search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜக"

    • ஈஸ்வரப்பா தனது மகனுக்கு ஹவேரி தொகுதியில் போட்டியிட சீட் கேட்டார்.
    • ஆனால் அவரது மகனுக்கு பா.ஜ.க. போட்டியிட சீட் தரவில்லை.

    பெங்களூரு:

    கர்நாடக முன்னாள் துணை முதல் மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா. பாராளுமன்ற தேர்தலில் தனது மகனுக்கு ஹவேரி தொகுதியில் போட்டியிட சீட் கேட்டார். ஆனால் அவரது மகனுக்கு பா.ஜ.க. போட்டியிட சீட் தரவில்லை. அவருக்கு பதிலாக முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு பா.ஜ.க. சீட் கொடுத்தது.

    இதனால் அதிருப்தி அடைந்த கே.எஸ்.ஈஸ்வரப்பா தான் சுயேட்சையாக ஷிமோகா தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரான ராகவேந்திராவை எதிர்த்து போட்டியிடப் போவதாக அறிவித்து, வேட்பு மனுவும் தாக்கல் செய்தார். இதனால் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் ஈஸ்வரப்பாவை சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் அவர் தேர்தலில் போட்டியிடுவதில் உறுதியாக இருந்தார்.

    நேற்று வேட்புமனுக்கள் திரும்பப்பெற கடைசி நாளாகும். இதையடுத்து எப்படியாவது கே.எஸ்.ஈஸ்வரப்பாவை வாபஸ் பெற செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தீவிரம் காட்டினர். ஆனால் கடைசி நிமிடம் வரை அவர் போட்டியில் இருந்து விலகவில்லை. மனுக்கள் திரும்ப பெறுவதற்கான நேரமும் முடிந்துவிட்டதால் ஈஸ்வரப்பா ஷிமோகா தொகுதியில் போட்டியிடுவது உறுதியானது.

    இதற்கிடையே, பா.ஜ.க. மாநில ஒழுங்குமுறை குழுத்தலைவர் லிங்கராஜ் பாட்டீல் கட்சியின் அறிவுறுத்தலை மதிக்காமல் ஷிமோகா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு கட்சிக்கு தர்மசங்கடத்தை ஈஸ்வரப்பா ஏற்படுத்தி உள்ளார். இது கட்சி ஒழுக்கத்தை மீறும் செயலாகும். எனவே அவரை கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் நீக்குவதாக அறிவித்தார்.

    இந்நிலையில், ஈஸ்வரப்பா இன்று செய்தியாளர்க்ளைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஷிமோகா தொகுதியில் கட்சி சாராத வேட்பாளராக போட்டியிடுகிறேன். எனக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது. எந்த வெளியேற்றத்திற்கும் நான் அஞ்சவில்லை. மேலும் நான் 5 முறை தாமரை சின்னத்தில் போட்டியிட்டுள்ளேன். நான் எப்படியும் ஷிமோகா தொகுதியில் வெற்றி பெற்று மீண்டும் பா.ஜ.க.வில் இணைவேன். எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கர்நாடகாவில் பா.ஜ.க. வளர்ச்சிக்கு கடுமையாக போராடியவர்களில் நானும் ஒருவர் என தெரிவித்தார்.

    • காமராஜர் காலத்தில் 14 அணை கட்டப்பட்டது.
    • 100 சதவீதம் பணத்தை மத்திய அரசு கொடுத்தும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்காமல் திராவிட அரசு உள்ளது.

    பல்லடம்:

    தமிழக பா.ஜ.க. தலைவரும், கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை தீவிர பிரசாரம் மேற்கொண்டார். வடுகபாளையம்புதூர் பிரிவு பகுதியில் அவர் வாக்காளர்கள் மத்தியில் பேசியதாவது:-

    அடுத்த 25 ஆண்டுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க இருக்கிறீர்கள். பெண்கள் பாதுகாப்பை பற்றி சிந்திக்கிறார்கள். தொழில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும் என ஆண்கள் சிந்திக்கிறார்கள். சிலர் கான்கிரீட் வீடு கிடைக்குமா? குடிநீர் கிடைக்குமா ? என சிந்திக்கிறார்கள். எல்லோரும் வெவ்வேறு சிந்தனையோடு இருக்கிறார்கள். அனைவரின் எண்ண ஓட்டத்தையும் சரி செய்வோம். கஞ்சா நம் வீட்டுக்கு வீதிக்கு வரக்கூடாது.

