என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தொண்டாமுத்தூர் பகுதியில் தக்காளி சாகுபடி வீழ்ச்சி- விவசாயிகள் கவலை
    X

    தொண்டாமுத்தூர் பகுதியில் தக்காளி சாகுபடி வீழ்ச்சி- விவசாயிகள் கவலை

    • பருவகால பாதிப்புகள் இல்லாத நிலையில் தக்காளியை பயிரிடும்போது ஏக்கருக்கு 9-10 டன்கள் வரை சாகுபடி கிடைக்கும்.
    • தக்காளியின் விற்பனை விலை தற்போது ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து வருவதால் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவு கூட கிடைக்காத நிலை உள்ளது.

    பேரூர்:

    கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகிறது. இதில் குறைந்த காலத்தில் அதிக லாபம் பார்க்க முடியும்.

    இதன்காரணமாக அங்குள்ள விவசாயிகள் தங்களின் விளைநிலங்களில் தக்காளி,வெண்டை, காலிபிளவர், முட்டைக்கோஸ், கத்தரி போன்றவற்றை நடவு செய்து உள்ளனர். காய்கறி விளைச்சலுக்கு போதிய தட்பவெப்பநிலை மற்றும் சீதோஷ்ண சூழ்நிலை இருந்தால் மட்டுமே விளைச்சல் நல்ல முறையில் இருக்கும்.

    ஆனால் கடந்த 2-3 ஆண்டுகளாகவே தொண்டாமுத்தூர் பகுதிகளில் காலநிலை மாற்றம் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக தீத்திபாளையம், மாதம்பட்டி, குப்பனூர், சென்னனூர், வடிவேலாம்பாளையம், செம்மேடு, தென்னமநல்லூர், தேவராயபுரம் பகுதிகளில் சின்ன வெங்காயத்தை நடவு செய்து இருப்பு வைத்து கிட்டத்தட்ட 70 சதவீதத்துக்கும் மேல் விவசாயிகள் விற்பனை செய்து விட்டனர்.

    இதற்கு விவசாயிகள் எதிர்பார்த்த அளவுக்கு போதிய விலை கிடைக்க இயலாததால் அங்கு தற்போதுஅதிக அளவில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. அவற்றில் 50 சதவீதம் தக்காளிகளை விவசாயிகள் பறித்து சந்தைப்படுத்தி வருகின்றனர். விவசாய தோட்டங்களில் மீதம் உள்ள தக்காளி பயிர்கள் பூக்கும் தருவாயில் இருந்து வருகிறது. ஆனால் கடந்த ஒரு வாரமாக அதிகப்படியான பனி மற்றும் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால், பூக்கும்-காய்க்கும் தருவாயில் உள்ள தக்காளி செடிகளுக்கு பூஞ்சாண நோய் தாக்குதல் ஏற்பட்டு விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் காய்ப்புழு தாக்குதல், செம்பேன், இழைப்புள்ளி நோய், வேர்வாடல் நோய் போன்ற நோய்களின் தாக்குதல் தக்காளி விளைச்சலை பெருமளவில் பாதித்து உள்ளது. பருவகால பாதிப்புகள் இல்லாத நிலையில் தக்காளியை பயிரிடும்போது ஏக்கருக்கு 9-10 டன்கள் வரை சாகுபடி கிடைக்கும். ஆனால் தற்போது 4-5 டன்கள் வரை அறுவடை செய்ய முடிகிறது.

    இதனால் விவசாயிகள் பெரும் பொருளாதார பின்னடைவை சந்திக்க நேரிடுகிறது. விவசாய தோட்டங்களில் தக்காளி பயிரிட ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1.10 லட்சம் முதல் 1 1/4 லட்சம் வரை செலவாகிறது.

    ஆனால் தக்காளியின் விற்பனை விலை தற்போது ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து வருவதால் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவு கூட கிடைக்காத நிலை உள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

    தொண்டாமுத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளிக்கு போதியவிலை கிடைக்காததால் அங்குள்ள விவசாயிகள் தற்போது பாக்கு, வாழை போன்ற பயிர்களை விளைவிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    எனவே கோவை மாவட்ட விவசாயிகளுக்கு பருவநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு தக்காளி உள்ளிட்ட பயிர் வகைகளுக்கு தோட்டக்கலை, வேளாண் அதிகாரிகள் கால சூழலுக்கு ஏற்ப தக்க அறிவுரைகளை வழங்க வேண்டும். மேலும் பருவநிலை மாற்றத்தை பாதிக்கப்படும் தக்காளி பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×