என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமயபுரம் மாரியம்மன் கோவில்"

    • 1-ந்தேதி விஜயதசமி அன்று அம்மன் வேடுபரி அலங்காரத்தில் எழுந்தருளுகிறார்.
    • விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாள் இரவும் கோவில் உள்பிரகாரத்தில் பரதநாட்டியம் மற்றும் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.

    அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டு நவராத்திரி திருவிழா வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. விழாவையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்பிரகாரத்தில் உற்சவர் மண்டபம் அருகே பல அடுக்குகள் கொண்ட நவராத்திரி கொலு வைக்கப்பட்ட உள்ளது.

    இதில் மரம், செடி, கொடி, துர்க்கையின் 9 வடிவங்கள், பறவைகள், விலங்கினங்கள் மற்றும் விவேகானந்தர், வள்ளலார், பார்வதி, சரஸ்வதி, லட்சுமிதேவி, அஷ்டலட்சுமி, திருப்பதி ஏழுமலையான், முருகன், பிரம்மா, விஷ்ணு, சிவன், குபேரன் மற்றும் தேவ, தேவியர் உள்ளிட்ட ஏராளமான பொம்மைகள் கொலுவில் இடம்பெற உள்ளது.

    22-ந்தேதி இரவு அம்மன் குமாரிகா (துர்க்கை) அலங்காரத்தில் எழுந்தருளுகிறார். 23-ந்தேதி திருமூர்த்தி அலங்காரத்திலும், 24-ந்தேதி கல்யாணி அலங்காரத்திலும் எழுந்தருளுகிறார். 25-ந்தேதி ரோகினி அலங்காரத்திலும், 26-ந்தேதி காளகா அலங்காரத்திலும், 27-ந்தேதி சண்டிகா அலங்காரத்திலும் (மகாலட்சுமி அம்சம்) அம்மன் எழுந்தருளுகிறார். 28-ந்தேதி சாம்பவி அலங்காரத்திலும், 29-ந்தேதி துர்க்கை அலங்காரத்திலும், 30-ந்தேதி சுபத்ரா அலங்காரத்திலும் (சரஸ்வதி அம்சம்) அம்மன் அருள்பாலிக்கிறார். 1-ந்தேதி விஜயதசமி அன்று அம்மன் வேடுபரி அலங்காரத்தில் எழுந்தருளுகிறார். அன்று இரவு அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பாடாகி வன்னி மரம் சென்றடைகிறார். இதைத்தொடர்ந்து அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாள் இரவும் கோவில் உள்பிரகாரத்தில் பரதநாட்டியம் மற்றும் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.

    இதேபோல் இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதிமாரியம்மன் கோவிலிலும் நவராத்திரி விழா வருகிற 22-ந்தேதி தொடங்கி 1-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 1-ந்தேதி அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று இரவு ஆதிமாரியம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் வி.எஸ்.பி.இளங்கோவன், கோவில் இணை ஆணையர் பிரகாஷ், அறங்காவலர்கள் பிச்சைமணி, ராஜசுகந்தி, லட்சுமணன், மணியக்காரர் பழனிவேல் மற்றும் கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

    • ஆடி அமாவாசையான இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நள்ளிரவே கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
    • அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    ஆடி தமிழ் மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. குறிப்பாக ஆடி அமாவாசை தினத்தில் இறந்த நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கமாக உள்ளது.

    இந்த மாதத்தில் ஏராளமான பெண்கள் குடும்பத்துடன் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபடுவர். அதில் ஆடி அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக பார்க்கப்படுகிறது.

    ஆடி அமாவாசை நாளில் பெண்கள் தங்கள் குடும்பத்துடன் அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபடுவார்கள். சாதாரண அமாவாசை நாட்களில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட வருவார்கள்.

    இந்த நிலையில் ஆடி அமாவாசையான இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நள்ளிரவே கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், தனித்தனி வாகனங்களிலும், பேருந்துகளிலும் வருகை தந்தனர். தீச்சட்டி ஏந்தி, மொட்டை அடித்து, துலாம் பாரம் நேர்த்திக்கடன் செலுத்தி, அழகு குத்தி பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கூல், பானகம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், பாதுகாப்பு பணியில் 100-க்கும் மேற்பட்ட கோவில் ஊழியர்கள், தன்னாலவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு கருதி 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    • மாணவிகளின் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தனர்.
    • சமயபுரம் மாரியம்மனை தரிசிக்க வந்ததாக மாணவிகள் தெரிவித்தனர்.