    காமராஜர் காலத்தில் 14 அணை கட்டப்பட்டது. அதன் பிறகு யாரும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதன் தாக்கத்தை காண்கிறோம். அணைகள் கட்டுவதற்கு இங்குள்ள அரசு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனைமலை நல்லாறு திட்டத்தை கொண்டு வர வேண்டும். அதனை நாங்கள் செய்து காட்டுவோம் .100 சதவீதம் பணத்தை மத்திய அரசு கொடுத்தும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்காமல் திராவிட அரசு உள்ளது. குடிநீர் திட்டம் 100 சதவீதம் மத்திய அரசு திட்டம்.

    பிரதமர் மோடி இலவசமாக கொடுக்கக்கூடிய திட்டத்தை இங்குள்ள கும்பல் சுரண்டுகிறது. ஏழைகளின் ரத்தத்தை சுரண்டி ஏழையாக வைத்திருக்கிறார்கள். அவர்களை ஓடஓட விரட்ட வேண்டும். இதற்கான மாற்றத்தை கொடுக்க உங்கள் வீட்டுப்பிள்ளையாகிய என்னை வெற்றி பெற செய்ய வேண்டும். நம் பணி பூர்த்தியாகவில்லை. இன்னும் 5 ஆண்டுகள் மோடி வர வேண்டும்.

    கோவை பாராளுமன்ற தொகுதிக்கு மாநில அரசால் நிலத்தை கொடுக்கவில்லை என்றால் ஊருக்குள் அப்பார்ட்மெண்ட் கட்டி கொடுக்கப்படும். நிலம் இல்லை என்றால் இதுதான் வழி. பிரச்சனைகளை முடித்து கொடுக்கிறோம். அதற்கு வாய்ப்பு கொடுங்கள். இங்கிருந்து எம்.பி.யாக சென்றவர்கள் பாராளுமன்றத்தில் மவுனம் காத்து தற்போது திரும்பி வந்திருக்கிறார்கள். நான் தமிழகம் முழுவதும் நடந்து சென்று வந்து விட்டேன். எல்லா பிரச்சனைகளையும் உற்று பார்த்து விட்டேன். ஒரே ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள். நான் மாற்றி காட்டுகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    • சிதம்பரத்தில் வேலூரை சேர்ந்த பெண் ஒருவரை பா.ஜ.க. வேட்பாளராக நிற்க வைத்து உள்ளனர்.
    • மரியாதை இல்லாததால் பா.ஜ.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்துள்ளேன்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. பட்டியல் அணி மாநில தலைவராக பதவி வகித்து வந்தவர் தடா பெரியசாமி. இவர் திடீரென்று பா.ஜ.க.வில் இருந்து விலகினார். இந்த நிலையில் அவர் இன்று காலை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்றார். அங்கு எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், தடா பெரியசாமி அ.தி.மு.க.வில் இணைந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் பா.ஜ.க.வில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளேன். நான் தமிழக பா.ஜ.க.வில் மாநில பட்டியல் அணி தலைவராக பதவி வகித்தேன். நான் சிதம்பரம் தனி தொகுதியை சேர்ந்தவர். எனது சொந்த தொகுதியான சிதம்பரத்தில் வேலூரை சேர்ந்த பெண் ஒருவரை பா.ஜ.க. வேட்பாளராக நிற்க வைத்து உள்ளனர். நான் பட்டியல் அணி மாநில தலைவராக இருந்தும், அது எனது சொந்த தொகுதியாக இருந்தும் என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை, பட்டியல் அணி தலைவருக்கே கட்சியில் மரியாதை இல்லை என்றால், இந்த சமுதாய மக்களுக்கு எப்படி மரியாதை இருக்கும். தமிழக பா.ஜ.க.வில் அண்ணாமலை, எல்.முருகன், கேசவ விநாயகம் ஆகிய 3 பேர் தான் முடிவு எடுக்கிறார்கள். கட்சியில் அவர்கள் 3 பேர் தான் இருக்கிறார்களா? வேறு யாரும் இல்லையா?

