என் மலர்
நீங்கள் தேடியது "gold loans"
- புதிய ஒழுங்குமுறை விதிமுறைகளிலிருந்து ரூ.2 லட்சத்திற்கு கீழ் கடன் பெறும் சிறு தொகை கடன் பெறுநர்களை விலக்க பரிந்துரை செய்திருக்கிறது.
- அனைத்து தங்க நகைக்கடன்களுக்கும் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் செயல்படும் நிதி சேவைகள் துறை, தங்கக்கடன் பெறும் நடைமுறைகள் குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட வரைவுத் தரநெறிகளை முறைப்படுத்த வேண்டி பரிந்துரைகள் வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.
புதிய ஒழுங்குமுறை விதிமுறைகளிலிருந்து ரூ.2 லட்சத்திற்கு கீழ் கடன் பெறும் சிறு தொகை கடன் பெறுநர்களை விலக்க பரிந்துரை செய்திருக்கிறது.
இருப்பினும் விவசாயிகள், சிறு வியாபாரிகள் மற்றும் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள மக்கள், தங்களின் அவசரத் தேவைகள், மருத்துவ மற்றும் கல்வி நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒன்றாக தங்க நகைக்கடன்கள் இருப்பதால், அனைத்து தங்க நகைக்கடன்களுக்கும் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
ஏழை மற்றும் நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் நம்பிக்கையுடன் பயன்படுத்தும் வழியாக தங்க நகைக்கடன்கள் இருப்பதால், மத்திய நிதி சேவைகள் துறை வழங்கியுள்ள இந்த முக்கிய பரிந்துரைகளுக்கு ரிசர்வ் வங்கி பரிசீலிப்பதுடன், தங்க நகைக்கடன்களுக்கான பழைய நடைமுறையையே தொடர வேண்டுமென அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நகைக்கடன் வழங்க நிபந்தனைகள் விதிக்கப்பட்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
- ரூ.2 லட்சத்திற்கு குறைவாக கடன் வாங்குபவர்களுக்கு விலக்களிக்க மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.
நகைக்கடன் கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
சிறிய அளவில் நகைக்கடன் பெறுவோர் பாதிக்கப்படக்கூடாது என ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. ரூ.2 லட்சத்திற்கு குறைவாக கடன் வாங்குபவர்களுக்கு விலக்களிக்க மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.
நகைக்கடன் வழங்க நிபந்தனைகள் விதிக்கப்பட்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் நகைக்கடன் நிறுவனங்கள், பொதுமக்களின் கருத்துகளின் அடிப்படையில் விதிகளை தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
நகைக்கடனுக்கான புதிய விதிமுறைகளை தற்போது அமல்படுத்த வேண்டாம் என்றும் மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
- கிராமப்புற கடன் விநியோக முறைக்கு கடுமையான இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
- விவசாயம் தொடர்புடைய கடன்களுக்கு தங்கத்தை பிணையமாக தொடர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.
தங்க நகைக்கடன் வழங்குவதற்கான நெறிமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து முன்மொழியப்பட்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்யக்கோரி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
விவசாயிகளின் 2 லட்சம் ரூபாய் வரையிலான பயிர்க்கடன்களுக்கு தங்க நகைகளை ஈடாக ஏற்றுக்கொள்வதைத் தடுக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தமிழ்நாடு அரசின் கடுமையான கவலை குறித்து தெரிவிக்கவே தாம் இக்கடிதத்தை எழுதியுள்ளேன்.
தங்கத்தை பிணையாகப் பெற்று வழங்கப்பெறும் கடன்கள் சரியான நேரத்தில், குறுகிய கால பயிர்க்கடன்களுக்கான முதன்மை ஆதாரமாக விளங்குகிறது.
குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள், குத்தகைதாரர்கள் மற்றும் பால் பண்ணை, கோழிப்பண்ணை மற்றும் மீன்வளம் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்த வரைவு நெறிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் பாதிப்படையக்கூடும்.
அதனால் தமிழ்நாட்டிலும் தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் கிராமப்புற கடன் விநியோக முறைக்கு கடுமையான இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பெரும்பாலும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு முறையான நில உரிமைகள் அல்லது சரிபார்க்கக்கூடிய வருமான ஆவணங்கள் இல்லை. அத்தகைய விவசாயிகள் தங்கள் வீட்டுத் தங்கத்தை அடகு வைத்து வங்கிக் கடன்களைப் பெறுவதற்கான ஒரு சாத்தியமான மற்றும் கண்ணியமான வழியாக நகைக்கடன் உள்ளது.
