என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சுருளி அருவிக்கு செல்ல 5-வது நாளாக தடை விதிப்பு: நாளை ஆடி அமாவாசைக்கு அனுமதி கிடைக்குமா?
    X

    சுருளி அருவிக்கு செல்ல 5-வது நாளாக தடை விதிப்பு: நாளை ஆடி அமாவாசைக்கு அனுமதி கிடைக்குமா?

    • கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.10 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கி பரவலாக பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகள், கண்மாய்கள், குளங்கள், நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. அதன் பிறகு மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் கடந்த 1 வாரமாக மீண்டும் பரவலாக தீவிரமடைந்து வருகிறது.

    தற்போது தேனி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    இதனால் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் குளிக்க இன்று 5ம் நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்தால் பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும் என்பதை கருத்தில் கொண்டு வனத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுருளி அருவிக்கு அமாவாசை நாட்களில் அதிக அளவு உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வந்து தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம்.

    இந்நிலையில் 5-வது நாளாக அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை ஆடி அமாவாசை அன்று பக்தர்களுக்கு அனுமதி கிடைக்குமா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே மேகமலை அடுத்துள்ள சின்னச்சுருளி அருவியில் 4 நாட்களுக்கு பிறகு இன்று பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் ஏராளமானோர் ஆனந்தமாக நீராடிச் சென்றனர்.

    71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 64.80 அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியதும் 5 மாவட்டங்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும் என்பதால் தொடர்ந்து அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 869 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4586 மி.கன அடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.10 அடியாக உள்ளது. நீர் வரத்து 2132 கன அடி. திறப்பு 1861 கன அடி. இருப்பு 4720 மி.கன அடி. முல்லைப்பெரியாறு அணையில் 34.4, தேக்கடி 26.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. தொடர்ந்து அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் வைகை அணையின் நீர்மட்டம் ஓரிரு நாளில் 66 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×