search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sekar Babu"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் தான்தோன்றி கல்யாண வெங்கடரமண சாமி கோவிலின் உபகோயிலாக இணைக்கப்பட்டது.
    • கோவிலை பழுது பார்த்து புனரமைக்க இந்து அறநிலையத்துறை சார்பில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

    கரூர்:

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் திரு முக்கூடலூரில் அகஸ்தீஸ்வரர் சாமி கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் அகஸ்தீஸ்வரர், இறைவி, அஞ்சனாச்சியம்மன் ஆகியோர் வீற்றிருக்கின்றனர்.

    நிதி வசதி இல்லாத இக்கோவில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் தான்தோன்றி கல்யாண வெங்கடரமண சாமி கோவிலின் உபகோயிலாக இணைக்கப்பட்டது.

    இக்கோவிலின் அகஸ்தீஸ்வரர் மணலால் பிடிக்கப்பட்டவர் எனவும், இங்கு அகத்திய முனிவர் வழிபட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது.இக்கோவிலின் மதில் சுவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு அமராவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் முழுவதும் சேதம் அடைந்தது. சோழ மன்னர்கள் ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் தொடர்பாக கல்வெட்டுகள் இக்கோவிலில் காணப்படுகிறது .திருக்கோயில் உள்ள பழமையான கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவிலை பழுது பார்த்து புனரமைக்க இந்து அறநிலையத்துறை சார்பில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

    இந்த நிதி மூலம் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து மூலவர் சன்னதி, அர்த்த மண்டபம், மகா மண்டபம், அம்பாள் சன்னதி, மடப் பள்ளி, ராஜகோபுரம் ஆகியவற்றில் புனரமைப்பு பணிகளும், சோபனா மண்டபம், வசந்த மண்டபம், அபிஷேக மண்டபம், சுப்பிரமணியர் சன்னதி ஆகியவற்றில் மீள கட்டுதல் பணிகளும், உப சந்நிதிகளில் வர்ணம் பூசும் பணிகளும், மேற்கு வடக்கு கிழக்கு மதில் சுவர்கள் பழுது பார்த்து புதுப்பித்தல் பணியும் நடைபெற உள்ளது.

    இந்த பணிகள் அனைத்தும் 24 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார்.

    அடிக்கல் நாட்டு விழாவிற்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்களை புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    2022-23-ம் நிதி ஆண்டில் 113 கோயில்கள் ரூ.154.90 கோடி மதிப்பீட்டிலும், 2023-24 நிதி ஆண்டில் 84 திருக்கோயில்கள் ரூ.149.95 கோடி மதிப்பீட்டிலும் பணிகள் நடைபெற்று உள்ளது. இந்த அரசு பொறுப்பேற்ற 2 ஆண்டுகளுக்கு பின் திருப்பணி களுக்கு மானியமாக ரூ.200 கோடி தமிழக அரசு வழங்கி உள்ளது.

    இதுவரை ஆயிரம் ஆண்டுகள் பழமையான 12 கோயில்கள் திருப்பணிகள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 13 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டது. மேலும் வரலாற்றில் படித்த ராஜ ராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில் கோவிலுக்கான திருப்பணிகள் நடைபெற்றது போல தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியிலும் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றது.

    இவ்வாறு அவர் பெருமிதத்துடன் கூறினார்.

    • பத்திரிகை செய்தியை மேற்கோள்காட்டி தமிழக அரசை நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியிருந்தார்.
    • பக்தர்களுக்கு எந்த தடையையும் அறநிலைத்துறை விதிக்கவில்லை என சேகர் பாபு விளக்கம்.

    இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும் திமுக இளைஞரணி மாநாட்டை திசை திருப்புவதற்காக திட்டமிட்ட வதந்தி பரப்பப்படுகிறது.

    தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் ராமர் பெயரில் பூஜை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்த தடையையும் அறநிலைத்துறை விதிக்கவில்லை.

    முற்றிலும் உண்மைக்கு புறம்பான உள்நோக்கம் கொண்ட பொய் செய்தியை உயர்ந்த பதவியில் உள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு பத்திரிகை செய்தியை மேற்கோள்காட்டி "அயோத்தியில் நாளை நடைபெறவுள்ள ராமர் கோவில் நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்பு செய்வதற்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது. தமிழகத்தில் ராமருக்கு 200-க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ராமரின் பெயரில் பூஜை, பஜனை, பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்க அனுமதிக்கப்படுவதில்லை.