தற்போது முன்மொழியப்பட்டுள்ள நெறிமுறைகளால் எளிதாகக் கடன் பெறும் வழியை நேரடியாகக் குறைத்து, கடன் வாங்குபவர்கள் பெரும்பாலானோரை முறையான கடன் வழங்கும் நிதி நிறுவனங்களை நாடுவதை குறைத்துவிடும்.
நகைக்கடன் பெறும் எளிமையான வழிமுறைகள் கட்டுப்படுத்தப்படுவதால், கிராமப்புற கடன் வாங்குபவர்கள் அதிக வட்டி விகிதங்களை வசூலிக்கும் முறைசாரா மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத கடன் வழங்கும் நிறுவனங்களை நோக்கிச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.
இது அவர்களை சுரண்டல் நடைமுறைகளுக்கு ஆளாக்குவதுடன் கடனை அதிகரிக்கும் மற்றும் முறையான நிதி சேர்க்கையில் ஏற்பட்ட முன்னேற்றத்தை தடுக்கும்.
மேலும், கடன் வழங்குபவர்கள் மற்றும் கடன் வாங்குபவர்கள் எதிர்கொள்ளும் சவால்களாக, சிறிய அளவிலான விவசாயக் கடன்களுக்கு கடன் பெறும் திறனை ஆவணமாக மதிப்பீடு செய்யும் முறையானது கிராமப்புறச் சூழலில் செயல்படுத்த முடியாததாக இருக்க வாய்ப்புள்ளது. இது கடன் வழங்கும் நடைமுறையில் தடைகளை உருவாக்கலாம் .
இந்த வரைவு நெறிமுறைகள் கடன்களை தவறான வகைப்படுத்தலுக்கு வழிசெய்வதுடன், தணிக்கை தடைகளுக்கும் காரணமாக அமைந்து அதன் காரணமாக வங்கி மற்றும் கடனாளி இருதரப்பினருக்கும் பொறுப்பு அதிகரிக்கக் கூடும்.
எனவே, மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கி (தங்க பிணையத்திற்கு எதிராகக் கடன் வழங்குதல்) வழிகாட்டுதல்கள் 2025-இல் முன்மொழியப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்திட இந்திய ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்துமாறு நிதியமைச்சர் அவர்களை கேட்டுக்கொகிறேன்.
நடைமுறையில் உள்ள கிராமப்புற கடன் வழங்குதலை அங்கீகரிக்கும் விதமாக, ரூ.2 லட்சம் வரையிலான விவசாய மற்றும் விவசாயம் தொடர்புடைய கடன்களுக்கு தங்கத்தை பிணையமாக தொடர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.
கடன் கோருபவர்களின் நிதி அணுகலைப் பாதுகாக்கும் அதே வேளையில் கடன் பெறும் அளவினை மதிப்பிட ஒரு சமநிலையான ஒழுங்குமுறை மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று தான் கருதுகிறேன்.
எனவே, விவசாய சமூகத்திற்கும் கிராமப்புற பொருளாதாரத்திற்கும் அத்தியாவசியமான இந்த விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் கவனம் செலுத்தி தீர்வுகாண வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
இதே கருத்தை வலியுறுத்தி இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் அவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கோவை மாவட்டத்தில் மட்டும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில்முனைவோர்கள் உள்ளனர்.
- 22 கேரட் தங்கத்தின் விலையை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படும் என்பதும், பழைய நகையை வைத்திருப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
தங்க நகைக்கடன் வழங்குவதில் புதிய நடைமுறைகளை அமல்படுத்த முடிவு செய்துள்ள ரிசர்வ் வங்கி, இதற்காக வங்கிகள் மற்றும் தங்க நகைக் கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் என அனைத்திற்கும் ஒரே விதமான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக கோவை இடையர்பாளையத்தை சேர்ந்த தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் சிறுகுறு தொழில்முனைவோர் சங்க தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது:-
வங்கிகள் மற்றும் தங்க நகைக்கடன்கள் வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கு நகைக்கடன் வழங்க ரிசர்வ் வங்கி விதித்து இருக்கும் 9 கட்டுப்பாடுகள் அனைவரையும் கடுமையாக பாதிக்கும்.
குறிப்பாக சிறு, குறு, தொழில் செய்பவர்கள் மற்றும் விசைத்தறி தொழில் செய்யும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
கோவை மாவட்டத்தில் மட்டும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில்முனைவோர்கள் உள்ளனர்.