    திருச்சி:

    தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று நிறைவடைந்தது. கடைசி தேர்வான சமூக அறிவியல் பாடத் தேர்வினை நேற்று மாணவ-மாணவிகள் எழுதினர். ஈரோடு மாவட்டம் பவானி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 5 மாணவிகள் மாலையில் வீடு திரும்பவில்லை.

    இரவு 8 மணி ஆகியும் அந்த மாணவிகள் வீடு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பள்ளியில் விசாரித்த போது, தேர்வு எழுதிவிட்டு மதியமே தேர்வு மையத்திலிருந்து வெளியே சென்றதாக தெரிவித்தனர்.

    பின்னர் அவர்களது தோழிகளிடம் விசாரித்த போது, எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் பதட்டமடைந்த மாணவிகளின் பெற்றோர் பவானி போலீசில் புகார் செய்தனர்.

    பின்னர் துணை போலீஸ் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தனிப்படை போலீசார் மாணவிகளின் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தனர்.

    இதில் 5 மாணவிகளும் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் பகுதியில் இருப்பது தெரியவந்தது. உடனே பவானி போலீசார் சமயபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று சென்று 5 மாணவிகளையும் மீட்டனர்.

    அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தேர்வில் வெற்றி பெற பெற்றோருக்கு தகவல் கொடுக்காமல் சமயபுரம் மாரியம்மனை தரிசிக்க வந்ததாக மாணவிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து மாணவிகளுக்கு போலீசார் அறிவுரை கூறினர். இதை தொடர்ந்து 5 பேரையும் ஈரோட்டுக்கு அழைத்து சென்று பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    • தேர் ஓடும் ரத வீதிகள் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
    • பால் குடம், தீச்சட்டி, பறவைக் காவடி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    மண்ணச்சநல்லூர்:

    சக்தி தலங்களில் முதன்மையான சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை பெருந்திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கிலும், இரவு 8 மணி அளவில் பல்வேறு வாகனங்களிலும் எழுந்தருளினார்.

    நேற்று இரவு சமயபுரம் தெப்பக்குளம் அருகே உள்ள சூரப்பநாயக்கர் மண்டபத்தில் அம்மன் எழுந்தருளினார். தொடர்ந்து வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி மண்டகப்படி உபயம் கண்டருளினார். பின்னர் வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.


    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றது. இதையொட்டி காலை 10.31 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் மிதுன லக்னத்தில் அம்மன் தேரில் எழுந்தருளினார்.

    அதைத்தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் சக்தி பராசக்தி கோஷம் விண்ணதிர தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் ஓடும் ரத வீதிகள் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    எங்கு பார்த்தாலும் மஞ்சள் ஆடை அணிந்த பெண் பக்தர்கள் திரண்டிருந்தனர். தேருக்கு முன்பாக ஏராளமான பக்தர்கள் பால் குடம், தீச்சட்டி, பறவைக் காவடி ஆகியவற்றை எடுத்து வந்து, தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

    தேரோட்ட விழாவை காண நேற்று காலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாத யாத்திரையாகவும், வாகனங்களிலும் பக்தர்கள் வந்து குவிந்தனர். பாதயாத்திரையாக வந்த பக்தர்களூக்கு திருவானைக்காவல், கொள்ளிடம் டோல்கேட், பளூர், சமயபுரம் உள்ளிட்ட இடங்களில், பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் நீர்மோர், குளிர்பானங்கள், குடிநீர், அன்ன தானம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

    கோவில் ராஜகோபுரம், மேற்கு, தெற்கு, வடக்கு கோபுரங்கள் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் தலைமையில் 4 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 16 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 31 போலீஸ் இன்ஸ்பெ க்டர்கள், 1263 போலீசார், 275 ஊர்க்கால் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி கொள்ளாமல் இருக்க 'பாக்ஸ் டைப்' அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மீட்பு பணியாளர்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தனர். 2 இடங்களில் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டிருந்தது.


    தேர் சுற்றி வரும்போது மின்வாரிய ஊழியர்களை ஆங்காங்கே நியமித்து மின்சாரத்தை உரிய நேரத்தில் தடை செய்தும், மின் கம்பங்களில் இருந்து செல்லும் மின் கம்பிகளை அகற்றியும் எவ்வித இடையூறும் இல்லாமல் தேர் செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டிருந்தது.

    3 வெடிபொருள் சோதனை மற்றும் கண்காணிப்பு படைகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர். 4 டிரோன் கேமராக்கள் மூலம் சமயபுரம் மாரியம்மன் கோவிலை சுற்றி வெவ்வேறு பகுதிகளில் இருந்து கழுகு பார்வையின் மூலம் கண்காணிக்கப்பட்டது. 50 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் அமைத்து கண்காணிக்கப்பட்டது.

