என் மலர்
வழிபாடு

புரட்டாசி மாதம்- குழந்தைச்செல்வம் அருளும் அரங்கநாத பெருமாள்
- சன்னதியில் ஸ்ரீதேவி, பூதேவி, பிருகு மகரிஷி தவம் செய்யும் நிலையில் உள்ளனர்.
- ராமர் சன்னதி மிகவும் பழமை வாய்ந்தது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகை அருகே பழமை வாய்ந்த அரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது.
குரும்புக்கோட்டை மன்னன் பட்டம் என்ற பெயர் கொண்ட 2-ம் குலோத்துங்கன் திருவ நகரத்தில் பெண் எடுக்க சென்றபோது இருவேளையும் திருஅரங்கனை தரிசித்த திருமண பெண்ணுக்கு திருமணத்துக்கு பின் அப்பெருமானை தரிசிப்பது எப்படி? என பெண் வீட்டார்கள் கேட்க, குலோத்துங்கனும் கவலை வேண்டாம் ஸ்ரீரங்கரைப் போல அதே மாதிரி கோவிலை அதிகாபுரியில் நிறுவிய பின் திருமணம் செய்து கொள்கிறேன் என்றார்.
அதன்படி காவிரி-கொள்ளிடம் ஆறுகளின் இடையே அரங்கன் இருப்பதுபோல திருவதிகையில் கருடன் நதி-தென்பெண்ணையாற்றின் நடுவில் அதிகாபுரியில் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின்பு 2-ம் குலோத்துங்கனின் திருமணம் நடந்ததாக வரலாறு கூறுகிறது.
அரங்கன் ஆலயம் தோன்றுவதற்கு முன்பு இந்த இடத்தில் அய்யனார் சிலை இருந்ததாகவும், அவர் காவல் தெய்வமாக வழங்கப்பட்டதாகவும் தெரிகிறது. இதை நினைவு கூறும் வகையில் மூலவர் சன்னதி மகாமண்டபத்தின் முகப்பில் அய்யனார் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முந்தைய கோவில் இது. மூலவர் ஸ்ரீரங்கன் வார்த்தைகளால் எட்டமுடியாத நெடுமால் இங்கே பாம்பணையில் பள்ளிகொண்டவந்தாய் அனந்தசயன விமானத்தில் கிழக்கே திருமுக மண்டலத்துடன் அருள் பாலிக்கிறார்.
சன்னதியில் ஸ்ரீதேவி, பூதேவி, பிருகு மகரிஷி தவம் செய்யும் நிலையில் உள்ளனர். இந்த கோவிலில் உள்ள தாயார் அரங்கநாயகி, அமிர்தவல்லி, அதிகவல்லி என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். தாயார் மூலவர் சிலை 8 அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கையாக அஷ்டோத்திரம் அர்ச்சனை செய்தல், புது மலர்கள் சாத்துதல், வஸ்திரங்கள் சாத்துதல், பால் பாயாசம் அமுது செய்தல் போன்றவற்றை செய்கின்றனர்.
இந்த கோவிலில் உள்ள ஆண்டாள் பல்லவர் கால படைப்பு சத்திரமாய் காட்சி அளிக்கிறார். ராமர் சன்னதி மிகவும் பழமை வாய்ந்தது. இங்குள்ள சிற்பங்கள் உயிரோவியமாய் காட்சி அளிக்கின்றன. இங்கு மூலவர், உற்சவ மூர்த்திகளாய் ராமர் எழுந்தருளியுள்ளார். சக்கரத்தாழ்வார் சன்னதியில் சக்கரத்தாழ்வாரின் ஒருபுறம் சுதர்சன ஆழ்வாரும் மறுபுறம் யோக நரசிம்மரும் அருள் புரிகின்றனர். கோவிலின் எதிரே திருக்குளமும், அனுமார் சன்னதியும் உள்ளன. மாதாந்திர திருக்கார்த்திகையில் சக்கரத்தாழ்வாருக்கு சுதர்சன ஹோமம் நடைபெற்று வருகிறது. பங்குனி மாதம் ரேவதி நட்சத்திரம் போது மூலவருக்கு அவதார நட்சத்திரம் திருமஞ்சனம் நடைபெறும்.
குழந்தை பேறு இல்லாதவர்கள் ஸ்ரீரங்கநாயகியிடம் சகஸ்ர நாம அர்ச்சனையும், பால் பாயசமும் அமுது படைப்பதாய் வேண்டி அவ்வாறே குழந்தை பேறு பெற்றதுடன் தங்கள் நேர்த்தி கடனை செய்கின்றனர். புது வஸ்திரமும் சமர்ப்பிக்கின்றனர். ஸ்ரீவேதாந்த தேசிகரும், ஆறாவமுதம் பொதிந்த கோவில் என்று சிறப்பு பெற்றது இந்த கோவில்.
தினமும் காலை 7 மணி முதல் 11.30 வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும். இந்த கோவில் பண்ருட்டியில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. பண்ருட்டி பஸ் நிலையத்தில் இருந்து போக்குவரத்து வசதி உள்ளது.