சிறு, குறு தொழில் செய்பவர்கள், தங்களது தொழிலுக்கு, அவசர தேவை என்றால், உடனே வங்கிக்கு சென்று தங்க நகையை அடமானம் வைத்து கடன் பெற்று அதனை சரி செய்து கொள்வார்கள்.
தற்போது தங்கத்தின் மதிப்பில் 90 சதவீதம் வரை கடன் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதனையும் 75 சதவீதம் மட்டுமே வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இது மிகவும் கடுமையாக பாதிக்கும்.

22 கேரட் தங்கத்தின் விலையை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படும் என்பதும், பழைய நகையை வைத்திருப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோன்று ஒரு நபருக்கு ஒரு கிலோ தங்கம் மட்டுமே அடமானம் வைக்க முடியும்.
உரிமையாளர்கள் நாங்கள் தான் என்பதற்கு சான்று கண்டிப்பாக ஒப்படைக்க வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகளும் அவசர தேவைக்காக அடகு வைத்து பணம் உதவி பெறுவதில் சிக்கல்களை ஏற்படுத்தும்.
ஏற்கனவே பல்வேறு சிக்கல்களில் உள்ள தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் சிறு, குறு தொழில் செய்பவர்கள் இந்த கட்டுப்பாடுகளால் மேலும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
எனவே மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கும் கட்டுப்பாடுகளை வாபஸ் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து கோவை வையம்பாளையத்தை சேர்ந்த முரளி என்பவர் கூறும்போது, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும்.
சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வங்கியில் அடகு வைத்த நகைகளுக்கு ஆண்டுதோறும் வட்டியை கட்டி அதனை மீண்டும் திருப்பி வைத்து வைப்பது வழக்கம். ஆனால் இந்த புதிய கட்டுப்பாட்டால் பணத்தை முழுமையாக செலுத்தி நகையை திருப்ப வேண்டும் என்பது முடியாத காரியம்.
எனவே இந்த கட்டுப்பாடுகளை வாபஸ் பெற வேண்டும் என்றார்.
- வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்பட அனைத்து விதமான ஏழை மக்களும் உடனடி பண தேவையை தங்கத்தை அடகு வைத்து தான் பூர்த்தி செய்து வருகிறார்கள்.
- வளர்ந்து வரும் நாடான இந்தியாவுக்கு இந்த திட்டம் தேவையில்லாதது.
தங்க நகைக்கடன் வழங்குவதில் புதிய நடைமுறைகளை அமல்படுத்த முடிவு செய்துள்ள ரிசர்வ் வங்கி, இதற்காக வங்கிகள் மற்றும் தங்க நகைக் கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் என அனைத்திற்கும் ஒரே விதமான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலத்தை சேர்ந்த மாம்பழம் மற்றும் தக்காளி மொத்த வியாபாரியான தக்காளி ஆறுமுகம் என்பவர் கூறியதாவது:
வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்பட அனைத்து விதமான ஏழை மக்களும் உடனடி பண தேவையை தங்கத்தை அடகு வைத்து தான் பூர்த்தி செய்து வருகிறார்கள்.
ஆனால் ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பில் அடகு வைக்கும் நகைகளை திருப்ப முழு தொகையும் வங்கியில் செலுத்தி திருப்ப வேண்டிய நிலை உள்ளதால் அதற்கான பணத்தை திரட்ட தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் வங்கிகளை பொதுமக்கள் நாடும் நிலை உள்ளது. இதில் ஒரு நாளைக்கு ஒரு மாத வட்டி செலுத்த வேண்டிய நிலை உள்ளதால் பொதுமக்களுக்கு பொருளாதார பேரிழப்பு ஏற்படும் நிலை உள்ளது
மேலும் ஒவ்வொருவருக்கும், தனது தாய் மற்றும் மனைவியின் பெற்றோர் மூலம் தங்க நகைகள் கிடைக்கிறது. இந்த நகைகளை தங்களுக்குள்ளது என்று எப்படி யாரிடம் சான்று வழங்க முடியும், இது முடியாத செயல், இதில் பல்வேறு இடையூறுகள் உள்ளன. அதற்கு தனியாக செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.
கடந்த காலங்களில் நகைகளின் மதிப்பில் 90 சதவீதம் கடன் கொடுத்த நிலையில் தற்போது 75 சதவீதம் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவித்துள்ளதால் தொழிலுக்கு போதுமான பணத்தை திரட்ட முடியாத நிலை ஏற்படும். இதனால் தொழிலை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்படும்.
