என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    திருமணத்தடை நீக்கும் திருவதிகை சரநாராயண பெருமாள் கோவில்
    X

    திருமணத்தடை நீக்கும் திருவதிகை சரநாராயண பெருமாள் கோவில்

    • கருடாழ்வாருக்கு, திரிபுர சம்ஹாரத்தின்போது பெருமாள், சங்கு, சக்கரங்களை தந்தாக புராணம் கூறுகிறது.
    • 7 அமாவாசையில் அங்கப் பிரதட்சணம் செய்து வழிபட்டால் வேண்டியதை வேண்டியவாறு அருளக்கூடிய பெருமாளாக அருள்பாலிக்கிறார்.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருவதிகையில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த சரநாராயண பெருமாள் கோவில் உள்ளது.

    தல வரலாறு

    முன்பொரு சமயம் சிவபெருமான் திரிபுர அசுரர்களை போரிட்டு அழிக்க தேவர்கள் தேர் ஒன்றினை படைத்தனர். தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சூரிய, சந்திரர் தேரின் இரு சக்கரங்களாகவும், பூமி தேரின் தட்டச்சாகவும், நான்கு வேதங்கள் குதிரைகளாகவும், மேருமலை வில்லாகவும், ஆதிசேஷன் நாணாகவும், பிரம்மன் தேர் ஓட்டுபவராகவும், விஷ்ணு அம்பாகவும் இருந்து உதவினர் என்கிறது புராண நூல்கள்.

    இதன் மூலம், விஷ்ணு அம்பாக (சரமாக) இருந்து போருக்கு உதவியதால் விஷ்ணு இத்தலத்தில் "சரநாராயணப்பெருமாள்' என அழைக்கப்படுகிறார்.

    ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம், திருவதிகை வீரட்டானேசுவரர் கோவிலில் திரிபுரம் எரிக்கும் திருவிழா நாளில், கருட வாகனத்தில் பெருமாள் சரத்துடன் எழுந்தருளி சரம் கொடுக்கும் நிகழ்ச்சியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இங்குள்ள மூலவர் சரநாராயணப்பெருமாள் முழுவதும் சாளக்கிராமத்தால் ஆனவர்.

    இங்கு ஹேமாம்புஜவல்லி தாயாருக்கு தனி சன்னதி உள்ளது. ேஹமாம்புஜவல்லி தாயாருக்கு செங்கமலத்தாயார், பொற்தாமரைகொடியாள் என சிறப்பு பெயர்கள் உண்டு. ஆண்டுதோறும் பங்குனி மாத உத்திரம் நட்சத்திரத்தில் பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்து, சேர்த்தி உற்சவத்தில் பெருமாள் தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    மாதந்தோறும் நடைபெறும் உத்திர நட்சத்திரத்தில் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், ஆடி வெள்ளிக்கிழமைகளில் பூவாலங்கி சேவையிலும் தாயார் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மார்க்கண்டேய மகரிஷியின் மகளாக தவத்தால் பிறந்த ஹேமாம்புஜவல்லி தாயார் பெருமாளை திருமணம் செய்துள்ளதால், இக்கோவிலில் வேண்டுவோருக்கு திருமணத்தடை நீங்கும், குழந்தை பேறு, கடன் நிவர்த்தி, சகல ஐஸ்வர்யங்கள் பெருகும் என்பது நம்பிக்கை. கடன் நிவர்த்தி, ஐஸ்வர்யங்கள் பெருக வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு பூஜை நடக்கிறது.

    திருமாலின் திருத்தலங்களில், இக்கோவிலில் தான் நரசிம்மர், சயன திருக்கோலத்தில் தெற்கு நோக்கி சயனித்திருக்கிறார். இது ஒரு மிகவும் சிறப்பு வாய்ந்த அம்சமாகும். மேலும் தாயாரும் உடன் எழுந்தருளியிருப்பதால் இது போக சயனம் ஆகும். இந்த சயன நரசிம்மர், திருவக்கரையில் வக்ராசுரனை அழித்து விட்டு, அதன் பரிகாரத்துக்காக இத்தலத்தில் வந்து சயனித்துள்ளார்.

    700 ஆண்டுகளுக்கு முன் வேதாந்த தேசிகர், திருவந்திரபுரம் செல்லும் போது இந்த சயன நரசிம்மரை வழிபட்டதாக கூறப்படுகிறது. இந்த சயன நரசிம்மருக்கு ஒவ்வொரு பிரதோஷத்திற்கும் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. மற்ற கோவில்களில் கைகூப்பி நிற்கும் கருடாழ்வார், இங்கு கைகட்டி சேவகம் செய்யும் நிலையில் அருள்பாலிக்கிறார். மேலும் இங்குள்ள கருடாழ்வாருக்கு, திரிபுர சம்ஹாரத்தின்போது பெருமாள், சங்கு, சக்கரங்களை தந்தாக புராணம் கூறுகிறது. இங்குள்ள பெருமாள் உப்பிலியப்பன் சீனிவாசனைப்போல், மார்க்கண்டேய மகரிஷி மகள் ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

    அருகில் மிருகண்ட மகரிஷியின் மகன் மார்க்கண்டேய மகரிஷி. புரட்டாசி மாதம் முழுவதும் சிறப்பு அலங்காரமும், சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது. இந்த மாதத்தில் திருப்பதி செல்ல முடியாதவர்கள், இங்குள்ள பெருமாளை வழிபாடு செய்யலாம்.

    இப்பெருமாளை 7 அமாவாசையில் அங்கப் பிரதட்சணம் செய்து வழிபட்டால் வேண்டியதை வேண்டியவாறு அருளக்கூடிய பெருமாளாக அருள்பாலிக்கிறார். பெரிய திருவடியாகிய கருடாழ்வார் இத்தலத்தில் கையைக் கட்டிக்கொண்டு சேவக பாவத்தில் காட்சி தருகின்றார்.

    Next Story
    ×