search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "peoples protest"

    • சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர்.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா கே. சென்னம்பட்டி கிராம பகுதியில் கேரளாவைச் சேர்ந்த தனியார் உரத்தொழிற்சாலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனத்தில் இறைச்சி கழிவுகளை சுத்திகரித்து உரமாக மாற்றும் பணி நடைபெறுகிறது. இதனால் அந்த பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசுபடுவதாக அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கடந்த வாரம் தேர்தலை புறக்கணித்த நிலையில் மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் மதுரை மாவட்ட ஆட்சியர் இது சம்பந்தமாக அறிக்கை கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் சம்மந்தப்பட்ட தொழிற்சாலை சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடைபெறுவதாக தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் இந்த தொழிற்சாலை நிரந்தரமாக மூடக்கோரி சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் இந்த பகுதி சேர்ந்த அ.தி.மு.க.வினர், பொதுமக்களுடன் சேர்ந்து கள்ளிக்குடி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டார். அப்போது தமிழக அரசு இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். ஆலையை மூடும் வரை தொடர் போராட்டம் நடத்துவோம் என்ற கண்டன கோஷமிட்டனர்.

    இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது-

    சென்னம்பட்டி ஆவல் சூரன்பட்டி பேய்குளம் உள்ளிட்ட 30 கிராம மக்களை அச்சுறுத்தும் இந்த தொழிற்சாலையை அகற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக ஏற்கவே நான் கடந்த ஆண்டு இந்த தொழிற்சாலையை நிறுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மனு கொடுத்தேன்.

    தற்போது மக்கள் ஜனநாயக உரிமையை நிலை நாட்டும் வகையில் அரசின் கவனத்தை ஈர்க்க தேர்தலை புறக்கணித்தார்கள். நானும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பினேன். தற்போது தற்காலிகமாக மூடிவிட்டு, பிறகு ஆய்வறிக்கை வந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    ஆனால் ஓட்டுபதிவின் போது இந்த ஆலை இயங்குவதாக மக்கள் குற்றம் சாட்டி இருக்கிறார்கள். இதை நிரந்தரமாக அகற்ற மக்கள் போராடி வருகிறார்கள். ஆனாலும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    தற்போது இந்த தொழில் சாலையால் மக்களுக்கு எந்த முன்னேற்றமும் இல்லை, வேலைவாய்ப்பு இல்லை, பொருளாதாரம் இல்லை. மக்களுக்கு கேடு விளைவிக்கும் இந்த தொழிற்சாலையை எங்கே வேண்டுமானாலும் மாற்றி கொள்ளட்டும். ஆனால் மக்களின் விருப்பத்துக்கு மாறாக இயங்கக் கூடாது நிரந்தரமாக மூட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • கிராமப் பகுதிகளில் தேர்தலை புறக்கணிக்கிறோம் புறக்கணிக்கிறோம் என்று சுவரொட்டிகளையும் ஒட்டி உள்ளனர்.
    • தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றாத வரை யாரும் இப்பகுதிக்கு ஓட்டு கேட்டு வர வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கோடாங்கி பட்டியில் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் 97 குடும்பத்தினருக்கு கடந்த 1994 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையால் வழங்கப்பட்ட பட்டாவை தனிநபர் போலி ஆவணம் தயாரித்து ஆக்கிரமிப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுகுறித்து இப்பகுதி மக்கள் தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தாங்கள் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி தங்கள் வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏற்றியும், கையில் கருப்புக்கொடி ஏந்தியவாறு தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    மேலும் கிராமப் பகுதிகளில் தேர்தலை புறக்கணிக்கிறோம் புறக்கணிக்கிறோம் என்று சுவரொட்டிகளையும் ஒட்டி உள்ளனர். தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றாத வரை யாரும் இப்பகுதிக்கு ஓட்டு கேட்டு வர வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே தேனி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில் தற்போது அந்த பட்டியலில் கோடாங்கிபட்டியும் இணைந்துள்ளது.

    • பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
    • சொனப்பாடி கிராமத்தில் இன்று காலை பல்வேறு இடங்களில் தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே பட்டிப்பாடி வேலூர் ஊராட்சி சொனப்பாடி கிராமம் உள்ளது. இங்கு திரளான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தார் சாலை பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதனால் அவர்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் சொனப்பாடி கிராமத்தில் இன்று காலை பல்வேறு இடங்களில் தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. அதில் இதுவரை தார் சாலை அமைக்கவில்லை. பள்ளிக்குழந்தைகள் பள்ளிக்கு செல்ல சாலை வசதி இல்லை. எனவே இதை கண்டித்து வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கிறோம் என கூறப்பட்டுள்ளது.

