முழு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

    சென்னை:

    ஒரு வங்கியின் இயக்குனர்கள், பங்குதாரர்கள், அதிகாரிகள் ஆகியோர் தங்களது உறவினர்களுக்கு அதேவங்கியில் அதிகளவில் கடன் வழங்குவதாக புகார்கள் எழுந்துள்ளன. அந்த கடன் பெரும்பாலும் வாராக்கடன் ஆகி பொதுமக்களின் பணத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன. எனவே அதற்கு முற்றுப்புள்ளி வைக்க ரிசர்வ் வங்கி ஒரு வரைவு அறிக்கையை, நேற்று வெளியிட்டுள்ளது. இது அடுத்தாண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

    அதன்படி வங்கியின் இயக்குனர்கள், புரமோட்டர்கள், முக்கிய மேலாண்மை அதிகாரிகள் மற்றும் வங்கியில் 5 சதவீத பங்குகளை வைத்திருப்பவர்கள் ஆகியோர் தங்களின் உறவினர்கள் மற்றும் அவர்களால் நடத்தப்படும் நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு தங்கள் வங்கியில் கடன் வழங்கக்கூடாது. அப்படியே கடன் வழங்கினாலும், சில நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டும். அதன்படி அவர்களுக்கு கடன் வழங்குவதாக இருந்தால் அது தொடர்பான முடிவெடுக்கும் கூட்டத்தில் பங்கேற்கக்கூடாது. மேலும் ஜாமீன், கடன் தள்ளுபடி, மீட்பு, வாராக்கடன் தீர்வு போன்ற எந்தப் பணிகளிலும் பங்கேற்கக்கூடாது.

    அவர்களுக்கு கடன் வழங்குவதற்கும் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி 10 லட்சம் கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள பெரிய வங்கிகள் அதிகபட்சமாக ரூ.50 கோடி வரை மட்டுமே கடன் தரலாம். ஒன்று முதல் ரூ.10 லட்சம் கோடிக்கு கீழ் சொத்துள்ள நடுத்தர வங்கிகள் அதிகபட்சமாக ரூ.10 கோடியும். ரூ.1 லட்சம் கோடிக்கு கீழ் சொத்துள்ள சிறிய வங்கிகள் அதிகபட்சமாக ரூ.5 கோடியும். உள்ளூர் வங்கிகள் மற்றும் மத்திய-மாநில கூட்டுறவு வங்கிகள் ரூ.1 கோடியும், என்பிஎப்சிகள் ரூ.10 கோடி வரையும் மற்ற அனைத்து நிதி நிறுவனங்கள் ஆகியவை ரூ.50 கோடி வரையும் கடன் கொடுக்கலாம்.

    இப்படி வழங்கப்படும் கடன்கள் குறித்து 6 மாதத்திற்கு ஒருமுறை ரிசர்வ் வங்கிக்கு தகவல் கொடுக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகள் நபார்டுக்கு கடன் விவரங்களை அறிக்கையாக அளிக்க வேண்டும். வங்கிகள் ஆண்டுதோறும் தங்களது நிதி அறிக்கைகளில் எவ்வளவு கடன் தொடர்புடையவர்களுக்கு கொடுக்கப்பட்டது, அவற்றில் எவ்வளவு கடன் வாராக்கடன் நிலைக்கு சென்றது என்பதனை வெளிப்படையாக குறிப்பிட்ட வேண்டும். இந்த விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும். தேவைப்பட்டால் வங்கிகளுக்கு முழு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். முழுத்தொகையை ஒதுக்கீடாக வைத்திருப்பதை கட்டாயப்படுத்தும். மேலும் கூட்டுறவு வங்கிகளின் இயக்குனர்கள் தங்களது உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு கடன் ஜாமீன் வழங்கக்கூடாது.

    இந்த கட்டுப்பாடுகள் வங்கியின் நிர்வாகிகளுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் மட்டும் பொருந்தும். பொதுமக்கள் எடுக்கும் வீட்டுக்கடன், கல்விக்கடன், வாகனக்கடன், தனிநபர் கடன் போன்றவற்றுக்கு இந்த வரம்புகள் எதுவும் பொருந்தாது.

    • காலை 11 மணி முதல், வங்கிகளுக்கு இடையேயான பணப் பரிவர்த்தனை ஒவ்வொரு மணி நேரமும் நடைபெறும்.
    • 2008-ம் ஆண்டு முதல் 1 நாளாக குறைந்தது.

