search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவில் தலபெருமை
    X

    அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவில் தலபெருமை

    • பாரத நாட்டில் குடியேறிய ஆரியர்களில் காசி என்ற பிரிவினர் இங்கே கி.மு. 1400 வாக்கில் வாழ்ந்து வந்தமையினால் இத்தலம் காசி என்ற பெயர் பெற்றது.
    • மகாராஜா ரஞ்சித்சிங் கோவிலுக்கு 820 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கினார்.

    விஸ்வநாதர் மகிழ்ச்சி பெருக்குடன் எழுந்தருளி உள்ளார். எனவே, இவ்வூரை ஆனந்த பவனம் என்கின்றனர். வெள்ளித்தகடு பதித்த தொட்டியில், தங்க ஆவுடையார் மீது இவர் காட்சியளிக்கிறார். சிவபெருமானின் அடியையும் முடியையும் காண பிரம்மாவும் திருமாலும் முயன்றபோது, அவர்களை எரித்து அழித்த இடம் இவ்வூரே என்று கூறுவதுண்டு. எனவே, இவ்வூருக்கு மகாமயானம் என பெயர் வந்தது. விசாலாட்சி அம்மைக்கு தனி சன்னதி உள்ளது. கங்கை நதியின் மேற்குக்கரையில் காசி அமைந்துள்ளது. காசியிலிருந்து வடக்காக 30கி.மீ. தொலைவு வரை கங்கைநதி ஓடுகிறது. இங்கே வடமுகமாக கங்கை ஓடுவதால் உத்தர வாகினி என்று அழைக்கின்றனர்.

    தீர்த்தக் கட்டங்கள்: கங்கை நதியின் ஓரத்தில் ஏராளமான படித்துறைகள் உள்ளன. இதில் 64 தீர்த்தக்கட்டங்கள் உள்ளன. இத்தீர்த்தக்கட்டங்கள் அனைத்திலும் நீராடுவது மிகுந்த பலனைத் தரும். ஆனால், எல்லோருக்கும் இது சாத்தியமல்ல. எனவே, அஸ்சங்கம், தசாஸ்வமேத கட்டம், வரணசங்கம கட்டம், பஞ்சகங்கா கட்டம், மணிகர்ணிகா கட்டம் ஆகிய படித்துறைகளில் ஒரே நாளில் நீராடி மகிழ்வது மிகவும் புனிதமானதாகும். இதற்கு பஞ்சதீர்த்த யாத்திரை என்று பெயராகும். அஸ் நதி கங்கையில் கலக்கும் பகுதியில் அஸ்சங்கம கட்டம் அமைந்துள்ளது. இங்கிருந்து தான் காசி தலம் ஆரம்பமாகிறது. இக்கட்டத்தை காசியின் நுழைவுவாயில் என்று சொல்வர். இக்கரையில் அமைந்துள்ள சிவலிங்கம் அஸ்சங்கமேஸ்வரர் எனப்படுகிறார். முதலில் அஸ்சங்கமத்தில் நீராடி சங்கமேஸ்வரரை வணங்க வேண்டும். துளசி ராமாயணத்தை எழுதிய துளசிதாசர் இந்த கட்டத்தில் இறங்கி கங்கையில் மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்க அம்சம். இதையடுத்து தசாஸ்வமேத கட்டத்தில் நீராட வேண்டும். இங்கு பிரம்மன் பத்து அசுவமேத யாகங்களை செய்ததால் தசாஸ்வமேத கட்டம் என பெயர் பெற்றது. இந்த தீர்த்தக்கரையில் சூலடங்கேஸ்வரர் என்ற சிவலிங்கம் உள்ளது. இதையடுத்து வரணசங்கம கட்டத்தில் நீராடச் செல்ல வேண்டும். இங்கு வருண நதி கங்கையில் கலக்கிறது. இந்த கரையில் உள்ள ஆதிகேஸ்வரரை வணங்கிவிட்டு, யமுனை, சரஸ்வதி, சிரணா, தூதபாய் ஆகிய நதிகளும் கங்கையில் கலக்கும் பஞ்சகங்கா கட்டத்திற்கு செல்ல வேண்டும். இங்கு நீராடி விட்டு கரையிலுள்ள பிந்துமாதவர் மற்றும் கங்கேஸ்வரரை வணங்க வேண்டும். பஞ்ச தீர்த்தக்கட்டங்களில் ஐந்தாவதாக அமைந்துள்ள மணிகர்ணிகா கட்டத்திற்கு செல்ல வேண்டும். இங்கு நீராடி பித்ருக்களுக்காக தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்த கரையிலுள்ள மணிகர்ணிகேஸ்வரரையும், அம்பாளையும் வழிபட வேண்டும்.