    தனியாருக்கு சொந்தமான கோவில்களில் இந்நிகழ்ச்சிகள் நடத்துவதையும் போலீஸார் தடுத்து வருகின்றனர். பந்தல்களை கிழித்து விடுவதாக நிகழ்ச்சி அமைப்பாளர்களை மிரட்டி வருகின்றனர். தமிழக அரசின் இந்த இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

    இதற்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்துள்ளார்.

    • ரூ.13 கோடி மதிப்பில் 460 மீட்டர் அளவுள்ள ஒரு ரோப் கார் வசதி ஏற்படுத்தி தர திட்டமிடப்பட்டுள்ளது.
    • வரலாற்றிலேயே 2 ஆண்டுகளில் 922 கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது திராவிட மாடல் ஆட்சியில் தான்.

    கோவை:

    கோவை கணுவாய் அடுத்துள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ள அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வந்தார்.

    அவர் கோவிலுக்கு மலைஏறி சென்று சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவிலை சுற்றி பார்த்து ஆய்வு செய்தார்.

    மேலும் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் வசதிக்காக ரோப் கார் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளிடம் இது தொடர்பான தகவல்களையும் கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தி.மு.க. அரசு அமைந்தவுடன் தமிழகத்தில் உள்ள மலைக்கோவில்களில் பக்தர்கள் வசதிக்காகவும், முதியோர்கள் மற்றும் உடல் உபாதை உள்ள பக்தர்களின் வசதிக்காகவும் ரோப்கார் மற்றும் தானியங்கி லிப்ட் அமைத்து தர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    அதன்படி இன்று கோவை அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆய்வு மேற்கொண்டோம். 560 படிகள் கொண்ட இந்த மலைக்கோவிலுக்கு ரூ.13 கோடி மதிப்பில் 460 மீட்டர் அளவுள்ள ஒரு ரோப் கார் வசதி ஏற்படுத்தி தர திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்று ஏற்கனவே ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. அப்போது சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாத்தியக்கூறுக்கான அறிக்கைகள் வந்த பின்னர் ரோப்கார் அமைப்பதற்கான வேலைகள் தொடங்கும்.

    இதேபோன்று திருக்கழுக்குன்றம், திருநீர்மலை, இடும்பன் மலை, திருப்பரங்குன்றத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவில்களுக்கும் ரோப்கார் வசதி ஏற்படுத்தி தர உள்ளோம்.

    கரூர் அய்யர்மலை, சோழிங்கநல்லூர் கோவில்களில் ரோப் கார் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

    கோவை மருதமலையில் தானியங்கி லிப்ட் அமைப்பதற்கான பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகிறது. இதுபோன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மலை கோவில்களிலும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்பேரில் அந்தந்த பகுதிகளில் மலைக்கோவில்களில் அங்குள்ள அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்கள்.

    தி.மு.க ஆட்சி அமைந்த பின்னர் கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் 922 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. வரலாற்றிலேயே 2 ஆண்டுகளில் 922 கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது திராவிட மாடல் ஆட்சியில் தான்.

    அதேபோன்று தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான ரூ.5135 கோடி மதிப்பிலான 5335 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.

    தி.மு.க. அரசானது இறையன்பர்களுக்கு இறைபற்று ள்ளவர்களுக்கும் மகிழ்ச்சியான ஆட்சியாக உள்ளது.

    விலங்குகள் அதிகம் நடமாடும் கோவில் பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு காடுகளில் இருந்து வெளியே வராதபடி முள்வேலிகள் அமைக்க ஆய்வு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அவர் பேரூரில் நடந்த நொய்யல் திருவிழாவில் பங்கேற்றார். பின்னர் தண்டுமாரியம்மன், லட்சுமி நரசிம்மர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். ஆய்வின் போது கலெக்டர் கிராந்திகுமார் பாடி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

    • கடந்த 5-ந் தேதி இரவு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் கிழக்கு கோபுரத்தின் கொடுங்கை இடிந்து விழுந்தது.
    • 21 கோபுரங்களில் ஸ்திரத்தன்மை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருச்சி:

    ஸ்ரீரெங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 5-ந் தேதி நள்ளிரவு அங்குள்ள கிழக்கு கோபுரத்தின் கொடுங்கை இடிந்து விழுந்தது. அதனை தொடர்ந்து கோபுரத்தை புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

    கடந்த 5-ந் தேதி இரவு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் கிழக்கு கோபுரத்தின் கொடுங்கை இடிந்து விழுந்தது.