    மேலும் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு, போலீசார் பைனாகுலர் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மண்ணச்சநல்லூர் செல்லும் சாலையில் சக்திநகர், கரியமாணிக்கம் பிரிவு ரோடு உள்ளிட்ட இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டது.

    விழாவை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) அம்மன் வெள்ளிகாமதேனு வாகனத்திலும், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அம்மன் முத்துப்பல்லக்கிலும் புறப்பாடாகிறார்.

    18-ந்தேதி மாலை அம்மனுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு வசந்த மண்டபத்தில் தெப்ப உற்சவ தீபாராதனை நடைபெறுகிறது. தேர் முடிந்து எட்டாம் நாளான 22-ந்தேதி இரவு அம்மன் தங்க கமல வாகனத்தில் புறப்பாடாகிறார். 

    • சமயபுரம் கோவிலில் சித்திரை திருவிழா ஏப்.6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வருகிறார்.

    தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இந்த கோவிலில் சித்திரை திருவிழா ஏப்.6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வருகிறார். ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷம், மரகுதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    வருகிற 14-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 10.31 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இந்த நிலையில், சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டத்தையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு வருகிற 15-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மே 3-ந்தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பச்சைபட்டினி விரதம் கடந்த 9-ந்தேதி தொடங்கியது.
    • ஏப்ரல் 6-ந்தேதி வரை இந்த விரத காலம் உள்ளது.

    திருச்சி:

    சக்தி தலங்களில் முதன்மையான திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். இங்கு வருடந்தோறும் மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை பக்தர்களுக்காக அம்மனே 28 நாட்கள் பச்சைப் பட்டினி விரதம் இருப்பது சமயபுரம் மாரியம்மன் கோவிலின் தனிச்சிறப்பு ஆகும்.

    உலக மக்களின் நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தோய்கள், தீவினைகள் அணுகாது இருக்கவும், சவுபாக்கி யங்கள் கிடைக்கவும் இந்த பச்சைப்பட்டினி விரதம் இருப்பதாக ஐதீகம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான அம்மனின் பச்சைபட்டினி விரதம் கடந்த 9-ந்தேதி தொடங்கியது. வருகிற ஏப்ரல் 6-ந்தேதி வரை இந்த விரத காலம் உள்ளது.

    சமயபுரத்தில் வழக்கமாக அம்பாளுக்கு தினந்தோறும் 6 கால பூஜையில், 6 விதமான தளிகையும் நை வேத்தியமாக வைக்கப்படும். சமைத்த உணவுப் பொருட்களையே 'தளிகை' என்று என்று சொல்வார்கள்.

    ஆனால் அம்மன் பச்சைப் பட்டினி விரதம் இருக்கும் 28 நாட்களும், அம்மனுக்கு சமைத்த உணவுகள் எதுவும் படைக்கப்படுவதில்லை. இளநீர், பானகம், உப்பில் லாத நீர்மோர், துள்ளுமாவு, கரும்பு, பழ வகைகள் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்பட்டு வருகிறது.

    அம்மன் பட்டினி விரதம் இருக்கும் காலங்களில் அம்மனின் முகம் சோர்வு டன் காணப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த காலத்தில் அம்மனை குளிர்விப்பதற்காக கூடை கூடையாக மலர்களை கொண்டு வந்து பூச்சொரி தல் விழா நடத்துகின்றனர்.

    அம்மன் விரதம் இருக்கும் காலத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பூச்சொரிதல் விழா நடக்கிறது. அந்த வகையில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 4-வது வார பூச்சொரிதல் விழா வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற உள்ளது.

    இதில் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் குழு, குழுவாகப் பிரித்து பூக்களை கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    மேலும், பக்தர்களை ஒழுங்குபடுத்தும் விதத்தி லும், அவர்களின் பாது காப்பு கருதியும், சன்னதி வீதியின் நுழைவு வாயிலில் இருந்து ராஜகோபுரம் வரை 10 இடங்களில் இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்படுகிறது.

    • சமயபுரம் மாரியம்மனை தரிசிப்போருக்கு நவக்கிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
    • சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பகல் பொழுதில் நடை சாத்தப்படும் வழக்கம் கிடையாது.

    பொதுவாக பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்து வதற்காக அம்மனை வேண்டி விரதம் இருப்பது வழக்கம். மேலும் கோவில் விழாக்களில் சாமிக்கு நேர்ச்சை செலுத்துவோர் மற்றும் வழிபாடுகளை முன் நின்று செய்வோர் கடுமையான விரதம் இருப்பார்கள்.