    மகாராஜா ரஞ்சித்சிங் கோவிலுக்கு 820 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கினார். காசியில் மூலவர் அவிமுகேஸ்வரர் என்றும் விஸ்ஹேஸ்வர் என்றுமே அழைக்கப்பட்டார். இப்போதுள்ள விஸ்வநாதர் என்ற பெயர் வேதம் கற்ற அறிஞர்களால் அதன்பிறகே சூட்டப்பட்டது. பொதுவாக வயதானவர்களே இந்த தலத்திற்கு போய்வர வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. இளைஞர்களும் இங்கு சென்றுவரலாம். ஏனெனில் காசி விஸ்வநாதர் ஆலயம் ஒரு அறிவுத் திருத்தலம் ஆகும். கல்வியும் ஞானமும் தரும் புண்ணிய ஸ்தலம் இது. காசிக்கு செல்பவர்கள் அங்குள்ள துண்டிவிநாயகரை வணங்கினால் தான் காசி யாத்திரையின் பலன் முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. இவரது உருவ அமைப்பு சற்று மாறுபட்டு இருக்கும். முடிவடையாத சிலை போல, துண்டிவிநாயகர் காட்சி தருகிறார். இங்கு வந்து கருமங்களை தொலைத்து விட்டு என்னை வணங்காமல் சென்றால் உங்கள் யாத்திரையின் பலனும் என்னைப் போல் அரைகுறையாகத் தான் இருக்கும் என்று சொல்லாமல் சொல்வதைப் போல இந்த விநாயகரின் வடிவமைப்பு அமைந்துள்ளது. எனவே காசிக்கு செல்பவர்கள் கண்டிப்பாக இந்த விநாயகரையும் வழிபடவேண்டும்.

    பாரத நாட்டில் குடியேறிய ஆரியர்களில் காசி என்ற பிரிவினர் இங்கே கி.மு. 1400 வாக்கில் வாழ்ந்து வந்தமையினால் இத்தலம் காசி என்ற பெயர் பெற்றது. காசி என்றால் மிகப் பிரகாசம் என்று பொருள். பார்வதி தேவியின் காதிலுள்ள மிகப் பிரகாசமான குண்டலம் இங்கே விழுந்து பிரகாசித்ததால் காசி என ஆயிற்று என்றும் கூறுவர். பன்னிரு ஜோதிர்லிங்கங்களில் மரகதலிங்கமாக சிவலிங்கம் பிரகாசிப்பதால் இத்தலம் காசி எனப் பெயர் பெற்றது என்பர். சிவபெருமான் விரும்பி மகாமயானத்தருகே இருப்பதால் காசி என்றவுடனே, மோட்சம் கிடைப்பதால் இத்தலம் காசி என்றனர். கா = தோள் சுமை, சி= பெண் சுமை. பார்வதி தேவியைத் தோளில்சுமந்துகொண்டு, சிவ பெருமான் ஹரித்வாரிலிருந்து இங்கே வந்தமையால் இத்தலம் காசி என அழைக்கப்படுகிறது என்றும் கூறுவர். வாரணம், அசி என்ற இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் இத்தலம் இருப்பதால் இத்தலத்திற்கு வாராணசி என்ற பெயர் ஏற்பட்டது.

    பனாரன் என்ற அசுரன் இத்தலத்தைப் புதுப்பித்து ஒரு லிங்கம் அமைத்து வழிபட்டதால் இத்தலத்திற்கு பனாரஸ் என்ற பெயர் ஏற்பட்டது. அவி = தலைவன், முத்தன் = சிவபெருமான். வேதங்களுக்குத் தலைவன் சிவபெருமான். அவர் வாழுமிடம் அவிமுக்தம் என இத்தலத்திற்குச் சிறப்பாகப் பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர். சிவபெருமான் சுடலையை விரும்பி அங்கே வாழ்பவன் ஆனதால் இத்தலத்திற்கு மகாமயானம் என்ற பெயரும் உண்டாகியது என்பர். இறப்பவர்களுக்குச் சிவபெருமான் ராம் என்று உபதேசம் செய்து மோட்சம் வழங்குவதால் மகாமயானம் எனப்பட்டது. அதிக வெப்பகாலம், அதிக மழைக்காலம், தவிர ஆண்டு முழுதும் காசியாத்திரைக்கு ஏற்ற காலங்கள் ஆகும். முன்பெல்லாம் கால்நடையாகவோ, மாட்டு வண்டி, குதிரை வண்டிகளில் யாத்திரை போவார்கள். ஆனால் தற்போது ரெயில், பேருந்து, விமானம் மூலம் யாத்திரை செய்வதால் எப்பொழுது வேண்டுமானாலும் காசியாத்திரை மேற்கொள்ளலாம்.