    புதுடெல்லி:

    காசோலை தொடர்பான பண பரிவர்த்தனை ஒரு சில மணி நேரத்தில் முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு பணம் விரைவில் வழங்கும் புதிய நடைமுறை நாளை முதல் அமலுக்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

    அதற்கான சோதனை முயற்சிகளை இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் இன்று மேற்கொள்கின்றன.

    வங்கிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை டெபாசிட் செய்யப்படும் காசோலைகள் ஸ்கேன் செய்யப்பட்டு உடனடியாக பரிசீலிக்கப்பட்டு 1 மணி நேரத்தில் பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும்.

    காலை 11 மணி முதல், வங்கிகளுக்கு இடையேயான பணப் பரிவர்த்தனை ஒவ்வொரு மணி நேரமும் நடைபெறும். டெபாசிட் செய்த காசோலைகளை வங்கிகள் மாலை 7 மணிக்குள் பரிசீலிக்க வேண்டும். வங்கிகள் அதை செய்யும் தவறும் பட்சத்தில் காசோலை தானாகவே அங்கீகரிக்கப்பட்டு பயனாளிகளுக்கு பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும்.

    1980-ம் ஆண்டுகளில் வங்கிகளில் காசோலையை செலுத்தினால் அதை பரிசீலிக்க குறைந்தபட்சம் ஒரு வாரகாலம் ஆகும். பின்பு அது 3 நாட்களாக குறைந்தது. 2008-ம் ஆண்டு முதல் 1 நாளாக குறைந்தது.

    தற்போது அது 1 நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளிலும் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனால் பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு உடனடியாக பணம் வரவுவைக்கப்படும். நாட்டின் பொருளாதாரமும் வேகமாக வளர்ச்சி அடையும். இவ்வாறு ரிசர்வ் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    • ஆகஸ்ட் மாதத்தில் 3.1% ஆக இருந்த சராசரி பணவீக்கம் 2.6% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
    • வீடு, வாகனக் கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.

    வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன் வட்டியான ரெப்போவில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

    * ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 5.5 சதவீதமாக தொடரும்.

    * இதன் விளைவாக, STF விகிதம் 5.25% ஆகவும், MSF விகிதம் மற்றும் வங்கி விகிதம் 5.75% ஆகவும் உள்ளது.

    * ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமின்றி தொடர பணவியல் கொள்கைக் குழு முடிவு செய்தது. இதன் விளைவாக இந்த ஆண்டுக்கான சராசரி பணவீக்கம் திருத்தப்பட்டு, ஜூன் மாதத்தில் கணிக்கப்பட்ட 3.7% ஆகவும், ஆகஸ்ட் மாதத்தில் 3.1% ஆகவும் இருந்து 2.6% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

    * இந்த ஆண்டு Q4 மற்றும் அடுத்த ஆண்டு Q1 க்கான தலைப்பு பணவீக்கம் கீழ்நோக்கி திருத்தப்பட்டுள்ளது மற்றும் சாதகமற்ற அடிப்படை விளைவுகள் இருந்தபோதிலும் இலக்குடன் பரவலாக சீரமைக்கப்பட்டுள்ளது.

    * ஆண்டுக்கான முக்கிய பணவீக்கம் மற்றும் அடுத்த ஆண்டு Q1 கட்டத்திலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.

    ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படாததால் வீடு, வாகனக் கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.



    • ரிசர்வ் வங்கியும் பொருளாதாரத்திற்குத் தேவையான ஆதரவை அளிக்கும்.
    • அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுகளைத் தரும் என நம்புகிறோம்.

    ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதற்கு தண்டனையாக இந்தியா மீது அமெரிக்கா 25 சதவீதம் வரி விதித்தது. ஏற்கனவே விதித்த 25 வரியுடன் சேர்ந்து தற்போது வரிச்சுமை 50 சதவீதம் ஆகி உள்ளது. இந்த கூடுதல் வரிவிதிப்பு நாளை முதல் அமலுக்கு வர உள்ளது.

    இந்நிலையில் இதன் விளைவுகள் குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா விளக்கம் அளித்துள்ளார்.