    எனவே எனக்கு மரியாதை இல்லாததால் பா.ஜ.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்துள்ளேன். இனி அ.தி.மு.க. தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்படுவேன். இந்த தேர்தலில் மட்டுமல்ல, 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. தலைமை எடுக்கும் முடிவின்படி செயல்படுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தடா பெரியசாமி கடந்த சட்டசபை தேர்தலில் திட்டக்குடி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது அவர் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் அவர் பா.ஜ.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

    • 150 முதல் 170 தொகுதிகளை பலவீனமான தொகுதிகளாக பாரதிய ஜனதா கருதுகிறது.
    • தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணி தற்போது ஓசையின்றி நடப்பதாகவும் கூறப்படுகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வந்து விட்டது. தேர்தல் பணிகளை தலைமை தேர்தல் ஆணையம் தொடங்கி தீவிரப்படுத்தி உள்ளது.

    வருகிற 22-ந்தேதி அயோத்தி கோவில் கும்பாபிஷேகம் மற்றும் பிப்ரவரி 1-ந்தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    மே மாதம் புதிய அரசு பதவி ஏற்க வேண்டும் என்ற நிலையில் சற்று முன் கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கிடையே ஆளும் பாரதிய ஜனதா கட்சி இந்த தடவை 400 முதல் 450 தொகுதிகளுக்கு குறி வைத்து இருக்கிறது. அதாவது மொத்தம் பதிவாகும் வாக்குகளில் 50 சதவீத வாக்குகளை கைப்பற்ற வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தீவிரமாக உள்ளார்.

    இதற்காக 543 தொகுதிகளிலும் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பாரதிய ஜனதா வேட்பாளர் தேர்வை நடத்தி வருகிறது. 150 முதல் 170 தொகுதிகளை பலவீனமான தொகுதிகளாக பாரதிய ஜனதா கருதுகிறது.

    பாரதீய ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக அதாவது பலவீனமாக கருதப்படும் தொகுதிகள் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், ஒடிசா, உத்தரபிரதேசம், பீகார், மேற்குவங்காளம் ஆகிய 9 மாநிலங்களில் இருப்பதாக கணக்கெடுத்துள்ளனர். தமிழகத்தில் 36, ஆந்திராவில் 25, மராட்டியத்தில் 24, மேற்குவங்காளத்தில் 23, கேரளாவில் 20, உத்தரபிரதேசத்தில் 12, பீகாரில் 12, ஒடிசாவில் 12, தெலுங்கானாவில் 12 என 140 தொகுதிகள் மிக மிக பலவீனமான தொகுதிகளாக கணக்கெடுத்துள்ளனர்.

    மேலும் 20 தொகுதிகள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டு 160 தொகுதிகளை அதிக கவனம் செலுத்த வேண்டிய தொகுதிகளாக பாரதிய ஜனதா கருதுகிறது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணி தற்போது ஓசையின்றி நடப்பதாகவும் கூறப்படுகிறது.

    வடமாநிலங்களில் மகர சங்கராந்தி வரை நல்ல காரியங்கள் எதையும் தொடங்கமாட்டார்கள். 15-ந்தேதி தை மாதம் பிறந்த பிறகுதான் அவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபட தொடங்குவார்கள். எனவே பாரதிய ஜனதா முதல் வேட்பாளர் பட்டியலை அடுத்த வாரம் வெளியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    குறிப்பாக 15-ந்தேதி முதல் 22-ந்தேதிக்குள் ஏதாவது ஒரு நாளில் முதல் வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா அதிரடியாக அறிவிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அடுத்த கட்டமாக பிப்ரவரி 14-ந் தேதிக்குள் 2-வது வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா அறிவிக்கும் என்று பீகார் மாநில பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    முதல் மற்றும் 2-வது வேட்பாளர் பட்டியலில் 70 முதல் 75 சதவீதம் வரை புதுமுக வேட்பாளர்கள் இடம் பெறுவார்கள் என்றும் பாரதிய ஜனதா வட்டாரத்தில் கூறப்படுகிறது. தமிழகத்திலும் வேட்பாளர் தேர்வு ஓசையின்றி நடப்பதாக கூறப்படுகிறது.