    சபரிமலை கோவிலுக்கு செல்வோர் 48 நாட்களும், முருகன் கோவில் களுக்கு செல்வோர் 40 நாட்களுக்கு மேலாகவும் விரதம் இருப்பது வழக்கம். ஆனால் உலக மக்களின் நன்மைக்காக அம்மனே விரதம் இருக்கும் நிகழ்வு திருச்சி சமயபுரம் கோவிலில் பல ஆண்டுகாலமாக நடைபெற்று வருகிறது.


    சமயபுரம் மாரியம்மனை வணங்கினால் சங்கடங்கள் போகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஒட்டுமொத்த உலகத்தில் உள்ள அத்தனை மாரியம்மன் கோயில்களுக்கும் தலைமை பீடமானதுதான் சமயபுரம் ஆகும். சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த தலம்.

    தட்சன் யாகத்துக்குச்சென்ற தாட்சாயணியை தூக்கி சிவபெருமான் ருத்ரதாண்ட வம் ஆடியபோது அம்மனின் திருக்கண் இப்பகுதியில் விழுந்ததால் இந்த திருத்தலத்திற்கு கண்ணனூர் என்ற பெயர் புராணகாலம் தொட்டே இருந்து வருகிறது.

    மிகத்தொன்மையான உற்சவ அம்மனின் திருமேனியில் இன்றும் ஆயிரம் கண்கள் உள்ளன. இது, இத்தலத்தின் பெருமையை விளக்குவதாக அமைந்துள்ளது.

    அம்மனின் சுயம்பு திருமேனியில் நவக்கிரக ஆதிக்கத்தை உள்ளடக்கி நவக்கிரகங்களை நவசர்ப்பங்களாக தரித்து அருள்பாலிப்பதால் அம்மனை தரிசனம் செய்வதன் மூலம் நவக்கிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

    27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி 27 எந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டையில் மகா மாரியம்மன் அருள்பாலிப்பது தனிப்பெரும் சிறப்பு அம்சமாகும்.

    இங்கு உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய், நொடிகள், தீவினைகள் அணுகாது, சகல சவுபாக்கியங்களும் கிடைக்க ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல், பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை அம்மனே பக்தர்களுக் காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது தனிச்சிறப்பாகும்.

    இந்த 28 நாட்களில் இக்கோவிலின் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவும், நீர்மோர், கரும்பு, பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நெய் வேத்தியமாக படைக்கப்படுகிறது.

    மகிஷா சூரனை வதம் செய்த பாவம் தீரவும், தன் கோபம் தணியவும் இந்த விரதத்தை அம்மன் மேற்கொள்கிறார். இந்த நாட்களில் பட்டினி விரதம் இருக்கும் காலங்களில் அம்மனின் முகம் சோர்வுடன் காணப்படுவதாக சொல்லப்படுகிறது.


    அம்மனை மகிழ்வூட்ட பூச்சொரிதல் நடைபெறும். அம்மன் விரதம் இருக்கும் 28 நாட்களில் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை களில் திருச்சி மட்டுமல்லாது சுற்றுப்பகுதி களில் இருந்து மக்கள் பூக்களை கூடை, கூடையாக கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றுவார்கள்.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல ஆயிரம் கிலோ பூக்கள் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு சாத்தப் படும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அலங்காரிக்கப்பட்ட வாகனங்களில், மேளதாளங்களுடன் பக்தர்கள் ஊர்வலமாக வருவார்கள். உடல் முழுவதும் வாசனை பூக்களால் மலை போல் குவித்து உண்ணா நோன்பிருக்கும் அம்மன் சாந்த சொரூபிணியாகி அருள்பாலிக்கிறார்.

    அம்மன் பச்சை பட்டினி விரதம் இருக்கும் நாட்களில் பக்தர்கள் வீடுகளில் அம்மன் படத்தை வைத்து வழிபடுவது வழக்கம். சமையலின்போது தாளிக்காமல் இருப்பார்கள். காலில் செருப்பு அணியாமல் இருப்பார்கள்.

    இளநீரும் நீர் மோரும் அருந்தி இருப்பார்கள், மஞ்சள் ஆடை உடுத்தி மகமாயியின் அருள் வேண்டி இருப்பார்கள். மாரியம்மன் பச்சை பட்டினி விரதம் நிறைவு செய்யும் நாளில், சித்திரை தேரோட்ட விழா கொடியேற்றம் நடைபெறும்.

    சமயபுரம் மாரியம்மன் கோவில் அனைத்து நாட்களிலுமே பகல் பொழுதில் நடை சாத்தப்படும் வழக்கம் கிடையாது.