    இது தவிர வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றி வைத்து எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். மேலும் பொதுமக்கள் இன்று காலையில் ஊர் பகுதியில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    • அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமலும், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர மறுத்து வருகின்றனர்.
    • நடவடிக்கை எடுத்து விட்டதாக பொய்யான தகவல்களை பரப்பி வந்தனர்.

    கடத்தூர்:

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி 3-வது வார்டு பகுதியை சேர்ந்த அலமேலுபுரத்திற்கு உட்பட்ட கோட்டமேடு, அசோக்நகர் தெருவில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர்.

    தேவையான குடிநீர் பைப், சாக்கடை கால்வாய் பராமரிப்பு, ரோடு வசதி, தெருவிளக்கு ஆகியவை அமைத்து தரும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்தனர். மேலும், அவர்கள் நடவடிக்கை எடுத்து விட்டதாக பொய்யான தகவல்களை பரப்பி வந்தனர்.

    இதுகுறித்து 3-வது வார்டு கவுன்சிலர், பேரூராட்சி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமலும், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர மறுத்து வருகின்றனர்.

    முறையான நடவடிக்கை எடுக்கும் வரை வீடுகளில் கருப்பு கொடியேற்றி வைப்போம் என்றும், வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கோட்டாட்சியர், இந்து சமயஅறநிலையத்துறை இணை ஆணையர் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடவில்லை.
    • நிலக்கோட்டை டி.எஸ்.பி. தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் மகா பரமேஸ்வரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்ட இந்த கோவிலில் ஒரு தரப்பினர் தங்கள் சமூகத்திற்கு மண்டகப்படி வழங்க வேண்டும் என கேட்டு கடந்த 19-ந்தேதி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கோவில் செயல் அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் அதன் பிறகு எந்தவித உத்தரவாதமும் வழங்கப்படாததால் மீண்டும் கடந்த 27-ந்தேதி முதல் கோவில் வளாகத்திலேயே தங்கி போராட்டத்தை தொடர்ந்தனர்.

    கோட்டாட்சியர், இந்து சமயஅறநிலையத்துறை இணை ஆணையர் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடவில்லை. இதனால் இன்று ஊர்வலமாக புறப்பட்டு சாலை மறியல் செய்யப்போவதாக அறிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை டி.எஸ்.பி. தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். போராட்டம் நடத்தியவர்கள் பழைய வத்தலக்குண்டு மாரியம்மன் கோவிலில் இருந்து கையில் கருப்புக் கொடி ஏந்தியும், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தும் வாசகங்களை ஏந்தியபடியும் ஊர்வலமாக சென்றனர்.

    பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

    • சமரச பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • உரிய நடவடிக்கை எடுப்பதாக அறிவித்ததை அடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் சர்க்கார் பெரியபாளையம் ஊராட்சிக்குட்பட்ட குளத்துபாளையம் பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இங்கு கடந்த 23 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. இதுகுறித்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை காலி குடங்களுடன் திருப்பூர் ஊத்துக்குளி பிரதான சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்தால் காலையில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் என பலரும் அவதிக்கு உள்ளாகினர்.

    தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பூர் வடக்கு போலீசார் மற்றும் ஊத்துக்குளி போலீசார் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிட வலியுறுத்தினர். ஆனால் சமரச பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக அறிவித்ததை அடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • கடந்த மாதம் 2-ந்தேதி நடந்து முடிந்த கிராம சபை கூட்டத்தில் பாலதொழுவில் உள்ள குளத்திற்கு சிப்காட் சாய கழிவு நீர் வரக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்திற்கு தனியாக ஒரு பூட்டு போட்டு பூட்டி விட்டு சென்று விட்டனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், புஞ்சை பாலதொழுவு ஊராட்சியில் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு பஞ்சாயத்து தலைவர் தங்கமணி விஜயகுமார் தலைமையில் நேற்று கூட்டம் தொடங்கிய நிலையில் கடந்த மாதம் 2-ந்தேதி நடந்து முடிந்த கிராம சபை கூட்டத்தில் பாலதொழுவில் உள்ள குளத்திற்கு சிப்காட் சாய கழிவு நீர் வரக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஆனாலும் தொடர்ந்து சாயகழிவு நீர் வந்து கொண்டுள்ளது. இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரியும், மாவட்ட கலெக்டர் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பதில் அளிக்க வேண்டும் என்று கூறி நடக்க இருந்த கிராமசபை கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று புஞ்சை பால தொழுவு ஊராட்சி துணைத்தலைவர் பிரியாவின் கணவர் சுப்பிரமணி, சென்னிமலை யூனியன் 11-வது வார்டு கவுன்சிலர் தங்கவேல், சிப்காட்டால் பாதிக்கப்பட்டோர் மக்கள் நல சங்கம் சார்பில் பிரபு, மணி உட்பட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் திரண்டு கிராம சபை கூட்டத்தினை ஒத்திவைக்க வேண்டும் என்று மாலை 5 மணி வரை போராடினர்.