    தமிழக பா.ஜ.க. தலைவர்களுக்கு தெரியாமல் சில பட்டியலை மேலிடம் தயாரித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. பாரதிய ஜனதாவின் 2024-ம் ஆண்டு தேர்தல் வியூகங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.

    • தருமபுரி-மொரப்பூர் ரெயில் பாதையை பயன்பாட்டிற்கு கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
    • தற்போது இந்தியா 9 ஆண்டுகளில் உலகில் 5-வது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்துள்ளது.

    தருமபுரி:

    பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தருமபுரியில் என் மனம் என் மக்கள் நடைப்பயணத்தை நேற்று மதியம் பாலக்கோட்டில் இருந்து தொடங்கி தொடர்ந்து பாப்பாரப்பட்டி பாரதமாதா ஆலயம், பென்னாகரம் அதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு தருமபுரியில் நடைபயணத்தை மேற்கொண்டார்.

    தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பிருந்து 4 ரோடு வரை உள்ள ஒரு கிலோமீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டபோது மாவட்ட பொருளாளரும், நிகழ்ச்சி பொறுப்பாளருமான ஐஸ்வரியம் முருகன் அண்ணாமலை வரவேற்கும் வகையில் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்து இருந்தார்.

    பின்னர் நடைபயணத்தை முடித்துவிட்டு பொதுமக்களிடத்தில் அண்ணாமலை பேசியதாவது:-

    தருமபுரி சாதாரண மண் அல்ல. அதியமான் மன்னர்கள், அவ்வையார் வாழ்ந்த பகுதி. தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டம் தொழில் வளர்ச்சி குறைந்த மாவட்டம்.

    இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்தியா முழுவதும் சென்று கடுமையான வேலை செய்து வருகிறார்கள். இந்த மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் சாதியை பிரதானமாக வைத்து அரசியல் செய்து கொண்டு வருகிறார்கள்.

    தருமபுரி-மொரப்பூர் ரெயில் பாதையை பயன்பாட்டிற்கு கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. உழைப்பு, கல்வி ஆகியவற்றில் முன்னேற்றம் இருந்தாலும் தருமபுரி மாவட்டம் சாதி அரசியலால் வளர்ச்சியில் பின்னோக்கியே சென்று கொண்டுள்ளது.


    பிரதமர் மோடி நம்புவது விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் என்ற 4 சாதிகளை மட்டும் தான். இதில் ஏழை என்ற நிலை இனிமேல் இருக்கக் கூடாது என்பதற்காக மோடி பாடுபட்டு வருகிறார்.

    தருமபுரி மாவட்டத்தின் உற்பத்தி திறனை 1.7 சதவீத வளர்ச்சியில் இருந்து 5 சதவீதமாக மாற்றுவோம். அவ்வாறு மாற்றும் போது 5 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். பாரத மாதா அனைவருக்கும் பொதுவானவர்.

    2014-ம் ஆண்டு இந்தியா உலக அளவில் 11-வது பெரிய பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடாக இருந்தது. ஆனால் தற்போது இந்தியா 9 ஆண்டுகளில் உலகில் 5-வது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்துள்ளது. பாரதப் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 2028-ல் உலகின் 3-வது பொருளாதார நாடாக வளர்ச்சி அடையும். அது தான் வளர்ச்சி அடைந்த பாரதமாக அமையும்.

    2014-ம் ஆண்டு ரூ.86 ஆயிரமாக இருந்த தனிநபர் வருமானம் நரேந்திர மோடியின் ஆட்சியில் தற்போது ரூ.1 லட்சத்து 96 ஆயிரம் ஆக உயர்ந்ததுள்ளது. தமிழக அரசு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை சரியாக செயல்படுத்தவில்லை.

    இந்த திட்டத்தை செயல் படுத்துவதில் சரியான திட்டமிடல் இல்லை என சி.ஏ.ஜி. அறிக்கை தெரிவித்துள்ளது. இதனால் ஒரு நபருக்கு சராசரியாக கிடைக்க வேண்டிய 40 லிட்டர் குடிநீரில் 26 லிட்டர் மட்டுமே கிடைக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக பென்னாகரத்தில் நடைபெற்ற நடை பயணத்தில் பங்கேற்று பொதுமக்களிடையே பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க. துணை தலைவர் கே.பி. ராமலிங்கம், தருமபுரி மாவட்ட பொருளாளர் ஐஸ்வரியம் முருகன் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.

