என் மலர்tooltip icon

    வழிபாடு

    Mahalaya Amavasai 2025- பித்ரு ஹோமம் செய்யுங்கள்
    X

    Mahalaya Amavasai 2025- பித்ரு ஹோமம் செய்யுங்கள்

    • நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மைச் சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது.
    • பித்ரு பூம்ய ரேகைகள் வழியாக தர்ப்பணங்கள் அளிக்கப்படுகின்றன.

    இந்த உலகில் இருந்து பிரிந்த ஒவ்வொரு ஆத்மாவும் வலிமை உள்ளவையே. அதுவே உங்கள் பெற்றோர்கள், தாத்தா, பாட்டி என்றால் அவர்களை நீங்கள் முறையாக வழிபாடு செய்தால் அவர்களின் அத்தனை சக்தியும் உங்கள் முன்னேற்றத்திற்கு கிடைக்க அவர்கள் முழு ஆசீர்வாதம் கிடைக்கும்.

    உங்கள் ஒவ்வொரு அசைவையும் அவர்கள் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

    நமது முன்னோர்களும், பெற்றோர்களும் ஏற்கனவே இறைவனடி சேர்ந்திருந்தாலும் அவர்கள் அனைவரின் ஆன்மாக்களும் நம்மை எங்கிருந்தோ ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர்ந்து இந்துக்களால் நம்பப்பட்டு வரும் ஐதீகம்.

    நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மைச் சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது. அவர்களை நமது சாதாரணக் கண் கொண்டு அடையாளம் தெரிந்து ஒவ்வொருவரையும் தனித்தனியாக வணங்கிட இயலாது என்பதால்தான் அவர்களுக்காக ஹோமம் வளர்த்து யாகம் அனுசரித்து பஞ்ச பூதங்களையும் முன்நிறுத்தி உரிய மந்திரங்களோடு வணங்குகிறோம். இதுவே பித்ரு ஹோமம்.

    சிருஷ்டியின் போது இறைவன் ஜீவன்களது ஜீவசக்தி நிறைந்த கும்பத்தை வைத்து சிருஷ்டியை தொடங்குகிறாரோ அதே போன்று பித்ருக்களின் ஜீவசக்தி அமுதகலசமாக உருவகிக்கும் இடமே சோமாதித்ய மண்டலமாகக் கருதப்படுகிறது.

    புரட்டாசி மாத மகாளயபட்ச அமாவாசையன்று சர்வகோடி லோகங்களிலுள்ள மகரிஷிகள் உள்பட அனைத்து தேவதைகளும் ஜீவன்களும் பூலோகத்திற்கு வந்து புண்ணிய நதிக்கரைகளிலும், சமுத்திரங்களிலும் காசி, ராமேஸ்வரம், கயை போன்ற புண்ணிய தலங்களிலும் தர்ப்பண பூஜையை மேற் கொள்கின்றனர் என்பது சாஸ்திரங்கள் நமக்கு உரைத்திடும் உண்மைகள்.

    நமது மூதாதையர்களுக்கே உரித்தான இந்தத் தர்ப்பண பூஜையானது பித்ருக்களுக்கு மட்டுமின்றி, வம்சா வளியிலுள்ள நமக்கும் தான் பெரிதும் பயன் தருவதாய் உள்ளது. இதனாலேயே மகாளயபட்சத்தில் கொடுக்கப்படும் பெற்றோருக்கான அல்லது முன்னோருக்கான திதி வழிபாடு மிகவும் சிறப்புடையதாய் விளங்குகிறது. பொதுவாக வலது ஆள் காட்டி (குரு விரல்) விரலுக்கும், கட்டை விரலுக்கும் (சுக்கிரவிரல்) இடையிலுள்ள பித்ரு பூம்ய ரேகைகள் வழியாக தர்ப்பணங்கள் அளிக்கப்படுகின்றன.

    இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர்ஷன சக்தியை மீறி மேல்நோக்கி எழும்பிச் சென்று, எத்தனையோ கோடி மைல்களுக்கு அப்பாலுள்ள பித்ரு லோகத்தை அடைகின்றது. சாதாரணமாக, அமாவாசையன்று கீழிருந்து மேல் செல்வதே பித்ரு லோக அந்தர ஆக்ரஷன சக்தியின் தெய்வீகத் தன்மையாகும்.

    மகாளயபட்ச அமாவாசையன்று இச்சக்தியானது மிகவும் அபரிமிதமாகப் பெருகுகின்றது.

    பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யும் போது பசு தயிர் கொண்டு தர்ப்பணம் செய்வது திருப்தியளிப்பதாய் கருதப்படுகிறது. பித்ரு லோகத்தில் உள்ள மூலிகையாய் விளங்குவது புடலங்காயே, இதன் நிழலில் தான் பித்ருட தேவர்கள் இளைப்பாறுவதாய் ஐதீகம்.

    ஆக, அதி அற்புதமான தெய்வீக ஆற்றல்களைக் கொண்ட நமது பித்ருக்களுக்குத் தர்ப்பணங்கள், திவசங்கள், படையல்களை முறையாக அளித்து பல்லாயிரக் கணக்கான நம் கர்ம வினைகளுக்குப் பரிகாரம் தரும் மகாளயபட்ச தர்ப்பண தர்மங்களை நிறைவேற்றி நல்வழி காண்போமாக.

    Next Story
    ×