    நேற்று, மும்பையில் நடைபெற்ற வங்கிகள் மாநாட்டில் பேசிய அவர், "இந்த வரிவிதிப்பால், ரத்தினக் கற்கள், நகைகள், ஜவுளி, ஆடைகள் மற்றும் இறால் ஏற்றுமதி போன்ற துறைகள் கடுமையாகப் பாதிக்கப்படலாம்.

    இந்த பாதிப்புகளை எதிர்கொள்ள அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரிசர்வ் வங்கியும் பொருளாதாரத்திற்குத் தேவையான ஆதரவை அளிக்கும்.

    ஏற்கெனவே, பொருளாதாரம் புழங்குவதற்கு வசதியாக ரெப்போ வட்டி விகிதத்தை 100 புள்ளிகள் குறைத்துள்ளோம்.

    அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுகளைத் தரும் என்றும் இந்த வரிவிதிப்பால் இந்தியாவின் வர்த்தக உறவுகள் பாதிக்கப்படாது நாங்கள் நம்புகிறோம்.

    ஆகஸ்ட் 15, 2025 நிலவரப்படி இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு 695 பில்லியன் டாலர் ஆக உள்ளது. இது சுமார் 11 மாத இறக்குமதிக்கு போதுமானது.

    இந்தியப் பொருளாதாரம் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் வலுவான அடித்தளத்தைக் கொண்டுள்ளது" என்று தெரிவித்தார்.

    • முதல் முறை வங்கிக்கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் பூஜ்ஜியம் அல்லது குறைவாக இருக்கும் காரணத்தை காட்டி, அவர்களுக்கு வங்கிக்கடன் மறுக்கக்கூடாது.
    • பின்னணி மற்றும் திருப்பி செலுத்தும் ஆர்வத்தை வங்கிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

    புதுடெல்லி:

    வங்கிகளில் இருந்து தனிநபர் கடன், நகைக்கடன், வீடு உள்ளிட்ட பிற வங்கிக்கடன் பெறுவதற்கு 'சிபில் ஸ்கோர்' எனப்படும் 3 இலக்க எண் கோரப்படுகிறது.

    தனிநபரின் கடன்தகுதியை நிர்ணயிக்கும் இந்த மதிப்பெண்ணை இந்திய கடன் தகவல் பணியகம் (சிபில்) வழங்குகிறது. இது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகமாக இருந்தால் மட்டுமே வங்கிகள் கடன் வழங்குகின்றன.

    இந்த சிபில் ஸ்கோர் போதுமான அளவு இல்லாததால் பலர் கடன் பெற முடியாமல் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக முதல் முறை வங்கிக்கடன் பெற முயற்சிப்போரும் இந்த சிபில் ஸ்கோர் இல்லாமல் கடன் பெற முடியாமல் அவதிப்படுகின்றனர்.

    இதைத்தொடர்ந்து முதல் முறை வங்கிக்கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்து உள்ளது.

    இது தொடர்பாக நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி கூறியதாவது:-

    முதல் முறை வங்கிக்கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் பூஜ்ஜியம் அல்லது குறைவாக இருக்கும் காரணத்தை காட்டி, அவர்களுக்கு வங்கிக்கடன் மறுக்கக்கூடாது.

    கடன் நிறுவனங்களின் சிறப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக, முதல் முறை கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் அல்ல என ரிசர்வ் வங்கி கடந்த ஜனவரி மாதம் வங்கிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

    இதைப்போல கடன் விண்ணப்பங்களுக்கு குறைந்தபட்ச சிபில் ஸ்கோரை ரிசர்வ் வங்கி அறிவிக்கவும் இல்லை.

    ஒழுங்குபடுத்தப்படாத கடன் சூழலில், கடன் வழங்குபவர்கள்தான் தங்கள் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் பரந்த ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தங்கள் கடன் முடிவுகளை எடுக்கிறார்கள்.

    முதல் முறை கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை என்றாலும், அவர்களது நடத்தை பின்னணி மற்றும் திருப்பி செலுத்தும் ஆர்வத்தை வங்கிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

    அந்தவகையில் அவர்களின் கடன் வரலாறு, கடந்த கால திருப்பிச்செலுத்தும் வரலாறு, தாமதமான திருப்பிச் செலுத்தல்கள், தீர்க்கப்பட்ட கடன்கள், மறுசீரமைக்கப்பட்டவை மற்றும் தள்ளுபடி செய்யப்பட்டவை போன்றவற்றை சரி பார்க்க வேண்டும்.

    இவ்வாறு பங்கஜ் சவுத்ரி கூறினார்.