    • மேற்கு வங்க பா.ஜனதா தலைவர் டாக்டர் சுகந்தோ மஜும்தார் தனது எக்ஸ் தளத்தில் ஒரு படத்தை வெளியிட்டார்.
    • தாக்குதலில் மூளையாக செயல்பட்ட லலித்ஜா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தபஸ்ராயுடன் நீண்ட காலமாக நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் அத்துமீறிய வழக்கில் மூளையாக செயல்பட்ட லலித்ஜாவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. தபஸ்ராயுடன் நீண்ட காலமாக தொடர்பு இருந்ததாக பா.ஜனதா கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

    இது தொடர்பாக மேற்கு வங்க பா.ஜனதா தலைவர் டாக்டர் சுகந்தோ மஜும்தார் தனது எக்ஸ் தளத்தில் ஒரு படத்தை வெளியிட்டார்.

    அதில், தபஸ்ராயுடன், லலித்ஜா செல்பி புகைப்படம் எடுத்து கொண்ட காட்சி உள்ளது. அந்த புகைப்படத்துடன் மஜும்தாரின் பதிவில், நமது ஜனநாயக கோவில் மீதான தாக்குதலில் மூளையாக செயல்பட்ட லலித்ஜா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தபஸ்ராயுடன் நீண்ட காலமாக நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்.

    எனவே அவரது உடந்தையை விசாரிக்க இந்த ஆதாரம் போதாதா? என பதிவிட்டு இருந்தார்.

    இதே போல பா.ஜனதா கட்சியின் தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா கூறுகையில், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் இப்போது திரிணாமுல் காங்கிரசுடன் தொடர்பு வைத்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது என கூறியதோடு, இந்தியா கூட்டணி மீதும் புகார் கூறியுள்ளார்.

    ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை திரிணாமுல் காங்கிரஸ் மறுத்துள்ளது. பார்வையாளர்களாக வந்தவர்களுக்கு பாஸ் வழங்கிய பா.ஜனதா கட்சியின் மைசூர் எம்.பி. பிரதாப் சிம்ஹாவை விசாரிக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

    அதே நேரம் பாஸ்களை வழங்கியதை தவிர குற்றம் சாட்டம் பட்டவர்களுடன் தனக்கு எந்த தொடர்பு கிடையாது என பிரதாப் சிம்ஹா மறுத்துள்ளார். 

    • துணைவேந்தர் பதவி என்பது ஒரு அரசியல் பதவியாக இருக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தெரிவித்து இருந்தது.
    • தமிழகத்தில் மக்கள் பிரச்சனை நிறைய இருக்கிறது.

    சென்னை:

    சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனி தீர்மானத்தின் மீது ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். அப்போது பா.ஜனதா எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் பேசியதாவது:-

    சட்டசபையில் கவர்னர் குறித்து யாரும் பேசக்கூடாது என நீங்கள் ஆரம்பத்தில் கூறினீர்கள். ஆனால் இப்போது ஒவ்வொருவரையும் பேசவிட்டு வேடிக்கை பார்ப்பதாக சபாநாயகரை பார்த்து குற்றம் சாட்டினார்.

    அப்போது சபாநாயகர் கூறும்போது, எம்.எல்.ஏ.க்கள் இங்கு கோப்புகள் பற்றி பேசினார்கள். கவர்னரை தனிப்பட்ட முறையில் இங்கு பேசவில்லை என்றார்.

    இதற்கு பதிலளித்து நயினார் நாகேந்திரன் பேசும்போது, குழந்தை தனமாக, சிறுபிள்ளைத்தனமான என்றெல்லாம் பேசி இருக்கிறார்கள். சட்டமன்றம் மிகப்பெரிய மாண்பும், மரபும் கொண்டது என்றார்.

    அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், குழந்தை தனம் என்பது கள்ளம் கபடம் இல்லாத மனசுக்கு சொந்தக்காரர் என்று கூட அர்த்தம் உண்டு. இந்த தீர்மானங்கள் மீது தான் உறுப்பினர்கள் பேசுகிறார்கள். நாளைக்கு நீங்களே கூட கவர்னர் ஆகலாம் என்றார். (அப்போது சபையில் பலத்த சிரிப்பொலி நிலவியது).