    காலை முதல் இரவு வரை அம்மனை எப்போது வேண்டுமானாலும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். சமயபுரம் மாரி யம்மனுக்கு உலகின் பல நாடுகளிலும் கோவில் இருந்தாலும் திருச்சி சமயபுரத்திற்கு வந்து அம்பிகையை தரிசிப்பதை பலருக்கும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    • பச்சைப் பட்டினி விரதம் கடந்த 9-ந் தேதி தொடங்கியது.
    • அம்மனே 28 நாட்கள் பச்சைப் பட்டினி விரதம் இருப்பது தனிச்சிறப்பு.

    திருச்சியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் காவிரியின் வடகரையில் அமைந்திருக்கிறது, சமயபுரம். பிரசித்திபெற்ற இந்த திருத்தலத்தில் சமயபுரம் மாரியம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

    மகாவிஷ்ணு எடுத்த அவதாரத்தில் ஒன்று, கிருஷ்ண அவதாரம். இந்த அவதாரத்தின்போது தேவகியின் பிள்ளையாக கிருஷ்ணரும், யசோதையின் பிள்ளையாக மாயா தேவியும் பிறந்தனர். இறையருளால் அவர்கள் இருவரும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    தேவகியின் பிள்ளையை கொல்வதற்காக வந்த கம்சன், குழந்தையை தூக்க முயன்றபோது, அந்தக் குழந்தை தன் உண்மையான உருவத்தைக் காட்டி நின்றது. மகாசக்தியாக தோன்றிய அந்த அன்னையின் எட்டு கரங்களிலும் ஆயுதங்கள் இருந்தன.

    அந்த தேவியே 'மகாமாரி'. இந்த அன்னைதான் மக்களால் மாரியம்மனாக பூஜிக்கப்படுவதாக புராணம் சொல்கிறது.

    திருவரங்கம் அரங்கநாத சுவாமியின் திருக்கோவிலில் தான், சமயபுரம் மாரியம்மன் திருமேனி இருந்ததாம். அந்த அன்னை உக்கிரமாக இருந்ததால், அப்போது இருந்த ஜீயர் சுவாமிகள் அம்மனின் திருவுருவத்தை மற்றொரு இடத்திற்கு மாற்ற ஏற்பாடு செய்தார்.


    திருவரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் இருந்து அன்னையின் திருமேனியை எடுத்துக் கொண்டு வடக்கு நோக்கிச் சென்றவர்கள், இளைப்பாறுவதற்காக திருமேனியை ஓரிடத்தில் வைத்தனர். அந்த இடம்தான், சமயபுரம் ஆகும்.

    பிறகு அதனை எடுத்துக்கொண்டு தென்மேற்காக வந்து தற்போதுள்ள மாரியம்மன் கோவில் அமைந்துள்ள கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைத்து விட்டுச் சென்றனர்.

    அப்போது, காட்டு வழியாகச் சென்ற வழிப்போக்கர்கள், அச்சிலையைப் பார்த்து அதிசயப்பட்டு அக்கம்பக்கத்தில் இருந்த கிராம மக்களைக் கூட்டிவந்து அதற்கு 'கண்ணனூர் மாரியம்மன்' என்று பெயரிட்டு வழிபடத் தொடங்கினர்.

    விஜயநகர மன்னர் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்து, கண்ணனூரில் முகாமிட்டார். அப்போது மாரியம்மனை வழிபட்டு, தாங்கள் தென்னாட்டில் வெற்றி பெற்றால் அம்மனுக்கு கோவில் கட்டி வழிபடுவதாக சபதம் செய்தார்.

    அதன்படி அவர்கள் வெற்றிபெற்றதால், விஜயரெங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில் 1706-ல் அம்மனுக்குத் தனியாக கோவில் அமைத்ததாக வரலாற்று சான்று கூறுகின்றன.

    சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட கண்ணனூர் மாரியம்மன் கோவில்தான், இன்று 'சமயபுரம் மாரியம்மன்' ஆலயமாக சிறப்புற்று விளங்குகிறது.


    ஆலய அமைப்பு

    இந்த ஆலயம், ஆகம விதிப்படியும், சிற்ப சாஸ்திரத்தின்படியும் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் முகப்பில் நீண்ட பெரு மண்டபம் உள்ளது. இதனை 'பார்வதி கல்யாண மண்டபம்' என்கிறார்கள்.