    நம் நாட்டில் உள்ள முக்தித் தலங்கள் ஏழினுள் காசி தலையாய முக்தித் தலம் ஆகும். நம் நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது, காசி - இராமேசுவரம் யாத்திரை மேற்கொள்ளும் சிறப்புமிக்க தலம் காசி ஆகும். பூலோகக் கைலாசம் என்று சைவர்கள் போற்றும் தலம். காசிக்கு நிகரான தலம் மூவுலகிலும் இல்லை என ஆன்மீகவாதிகள் கூறுவர். ஈசன் காக்கும் மகாமயானம் இங்கே உள்ளது. காசியில் இறப்போர் உடனே மோட்சம் அடைவார்கள். காசி என்று சொன்னாலே புண்ணியம் கிடைக்கும். இங்கே இறக்கும் உயிர்களுக்குச் சிவபெருமான் காதில் ராமமந்திரம் ஓதி மோட்சம் அடைய வழி செய்கின்றார். காசியில் ஐந்து உபநதிகள் கங்கையில் கலக்கின்றன. காசிக் கங்கையில் நீராடினால் பாவங்கள் எல்லாம் போய் புனிதம் உண்டாகும். நம் நாட்டிலுள்ள புனிதத்தலங்களில் தலை சிறந்த தலம் காசிப்பதியே ஆகும். லோகமாதா அன்னபூரணி காசியம் பதியில் இறைவனுக்கும் மக்களுக்கும் உணவு வழங்கி சக்தியூட்டுகின்றார். காசியின் மகிமையை உணர்ந்த தென்னாட்டு மக்கள், காசியில் காவாசி அவினாசி என்று பழமொழி கூறுகின்றனர். தங்கள் ஊர்களுக்குச் சிவகாசி, தென்காசி என்றெல்லாம் பெயர் வைத்துப் பெருமைப்படுகின்றனர். தென்னாட்டில் எல்லாச் சிவன் கோயிலிலும் காசி விசுவநாதர் லிங்கமும், காசி விசாலாட்சியும் வைத்து வழிபடுகின்றனர்.

    கங்கையின் மகிமை உணர்ந்தவர்கள், சிவகங்கை, நூபுரகங்கை, கங்கைகொண்ட சோழபுரம் எனவும் தங்கள் ஊர்களுக்குப் பெயரிட்டு மகிழ்கின்றனர். மும்மூர்த்திகளும், தேவர்களும், விசுவநாதரைப் பூஜித்த தலம் காசி ஆகும். அனுமன், இராமேசுவரத்தில் இராமர் பூஜிக்க லிங்கம் எடுத்த தலம் காசி. மகாராஜா ரஞ்சித் சிங், காசி விசுவநாதர் ஆலய விமானத்தைப் பொன் தகடுகளால் வேய்ந்தார்.

    இன்றும் கோபுரம் தங்கமாக ஒளிர்கிறது. கோவில் தூண்களில் சிற்பங்கள் உள்ளன. காசியில் மீட்டருக்கு ஒரு கோவில் எனப் பலகோவில்கள் உள்ளன. கேதார்நாத் போக முடியாத ஒரு பக்தனுக்கு சிவன் கங்கைக் கரையில் காட்சி தந்தார். அந்த இடம் கேதார்நாத் காட் என்கின்றனர். அங்கே கேதார்நாத்திலிருப்பது போலவே சுயம்புவாகத் தோன்றிய ஒரு பாறையையே சிவலிங்கமாக மக்கள் வழிபடுகின்றனர். விசுவாமித்திரரால் பரிசோதனைக்குட்பட்ட அரிச்சந்திர மகாராஜா, சிவபெருமான் தரிசனம் பெற்றது காசியம் பதியாகும். சனிபகவான் தவம் செய்து, சிவபெருமான் வரத்தால் நவக்கிரகங்களில் ஒன்றானது காசியில். காசியின் கங்கைக் கரையில் நம் முன்னோர்களுக்குச் சிரார்த்தம் முதலிய வைதீகச் சடங்குகள் செய்யலாம். அதனால் நாமும் நம் முன்னோர்களும், புனிதம் அடையலாம்.

    Next Story
    ×