எனது வியாபாரத்திற்கு தேவையான பணத்தை பெற அரசு வங்கிகளில் நகைகளை அடகு வைத்துள்ளேன். இதன் மூலம் வங்கிகளுக்கு லட்சக்கணக்கில் வட்டி கட்டி வருகிறேன். இனி வரும் நாட்களில் புதிய அறிவிப்புகளால் தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு என்னை போன்றவர்கள் செல்லும் நிலை உள்ளது. இதனால் அரசு வங்கிகளுக்கு வருமான இழப்பு ஏற்படும்.
நகைக்கு தர உறுதி சான்றிதழ் வாங்க வேண்டும் என்ற அறிவிப்பால் அதற்கு தனியாக செலவு செய்யும் நிலை உள்ளது. வளர்ந்து வரும் நாடான இந்தியாவுக்கு இந்த திட்டம் தேவையில்லாதது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புகள் தனியார் நிதி நிறுவனங்கள், வங்கிகளுக்கு உதவுவது போல அமைந்துள்ளது.
இதனால் நாடு முழுவதும் உள்ள என்னை போன்ற நடுத்தர வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த புதிய அறிவுப்புகளை உடனடியாக ரிசர்வ் வங்கி திரும்ப பெற்று அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவும் வகையில் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

தக்காளி ஆறுமுகம் - ஆட்டோ டிரைவர் ஏழுமலை
வேலூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஏழுமலை கூறுகையில்,
ஆட்டோ ஓட்டும் தொழில் மூலம் சில நேரங்களில் போதிய வருமானம் கிடைப்பதில்லை. அவசர தேவை மற்றும் பிள்ளைகளின் படிப்பு செலவுக்காக கடன் வாங்க வேண்டி உள்ளது.
ஏற்கனவே வங்கியில் அடமானம் வைத்த நகைகளை மீட்கும் போது மொத்தமாக பணத்தைக் கட்டி அதனை மீட்க வேண்டும் என ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு கொண்டு வந்துள்ளதால் நகைகளை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தற்போது கொண்டு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகளால் நகைகளை எளிதில் வங்கிகளில் அடகு வைக்க முடியாது. 20 ஆண்டுக்கு முன்பு வாங்கிய தங்க நகைக்கான ஆதாரத்தை எங்கிருந்து நாங்கள் கொண்டு வருவோம். இதுபோன்ற கட்டுப்பாடுகளால் கந்து வட்டி வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம். இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கும் என்றார்.
- ஒரு வருடத்திற்கு செலுத்த வேண்டிய வட்டி தொகையை விட இந்த புதிய நடைமுறையால் இரண்டு முறை வட்டி கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.
- புதிய நடைமுறையால் என்னை போன்ற நடுத்தர பெண்கள் நடுத்தர குடும்பத்தினர் பெரும் இன்னல்களுக்கு ஆளாகும் சூழ்நிலை உருவாகி வருகிறது.
தங்க நகைக்கடன் வழங்குவதில் புதிய நடைமுறைகளை அமல்படுத்த முடிவு செய்துள்ள ரிசர்வ் வங்கி, இதற்காக வங்கிகள் மற்றும் தங்க நகைக் கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் என அனைத்திற்கும் ஒரே விதமான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக மதுரை மாவட்டம் திடீர் நகரை சேர்ந்த பூ வியாபாரி தனம் கூறுகையில்,
மதுரை என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது குண்டு மல்லி தான். நாங்கள் பல தலைமுறைகளாக பூ வியாபாரம் பார்த்து வருகிறோம். என் கணவர் இறந்து 15 வருடங்கள் ஆகிறது. 4 குழந்தைகள் உள்ளனர். பிள்ளைகளை வளர்ப்பதற்காக கடந்த 37 வருடங்களாக பெரியார் பேருந்து நிலையம் அருகே பூ கட்டி வியாபாரம் செய்து வருகிறேன்.
குடும்ப தேவைகளுக்காகவும், பிள்ளைகளின் கல்வி, திருமணம் உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்கும் கடந்த 8 ஆண்டுகளாக நான் சிறிது சிறிதாக வாங்கிய நகைகளை வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற்று வாழ்க்கை நடத்தி வருகிறேன். முன்பெல்லாம் வங்கியில் நகைகளை அடமானம் வைத்தால் ஒரு வருடத்திற்குள் நகைகளை திருப்ப வேண்டும் என்ற நடைமுறை இருந்து வந்தது. மேலும் நகைகளை திருப்ப இயலவில்லை என்றால் நகைகள் மீது கூடுதலாக பணம் பெற்றுக்கொண்டு மறு அடகு வைக்கும் நடைமுறையும் இருந்தது.