    மூன்று திருச்சுற்றுகளைக் கொண்டது இந்த ஆலயம். கிழக்கே சன்னிதித் தெருவில் விநாயகர் கோவிலும், தெற்கில் முருகன் கோவிலும், தேரோடும் வீதியின் வடக்கே மற்றொரு விநாயகர் கோவிலும் உள்ளன.

    மேற்கில் ராஜகோபால சுவாமி அருள்பாலிக்கிறார். இத்திருக்கோவிலின் தல விருட்சமாக வேப்ப மரம் உள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் இம்மரம், தற்போது திருக்காப்பு விண்ணப்பச் சீட்டை விண்ணப்பிக்கும் இடமாகத் திகழ்கிறது.

    இரண்டாம் திருச்சுற்றில் விநாயகர் சன்னிதி, நவராத்திரி மண்டபம், அபிஷேக அம்மன் சன்னிதி, யாகசாலை, தங்கரத மண்டபம் உள்ளன. இரண்டாம் திருச்சுற்று முடிவடைந்து உள்ளே சென்றால் கொடிமரம், பலிபீடம் காணப்படும்.

    அதைத் தொடர்ந்து மாவிளக்கு மண்டபம் இருக்கிறது. கருவறைக்குச் செல்லும் வாசலின் இருபுறமும் துவார சக்திகளின் சுதை சிற்பம் உள்ளன. வலதுபுறம் கருப்பண்ணசாமி சன்னிதி உள்ளது.

    கருவறைக்கும், மாவிளக்கு மண்டபத்துக்கும் இடைப்பட்ட பகுதிகள் மகா மண்டபம் மற்றும் அர்த்த மண்டபம் என்று அழைக்கப்படுகின்றன.

    கருவறையை சுற்றி ஒரு பிரகாரம் உள்ளது. இங்கே விமானத்தின் அதிஷ்டான பகுதியை ஒட்டி ஒரு தொட்டி அமைக்கப்பட்டு, அதில் நீர் நிரப்பப்பட்டுள்ளது. அம்மனின் உக்கிரத்தை தணிப்பதற்காகவும், அம்பாளின் கருவறை குளிர்ச்சியாக இருப்பதற்காகவும் இந்த தொட்டி அமைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.

    கருவறையின் இடது புறம் உற்சவ அம்மனின் சன்னிதி உள்ளது. இத்திரு மேனிக்கு நாள்தோறும் சிறப்பாக அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த உற்சவ அம்மனுக்கு தினமும் 6 கால பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

    காலை 7.30 மணி மற்றும் மாலை 5.30 மணிக்கு செய்யப்படும் அபிஷேக தீர்த்தம், வடக்குப் பிரகாரத்தில் பக்தர்கள் மீது தெளிக்கப்படுகிறது. இதனால் அம்மை நோய் கண்டவர்கள் மற்றும் உடல்நலக் குறைவு உள்ளவர்கள் நோயின் தாக்கத்தில் இருந்து விரைவில் நலம் பெறுவர் என்பது நம்பிக்கை.


    கருவறையில் சமயபுரம் மாரியம்மன் மாறுபட்ட கோலத்தில் அருள்கிறார். மூலவரின் திருவுருவம் மரத்தால் செய்யப்பட்டது. ஆனால் அதன்மேல் சுதை வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருப்பது புதுமையான ஒன்று.

    தங்க ஜடா மகுடம், நெற்றியில் வைரப்பட்டை, வைர கம்மல், மூக்குத்தி, கண்களில் கருணை நிறைந்த பார்வையும் கொண்டிருக்கும் மாரியம்மன், தன்னுடைய இடது கரங்களில் கபாலம், மணி, வில், பாசம், வலது கரத்தில் கத்தி, சூலம், அம்பு மற்றும் உடுக்கை ஆகியவற்றை தாங்கியுள்ளார்.

    இடது காலை மடக்கி வைத்து, வலது காலை தொங்கவிட்ட நிலையில் சுகாசனத்தில் அமர்ந்து பக்தர்களின் குறைகளை நீக்கி அருள்கிறாள், இந்த மாரியம்மன்.

    இந்த ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா, பூச்சொரிதல், சித்திரை பெருந்திருவிழா, புரட்டாசியில் நவராத்திரி பெருவிழா ஆகியவை முக்கியமான திருவிழாக்கள் ஆகும். தை மாதத்தில் 11 நாட்கள் தைப்பூசத் திருவிழா நடைபெறுகிறது.

    பத்தாம் திருநாளில் திருவரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இருந்து மாரியம்மன் சீர் பெறுதல் வைபவம் நடைபெறும். மாசி மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்குப் பூச்சொரிதல் நடைபெறுகிறது.