    நயினார் நாகேந்திரன், பல்கலைக்கழகங்களில் வேந்தர்களை கவர்னரே நியமிக்கலாம் என்ற தீர்மானத்தை இதே சபையில் 1998-ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் கலைஞரே கொண்டு வந்து இருக்கிறார். ஆனால் இப்போது அந்த அதிகாரம் முதலமைச்சருக்கு வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 'அப்போதெல்லாம் துணை வேந்தரை நியமிக்கும் போது அரசின் பரிசீலனைக்கு கொண்டுவந்து கலந்து பேசி தான் நியமித்தனர். ஆனால் இப்போது அப்படி இல்லை. அதனால் இந்த நிலை என்றார்.

    நயினார் நாகேந்திரன்:- துணைவேந்தர் பதவி என்பது ஒரு அரசியல் பதவியாக இருக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தெரிவித்து இருந்தது.

    இவ்வாறு பேசியதும், அதற்கு அமைச்சர்கள் ரகுபதி, பொன்முடி ஆகியோர் விரிவான விளக்கம் அளித்தனர். கவர்னர் அரசியல் சட்டத்தை மீறி அரசியல் செய்கிறார். எங்களை பொறுத்தவரை துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் அரசுக்கு வேண்டும் என்றனர்.

    இதை ஏற்காத நயினார் நாகேந்திரன் வெளிநடப்பு செய்தார். அவருடன் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் வெளியேறினார்கள்.

    பின்னர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறும்போது, 'தமிழகத்தில் மக்கள் பிரச்சனை நிறைய இருக்கிறது. அந்த பிரச்சனைகளை மூடி மறைக்க கவர்னர் விஷயத்தை இந்த அரசு கையில் எடுத்துள்ளது. பாராளுமன்ற தேர்தல் வருவதால் தி.மு.க. அரசுக்கு பின்னடைவு ஏற்படும் எனக் கருதி கவர்னரை பற்றி கூறுகிறார்கள்.

    எனவே முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானங்களை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம் என்றார்.

    மத்திய அரசை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் திமுக அரசு மக்களை ஏமாற்றி விட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
    சென்னை:

    பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    மக்களின் சுமையை குறைப்பதற்காக மத்திய அரசு தற்போது எரி பொருட்களின் மீதான வரியை இரண்டாவது முறையாக குறைத்துள்ளது. இதன் மூலம் முதல்முறையாக தமிழக அரசின் மதிப்புக் கூட்டு வரி, மத்திய அரசின் கலால் வரியை விட அதிகமாக இருக்கிறது.

    மத்திய அரசின் எரிபொருள் மீதான கலால் வரியை விட அதிகமாக மாநிலம் கூடுதலாக வரியை வசூலிக்கும் போது வருவாய் இழப்பு எப்படி ஏற்படும். 

    கடந்த காலத்தில் சொன்ன  திமுகவின் வாக்குறுதியை மறந்து பெட்ரோல் மீது 5 ரூபாய்க்கு பதிலாக வெறும் மூன்று ரூபாய் குறைத்து விட்டு, டீசலுக்கு வாக்குறுதி அளித்த நான்கு ரூபாயில் ஒரு பைசா கூட குறைக்காமல் அறிவாலயம் திமுக அரசு மக்களை ஏமாற்றி விட்டது.

    தமிழகம் தவிர்த்த இந்தியாவின் பிற மாநிலங்களில் எல்லாம் மத்திய அரசின் வரி குறைப்பு நடவடிக்கையை அடுத்து, மாநில அரசும் விலையை குறைத்து மக்கள் நலனில் அக்கறை காட்டியது. 

    ஆனால் அறிவாலயம் திமுக அரசு, தன் நியாயமற்ற நடத்தையை தொடர்கிறது. மக்கள் நலனை விட, மாநிலத்தின் நலனுக்கு மேலாக, தன் வறட்டு கவுரவத்தை பெரிதாக கருதுவது வெட்க கேடானது.

    மத்திய அரசு,  மாநிலங்களுடன் பகிரும் அடிப்படை கலால் வரியில் எந்த மாறுதலும் செய்யவில்லை. அதைத்தான் மாநில அரசுடன் பகிர்ந்து வருகிறது. 