    இது சம்பந்தமாக சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர் பாபு, போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தினை நடத்தினர். நடந்த கூட்டத்திற்கு போதிய ஆதரவு இல்லை, கிராம சபை கூட்டத்தினை ரத்து செய்ய வேண்டும் என கூறி புஞ்சை பாலதொழுவு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புகுந்து பொது மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு 10 மணி வரை பேராட்டம் நடந்தது.

    அதன் பின்பு பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்திற்கு தனியாக ஒரு பூட்டு போட்டு பூட்டி விட்டு சென்று விட்டனர்.

    அதனைத் தொடர்ந்து இன்று காலை மீண்டும் புஞ்சை பாலதொழுவு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொதுமக்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • லாரிகளை வேகமாக ஓட்டாதீர்கள் என டிரைவர்களிடம் பலமுறை தெரிவித்தும் அவர்கள் கேட்காமல் மீண்டும் லாரிகள் வேகமாவே செல்கிறது என மக்கள் புகார் கூறினர்.
    • வேகமாக செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என கூறினர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அடுத்த விண்ணப்பள்ளி உக்கரம் ஊராட்சிக்கு உட்பட்ட புதுரோட்டில் இருந்து மில்மேடு செல்லும் தார் சாலை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு போடப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 20 நாட்களாக அந்த சாலை வழியாக அதிக பாரத்துடன் ஜல்லி கற்கள் பாரம் ஏற்றிக்கொண்டு கனரக மற்றும் டிப்பர் லாரிகள் சென்று வருகிறது. இந்த வழியாக வரும் கனரக டிப்பர் லாரிகளால் தார் சாலை சேதம் அடைந்து காணப்படுகிறது.

    மேலும் டிப்பர் லாரிகளில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஜல்லிக்கற்களை ஏற்றிக்கொண்டு செல்வதால் சாலை வளைவுகளில் ஜல்லி கல் கீழே கொட்டி சாலையில் பரவலாக சிதறி கிடைக்கிறது.

    இதனால் அந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கீழே விழுந்து விபத்துகள் ஏற்பட்டுள்ளது. அதே போல் டிப்பர் லாரிகள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பகல் மற்றும் இரவு முழுவதும் அதிக வேகமாக செல்கிறது. இதனால் மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இது குறித்து மக்கள் லாரிகளை வேகமாக ஓட்டாதீர்கள் என டிரைவர்களிடம் பலமுறை தெரிவித்தும் அவர்கள் கேட்காமல் மீண்டும் லாரிகள் வேகமாவே செல்கிறது என மக்கள் புகார் கூறினர்.

    இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அந்த பகுதியில் ஒன்று திரண்டனர். இதை தொடர்ந்து அவர்கள் அந்த சாலை வழியாக வந்த 6-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.

    இது குறித்து மக்கள் கூறும் போது, இந்த பகுதிக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வர வேண்டும். வேகமாக செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என கூறினர்.

    இதை தொடர்ந்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் பேரூராட்சி தலைவர் இளங்கோ மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரி மற்றும் போலீசார் வந்தனர். இதையடுத்து அவர்கள் பொது மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து அதிகாரிகள் உயர் அதிகாரிகளிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினர்.

    இதை தொடர்ந்து டிப்பர் லாரி டிரைவர்களிடம் இந்த சாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு போடப்பட்டிருக்கிறது. இது போன்ற கனரக வாகனங்கள் செல்வதற்கு அனுமதி இல்லை. எனவே இனிமேல் நீங்கள் இந்த சாலை வழியாக டிப்பர் லாரிகளில் அதிகபாரம் ஏற்றிக்கொண்டு வரக்கூடாது. மீண்டும் கனரக டிப்பர் லாரிகள் இந்த சாலையில் வந்தால் பறிமுதல் செய்ய நேரிடும் என யூனியன் சேர்மன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர். இந்த போராட்டம் சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக நடந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • 24 மணிநேரமும் லாரிகள் சென்று வருவதால் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி தருகிறது.
    • இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் எசனை மற்றும் கீழக்கரை கிராமங்களில் 10-க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் மற்றும் கிரஷர்கள் இயங்கி வருகின்றன. இந்த குவாரிகளில் கற்கள் மிக அதிக அளவில் வெடிவைத்து வெட்டி எடுக்கப்படுகிறது.