ஆனால் தற்போது நகைகளை ஆறு மாதத்திற்கு ஒரு முறை வட்டி தொகையை செலுத்தி திருப்ப வேண்டுமெனவும், அதன் பிறகு மறுநாளில் மீண்டும் அடகு வைத்துக் கொள்ளலாம் என்றும் உத்தரவு போடப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஒரு வருடத்திற்கு செலுத்த வேண்டிய வட்டி தொகையை விட இந்த புதிய நடைமுறையால் இரண்டு முறை வட்டி கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.
இதனால் எங்களைப் போன்ற ஏராளமான நடுத்தர குடும்பத்தினர் மிகவும் பாதிப்படைந்து உள்ளனர். ஏழை, எளிய மக்கள் தங்கம் வாங்குவது என்பது இன்றைய விலையில் சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் நாங்கள் வாங்கிய தங்கத்தை அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வங்கியில் அடமானம் வைத்து பணம் பெறுகிறோம். அதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தால் நாங்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை.
முன்பெல்லாம் நகை வாங்கும்போது ஜி.எஸ்.டி. வரி என்பது கிடையாது. ஆனால் தற்போது ஜி.எஸ்.டி. வரி போடுகிறார்கள். அவ்வாறு இருக்கும் சூழ்நிலையில் தங்கத்தை அடகு வைக்கும்போது அதற்கான பில்லை சாமானிய மக்களால் எப்படி வங்கியில் தர முடியும். இது நகை அடகு வைப்பவர்களை மிகவும் பாதிக்கும். மொத்தத்தில் இந்த புதிய கட்டுப்பாடுகள் என்னை போன்ற அன்றாட கூலிகளுக்கு நகை அடமானம் வைப்பதையே மறக்கடித்துவிடும் என்றார்.

பூ வியாபாரி தனம் - இல்லத்தரசி அஞ்சலி
தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த இல்லத்தரசி அஞ்சலி கூறியதாவது:-
முன்பெல்லாம் வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்தால், குறித்த காலக்கெடு முடியும் தருவாயில், அதற்கான வட்டியை மட்டும் கட்டிவிட்டு, நகையை மறு அடமானம் வைத்துக்கொண்டு வந்தோம்.
ஆனால் தற்போது ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் நகை அடைமானம் காலக்கெடு முடிவதற்குள் கடன் தொகையை முற்றிலும் கட்டி நகையை திருப்ப வேண்டும் என வங்கி கூறியுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எங்களுடயை கடன் சுமையை குறைக்க வேண்டியே வங்கிகளில் நகைகளை அடமானம் வைக்கிறோம். முழுத் தொகை செலுத்தி அதனை எடுக்க முடியாத சூழ்நிலையில் நகைக்கடனுக்காக வட்டியை மட்டும் கட்டி விட்டு அதனை மறுபடியும் வங்கியில் அடமானம் வைத்து வந்தோம்.
ஆனால் தற்போது முழுதொகை மற்றும் அதற்கான வட்டியை முழுவதும் கட்டி நகையை பெற்று அதனை மீண்டும் மறுநாள் அடமானம் வைக்கலாம் எனக் கூறும் இந்த புதிய நடைமுறையால் என்னை போன்ற நடுத்தர பெண்கள் நடுத்தர குடும்பத்தினர் பெரும் இன்னல்களுக்கு ஆளாகும் சூழ்நிலை உருவாகி வருகிறது.
சில தனியார் வங்கிகள் முழுதொகை மற்றும் அசல் வட்டியை உடனே கட்ட வேண்டும். இல்லையெனில் நகை ஏலத்திற்கு சென்று விடும் கூறி வருகின்றனர்.
இதனால் நடுத்தர குடும்பத்தினர் வங்கியின் அச்சுறுத்தல்களுக்கு பயந்து கந்து வட்டியில் கடன் வாங்கி நகையை மீட்டு மறுபடியும் நகையை வங்கியில் அடமானம் வைத்து கந்துவட்டி நபர்களுக்கு பணத்தை கொடுத்து வரும் சூழ்நிலை தற்போது ஏற்பட்டு உள்ளது.
ஆகையால் ஏழை எளிய மக்களின் நலன் கருதி ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பினை திரும்ப பெற வேண்டும் என்பது எங்களை போன்ற நடுத்தர குடும்பத்தினரின் கோரிக்கையாக உள்ளது என பேசி முடித்தார்.