    ஆனால் கூடுதல் கலால்வரி விவசாய கட்டமைப்பு மற்றும் சாலை மேம்பாட்டுக்குமான வரித் தொகுப்புகள் திட்ட ஒதுக்கீடு நிதியாக கருதப்படுவதால், அதை மாநிலங்களின் திட்டங்களுக்கு மத்திய அரசு பயன்படுத்துகிறது. 

    ஆகவே மாநிலங்களுடன் நேரடியாக பகிராத திட்ட ஒதுக்கீடு வரியில் மத்திய அரசு வரிக் குறைப்பு செய்துள்ளது. உண்மையை மறைத்து உத்தமர்கள் போல் காட்டிக் கொள்ளும் திமுக அரசின் போலி வேடம் கலைகிறது. 

    திமுக அரசு உடனடியாக பெட்ரோல் விலையை மேலும் 2 ரூபாயும், டீசலுக்கு 4 ரூபாயும் குறைப்பதன் மூலம் தன் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். 

    மேலும் சமையல் காஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்பட வேண்டும்

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    சென்னை வரும் பிரதமர் மோடிக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்துள்ளனர்.
    சென்னை:

    பிரதமர் மோடி பொறுப்பேற்று 8 ஆண்டுகள் ஆவதையொட்டி அதனை நாடு முழுவதும் பா.ஜனதா கட்சியினர் கொண்டாட திட்டமிட்டு உள்ளனர். இதையொட்டி வருகிற 26-ந்தேதி சென்னை வரும் மோடியை வரவேற்பதற்கு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    இது தொடர்பாக தி.நகரில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார்.

    இந்த கூட்டத்தில் சென்னை விமான நிலையத்தில் இருந்து நேரு ஸ்டேடியத்துக்கு காரில் செல்லும் பிரதமர் மோடியை வழிநெடுக ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் வரவேற்பது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. கிராமிய கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் பிரதமர் மோடியை வரவேற்க தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் தயாராகி உள்ளனர்.
    விழா நடைபெறும் நேரு ஸ்டேடியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    சென்னை:

    பிரதமர் நரேந்திரமோடி நாளை மறுநாள் சென்னை வருகிறார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர் ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    இதற்காக வருகிற 26-ந்தேதி அன்று மாலை 5 மணி அளவில் பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார். ஐதராபாத்தில் இருந்து இந்திய விமானப்படை விமானத்தில் புறப்பட்டு சென்னை வரும் பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கிறார்கள்.

    பிரதமர் வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    10 ஆயிரம் போலீசார் சென்னை மாநகரம் முழுவதும் தீவிரமாக கண்காணிக்கிறார்கள். சென்னை விமான நிலையத்தில் இருந்து நேரு ஸ்டேடியத்துக்கு காரில் வரும் வரையிலேயே பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 30 நிமிடங்களுக்கு மேல் காரில் பயணம் செய்து மாலை 5.45 மணி அளவில் மோடி நேரு ஸ்டேடியத்துக்கு வருகை தருகிறார்.

    இதனால் அவர் வரும் பாதை முழுவதும் நாளை இரவில் இருந்தே போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.

    மோடி வருகையையொட்டி டெல்லியில் இருந்து பாதுகாப்பு அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பே சென்னைக்கு வந்து விட்டனர். அவர்கள் சென்னை விமான நிலையம் பிரதமரின் சாலைமார்க்க பயண வழித்தடங்கள், நேரு உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்துள்ளனர். அவர்களுடன் உள்ளூர் போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    டி.ஜி.பி. சைலேந்திரபாபு, கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன், போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் பிரதமரின் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். மோடி வருகையையொட்டி 5 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    விழா நடைபெறும் நேரு ஸ்டேடியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நெடுஞ்சாலைத்துறை செயலாளர் தீரஜ்குமார், பொதுப்பணித்துறை செயலாளர் தயானந்த கட்டாரியா ஆகியோரும் விழாவுக்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்து வருகிறார்கள். நேரு ஸ்டேடியத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதமரின் நிகழ்ச்சி நடைபெறும் வருகிற 26-ந்தேதி அன்று அப்பகுதி முழுவதும் டெல்லி பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

    இரவு 7 மணி வரை நடைபெறும் விழாவை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். இதற்காக இரவு 7.30 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை சென்றடையும் மோடி அங்கிருந்து விமானப்படை விமானத்தில் புறப்பட்டு டெல்லி சென்றடைகிறார்.