    உடனடியாக மராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டதை தொடர்ந்து இன்று ஆய்வு செய்தோம்.

    இப்பகுதியில் உள்ள 21 கோபுரங்களில் ஸ்திரத்தன்மை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என்.ஐ.டி. (தேசிய தொழில்நுட்பக் கழக) வல்லுநர்கள் கோபுரத்தின் ஸ்தரத்தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    இன்னும் ஓரிரு நாட்களில் அந்த ஆய்வறிக்கை கிடைக்கப்பெறும். அதன் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    கிழக்கு கோபுர வாசலை சீர் செய்ய ரூ.1.50 கோடி முதல் 2 கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    பணிகள் ஓராண்டு காலம் நடைபெறும்.

    இந்த பணிகள் கோவிலின் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணியானது மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    • திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா 7.8.2023 முதல் 11.8.2023 வரை நடைபெற உள்ளது.
    • சோளீஸ்வர சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இளைப்பாறும் மண்டபம் அமைக்கப்படும் இடத்தினை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

    சென்னை:

    திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு ஆடிக்கிருத்திகை திருவிழா 7.8.2023 முதல் 11.8.2023 வரை நடைபெற உள்ளது. இத்திருவிழாவிற்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் இதர மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள், பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள், கழிப்பிட வசதிகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, வாகன நிறுத்துமிடங்களில் ஏற்படுத்தப்பட வேண்டிய வசதிகள் குறித்து அமைச்சர்கள் ஆர். காந்தி மற்றும் பி.கே.சேகர்பாபு ஆகியோர் விரிவான ஆய்வினை மேற்கொண்டனர்.

    அதனை தொடர்ந்து, அமைச்சர்கள் ஆர். காந்தி மற்றும் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தலைமையில் கோவில் வளாகத்தில் ஆடிக் கிருத்திகை ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம், காவல் துறை, நகராட்சி நிர்வாகம், சுகாதாரத்துறை, போக்குவரத்துத்துறை போன்ற துறைகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.

    முன்னதாக ஆர். காந்தி மற்றும் பி.கே.சேகர்பாபு ஆகியோர் ரூ.49.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் யானை நினைவு மண்டபம், ரூ.34.60 லட்சம் மதிப்பீட்டில் தணிகை இல்ல வளாகத்தில் புதிய குடில் கட்டுதல், ரூ.27.50 லட்சம் மதிப்பீட்டில் மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் 3 நிழல் மண்டபங்கள் அமைத்தல் போன்ற பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதோடு, தணிகை இல்ல வளாகத்தில் ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ள குடில்களையும், விரிவுப்படுத்தப்பட்டுள்ள புதிய அன்னதானக் கூடத்தையும் திறந்து வைத்து, மலைக்கோவிலுக்கு வருகை தரும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்துள்ள பேட்டரி கார்களை பக்தர்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.

    பின்னர், தெக்களூர் நீரேற்று நிலையத்தில் 500 மரக்கன்றுகளை நடும் பணியினை தொடங்கி வைத்த அமைச்சர்கள், திருப்பதிக்கு பாத யாத்திரையாக செல்லும் பக்தர்கள் தங்கி இளைப்பாறி செல்லும் வகையில் கோவிலின் உபகோவிலான சோளீஸ்வர சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் இளைப்பாறும் மண்டபம் அமைக்கப்படும் இடத்தினையும் ஆய்வு செய்தனர்.