    இப்படி வெட்டி எடுக்கப்படும் ஜல்லிகள், கிரஷர் பவுடர்கள், சிப்ஸ்கள் பெரம்பலூர் மட்டுமின்றி திருச்சி, தஞ்சை உள்பட வெளிமாவட்டங்களுக்கு டிப்பர் லாரிகளில் எசனை-ஆலங்கிளி சாலை வழியாக எடுத்து செல்லப்படுகிறது.

    இப்படி செல்லும் லாரிகள் அதிவேகமாகவும் ஜல்லிகற்கள் சாலை முழுவதும் சிதறி பொதுமக்கள் நடமாட முடியாத நிலை ஏற்படுகிறது.

    மேலும் 24 மணிநேரமும் லாரிகள் சென்று வருவதால் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி தருகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.

    இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் இன்று காலை எசனை குவாரியிலிருந்து ஜல்லி கற்களை ஏற்றி வந்த 2 லாரிகளை சிறைப்பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆலங்கிளி சாலையில் இருபுறங்களிலும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன.

    இதனை அறிந்த அதிகாரிகள் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்கும் வரையில் போராட்டம் தொடரும் என அவர்கள் கூச்சலிட்டனர்.

    உங்களுடைய கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். முதலில் சாலையில் சிதறிக்கிடக்கும் கற்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்படும்.

    மேலும் இது போல் கற்களை சிதறி செல்லும் லாரிகள் குறித்து புகார் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

    இதனை தொடர்ந்து கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் 2 மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் முசிறி அரசு போக்குவரத்து பணிமனை மேலாளர் தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • பேருந்து சாலப்பட்டி கிராமத்திற்குள் சென்று வர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

    முசிறி:

    முசிறி அருகே வெள்ளூர் அடுத்த சாலப்பட்டி கிராமம் வழியாக முசிறியில் இருந்து மாங்கரைப்பேட்டை, வெள்ளூர், வேப்பந்துறை, மணப்பாறையில், தெற்கு சித்தாம்பூர் ஆகிய கிராமங்களுக்கு காலை மற்றும் மாலை இருவேளை அரசு பேருந்து சென்று வருகிறது.

    இவ்வாறு செல்லும் அரசு பேருந்து சாலப்பட்டி கிராமத்திற்குள் வந்து செல்ல வேண்டும். இதனால் பள்ளி மாணவர்கள் பெரிதும் பயனடைவர் என்று கூறி, அப்பகுதி மக்கள் முசிறி கோட்டாட்சியர் மற்றும் அரசு போக்குவரத்து கிளை மேலாளர் ஆகியோரிடம் மனு அறிவித்துள்ளனர். ஆனால் அந்த மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அந்த கிராமத்தின் வழியாக சென்ற பேருந்தினை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் முசிறி அரசு போக்குவரத்து பணிமனை மேலாளர் தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது பேருந்து சாலப்பட்டி கிராமத்திற்குள் சென்று வர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

    • சீலாத்திகுளத்தை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலிகுடங்களுடன் ராதாபுரம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் யூனியனுக்கு உட்பட்ட சீலாத்திகுளம் கிராமத்தில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வரவில்லை.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் யூனியன் அலுவலகத்தில் உரிய புகார் அளித்தும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனை கண்டித்து சீலாத்திகுளத்தை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலிகுடங்களுடன் ராதாபுரம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்தப் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்தையில் ஈடுபட்டார். எனினும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

    • பல ஆண்டுகளாக மேம்பாலம் கட்டித் தர வேண்டும் என்கின்ற கோரிக்கையை பொதுமக்கள் வைத்து வருகின்றனர்.
    • பொதுமக்களின் போராட்டத்தால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மோச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார், விஜயலட்சுமி தம்பதியர் நேற்று இருவரும் இருசக்கர வாகனத்தில் வரும் போது திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதி கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

    ஆகவே இந்த இடத்தில் பல ஆண்டுகளாக மேம்பாலம் கட்டித் தர வேண்டும் என்கின்ற கோரிக்கையை வைத்து வருகின்றனர். நேற்று இரண்டு பேர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவத்தையொட்டி இன்று மோச்சேரி கிராம பொது மக்கள் 250-க்கும் ஏற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    டிஎஸ்பி சிவசக்தி தலைமையிலான போலீசார் பொதுமக்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் கூறியதன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதனால் 45 நிமிடங்கள் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×