search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய நெடுஞ்சாலையில் விசாரணைக்காக அழைத்து சென்றவர்களை விடுவிக்க கோரி சாலை மறியல்
    X

    சாலை மறியலின்போது, மண்ணெண்ணெய் கேனுடன் தீக்குளிக் கும் முயற்சியில் ஈடுபட்ட வடிவு.

    தேசிய நெடுஞ்சாலையில் விசாரணைக்காக அழைத்து சென்றவர்களை விடுவிக்க கோரி சாலை மறியல்

    • வேலாயுதபுரம் சோதனை சாவடி அருகே கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மறியலால் ராஜபாளையம்-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    ராஜபாளையம்:

    தென்காசி மாவட்டம் செந்தட்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கனகராஜ் மகன் மலர்மன்னன் (வயது 25), சுப்பையா மகன் மகேந்திரன் (25). இதில் மலர்மன்னன் டிரைவராகவும், மகேந்திரன் கட்டிட தொழிலாளியாகவும் வேலை பார்த்து வருகின்றனர். நண்பர்களான இவர்கள் மீது கொலை உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    இந்தநிலையில் கரிவலம் வந்தநல்லூர் போலீசார் நேற்று நள்ளிரவு 2 மணிக்கு மலர்மன்னன் மற்றும் மகேந்திரன் இருவரையும் ஒரு வழக்கு தொடர்பாக புகைப்படம் எடுக்க வேண்டும் எனக்கூறி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதற்கு அவர்களது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தபோதிலும் அவர்களிடம் பேசி போலீசார் அழைத்து சென்றனர்.

    நீண்ட நேரம் ஆகியும் போலீஸ் நிலையத்தில் இருந்து இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரது உறவினர்களும் போலீஸ் நிலையத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது இருவரையும் நாங்குநேரி சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

    மேலும் பிடிபட்ட இருவரையும் விசாரணை முடிந்து போலீஸ் நிலையத்தில் இருந்து நேற்று மதியம் விடுவிக்கப்படுவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், இரவு வரை அவர்கள் இருவரையும் விடுவிக்காததை கண்டித்து ராஜபாளையம் அருகே தென்காசி-விருதுநகர் மாவட்ட எல்லையில் உள்ள வேலாயுதபுரம் சோதனை சாவடி அருகே கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது போராட்டத்தில் கலந்துகொண்ட ஆண்டிச்சாமி மற்றும் வடிவு ஆகியோர் சிறைப்பிடித்த இருவரையும் விடுவிக்க கோரி திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் தங்களது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் தடுத்து அவர்களை காப்பாற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கரிவலம்வந்தநல்லூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் கைது செய்யப்பட்டிருந்த இரண்டு வாலிபர்களையும் விடுவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

    இதனால் ராஜபாளையம்-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×