    இந்த நிகழ்வுகளின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன், திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையர் திருமகள், அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், வேலூர் மண்டல இணை ஆணையர் ரமணி, திருத்தணி நகர் மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி, கோவில் துணை ஆணையர் (பொறுப்பு) விஜயா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பஸ்கள் வந்து செல்லவும் பணிமனைக்கு செல்லவும் தாராளமாக இடவசதி இருப்பதால் இந்த இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • பேருந்து நிலையத்தில் 67 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும், 782 இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும் மற்றும் 30 கடைகளும் அமையவுள்ளது.

    செங்கல்பட்டில் இப்போது உள்ள பஸ் நிலையம் மிகுந்த நெருக்கடியான இடத்தில் உள்ளது. இதனால் அங்கு புதிய பஸ் நிலையம் வெம்பாக்கம் ஏரி அருகே மெயின்ரோட்டுக்கும் பி.வி.களத்தூர் ரோட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் சுமார் 14 ஏக்கர் பரப்பளவில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள இந்த புதிய பஸ் நிலையத்திற்கான இடத்தை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே. சேகர்பாபு ஆகிய இருவரும் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டனர்.

    பஸ் நிலையம் 14 ஏக்கரில் அமையும் பகுதியில் ரோட்டுக்கு மருத்துவக் கல்லூரி மைதானம் அருகே எதிர்புறம் காலி இடம் ஏக்கர் கணக்கில் உள்ளதால் அங்கு 5.64 ஏக்கரில் பஸ் டெப்போ (பணிமனை) அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பஸ்கள் வந்து செல்லவும் பணிமனைக்கு செல்லவும் தாராளமாக இடவசதி இருப்பதால் இந்த இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதன் பிறகு அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    செங்கல்பட்டில் புதிதாக அமையவிருக்கின்ற இப்பேருந்து நிலையத்தில் சுமார் 46 பேருந்துகள் நிற்கும் வகையிலும், அதேபோன்று 69 பணி மனைகள் நிறுத்துவதற்குண்டான வகையிலும் அமைக்கப்பட இருக்கின்றன. இப்பேருந்து நிலையத்தில் 67 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும், 782 இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும் மற்றும் 30 கடைகளும் அமையவுள்ளது.

    மேலும், இப்பேருந்து நிலையம் அமைக்கப்பட்டால், பேருந்துகள் மற்றும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலின்றி செல்லவும், பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு கூடுதல் வசதிகளோடு இப்பேருந்து நிலையம் அமையும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    • இறை அன்பர்களுக்கு தெய்வத்தை வழிபடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதுதான் எங்களுடைய நோக்கமாகும்.
    • கடைசியாக கோவிலுக்கு 2006-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்று இருக்கின்றது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் ரூ.19 கோடி செலவில் திருப்பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று காலை ஏகாம்பரநாதர் கோவிலில் திருப்பணிகள் தொடக்க விழா நடை பெற்றது. இதையொட்டி ராஜகோபுரம், ராஜகோபுரம் விநாயகர், ராஜகோபுரம் ஆறுமுகர், பல்லவ கோபுரம், விகட சக்கர விநாயகர், பல்லவர் கோபுர ஆறுமுகர், தம்பட்டை விநாயகர் ஆகிய சன்னதிகளில் திருப்பணிகள் செய்ய பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு பாலாலய பணிகளை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இதுவரை இந்து அற நிலைத்துறை வரலாற்றில் இல்லாத அளவிற்கு திருப்பணிகள், திரு விழாக்கள், கும்பாபிஷேகம் என 788 விழாக்கள் சிறப்பாக நடைபெற்று உள்ளது. மேலும் 5001 ஏக்கர் கோவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.4740 கோடி ஆகும்.

    சிதம்பரம் நடராஜர் கோவிலை பொறுத்தளவில் சட்டப்படி பக்தர்களின் சுதந்திரமான இறைவழி பாட்டிற்கு அனைத்து உதவிகளையும் இந்து சமய அறநிலைத்துறையும், தமிழ்நாடு அரசும் செய்யும். இதில் யார் பெரியவர் என்ற பிரச்சினை இல்லை. இறை அன்பர்களுக்கு தெய்வத்தை வழிபடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதுதான் எங்களுடைய நோக்கமாகும்.

    ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணிகள் 2024 -ம் ஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவு பெற வேண்டும் என்று துறை அலுவலர்களை கேட்டுக் கொண்டிருக்கின்றோம். கடைசியாக கோவிலுக்கு 2006-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்று இருக்கின்றது. சுமார் 17 ஆண்டுகள் கடந்துவிட்டதால் திருப்பணிகளை வேகப்படுத்தி குடமுழுக்கு நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவிலுக்கு சொந்தமான 2122.10 ஏக்கர் நிலங்களுக்கு கோவில் பெயரிலேயே பட்டா பெறப்பட்டு உள்ளது.
    • வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலுக்குச் சொந்தமான இதர நிலங்களுக்கும் கோவில் பெயரிலேயே பட்டா பெறுவதற்கு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்து சமய அறநிலையத்துறையின் நீண்ட கால சட்டப்பேராட்டங்களுக்கு பின்னர் வேதாரண்யம், வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான அகஸ்தியம் பள்ளி கிராமத்தை சேர்ந்த 2,122.10 ஏக்கர் நிலம் தொடர்பாக கோவிலுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கப்பெற்று உள்ளது.

    இத்தீர்ப்பின் அடிப்படையில் இந்த நிலங்களுக்கு பட்டா பெற நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் கோவில் செயல் அலுவலரால் விண்ணப்பிக்கப்பட்டு, தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு கோவிலுக்கு சொந்தமான 2122.10 ஏக்கர் நிலங்களுக்கு கோவில் பெயரிலேயே பட்டா பெறப்பட்டு உள்ளது.

    மேலும், வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலுக்குச் சொந்தமான இதர நிலங்களுக்கும் கோவில் பெயரிலேயே பட்டா பெறுவதற்கு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஒட்டுமொத்தமாக, கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் எங்கிருந்தாலும் அவற்றை கண்டறிந்து கோவிலுக்கு ஒப்படைக்கும் பணிகளில் அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் உறுதுணையாய் செயலாற்றும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கிளாம்பாக்கம் பஸ் நிலையம் சுமார் ரூ.400 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது
    • தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு இந்த பஸ் நிலையத்தில் பல்வேறு கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

    சென்னை :

    சென்னை திரு.வி.க.நகர் ஸ்டீபன்சன் சாலையில் ரூ.66.83 கோடியில் கட்டப்பட்டுள்ள மேம்பால பணிகளை இந்து சமயம் மற்றும் அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தாயகம் கவி எம்.எல்.ஏ., மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இணை கமிஷனர் (பணிகள்) சமீரன் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

    கிளாம்பாக்கம் பஸ் நிலையம் சுமார் ரூ.400 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசல், மழை காலங்களில் தண்ணீர் தேக்கம், பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவை திட்டமிடப்படாமல் இந்த பஸ் நிலையம் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

    தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு இந்த பஸ் நிலையத்தில் பல்வேறு கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. பஸ் நிலையம் திறக்கப்பட்டவுடன் ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்காக தற்போது புதிதாக கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தையும், அயனஞ்சேரியையும் இணைக்கின்ற வகையில் 1.20 கிலோ மீட்டர் நீளத்துக்கு ஒரு சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு செல்லும் வண்டலூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது, மாற்றுப்பாதையாக 6 கிலோ மீட்டர் அளவுக்கு சாலை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவைகள் இல்லாமல் சமீபத்தில் பெய்த சிறு மழைக்குகூட பெருமளவு தண்ணீர் தேங்கிநின்ற காரணத்தால் சுமார் ரூ.13 கோடியில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் இந்த மாத இறுதிக்குள் தொடங்கப்பட உள்ளது.

    கிளாம்பாக்கத்தில் ரூ.12 கோடியில் பூங்கா அமைக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கி வைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மேலும் ஒரு புதிய பூங்கா சுமார் ரூ.6 கோடியில் ஏற்படுத்தப்பட உள்ளது. கிளாம்பாக்கத்தில் போலீஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்குண்டான கட்டுமான பணிகளும் தொடங்கப்பட உள்ளது.

    நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்வார்கள் என கணக்கிடப்பட்டு உள்ளதால் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் முதலுதவிக்காக ஒரு மருத்துவ மையம் ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    பஸ் நிலையம் திறப்பிற்கு பிறகு எந்தவகையிலும் மக்களுக்கு அசவுகரியம் ஏற்படக்கூடாது என்பதற்காக திட்டமிடப்பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஆம்னி பஸ் நிலையத்துக்கு என்று தனியாக ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டு, கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் ரூ.30 கோடியில் அமைப்பதற்கான பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. பஸ் நிலையத்தை ஒட்டி பல்வேறு பணிகள் போர்க்கால அடிப்படையில் சுமார் ரூ.70 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பஸ்நிலையத்தில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருதல், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் போன்ற அனைத்தையும் நிறைவேற்றி, விரைவில் இந்த பஸ் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புயல் காரணமாக காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 76 விசைப்படகுகள் முழுவதுமாக கடலில் மூழ்கி சேதமடைந்தது.
    • அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு ரூ.4.67 கோடி நிவாரண நிதியை வழங்கினர்.

    திருவொற்றியூர்:

    மாண்டஸ் புயல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10-ந்தேதி மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 76 விசைப்படகுகள் முழுவதுமாக கடலில் மூழ்கி சேதமடைந்தது. மேலும் 136 விசைப்படகுகள் அருகில் இருந்த படகுகளுடன் ஒன்றுடன் ஒன்று மோதியும், கட்டப்பட்டிருந்த வார்ப்பு பகுதி மீது மோதியும் பலத்த சேதம் அடைந்தன. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதனை தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கடலோர கிராமங்களில் மாண்டஸ்புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்தனர். இந்நிலையில் மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட 124 மீனவர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு ரூ.4.67 கோடி நிவாரண நிதியை வழங்கினர். நிகழ்ச்சியில் மீனவர் நலத்துறை ஆணையர் பழனிசாமி, மாவட்ட செயலாளர் இளைய அருணா, எம்.எல்.ஏக்கள் எபினேசர், ஐட்ரீம் மூர்த்தி, கே.பி.சங்கர், மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், பகுதி செயலாளர்கள், சுரேஷ், ஜெபதாஸ் பாண்டியன், நிர்வாகிகள் பாண்டி செல்வம், மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பஸ் நிலைய கட்டுமானத்துக்காக ரூ.18 கோடியில், தனியாரிடம், 2019-ல் பணி ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.
    • 2020-ல் மண்ணை பரிசோதித்தும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

    மாமல்லபுரம்:

    சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் தற்போது வசதியான பஸ் நிலையம் இல்லை. இங்குள்ள தலசயன பெருமாள் கோவில் முன்புறம், குறுகிய திறந்த வெளி பகுதியே பஸ் நிலையமாக உள்ளது.

    சென்னை மாநகர், அரசு, தனியார் பஸ்கள் நிறுத்த இடம் இல்லாமல் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன. இதனால் மாமல்லபுரத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே மாமலல்லபுரம் புறநகர் பகுதியில் சுற்றுலா பயணிகள் வந்து செல்ல வசதியாக அதிநவீன பஸ் நிலையம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பினராலும் விடப்பட் டது.

    இதை ஏற்று திருக்கழுக்குன்றம் சாலை பகுதி, பக்கிங்காம் கால்வாய் அருகில், 6.80 ஏக்கர் இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. பஸ் நிலைய கட்டுமானத்துக்காக ரூ.18 கோடியில், தனியாரிடம், 2019-ல் பணி ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. 2020-ல் மண்ணை பரிசோதித்தும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

    இதையடுத்து, இத்திட்டத்தை செயல்படுத்துவதாக சென்னை பெருநகர திட்ட நிர்வாகம் கடந்த ஆண்டு அறிவித்தது. சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலர் உள்ளிட்டோருடன் ஆய்வு செய்து, ஓராண்டு கடந்தும் கிடப்பில் உள்ளது.

    இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு சட்டசபை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும மானிய கோரிக்கையில், திருப்போரூர் விடுதலை சிறுத்தை எம். எல்.ஏ. பாலாஜி இத்திட்டம் குறித்து தீர்மானம் கொண்டு வந்தார்.

    இதற்கு பதில் அளித்த, அமைச்சர் சேகர்பாபு, "மாமல்லபுரம் பஸ் நிலையம், ரூ.50 கோடியில் அமைக்கப்படும்" என அறிவித்துள்ளார்.