- தங்க நகை கடன் பெறுவது தொடர்பாக அனைத்து தரப்பு மக்களும் பாதிக்காதவாறு எளிய வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
- வாரந்தோறும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்பதால் பலரும் கடன் பெறுவது வழக்கம்.
தங்க நகைக்கடன் வழங்குவதில் புதிய நடைமுறைகளை அமல்படுத்த முடிவு செய்துள்ள ரிசர்வ் வங்கி, இதற்காக வங்கிகள் மற்றும் தங்க நகைக் கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் என அனைத்திற்கும் ஒரே விதமான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தஞ்சையை சேர்ந்த விவசாயி முகமது இப்ராஹிம் கூறுகையில்,
தமிழகத்தில் தங்க நகை கடன் பெறுவோர் அதிகளவில் உள்ளனர். குறிப்பாக விவசாயிகள் விவசாய பணிகள் மேற்கொள்ள தங்கத்தை அடமானமாக வைத்து கடன் பெறுகின்றனர் . தற்போது நகை கடனுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
குறிப்பாக தங்கத்தின் மதிப்பில் 75 சதவீத பணம் மட்டுமே கடனாக வழங்கப்படும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது . மேலும் அடகு வைக்கும் தங்கத்திற்கு உரிமையாளர் என்பதற்கான ஆதாரம் வழங்க வேண்டும் என்பது விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பிற்கும் சிரமத்தையே கொடுக்கும்.
முழுத்தொகை மற்றும் அதற்கான வட்டியை முழுமையாக கட்டி நகையை பெற்று அதனை மீண்டும் மறுநாள் அடமானம் வைக்கலாம் என கூறும் புதிய நடைமுறையால் நடுத்தர குடும்பத்தினர் பாதிப்பை சந்திப்பர். இது விவசாய மக்களையும் பெருமளவில் பாதிக்கும்.
எனவே புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி உடனே திரும்ப பெற வேண்டும். தங்க நகை கடன் பெறுவது தொடர்பாக அனைத்து தரப்பு மக்களும் பாதிக்காதவாறு எளிய வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம் - விவசாயி முகமது இப்ராஹிம்
திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:-
திருப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் மூலம் தினமும் கோடிக்கணக்கில் ஆடை உற்பத்தி செய்யப்பட்டு உள்நாடுகள் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. வர்த்தகம் கோடிக்கணக்கில் நடைபெற்றாலும், தொழில்துறையினர் பலரும் தங்களது நிறுவனத் தேவைக்காக வங்கிகளில் நகைகளை அடகு வைத்து கடன் வாங்கியும் வருகிறார்கள். குறிப்பாக வாரந்தோறும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்பதால் பலரும் கடன் பெறுவது வழக்கம்.
இதன் பின்னர் ஆடைகளுக்கான பணம் கிடைத்தவுடன் அடகு வைத்த நகைகள் மற்றும் உள்ளிட்ட ஆவணங்களை திரும்ப பெறுவது வழக்கம். ஆனால் தற்போது விதிக்கப்பட்டுள்ள இந்த 9 கட்டுப்பாடுகள் எங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. அதில் 75 சதவீதம் தான் கடன் தொகை வழங்கப்படும் என்பது உள்பட கட்டுப்பாடுகள் திருப்பூர் தொழில்துறையினருக்கு கடும் சவாலாக உள்ளது.
சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வங்கியில் அடகு வைத்த நகைகளுக்கு ஆண்டுதோறும் வட்டியை கட்டி அதனை மீண்டும் திருப்பி வைத்து வைப்பது வழக்கம். ஆனால் இந்த புதிய கட்டுப்பாட்டால் பணத்தை முழுமையாக செலுத்தி நகையை திருப்ப வேண்டும் என்பது முடியாத காரியம்.
எனவே இந்த கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே கடன் வழங்க வேண்டும்.
- தங்க நகைபோல், வெள்ளி பொருட்களுக்கும் கடன் வழங்கலாம்.
சென்னை:
தங்கத்தின் மவுசு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மக்கள் தங்கத்தை ஆடம்பரத்துக்காக மட்டும் பயன்படுத்தவில்லை. தங்களது அவசர தேவைக்குஉதவும் பொருளாகவும் பார்க்கிறார்கள்.
