search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    தமிழகத்தில் இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் திட்டங்கள்- முழு விவரம்

    சென்னை எழும்பூர், மதுரை, ராமேசுவரம், கன்னியாகுமரி, காட்பாடி ஆகிய 5 ரெயில் நிலையங்களை நவீனப்படுத்தும் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
    சென்னை:

    பிரதமர் மோடி இன்று மாலை சென்னை வருகிறார். நேரு உள் விளையாட்டரங்கில் மாலை 5.45 மணியளவில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொண்டு ரூ. 31 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை தொடங்கி வைத்தும் நாட்டுக்கு அர்ப்பணித்தும் உரையாற்றுகிறார்.

    விழாவில் முடிவுற்ற 5 திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அந்த 5 திட்டங்கள் விபரம் வருமாறு:-

    தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 30 கி.மீ. தூரத்துக்கு ரூ.598 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 3-வது ரெயில் பாதையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

    இதே போல் மதுரை-தேனி இடையே ரூ.506 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள அகல ரெயில் பாதையையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

    மதுரை-தேனி அகல ரெயில் பாதை

    எண்ணூர்-செங்கல்பட்டு பிரிவில் 115 கி.மீ. தூரத்துக்கு குழாய் வழியே எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக 115 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.849 கோடி செலவில் எரிவாயு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதையும் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.

    மேலும் பெங்களூரு-திருவள்ளூர் பிரிவிலும் 271 கிலோ மீட்டர் தூரத்துக்கு எரிவாயு குழாய்கள் ரூ.911 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செயல் திட்டத்தையும் நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணிக்கிறார்.

    கலங்கரை விளக்கம் செயல் திட்டத்தின் கீழ் அந்த சுற்று வட்டாரத்தில் குடியிருப்போருக்காக ரூ.116 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 1,152 வீடுகளையும் பயனாளிகளுக்கு ஒப்படைக்கிறார்.

    மறுசீரமைக்கப்பட உள்ள மதுரை ரெயில் நிலையத்தின் மாதிரி புகைப்படம்

    மேலும் இதே விழாவில் 6 பிரமாண்டமான திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். அந்த 6 திட்டங்கள் விபரம் வருமாறு:-

    ரூ. 5,852 கோடி செலவில் துறைமுகம்-மதுரவாயல் இடையே அமைக்கப்படும் இரண்டடுக்கு மேம்பாலம்.

    ரூ.14.872 கோடி செலவில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு விரைவு வழி சாலை.

    பெங்களூருவில் இருந்து தர்மபுரி இடையே ரூ.3,471 கோடி செலவில் 4 வழிச்சாலை அமைத்தல்.

    சென்னையில் ரூ.1,428 கோடியில் பல வகை வழிமுறைகளுடன் கூடிய சரக்கு பூங்கா அமைத்தல் ஆகிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    சென்னை எழும்பூர், மதுரை, ராமேசுவரம், கன்னியாகுமரி, காட்பாடி ஆகிய 5 ரெயில் நிலையங்களை நவீனப்படுத்தும் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

    மறுசீரமைக்கப்பட உள்ள எழும்பூர் ரெயில் நிலையத்தின் மாதிரி புகைப்படம்

    மீன்சுருட்டி முதல் சிதம்பரம் வரை 32 கிலோ மீட்டர் தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலையில் ரூ.724 கோடி செலவில் தனி பாதைகள் அமைக்கப்படுகிறது. இதற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

    இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின்கட்காரி, ரெயில்வே துறை மந்திரி அஸ்வினிவைஷ்ணவ், பெட்ரோலிய துறை மந்திரி ஹர்தீப்சிங்பூரி, மத்திய மந்திரி எல்.முருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் காணொலி வாயிலாக நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.


    Next Story
    ×