என் மலர்tooltip icon

    வழிபாடு

    புரட்டாசி மாத வழிபாடுகள்
    X

    புரட்டாசி மாத வழிபாடுகள்

    • கடன் பிரச்சினைகள் விலகி, தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.
    • விநாயகரையும் வழிபட வேண்டும்.

    புரட்டாசியில் கடைபிடிக்க வேண்டிய பல வழிபாடுகள் உண்டு. அவைகளில் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்கி உள்ளோம்.

    சித்தி விநாயக விரதம்

    புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகரை குறித்துச் செய்யப்படும் விரதம் இது. தேவகுரு பிருகஸ்பதியால் உபதேசிக்கப்பட்டது. இந் நாளில் உடல் - உள்ள சுத்தியோடு விரதமிருந்து பிள்ளையாரை வழிபட காரிய சித்தி உண்டாகும்.

    அன்று பிள்ளையாருக்கு அறுகம்புல்லால் அர்ச்சனை செய்து, மோதகமும், சர்க்கரை பொங்கலும் நைவேத்தியம் செய்து வழிபடுங்கள். இதனால் காரிய தடங்கல்களும் வறுமையும் நீங்கும். புத்திர சம்பத்து உண்டாகும். கடன் பிரச்சினைகள் விலகி, தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

    தூர்வாஷ்டமி விரதம்

    புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் செய்யப்படும் விரதம் இது. இந்த விரத நாட்களில் வடக்கு நோக்கி படர்ந்திருந்து நன்கு வெண்மை படர்ந்த அருகம் புற்களை கொண்டு சிவனையும், விநாயகரையும் வழிபட வேண்டும். இதனால் குடும்பம் செழிக்கும்.

    ஞான கவுரியை வழிபடுவோம்

    கவுரி என்ற திருநாமம் அம்பாளை குறிப்பது. கிரிகுலங்களின் அரசியான தேவியை கவுரி என்று சிறப்பிக்கின்றன ஞான நூல்கள். ஸ்ரீகவுரி தேவியை வழிபடுவது உலகிலுள்ள அனைத்து தேவ, தேவியர்களை வழிபடுவதற்கு சமமாகும். வீட்டில் ஸ்ரீகவுரி தேவியை வழிபடுவதால் இல்லறம் செழிக்கும். வீட்டில் செல்வம், தானியம், மகிழ்ச்சி ஆகிய அனைத்தும் எப்போதும் நிறைந்திருக்கும். கன்னி பெண்கள் கவுரி தேவியை வழிபடுவதால் அவர்களுக்கு மனம் நிறைந்த கணவன் வாய்ப்பான்.

    கவுரி தேவியை சோடச கவுரி தேவியர் என்று பதினாறு வடிவங்களில் வழிபடுவார்கள். ஞான கவுரி, அமிர்த கவுரி, சுமித்ர கவுரி, சம்பத் கவுரி, யோக கவுரி, வஜ்ர சருங்கல கவுரி, த்ரைலோக்கிய மோஹன கவுரி, சுயம்வர கவுரி, கஜ கவுரி,கீர்த்தி கவுரி, சத்யவீர கவுரி, வரதான கவுரி, ஐஸ்வரிய கவுரி, ஐஸ்வரிய மகா கவுரி, சாம்ராஜ்ய மகா கவுரி, அசோக கவுரி, விஸ்வ புஜா மகா கவுரி ஆகிய பதினாறு தேவியர் குறித்த வழிபாடுகளை ஞான நூல்கள் விவரிக்கின்றன.

    இந்த தேவியரில் ஸ்ரீஞான கவுரியை புரட்டாசி மாதம் வளர்பிறை தசமி திருநாளில் வழிபட்டால் தடைகள் நீங்கி, நினைத்த காரியம் நினைத்த படி வெற்றி பெறும். வீரர்கள் தங்களது வெற்றிக்காக இந்த தேவியை புரட்டாசி வளர் பிறை பிரதமையில் வழிபடுவார்கள். நாமும் புரட்டாசியில் இந்த அம்பிகையை வழிபட்டு அளவிலா ஞானமும், செல்வமும் பெற்று மகிழ்வோம்.

    நவகிரக நாயகியாக திகழும் ஆதி பராசக்தி, சூரிய மண்டலத்தில் தீப்தா என்ற திருப்பெயருடன் திகழ்கிறாளாம். அதேபோல் சந்திர மண்டலத்தில் அமிர்த கவுரியாகவும், செவ்வாய் மண்டலத்தில் தாம்ர கவுரியாகவும்,புதன் மண்டலத்தில் ஸ்வர்ண கவுரியாகவும், சுக்கிர மண்டலத்தில் சுவேத கவுரியாகவும், சனி மண்டலத்தில் சாம்ராஜ்ய கவுரியாகவும், ராகு மற்றும் கேது மண்டலங்களில் முறையே கேதார, கேதீசுவர கவுரியாகவும் திகழ்கிறாளாம்.

    அவ்வகையில் குரு மண்டலத்தில் அன்னை ஞான கவுரியாக அருள் பாலிக்கிறாள். ஆகவே இந்த தேவியை தினமும் வழிபட்டு வந்தால் ஞானத்தையும், திருமணப் பேற்றையும்,நல்வாழ்வையும் தருவாள்.

    Next Story
    ×