ஏழை-எளிய மற்றும் நடுத்தர மக்கள் தங்களுக்கு ஏற்படும் உடனடி பணத்தேவைக்கு தங்களிடம் உள்ள தங்க நகைகளை அடகு வைத்தே பணத்தை பெற்று வந்தனர். தனியார் நடத்தும் அடகு கடைகளில் வட்டி அதிகம் என்பதால் பெரும்பாலானவர்கள் வங்கிகளிலேயே தங்களது நகைகளை குறைந்த வட்டிக்கு அடகு வைத்து பணம் பெற்று வந்தனர்.
இந்த சூழ்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய கட்டுப்பாடு ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு பேரிடியாக விழுந்தது.
அதாவது முன்பெல்லாம் வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்தால், குறித்த காலக்கெடு முடியும் தருவாயில், அதற்கான வட்டியை மட்டும் கட்டிவிட்டு, நகையை மறு அடமானம் வைத்துக்கொள்ளலாம். தற்போது ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு பின்னர், இந்த முறை முற்றிலும் மாறியது. குறிப்பிட்ட காலக்கெடு முடிவதற்குள் கடன் தொகையை முற்றிலும் கட்டி நகையை திருப்ப வேண்டும். அதற்கு அடுத்த நாளில்தான் அந்த நகையை சம்பந்தப்பட்டவரால் மீண்டும் அடமானம் வைக்க முடியும்.
இந்த கட்டுப்பாடு அனைத்து தரப்பினரையும் பெருமளவு பாதித்தது.
இந்த சூழ்நிலையில் மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி தகவலாக, நகைக் கடனுக்கு புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.
தங்க நகைக்கடன் வழங்குவதில் புதிய நடைமுறைகளை அமல்படுத்த முடிவு செய்துள்ள ரிசர்வ் வங்கி, இதற்காக வங்கிகள் மற்றும் தங்க நகைக் கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் என அனைத்திற்கும் ஒரே விதமான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில் 9 அம்சங்கள் முன் மொழியப்பட்டுள்ளன.
அதன் விவரம் வறுமாறு:-
* தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே கடன் வழங்க வேண்டும். தற்போது 90 சதவீதம் வரை வழங்கப்படுகிறது. அதாவது ஒரு லட்சம் மதிப்புள்ள தங்கத்திற்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் தான் கடன் வழங்கப்படும்.
* தங்க நகையை அடமானம் வைப்பவர்கள், அதன் உரிமையாளர்கள் தாங்கள் தான் என்ற ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும்.
* வங்கிகள், தங்கத்தின் மீது கடன் வழங்கும்போது, அந்த தங்க நகையின் தரத்தை உறுதிப்படுத்த ஒரு தரச்சான்றிதழ் வேண்டும்.
* தங்க நகைகள், அலங்காரப் பொருட்கள் மற்றும் குறிப்பிட்ட தங்க நாணயங்கள் மட்டுமே அடமானமாக ஏற்கப்படும்.
* தங்க நகைபோல், வெள்ளி பொருட்களுக்கும் கடன் வழங்கலாம்.
* ஒரு நபருக்கு அதிகபட்சமாக ஒரு கிலோ தங்க நகைகள் மற்றும் 50 கிராம் தங்க நாணயங்கள் வரை மட்டுமே அடமானமாக வைக்க அனுமதிக்கப்படும்.
* தங்க நகை கடன் வழங்குபவர்கள் 22 காரட் தங்கத்தின் விலையை அடிப்படையாக கொண்டு தங்கத்தின் மதிப்பை கணக்கிட வேண்டும்.
* தங்க நகை கடன் வழங்குபவர்கள் அதற்கான ஒப்பந்தத்தில் அடமானமாக வைக்கப்பட்ட தங்கத்தின் விவரம், மதிப்பு, ஏல நடைமுறை போன்றவற்றை சேர்க்க வேண்டும்.
* கடன் தொகையை திருப்பி செலுத்திவிட்டால், 7 வேலை நாட்களுக்குள் தங்கத்தை திருப்பி தர வேண்டும்.
* அடமான நகையை திருப்பி தர தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.5,000 பணத்தை கடன் வழங்கிய நிறுவனம் வாடிக்கையாளருக்கு செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தங்க நகை கடன் தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கை சட்டவிரோதமானது.
- நகர்ப்புறங்களில் கிராமுக்கு ரூ.5000, கிராமப்புறங்களில் ரூ.7000 வழங்கப்படும்.