    • 2023-ம் ஆண்டு மே 19-ந்தேதி ரூ.2,000 நோட்டுகளை திரும்பப்பெற முடிவு செய்யப்பட்டது.
    • 1.69 சதவீதம் ரூ.2,000 நோட்டுகள் மட்டும் இன்னும் ரிசர்வ் வங்கிக்கு திரும்பவில்லை.

    புதுடெல்லி:

    ஒடிசாவின் பிஜூ ஜனதா தளம் கட்சி எம்.பி. பர்துருஹரி மெஹ்தாப், மக்களவையில் ரூ.2,000 நோட்டுகள் தொடர்பாக சில கேள்விகளை கேட்டிருந்தார். அதற்கு மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    2023-ம் ஆண்டு மே 19-ந்தேதி ரூ.2,000 நோட்டுகளை திரும்பப்பெற முடிவு செய்யப்பட்டது. ரிசர்வ் வங்கியின் தகவல்படி, 2023-ம் ஆண்டு மே 19-ந்தேதியன்று ரூ.3.56 லட்சம் கோடியாக இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு கடந்த ஜூலை 31-ந்தேதியன்று ரூ.6,017 கோடியாகக் குறைந்துள்ளது. அதாவது 1.69 சதவீதம் ரூ.2,000 நோட்டுகள் மட்டும் இன்னும் ரிசர்வ் வங்கிக்கு திரும்பவில்லை.

    இவ்வாறு பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • சில வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத்தொகையாக ரூ.10,000 ஆக நிர்ணயித்திருந்துள்ளது.
    • சில வங்கிகள் ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்குகளை அனுமதிக்கின்றன.

    இந்தியாவின் வங்கி ஒழுங்குமுறை அமைப்பான இந்திய ரிசர்வ் வங்கி (RBI), சேமிப்புக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்புத்தொகையை நிர்ணயிக்காது என்று தெளிவுபடுத்தியுள்ளது.

    ஆகஸ்ட் 11 அன்று குஜராத்தில் நடந்த ஒரு நிதி நிகழ்வின் போது பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, "சேமிப்பு கணக்குகளின் குறைந்தபட்ச இருப்புத் தேவையையும், அதைப் பூர்த்தி செய்யாததற்கான அபராதங்களையும் சம்பத்தப்பட்ட வங்கிகள் தான் தீர்மானிக்கும். குறைந்தபட்ச இருப்புத் தொகை கொள்கை ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறைக்கு கீழ் வராது. சில வங்கிகள் அதை ரூ.10,000 ஆக நிர்ணயித்திருந்தாலும், சில வங்கிகள் ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்குகளை அனுமதிக்கின்றன. இது சம்பத்தப்பட்ட வங்கியின் விருப்பம்" என்று தெரிவித்தார்.

    சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்காததற்காக எஸ்.பி.ஐ., கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் இந்தியன் வங்கி போன்ற வங்கிகள் எந்த அபராதத்தையும் வசூலிப்பதில்லை.

    அதே சமயம் சில தனியார் வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்காததற்காக அபராதம் வசூலிக்கின்றன.

    அண்மையில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் புதிய கணக்கு தொடங்குபவர்களின் குறைந்தபட்ச சராசரி மாதாந்திர மினிமம் பேலன்ஸ் உயர்த்தப்பட்டது. அந்த வகையில், நகர்ப்புற, மெட்ரோ பகுதிகளுக்கு ரூ.50 ஆயிரமாகவும், இதுவே சிறு நகரங்களுக்கு ரூ.25 ஆயிரம், கிராமப்புற பகுதிகளுக்கு ரூ.10 ஆயிரமாகவும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • UPI-க்கும் செலவுகள் உள்ளன, யாராவது ஒருவர் அதனை ஏற்கத்தான் வேண்டும்
    • இந்த மானிய மாதிரி நீண்டகாலம் தொடர முடியாது

    இந்தியாவில் கோடிக்கணக்கானோர் UPI பணபரிவர்தனைகளை தினந்தோறும் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் UPI ரிவர்தனைகள் குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

    நேற்று சென்னையில் நடந்த பணவியல் கொள்கைக் குழு (MPC) கூட்டத்திற்குப் பிந்தைய பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர்,"UPI பரிவர்த்தனை எப்போதும் இலவசமாகவே இருக்கும் என நான் ஒருபோதும் கூறவில்லை. UPI-க்கும் செலவுகள் உள்ளன, யாராவது ஒருவர் அதனை ஏற்கத்தான் வேண்டும்" என்று தெரிவித்தார்.