    மகிஷாசுரனை வதம் செய்த பாவம் தீரவும், தன் கோபம் அடங்கவும் தவம் செய்து, பச்சைப் பட்டினி விரதம் இருந்து சாந்த சொரூபியாக மாறிய மாரியம்மனுக்கான திருவிழா இது.

    வருடந்தோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை பக்தர்களுக்காக அம்மனே 28 நாட்கள் பச்சைப் பட்டினி விரதம் இருப்பது சமயபுரம் மாரியம்மன் கோவிலின் தனிச்சிறப்பு ஆகும்.

    உலக மக்களின் நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய்கள், தீவினைகள் அணுகாது இருக்கவும், சகல சவுபாக்கியங்கள் கிடைக்கவும் இந்த பச்சைப்பட்டினி விரதம் இருக்கிறார், சமயபுரம் மாரியம்மன்.

    சமயபுரத்தில் வழக்கமாக அம்பாளுக்கு தினம் தோறும் 6 கால பூஜையில், 6 விதமான தளிகையும் நைவேத்தியமாக வைக்கப்படும். சமைத்த உணவுப் பொருட்களை தான் 'தளிகை' என்று சொல்வார்கள்.

    ஆனால் அம்மன் பச்சைப் பட்டினி விரதம் இருக்கும் 28 நாட்களும், அம்பாளுக்கு சமைத்த உணவுகள் எதுவும் படைக்கப்படாது. இந்த 28 நாட்களிலும் இளநீர், பானகம், உப்பில்லாத நீர்மோர், துள்ளுமாவு, கரும்பு, பழ வகைகள் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படும்.

    இந்த ஆண்டுக்கான பச்சைப் பட்டினி விரதம் கடந்த 9-ந் தேதி தொடங்கியது. இந்த விரதம் வருகிற ஏப்ரல் 6-ந் தேதி வரை உள்ளது. இந்த இடைப்பட்ட நாளில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடை பெறும்.

    • சபரிமலை சீசன் என்பதால் பல்லாயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்களும் அம்மனை தரிசிக்க வருகின்றனர்.
    • உண்டியல் பணத்தை எண்ணும்போது பதிவான சி.சி.டி.வி. கேமரா காட்சி பதிவுகளை கைப்பற்றி விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதாக கருதப்படும் இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர்.

    இதற்கிடையே தற்போது சபரிமலை சீசன் என்பதால் பல்லாயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்களும் அம்மனை தரிசிக்க வருகின்றனர். அதேபோல் அண்டை மாவட்டங்களை சேர்ந்த ஆண், பெண் பக்தர்கள் பாதயாத்திரையாகவும் வந்து மாரியம்மனை தரிசிக்கிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று கோவிலில் மாதாந்திர உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அப்போது திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் தங்க நாணயங்களை மறைத்து எடுத்து சென்றதாக புகார் எழுந்தது. இது பக்தர்களுக்கு கடும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளித்தது.

    இன்று சமயபுரம் கோவில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கல்யாணி சமயபுரம் போலீசில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து போலீசார் கோவிலுக்கு விரைந்தனர். உண்டியல் பணத்தை எண்ணும்போது பதிவான சி.சி.டி.வி. கேமரா காட்சி பதிவுகளை கைப்பற்றி விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    இதில் மேற்கண்ட அதிகாரி கைவரிசை காட்டி இருந்தால் உடனடியாக அவரை கைது செய்ய நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் கோவில் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • உண்டியலில் இருந்த பணம், வெள்ளி மற்றும் தங்க காசுகள் தனித்தனியாக பிரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
    • வேலியே பயிரை மேய்ந்த கதையாக கோவில் செயல் அலுவலர் ஒருவரே காணிக்கை தங்க காசுகளில் கை வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் பிரசித்தி பெற்ற சக்தி வாய்ந்த மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்த பக்தர்கள் செலுத்தும் காணிக்கை, கோவில் நிர்வாகம் சார்பில் மாதம் இருமுறை எண்ணப்படுவது வழக்கமானது.

    அதன்படி நேற்று முன் தினம் கோவில் மைய மண்டபத்தின் மாடியில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அந்த கோவிலின் இணை ஆணையர் கல்யாணி முன்னிலையில் நடைபெற்ற இந்த பணியில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வங்கி ஊழியர்கள், கோவில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் பக்தர்கள் பங்கேற்றனர்.