மதுரையை சேர்ந்த பிச்சைராஜன், மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் கடந்த 2024 செப்டம்பர் 30-ந்தேதி சுற்ற றிக்கை ஒன்றை வெளி யிட்டார். அதில் பல வழி காட்டுதல்கள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. ஒரே பேன் கார்டு எண்ணை பயன்படுத்தி பல நகைக்க டன்களை பெறுவது, நகைக்கடன்களை குறிப்பிட்ட தொகை செலுத்தி திருப்பி வைப்பது, புதுப்பிப்பது ஆகியவை தொடர்பாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த வழிகாட்டுதல்கள் மிகவும் தெளிவற்றவையாக வெளியிடப்பட்டு உள்ளன. பொது நலனுக்கு எதிராக இந்த முரண்பட்ட வழிகாட்டுதல்கள் உள்ளன. தற்போதைய வழிகாட்டுதலின்படி முழு தொகையையும் நகை திருப்பும் போது செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஏழை மக்கள் அவ்வாறு செலுத்த இயலாமல், நகைகளை இழக்கும் நிலை ஏற்படும்.
தற்போது வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் படி, ஒரு நபர் 5 முறை மட்டுமே நகைக் கடன்களை பெற இயலும். அதோடு நகர்புறங்களில் ஒரு கிராமுக்கு 5 ஆயிரம் ரூபாயும் கிராமப்புறங்களில் 7 ஆயிரத்து 500 ரூபாயும் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பாகுபாட்டினை ஏற்க இயலாது. இது அரசியலமைப்பு விதிகளுக்கு எதிரானது.
ஆகவே தங்க நகைக் கடன் தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை சட்ட விரோதமானது, செல்லாது என அறிவித்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு, வழக்கு தொடர்பாக ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை 8 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.
- தடை உடனடியாக அமலுக்கு வருவதாக ஆர்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்தது
- தங்க நகைகளின் தூய்மையை பரிசோதிப்பதில் தவறுகள் உள்ளதாக ஆர்பிஐ தெரிவித்தது
1995ல் நிர்மல் ஜெயின் (Nirmal Jain) என்பவர் தொடங்கிய நிதி வர்த்தக சேவை நிறுவனம்,"ஐஐஎஃப்எல்" (India Infoline Finance Limited).
மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐஐஎஃப்எல் (IIFL), இந்தியாவின் பல முக்கிய நகரங்கள் மட்டுமின்றி பல உலக நாடுகளிலும் நிதி வர்த்தக சேவை ஆற்றி வருகிறது.
பல்வேறு நிதி சேவைகளில் ஈடுபட்டு வரும் ஐஐஎஃப்எல், தங்க நகைக்கடன் வழங்குவதிலும் முன்னணியில் உள்ள வங்கி-சாரா நிதி நிறுவனமாக (NBFC) உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் வங்கி சேவைகளில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களை கண்காணிக்கும் மத்திய ரிசர்வ் வங்கி (RBI), ஐஐஎஃப்எல் தங்க நகைக்கடன் வழங்குவதை தடை செய்துள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாக ஆர்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
இதுவரை வினியோகிக்கப்பட்ட தங்க நகைக்கடன் தொடர்பான வசூல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை தொடர தடையேதுமில்லை.
ஆர் பி ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:
தங்க நகைக்கடன் வழங்குவதில் பல முறைகேடுகள் இருந்தது.
தங்க ஆபரணங்களின் தூய்மையை (purity) பரிசோதிப்பதில் கடன் வழங்கும் போது ஒரு நடைமுறையையும், தவணைகளை கட்ட தவறியவர்களின் நகைகளை ஏலம் விடும் போது வேறொரு நடைமுறையையும் கடைபிடிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வங்கி-சாரா நிதி நிறுவனங்களுக்கு உள்ள கடன் வழங்கும் எல்லையை கடந்து கடன் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.
நகைகளை ஏலம் விடுவதில் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்படவில்லை.

வாடிக்கையாளர்களின் கணக்குகளில் பிடித்தம் செய்யப்படும் சேவைக்கட்டணங்களில் சீரான கட்டண அமைப்போ வெளிப்படைத்தன்மையோ இல்லை.
நிறுவனத்தின் கணக்குகளை ஆர்பிஐ-யின் சிறப்பு தணிக்கை குழு தணிக்கை செய்து முடித்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"ஆர்பிஐ விதித்துள்ள சட்டதிட்டங்களின்படி தங்க நகைக்கடன் வழங்க அனைத்து நிர்வாக மற்றும் செயலாக்க நடைமுறைகளும் மாற்றி அமைக்கப்படுகிறது" என நிறுவனர் நிர்மல் ஜெயின் தெரிவித்தார்.