    தற்போது அரசு மற்றும் வங்கிகள் மானியமளித்து UPI யை இயக்கி வருவதாகவும், இந்த மாதிரி நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்குமா என்ற கேள்வி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    முன்னதாக ஜூலை 2025-ல் நடந்த பைனான்சியல் எக்ஸ்பிரஸ் BFSI உச்சி மாநாட்டில், "UPI யை இயக்குவதற்கு அரசு, வங்கிகள், அல்லது பயனர்கள் செலவை ஏற்க வேண்டும். இந்த மானிய மாதிரி நீண்டகாலம் தொடர முடியாது" என்று சஞ்சய் மல்கோத்ரா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக ரிசர்வ் வங்கி, தனது ரெப்போ வட்டி விகிதத்தை 6.50 என்ற அளவில் வைத்து இருந்தது.
    • கடந்த பிப்ரவரியில் இது 6.25 என்றும், ஏப்ரல் மாதத்தில் 6, தற்போது ஜூன் மாதத்தில் 5.5 சதவீதம் என்றும் குறைத்து உள்ளது.

    சென்னை:

    ரிசர்வ் வங்கி குறைத்துள்ள வட்டி குறைப்பால் யாருக்கு லாபம் கிடைக்கும் என்பது குறித்த விவரம் தெரிய வந்துள்ளது.

    இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது ரெப்போ வட்டியை குறைக்கிறது என்ற செய்தியை அடிக்கடி பார்த்து இருப்போம். வட்டி என்றால் தெரியும். ஆனால் ரெப்போ வட்டி என்றால் என்ன? அது பற்றி தெரிந்து கொள்வோம்.

    பொதுமக்களுக்கு வங்கிகள் வீட்டு கடன், தொழில் கடன், தனி நபர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களை வழங்குகிறது. இந்த கடன் தொகையை, வங்கிகள் தங்களுக்கு வரும் முதலீட்டு (டெபாசிட்) தொகை மற்றும் வங்கியின் இருப்பு மற்றும் லாபத்தொகையில் இருந்து வழங்குகிறது. ஆனால் இந்த தொகை மட்டுமே போதாது. எனவே வங்கிகள், ரிசர்வ வங்கியிடம் கடன் வாங்குகிறார்கள். இந்த கடனுக்கு ரிசர்வ் வங்கி விதிக்கும் வட்டி தான் ரெப்போ வட்டி.

    வங்கிகள் வழங்கும் கடன்களின் வட்டியும், சேமிப்புகளுக்கு வழங்கும் வட்டியும், ரெப்போ வட்டியை அடிப்படையாக கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. பொருளாதார மந்தநிலை ஏற்பட்டாலோ, நுகர்வோர் செலவுகள் குறைந்தாலோ, தொழில்கள் நிதி நெருக்கடிக்கு உள்ளானாலோ, ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை குறைக்கும்.

    இதன் மூலம் வங்கிகளும் வட்டி விகிதங்களை குறைத்து, கடன்களை அதிக அளவில் வழங்க உதவும். இதனால் பொதுமக்கள் வீடுகள் வாங்குவார்கள், தொழில்துறையில் முதலீடு செய்வார்கள். இதனால் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதையில் பயணிக்க ஆரம்பிக்கும்.

    இந்தியாவின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் முக்கிய கருவிகளில் ஒன்றான ரெப்போ வட்டியை, கடந்த சில மாதங்களாக ரிசர்வ் வங்கி தொடர்ந்து குறைத்து வருகிறது.

    அதாவது கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக ரிசர்வ் வங்கி, தனது ரெப்போ வட்டி விகிதத்தை 6.50 என்ற அளவில் வைத்து இருந்தது. அதனை கடந்த பிப்ரவரியில் இது 6.25 என்றும், ஏப்ரல் மாதத்தில் 6, தற்போது ஜூன் மாதத்தில் 5.5 சதவீதம் என்றும் குறைத்து உள்ளது. ரெப்போ வட்டி ஒரு சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளதால் வங்கிகள் 0.5 சதவீதம் அளவுக்கு வீட்டுகடன் மற்றும் இதர கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்து உள்ளது.



    யாருக்கு லாபம்?

