என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நகைக்கடன் கட்டுப்பாடுகளை RBI தளர்த்த விவசாயிகள், வியாபாரிகள், பனியன் உற்பத்தியாளர்கள் கோரிக்கை
- தங்க நகை கடன் பெறுவது தொடர்பாக அனைத்து தரப்பு மக்களும் பாதிக்காதவாறு எளிய வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
- வாரந்தோறும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்பதால் பலரும் கடன் பெறுவது வழக்கம்.
தங்க நகைக்கடன் வழங்குவதில் புதிய நடைமுறைகளை அமல்படுத்த முடிவு செய்துள்ள ரிசர்வ் வங்கி, இதற்காக வங்கிகள் மற்றும் தங்க நகைக் கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் என அனைத்திற்கும் ஒரே விதமான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தஞ்சையை சேர்ந்த விவசாயி முகமது இப்ராஹிம் கூறுகையில்,
தமிழகத்தில் தங்க நகை கடன் பெறுவோர் அதிகளவில் உள்ளனர். குறிப்பாக விவசாயிகள் விவசாய பணிகள் மேற்கொள்ள தங்கத்தை அடமானமாக வைத்து கடன் பெறுகின்றனர் . தற்போது நகை கடனுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
குறிப்பாக தங்கத்தின் மதிப்பில் 75 சதவீத பணம் மட்டுமே கடனாக வழங்கப்படும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது . மேலும் அடகு வைக்கும் தங்கத்திற்கு உரிமையாளர் என்பதற்கான ஆதாரம் வழங்க வேண்டும் என்பது விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பிற்கும் சிரமத்தையே கொடுக்கும்.
முழுத்தொகை மற்றும் அதற்கான வட்டியை முழுமையாக கட்டி நகையை பெற்று அதனை மீண்டும் மறுநாள் அடமானம் வைக்கலாம் என கூறும் புதிய நடைமுறையால் நடுத்தர குடும்பத்தினர் பாதிப்பை சந்திப்பர். இது விவசாய மக்களையும் பெருமளவில் பாதிக்கும்.
எனவே புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி உடனே திரும்ப பெற வேண்டும். தங்க நகை கடன் பெறுவது தொடர்பாக அனைத்து தரப்பு மக்களும் பாதிக்காதவாறு எளிய வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம் - விவசாயி முகமது இப்ராஹிம்
திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:-
திருப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் மூலம் தினமும் கோடிக்கணக்கில் ஆடை உற்பத்தி செய்யப்பட்டு உள்நாடுகள் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. வர்த்தகம் கோடிக்கணக்கில் நடைபெற்றாலும், தொழில்துறையினர் பலரும் தங்களது நிறுவனத் தேவைக்காக வங்கிகளில் நகைகளை அடகு வைத்து கடன் வாங்கியும் வருகிறார்கள். குறிப்பாக வாரந்தோறும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்பதால் பலரும் கடன் பெறுவது வழக்கம்.
இதன் பின்னர் ஆடைகளுக்கான பணம் கிடைத்தவுடன் அடகு வைத்த நகைகள் மற்றும் உள்ளிட்ட ஆவணங்களை திரும்ப பெறுவது வழக்கம். ஆனால் தற்போது விதிக்கப்பட்டுள்ள இந்த 9 கட்டுப்பாடுகள் எங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. அதில் 75 சதவீதம் தான் கடன் தொகை வழங்கப்படும் என்பது உள்பட கட்டுப்பாடுகள் திருப்பூர் தொழில்துறையினருக்கு கடும் சவாலாக உள்ளது.
சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வங்கியில் அடகு வைத்த நகைகளுக்கு ஆண்டுதோறும் வட்டியை கட்டி அதனை மீண்டும் திருப்பி வைத்து வைப்பது வழக்கம். ஆனால் இந்த புதிய கட்டுப்பாட்டால் பணத்தை முழுமையாக செலுத்தி நகையை திருப்ப வேண்டும் என்பது முடியாத காரியம்.
எனவே இந்த கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