    பின்னர் உண்டியலில் இருந்த பணம், வெள்ளி மற்றும் தங்க காசுகள் தனித்தனியாக பிரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் வெற்றிவேல் சில தங்க காசுகளை எடுத்து மறைத்து வைத்ததை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பக்தர்கள் சிலர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது பற்றி அவர்கள் கோவில் இணை ஆணையர் கல்யாணிடம் புகார் தெரிவித்தனர். உடனே புகார் கூறப்பட்ட அவரை தனி அறைக்கு அழைத்து சென்று கோவில் பணியாளர்கள் மூலம் பரிசோதனை செய்தனர். அப்போது அவரது சட்டை பையில் தங்க காசுகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவரிடமிருந்து 30 கிராம் எடையுள்ள 5 தங்க காசுகள் அப்போதே பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

    இந்த நிலையில் தன் மீது நடவடிக்கை எடுத்தால் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்வதாக வெற்றிவேல் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் சக அதிகாரிகள் செய்வதறியாது திகைத்தனர். பின்னர் இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அதே நேரத்தில் பக்தர்கள் தரப்பில் நகை திருடிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    அதைத்தொடர்ந்து கோவில் இணை ஆணையர் கல்யாணி சமயபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் எறும்பீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் வெற்றிவேல் மீது நேற்று வழக்குப் பதிவு செய்தார். இதனை அறிந்த அவர் தலைமறைவாகியுள்ளார். அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    அவரைப் பிடித்தால் திடுக்கிடும் புதிய தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தான் அதிகாரியாக இருக்கும் திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவிலில் அதே நாளில் உண்டியல் எண்ணும் பணி நடந்தபோது, அவர் அங்கு பணியில் இல்லாமல் சமயபுரம் கோவிலுக்கு வந்தது ஏன்? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. வேலியே பயிரை மேய்ந்த கதையாக கோவில் செயல் அலுவலர் ஒருவரே காணிக்கை தங்க காசுகளில் கை வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் புதிய அணுகுமுறையை இன்ஸ்பெக்டர் கருணாகரன் பின்பற்றினார்.
    • கையில் குழந்தையுடன் நீண்ட வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்யும் தாய்மார்களின் துயர் துடைக்கும் வகையில் சமயபுரம் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

    மண்ணச்சநல்லூர்:

    அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், அம்மனை தரிசனம் செய்து வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். விசேஷ மற்றும் விடுமுறை நாட்களில் இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். இதற்கிடையே சபரிமலை செல்லும் பக்தர்களும், வேண்டுதல் நிறைவேற நடைபயணம் செய்து வரும் பக்தர்களும் அதிகளவில் கோவிலுக்கு வருகை தருகிறார்கள்.

    இந்தநிலையில் குழந்தைகளுடன் வரும் பெண்கள் அவதிக்குள்ளாவதை கண்ட சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசீலன், முதல்நிலை காவலர் பாண்டியராஜன் உள்ளிட்ட போலீசார் இதற்கு ஒரு தீர்வு காண முடிவு செய்தனர்.

    அதன்படி பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் புதிய அணுகுமுறையை இன்ஸ்பெக்டர் கருணாகரன் பின்பற்றினார். கையில் குழந்தையுடன் நீண்ட வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்யும் தாய்மார்களின் துயர் துடைக்கும் வகையில் சமயபுரம் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

    இதனைத்தொடர்ந்து குழந்தைகளுடன் வரும் பெண்கள், குழந்தைகளுக்கு உணவு ஊட்ட தேவையான வசதிகள் மற்றும் குழந்தைகளுக்கு பொழுது போக்குவதற்கான விளையாட்டுப் பொருட்கள், பொழுதுபோக்குடன் கல்வியையும் கற்றுக்கொள்ள வசதியாக சிலேட்டுகளையும் வாங்கி கொடுத்து அதற்கென ஒரு தனி இடம் ஏற்பாடு செய்து வைத்துள்ளனர்.

    வித்தியாசமான இந்த அணுகுமுறை பொதுமக்களின் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.

    • அவிநாசி லிங்கே ஸ்வரர் கோவிலில் இருந்து பெண்கள், தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.
    • அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

    அவிநாசி :

    அவிநாசி புதிய பஸ் நிலையம் அருகிலுள்ள ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன், ஸ்ரீ அரசமரத்து விநாயகர் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா நடைபெற்றது.இதற்காக அவிநாசி லிங்கே ஸ்வரர் கோவிலில் இருந்து, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். அதன்பின், அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இரவு படைக்கலம் எடுத்தல், அம்மை அழைத்தல் நடைபெற்றது. பெண்கள் மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.

    மஞ்சள் நீராடுதல், அம்மன் திருவீதி உலா வருதல், மறுபூஜையூடன் பொங்கல் பூச்சாட்டு விழா நிறைவு பெற்றது. விழாவை முன்னி ட்டு பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    ×