    உதாரணமாக 20 லட்சம் வீட்டு கடன், 20 ஆண்டு தவணையில் ஒருவர் 9 சதவீத வட்டியில் கடன் வாங்கி இருந்தால், அவரது மாதத்தவணை ரூ.17,995 இருக்கும். அது இப்போது 8.5 சதவீத வட்டியாக குறைக்கப்பட்டுள்ளதால் மாதத்தவணை ரூ.17,356 ஆக குறையும். இது மாதத்திற்கு ரூ.639 என்ற சிறிய தொகையாக தெரிந்தாலும், 20 ஆண்டுகளுக்கு இதனை கணக்கீடும் போது ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்து 133 லாபம் கிடைக்கும்.

    அதேபோல் சேமிப்பு மற்றும் டெபாசிட்களுக்கும் 0.5 சதவீதம் குறைய உள்ளது. அதனால் அவர்களுக்கு திரும்ப கிடைக்கும் முதிர்வு தொகை குறைவாகவே இருக்கும். உதாரணமாக ஒருவர் 7 சதவீத வட்டியில் 7 ஆண்டுக்கு ரூ.5 லட்சம் டெபாசிட் செய்து இருந்தால், இந்த வட்டி இப்போது 6.5 சதவீதமாக குறைக்கும் போது முதிவு தொகையில் ரூ.27 ஆயிரத்து 496 நஷ்டம் ஏற்படும்.

    எனவே ரெப்போ வட்டி குறைப்பு என்பது கடன் வாங்கியவர்களுக்கு லாபமாகவும், சேமிப்பு செய்பவர்களுக்கு நஷ்டமாகவும் இருக்கும்.

    எனவே, ரெப்போ வட்டியில் ஏற்படும் மாற்றம் என்பது நமது அன்றாட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கியமான பொருளாதார முடிவாகும். இந்த வட்டி விகிதத்தின் உயர்வும், தாழ்வும், நமது செலவுகள், சேமிப்புகள், முதலீடுகள் மற்றும் எதிர்கால திட்டங்களை நேரடியாக பாதிக்கக்கூடியவை ஆகும்.

    • ரிசர்வ் வங்கி முழுமையான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
    • ரூ.2.5 லட்சம் வரை கடன்களுக்கு கடன் தகுதி மதிப்பீடு தேவையில்லை.

    தங்கக் கடன் பிரச்சனையில் நிபந்தனைகளை தளர்த்தி விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது என்றும் அது எங்கள் கோரிக்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றும் மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    தங்கக் கடன் பிரச்சனையில் நிபந்தனைகளை தளர்த்தி ரிசர்வு வங்கி விதிமுறைகளை வெளியிட்டது மகிழ்ச்சியளிக்கிறது.

    இப்பிரச்சனை சம்பந்தமாக ஒன்றிய நிதியமைச்சரிடம் நேரில் சந்தித்து தந்த கடிதத்தின் பல அம்சங்கள் ஈடேறி உள்ளன என்பது மகிழ்ச்சி. ரிசர்வ் வங்கி கவர்னருக்கு நான் எழுதிய கடிதத்திற்கும் எனது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாக பதில் வந்தது. இப்பொழுது ரிசர்வ் வங்கி முழுமையான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

    இதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எமது கோரிக்கைகள்:

    1. தங்க நகைக்கான உடமைக்கு கடன்தாரரின் சுய அறிவிப்பு மட்டுமே போதும். நகைக்கான ரசீது தேவையில்லை.

    2. ரூ.2.5 லட்சம் வரை கடன்களுக்கு கடன்-பிணை மதிப்பு (Loan to Value) விகிதம் 85% ஆக உயர்த்தப்படும்.

    3. ரூ.2.5 லட்சம் வரை கடன்களுக்கு கடன் தகுதி மதிப்பீடு தேவையில்லை.

    4. முன்னுரிமைத் துறை கடன் நிபந்தனைகளின் நன்மையை பெறாதவர்களுக்கு தங்கக் கடனின் இறுதிப் பயன்பாட்டைப் பற்றி கடன் வழங்கும் நிறுவனங்கள் கண்காணிக்க தேவையில்லை.

    இது எளிய மக்கள் நலனுக்கான குரலுக்கு கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியாகும்.

    முழுமையான விதிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை ஆராய்ந்து கூடுதல் தகவல்கள் மற்றும் கோரிக்கைகளை பகிர்ந்து கொள்வேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×