என் மலர்
வழிபாடு

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 22-ந் தேதி நவராத்திரி விழா தொடக்கம்
- 1-ந்தேதி விஜயதசமி அன்று அம்மன் வேடுபரி அலங்காரத்தில் எழுந்தருளுகிறார்.
- விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாள் இரவும் கோவில் உள்பிரகாரத்தில் பரதநாட்டியம் மற்றும் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.
அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டு நவராத்திரி திருவிழா வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. விழாவையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்பிரகாரத்தில் உற்சவர் மண்டபம் அருகே பல அடுக்குகள் கொண்ட நவராத்திரி கொலு வைக்கப்பட்ட உள்ளது.
இதில் மரம், செடி, கொடி, துர்க்கையின் 9 வடிவங்கள், பறவைகள், விலங்கினங்கள் மற்றும் விவேகானந்தர், வள்ளலார், பார்வதி, சரஸ்வதி, லட்சுமிதேவி, அஷ்டலட்சுமி, திருப்பதி ஏழுமலையான், முருகன், பிரம்மா, விஷ்ணு, சிவன், குபேரன் மற்றும் தேவ, தேவியர் உள்ளிட்ட ஏராளமான பொம்மைகள் கொலுவில் இடம்பெற உள்ளது.
22-ந்தேதி இரவு அம்மன் குமாரிகா (துர்க்கை) அலங்காரத்தில் எழுந்தருளுகிறார். 23-ந்தேதி திருமூர்த்தி அலங்காரத்திலும், 24-ந்தேதி கல்யாணி அலங்காரத்திலும் எழுந்தருளுகிறார். 25-ந்தேதி ரோகினி அலங்காரத்திலும், 26-ந்தேதி காளகா அலங்காரத்திலும், 27-ந்தேதி சண்டிகா அலங்காரத்திலும் (மகாலட்சுமி அம்சம்) அம்மன் எழுந்தருளுகிறார். 28-ந்தேதி சாம்பவி அலங்காரத்திலும், 29-ந்தேதி துர்க்கை அலங்காரத்திலும், 30-ந்தேதி சுபத்ரா அலங்காரத்திலும் (சரஸ்வதி அம்சம்) அம்மன் அருள்பாலிக்கிறார். 1-ந்தேதி விஜயதசமி அன்று அம்மன் வேடுபரி அலங்காரத்தில் எழுந்தருளுகிறார். அன்று இரவு அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பாடாகி வன்னி மரம் சென்றடைகிறார். இதைத்தொடர்ந்து அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாள் இரவும் கோவில் உள்பிரகாரத்தில் பரதநாட்டியம் மற்றும் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.
இதேபோல் இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதிமாரியம்மன் கோவிலிலும் நவராத்திரி விழா வருகிற 22-ந்தேதி தொடங்கி 1-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 1-ந்தேதி அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று இரவு ஆதிமாரியம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் வி.எஸ்.பி.இளங்கோவன், கோவில் இணை ஆணையர் பிரகாஷ், அறங்காவலர்கள் பிச்சைமணி, ராஜசுகந்தி, லட்சுமணன், மணியக்காரர் பழனிவேல் மற்றும் கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.






