என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போஸ்னியா"

    • முதியோர் இல்லத்தின் 7-வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
    • வயதானவர்கள், உடல்நலம் பாதித்தவர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.

    சரஜெவோ:

    தென்கிழக்கு ஐரோப்பிய நாடான போஸ்னியா ஹெர்சகோவினாவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உடல் கருகி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    போஸ்னியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள துஸ்லா நகரத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தின் 7-வது தளத்தில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கிக் கொண்ட வயதானவர்கள், உடல்நலம் பாதித்தவர்கள் தாங்களாக வெளியேற முடியாமல் தவித்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அதற்குள் தீ வேகமாகப் பரவியதால், உடல் கருகி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்புப்பணியில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

    மின்கசிவால் தீ விபத்து நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தீவிபத்து குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    • சுமார் 12,000 பேர் நெர்மின் வெளியிட்ட இந்த வீடியோவை நேரலையில் பார்த்தனர்
    • காவலர்கள் நெருங்கியதும் நெர்மின் தன்னைதானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்

    ஐரோப்பாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஒரு நாடு போஸ்னியா-ஹெர்ச்கோவினா.

    அந்நாட்டின் வடகிழக்கில் உள்ளது க்ரடகாக் (Gradacac) நகரம். இங்கு வசிப்பவர் நெர்மின் சுலெமனோவிக் (Nermin Sulejmanovic). இவர் ஒரு உடற்பயிற்சியாளர். இவர் மீது போதை பொருள் கடத்தல் மற்றும் காவல்துறை அதிகாரியை தாக்கியது என பல வழக்குகள் உள்ளன.

    நேற்று காலை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் உள்ள தனது கணக்கில், நெர்மின் "இன்று ஒரு கொலையை நேரில் காண்பீர்கள்" என குறிப்பிட்டு ஒரு வீடியோ பதிவை நேரலை செய்ய தொடங்கினார்.

    இதனை பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்து, அடுத்து என்ன நடக்குமோ என்பதை நேரலை வீடியோவில் பார்த்துக் கொண்டிருந்தனர். இவ்வாறு அனைவரும் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே அவர் ஒரு துப்பாக்கியை எடுத்தார். இத்துப்பாக்கியை ஒரு பெண்ணின் நெற்றி பகுதியில் வைத்து நெர்மின் சுட்டார்.

    தகவலறிந்து காவல்துறையினர் அவரை தேடி அவர் இருக்குமிடத்தை கண்டறிந்து அவரை கைது செய்ய விரைந்தனர். அவர்களிடம் இருந்து நெர்மின் தப்பித்து ஓடினார். தப்பிக்கும் வழியில் மேலும் ஒரு ஆணையும் அந்த ஆணின் மகனையும் சுட்டு கொன்றார்.

    அதனையும் வீடியோவாக பதிவிட்டார். தான் காவல்துறையிடம் சிக்காமல் ஓடி வரும் போது, வழியில் இருவரை சுட்டதாக அதனை வெளிப்படையாக கூறினார். கடைசியில் காவலர்கள் அவரை நெருங்கும் முன்பு நெர்மின் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். காவல் துறையினர் அவரை நெருங்கிய போது, அவர் உயிரிழந்துவிட்டார்.

    சுமார் 12,000 பேர் நெர்மின் வெளியிட்ட இந்த வீடியோவை நேரலையில் பார்த்தனர். அதில் 126 பேர் இந்த வீடியோவை 'லைக்' செய்துள்ளனர். இன்ஸ்டாகிராம் நிறுவனம் இந்த வீடியோவை உடனே நீக்கியது. ஆனாலும், இந்த கொடூர சம்பவத்தை ஆதரித்து இன்ஸ்டாகிராமில் கருத்துக்கள் தெரிவித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய, காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

    "இந்த சம்பவத்தை ஐ.நா. வன்மையாக கண்டிக்கிறது. பெண்கள் மீது நடைபெற்ற இத்தகைய வன்முறைகள் போஸ்னியாவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றாலும் இந்த சம்பவம் பெண்களை மிகவும் அச்சுறுத்தும் விதமாக உள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்கள் இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்," என போஸ்னியாவில் உள்ள ஐ.நா.விற்கான குடியுரிமை ஒருங்கிணைப்பாளரான இங்க்ரிட் மெக்டொனால்ட் வலியுறுத்தியுள்ளார்.

    ×