என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடல்: ராமேசுவரம் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம்
    X

    22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடல்: ராமேசுவரம் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம்

    • கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • ஸ்படிகலிங்க பூஜையில் மனைவியுடன் கலந்துகொண்டு மனமுருகி பிரார்த்தனை செய்தார்.

    ராமேசுவரம்:

    தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் ஆன்மிக பயணமாக திருச்சி, ராமேசுவரம், மதுரை கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக நேற்று காலை திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் முசிறி செல்லும் வழியில் அமைந்துள்ள 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான குணசீலத்தில் அமைந்துள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து, அங்கு நடைபெற்ற விழாவில் கோவில் பரம்பரை நிர்வாக அறங்காவலர் பிச்சுமணி அய்யங்கார் எழுதிய குணசீல மகாத்மியம் என்ற நூலை கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டார்.

    இதையடுத்து அங்கிருந்து காரில் புறப்பட்ட கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று மாலை ராமேசுவரம் வருகை தந்தார். அங்கு அவரை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்திஷ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இரவில் அங்குள்ள தனியார் விடுதியில் தங்கி ஓய்வெடுத்தார்.

    இன்று அதிகாலை அக்னி தீர்த்த கடற்கரைக்கு சென்று புனித நீராடினார். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களிலும் தனது மனைவியுடன் நீராடிய கவர்னர், கோவிலுக்குள் சென்று ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை வழிபட்டார்.

    தொடர்ந்து அங்கு நடைபெற்ற ஸ்படிகலிங்க பூஜையில் மனைவியுடன் கலந்துகொண்டு மனமுருகி பிரார்த்தனை செய்தார். முன்னதாக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ராமேசுவரம் கோவிலில் உள்ள புகழ்பெற்ற மூன்றாம் பிரகாரத்தில் தனது குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட கவர்னர் ஆர்.என்.ரவி காரில் புறப்பட்டு அனுஷ்கோடி, அரிச்சல்முனை ஆகிய பகுதிகளுக்கு சென்றார்.

    பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக புறப்பட்ட அவர் மதுரை சென்றார். தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வெடுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலை விமானத்தில் சென்னை புறப்பட்டு செல்கிறார். கவர்னர் வருகையையொட்டி ராமேசுவரம், மதுரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×