    • வாஞ்சிநாதசாமி கோவிலுக்கு ரூ.61 லட்சம் மதிப்பீட்டில் 23 பணிகள் உபயதாரர் நிதியில் நடைபெற்று வருகின்றன.
    • சட்டநாதர் கோவில் என்பது பஞ்ச ஆரண்ய தலங்களில் வனம் சார்ந்த 2-வது கோவில். அவர் கோரிய கும்பாபிஷேக பணிகள் வருகிற 16-ந்தேதி அன்று பாலாலயம் செய்யப்பட இருக்கிறது.

    சென்னை:

    சட்டசபையில் கேள்வி நேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் ஆர்.காமராஜ் (நன்னிலம்), நன்னிலம் வாஞ்சியம் வாஞ்சிநாதசாமி கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு அமைச்சர் சேகர்பாபு, "வாஞ்சிநாதசாமி கோவிலுக்கு ரூ.61 லட்சம் மதிப்பீட்டில் 23 பணிகள் உபயதாரர் நிதியில் நடைபெற்று வருகின்றன. மேலும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு, சூரிய ஒளியின் வாயிலாக மின்சாரத்தை பெறுகின்ற அமைப்பு, பசுமடம் போன்ற 5 பணிகள் ரூ.1.40 கோடி செலவில் அறம் சார்ந்த நிதியில் இருந்து வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த கோவிலுக்கு பாலா லயம் நடத்தப்பட்டுள்ளது. வெகு விரைவில் பணிகளை நிறைவேற்றித் தந்து கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்றார்.

    அப்போது உறுப்பினர் காமராஜ், "சோழவள நாட்டில் பஞ்ச ஆரண்யங்கள் என்று 5 தலங்கள் இருக்கிறது. ஒரே நாளில் 5 தலங்களையும் தரிசனம் செய்யக்கூடிய வகையில் அதிகாலையில் இருந்து இரவு முதல் தரிசிக்க கூடிய ஒரே நேர் கோட்டில் 5 சிவ தலங்கள் அமைந்திருக்கிறது. அதில் 2-வது தலமான அவளிவநல்லூர் சட்டநாதர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்வதற்கு பணிகள் தொடங்கப்பட உள்ள சூழ்நிலை இருக்கிறது. ஆனால் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. ஆலங்குடி அபய வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு மொட்டை கோபுரம்தான் இருக்கின்றது. அதற்கு ராஜகோபுரம் அமைத்து தர வேண்டும்" என்றார்.

    இதற்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்து கூறியதாவது:-

    சாட்டநாதர் கோவில் என்பது பஞ்ச ஆரண்ய தலங்களில் வனம் சார்ந்த 2-வது கோவில். அவர் கோரிய கும்பாபிஷேக பணிகள் வருகிற 16-ந்தேதி அன்று பாலாலயம் செய்யப்பட இருக்கிறது. சுமார் ரூ.34.30 லட்சம் மதிப்பீட்டில் 5 பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. வரதராஜ பெருமாள் கோவிலில் மொட்டை கோபுரம் இருப்பதாக தெரிவித்தார்.

    300 ஆண்டுகள் பழமையான கோவில் என்பதால் தொல்லியல் வல்லுனர் குழுவினரோடு ஆய்வு செய்து அந்த மொட்டை கோபுரத்தின் ஸ்திரத்தன்மையை ஆய்வு செய்து சாத்தியக் கூறுகள் இருப்பின் 3 நிலை ராஜகோபுரமாக கட்டித் தருவதற்கு இந்துசமய அறநிலையத்துறை முயற்சிக்கும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்பட 7 நிலை ராஜ கோபுரங்கள் இரண்டும், 5 நிலை ராஜ கோபுரங்கள் இரண்டும், 3 நிலை ராஜ கோபுரங்கள் இரண்டும் என்று 6 கோவில்களின் ராஜகோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்கிறது. ராஜ ராஜசோழன் காலத்தில் நடைபெற்ற கோவில் பணிகளுக்கு இணையாக நம்முடைய நிகழ்கால ராஜராஜ சோழனாக திகழும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியிலே நடைபெற்று வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×