    தமிழக அரசுக்கு இடையூறாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக நினைவேந்தல் நிகழ்ச்சியில் ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ கலந்து கொள்ளவில்லை.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தலில் ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    வணிகர்கள் பொருட்களுக்கு தரும் தள்ளுபடி போல பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை ஏற்றிவிட்டு தற்போது குறைந்துள்ளதாக மத்திய அரசு கூறுகிறது.

    அடிப்படை கலால் வரியில் மட்டும் தான் வருவாய் மாநில அரசுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. மற்ற கலால் வரி வருவாய் மத்திய அரசுக்கு தான் செல்கிறது. 50 சதவீதம் இருந்த அடிப்படை கலால் வரியை ஒன்றிய அரசு 4 சதவீதமாக குறைத்துள்ளது

    பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை புள்ளிவிவரங்களுடன் மக்களை குழப்புவதற்காக அவதூறு அண்ணாமலையாக கிளம்பியுள்ளார்.

    தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் நீட் தேர்வு, தொழிற் கல்விக்கு நுழைவுத்தேர்வினை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது.

    புதிய கல்விக் கொள்கையில் தமிழகத்தை வஞ்சிக்கும் அம்சங்கள் உள்ளது. தமிழகத்தை வஞ்சிக்கும் போக்கினை ஒன்றிய அரசு மாற்ற வேண்டும். இல்லையென்றால் மக்களை திரட்டி தமிழக பா.ஜ.க. தலைமையகமான கமலாலயம் முன்பு காந்தி வழியில் போராட்டம் நடத்துவோம்.

    பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரவுள்ள நிலையில் ஈழ நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்று ஒன்றிய அரசின் கீழ் உள்ள சில அமைப்புகள் காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.

    இந்த நேரத்தில் தமிழக அரசுக்கு இடையூறாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக நினைவேந்தல் நிகழ்ச்சியில் ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ கலந்து கொள்ளவில்லை.

    தமிழ் ஈழம் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தில் தொடர்ந்து ஈடுபடுவோம் என்பதில் மாற்றம் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பா.ஜனதா ஆட்சி மூலம் கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு பலன்களை அனுபவித்து வரும் 100 கோடி பயனாளிகளை அடையாளம் கண்டு பட்டியலிட்டுள்ளனர்.


    பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு வருகிற 30-ந்தேதி 8-வது ஆண்டை நிறைவு செய்ய உள்ளது. எனவே 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு இப்போதே அந்த கட்சி தயாராக தொடங்கி இருக்கிறது.

    அதற்கு முன்னதாக அதாவது அடுத்த 2 ஆண்டுகளில் 11 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் என்று முக்கியமான மாநிலங்கள் தேர்தலை சந்திக்கின்றன.

    இதை கருத்தில் கொண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த பா.ஜ.க. ஆலோசனை கூட்டத்தில் பல அதிரடி முடிவுகளை மூத்த தலைவர்கள் எடுத்து உள்ளனர்.

    முதல்கட்டமாக உத்தர பிரதேசத்தில் சமூக வலை தளங்களில் நன்கு பயிற்சி பெற்ற 10 ஆயிரம் பேரை களம் இறக்கி உள்ளனர். இதே போன்று மற்ற மாநிலங்களிலும் சமூக வலைதளங்களில் பலரை பயிற்சி அளித்து பா.ஜ.க.வின் அடிமட்டததை வலுப்படுத்த ஓசையின்றி ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    இதற்கிடையே பா.ஜனதா ஆட்சி மூலம் கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு பலன்களை அனுபவித்து வரும் 100 கோடி பயனாளிகளை அடையாளம் கண்டு பட்டியலிட்டுள்ளனர்.

    இந்த 100 கோடி பேரையும் பா.ஜ.க. நிர்வாகிகள் சந்தித்து பேச வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பா.ஜ.க. நிர்வாகிகள் வீடு, வீடாக கதவை தட்டி பா.ஜ.க. ஆட்சியின் சாதனைகளை விளக்கி சொல்லப் போகிறார்கள்.

    ×