சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் எண்ணிக்கையில் தங்க காசுகள் திருடிய அதிகாரி தலைமறைவு

உண்டியலில் இருந்த பணம், வெள்ளி மற்றும் தங்க காசுகள் தனித்தனியாக பிரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். வேலியே பயிரை மேய்ந்த கதையாக கோவில் செயல் அலுவலர் ஒருவரே காணிக்கை தங்க காசுகளில் கை வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் எண்ணிக்கையில் தங்க காசுகள் திருடிய அதிகாரி தலைமறைவு
Published on

திருச்சி:

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் பிரசித்தி பெற்ற சக்தி வாய்ந்த மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்த பக்தர்கள் செலுத்தும் காணிக்கை, கோவில் நிர்வாகம் சார்பில் மாதம் இருமுறை எண்ணப்படுவது வழக்கமானது.

அதன்படி நேற்று முன் தினம் கோவில் மைய மண்டபத்தின் மாடியில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அந்த கோவிலின் இணை ஆணையர் கல்யாணி முன்னிலையில் நடைபெற்ற இந்த பணியில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வங்கி ஊழியர்கள், கோவில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் பக்தர்கள் பங்கேற்றனர்.

பின்னர் உண்டியலில் இருந்த பணம், வெள்ளி மற்றும் தங்க காசுகள் தனித்தனியாக பிரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் வெற்றிவேல் சில தங்க காசுகளை எடுத்து மறைத்து வைத்ததை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பக்தர்கள் சிலர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது பற்றி அவர்கள் கோவில் இணை ஆணையர் கல்யாணிடம் புகார் தெரிவித்தனர். உடனே புகார் கூறப்பட்ட அவரை தனி அறைக்கு அழைத்து சென்று கோவில் பணியாளர்கள் மூலம் பரிசோதனை செய்தனர். அப்போது அவரது சட்டை பையில் தங்க காசுகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவரிடமிருந்து 30 கிராம் எடையுள்ள 5 தங்க காசுகள் அப்போதே பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தன் மீது நடவடிக்கை எடுத்தால் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்வதாக வெற்றிவேல் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் சக அதிகாரிகள் செய்வதறியாது திகைத்தனர். பின்னர் இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அதே நேரத்தில் பக்தர்கள் தரப்பில் நகை திருடிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அதைத்தொடர்ந்து கோவில் இணை ஆணையர் கல்யாணி சமயபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் எறும்பீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் வெற்றிவேல் மீது நேற்று வழக்குப் பதிவு செய்தார். இதனை அறிந்த அவர் தலைமறைவாகியுள்ளார். அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

அவரைப் பிடித்தால் திடுக்கிடும் புதிய தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தான் அதிகாரியாக இருக்கும் திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவிலில் அதே நாளில் உண்டியல் எண்ணும் பணி நடந்தபோது, அவர் அங்கு பணியில் இல்லாமல் சமயபுரம் கோவிலுக்கு வந்தது ஏன்? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. வேலியே பயிரை மேய்ந்த கதையாக கோவில் செயல் அலுவலர் ஒருவரே காணிக்கை தங்க காசுகளில் கை வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com