search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக்கை மூடக்கோரி முற்றுகையிட்டு போராட்டம்- 100 கடைகள் அடைப்பு
    X

    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக்கை மூடக்கோரி முற்றுகையிட்டு போராட்டம்- 100 கடைகள் அடைப்பு

    • டாஸ்மாக் முற்றுகை போராட்டத்தால் பெரும் பரபரப்பு பதட்டம் ஏற்பட்டது .
    • பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த நிலையில் சட்டசபையில் ஏற்கனவே அறிவித்தபடி தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

    இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 15 கடைகள் மூடப்பட்டது. தஞ்சை நகரில் மட்டும் 10 கடைகள் அடைக்கப்பட்டன.

    இந்த பட்டியலில் தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் அருகே மாட்டு மேஸ்திரி சந்து பகுதியில் செயல்படும் அரசு டாஸ்மாக் இடம் பெறவில்லை. எனவே இந்த டாஸ்மாக்கை நிரந்தரமாக மூட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு இயக்கம், அமைப்புகள் சார்பில் ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டன. இந்த கோரிக்கையை நிறைவேற்றாததால் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், பொதுமக்கள் அதிருப்தியில் இருந்தனர்.

    இந்த நிலையில் மாட்டு மேஸ்திரி சந்து டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடுவதற்கான முதல்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி இன்று மதியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் வசந்தி தலைமையில் மாநகர செயலாளர் வடிவேலன் மற்றும் பொதுமக்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர்.

    அவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையிலான போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் முடிவு எட்டப்படாததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தடையை மீறி டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    அப்போது மூட வேண்டும்.. மூட வேண்டும்.. மாட்டு மேஸ்திரி சந்து டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பியவாறே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து அவர்களிடம் போலீசார் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது போலீசாரிடம், மாட்டு மேஸ்திரி சந்து மற்றும் சுற்றியுள்ள இடங்களில் ஏராளமான வணிக நிறுவனங்கள் , வங்கிகள், மருத்துவமனைகள், பள்ளிகள், கோவில்கள் உள்ளன. இந்தக் கடையில் மது குடிப்பவர்கள் பலர் அந்த வழியை கடந்து வீட்டுக்கு செல்லும் பெண்களை கேலி கிண்டல் செய்து வருகின்றனர். பள்ளிக்கு செல்லும் மாணவிகளும் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    மேலும் பொதுமக்கள், வேலைக்கு செல்வோரும் இன்னலுக்கு ஆளாகினர். எனவே இந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி இரண்டு ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறோம். தற்போது மூடப்பட்ட பட்டியலிலும் இந்த கடை இல்லாதது எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. இதனால் நிரந்தரமாக இந்த டாஸ்மாக்கை மூடும் வரை எங்களது போராட்டம் ஓயாது என்று போராட்டக்காரர்கள் கூறினர்.

    தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இந்தப் போராட்டத்தால் டாஸ்மாக் கடை இன்று திறக்கப்படவில்லை.

    டாஸ்மாக் முற்றுகை போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு பதட்டம் ஏற்பட்டது . பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று மாட்டு மேஸ்திரி சந்து, பழைய பஸ் நிலையத்தை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.

    Next Story
    ×